தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
தாடி வைப்பதும், மீசையை முழுமையாக வழிப்பதும் – முழுமையாக இறக்குவதும் வஹ்ஹாபிஸத்தின் அடையாளமாகும். இந்த விபரம் தெரியாத “ஸுன்னீ” கொள்கையுள்ள பலர் தாடி வைத்து மீசையை இறக்குகிறார்கள். இவர்கள் கட்டாயம் மீசையும் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நான் எழுதும் “ஷரீஆ”வின் சட்டங்கள் இமாம் ஷாபிஈ அவர்களின் “மத்ஹப்” வழியை கருதியதாகவே இருக்கும்.
இதனால் ஏனைய “மத்ஹப்”களை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்று எவரும் விளங்கிவிடலாகாது. நான் நான்கு “மத்ஹப்”களையும் ஏற்றுக் கொண்ட முழுமையான “ஸுன்னீ” ஆவேன்.
நான்கு “மத்ஹப்”களிலும் கூறப்பட்ட சட்டங்கள் எதுவும் திருக்குர்ஆனுக்கோ, ஹதீது – நபீ மொழிகளுக்கோ முரணானதாக இருக்காதென்று ஒவ்வொரு முஸ்லிமும் திட்டமாக நம்ப வேண்டும். வஹ்ஹாபிகள் போல் “மத்ஹப்”கள் தேவையில்லை என்பதும், மத்ஹபுடைய நான்கு இமாம்களால் கூறப்பட்ட “ஷரீஆ”வின் சட்டங்களை தூக்கியெறிந்து பேசுவதும் கூடாது. அது பெருங் குற்றமாகும். பொது மக்கள் இவ்விடயத்தில் மௌனிகளாயிருப்பதே சிறந்தது.
உலமாஉகள் கூட இமாம்களின் விடயத்தில் தாம் பேசும் வார்த்தைகளை அளந்தும், நிறுத்தும் பேச வேண்டும். ஏனெனில் மத்ஹபுடைய நான்கு இமாம்களும் அறிஞர்கள் மட்டுமல்ல. அவர்கள் ஆன்மிகப் படித்தரங்களில் மிக உயர்வான படித்தரங்களில் உள்ளவர்களாவர்.
என் தந்தை மர்ஹூம் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் “இல்ஹாம்” வழங்கப்பட்ட இலைமறை காயாவார்கள். அவர்கள் குறித்த நான்கு இமாம்கள் பற்றிக் கூறுகையில் அவர்கள் “அப்தால்”களைச் சேர்ந்தவர்கள் என்று கூறியது இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இலங்கையிலுள்ள ஒரு வஹ்ஹாபீ மௌலவீ இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பற்றிக் கூறுகையில் “நெருப்பை விடச் சூடான ஒரு வஸ்த்து உலகில் இருக்குமாயின் அது கொண்டு சூடு வைக்க வேண்டியவர் முஹம்மத் இப்னு இத்ரீஸ்” (ஷாபிஈ இமாம்) என்று கூறியுள்ளார். இவரின் இக்கூற்று இரும்பைச் சூடாக்கி என் இதயத்தில் சூடு வைத்தாற் போல் இருந்தது. இவன் நரகில் நெருப்பு நீரை அருந்தட்டும். சீள், சலத்தை உணவாகக் கொள்ளட்டும்.
“இப்படியுமா மௌலவீமார் உள்ளார்கள்” என்று பொது மக்கள் வியந்து பேசுவது வேதனையாகவே உள்ளது. இன்னோர் அல்லாஹ்வின் பிடியிலிருந்து தப்பமாட்டார்கள்.
தாடி வளர்த்தல்:
“தாடி” வைத்தல் “ஸுன்னத்” நபீ வழி என்பதற்கு பல நபீ மொழிகள் ஆதாரங்களாக உள்ளன. அவ் ஆதாரங்களை ஆய்வு செய்த “மத்ஹப்” உடைய இமாம்கள் தாடி வைத்தல் “ஸுன்னத்” என்று சட்டம் சொல்லியுள்ளார்கள்.
நபீ வழியைப் பின்பற்ற வேண்டும் என்ற “நிய்யத்” எண்ணத்தோடு மட்டும் தாடி வைத்தால் மட்டுமே அதற்கான நன்மை கிடைக்கும். தற்கால நாகரீகம் என்பதை கருத்திற் கொண்டு தாடி வைப்பதால் நன்மை எதுவும் கிட்டாது. إنما الأعمال بالنيات அமல்கள் எல்லாம் “நிய்யத்” எண்ணத்தைக் கொண்டே நன்மை, பாவம் கணிக்கப்படுகின்றன.
இன்று சில இளைஞர்களை நாம் காண்கிறோம். அவர்கள் தமக்கும், கடமையான தொழுகைகளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாதவர்களாக இருப்பார்கள். பொது மக்களாலும், ஊர் மக்களாலும் நல்லோர் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள். ஆயினும் தாடி வைத்திருப்பார்கள்.
தாடி வைத்தல் என்பது “ஸுன்னத்” நபீ வழி சார்ந்த நல் வழியாகும். நல்லடியார்களின் வணக்கமும், வழக்கமுமாகும். ஸூபீ மகான்கள் தம் மீது கடமையாக்கிக் கொண்டதுமாகும். இத்தகைய ஒரு நல்லமலை ஐங்காலம் தொழாமலும், ஹலால், ஹறாம் பேணாமலும் வாழ்கின்ற ஒருவன் கடைப்பிடிப்பது தலைப்பாகை கட்டுவது “ஸுன்னத்” என்பதற்காக சாறனைக் களைந்து அல்லது றவ்ஸரை களைந்து தலைப்பாகை கட்டி அவன் நிர்வாணமாக தெருக்களைச் சுற்றுவது போன்றதாகும்.
இவ்வாறு செய்யும் இளைஞர் சமூகம் நல்வழி பெற வேண்டும். தாடி வைக்கவும் வேண்டும். தலைப்பாகை கட்டவும் வேண்டும். அதேபோல் தொழுகை, நோன்பு போன்ற கடமையான வணக்க வழிபாடுகள் செய்யவும் வேண்டும். இத்தகைய இளைஞர்களின் நல் வாழ்வுக்காக நான் இறைவனிடம் இரு கரமேந்துகிறேன். இறைவா! இவர்களின் இதயங்களைச் சுத்தம் செய்வாயாக! இவர்களின் உள்ளங்களில் உனது ஞான விளக்கேற்றி அவற்றை ஒளிரச் செய்வாயாக!
தாடி வைக்க விரும்புகின்ற ஒருவர் “ஷாபிஈ மத்ஹப்” வழி நடப்பவராயின் அவர் தனது கையால் ஒரு பிடியளவு நீளமாக, அல்லது அதைவிடக் குறைவாக தாடி வைத்துக் கொண்டால் போதும். “ஸுன்னத்” உண்டாகிவிடும். இதைவிட நீளமாக தாடி தொப்புளைத் தொடுமளவு வைத்தல் அறியாமையாகும்.
ஒருவன் தாடியை நீளமாகவோ, கட்டையாகவோ வைத்துக் கொண்டாலும் கூட அதை தினமும் சீப்பால் வார்ந்தும், ஒரு மாதத்தில் ஒரு முறையாவது சிகையலங்கார நிலையத்திற்கு – “சலூன்” சென்று அதை சீர் செய்து கொள்ளவும் வேண்டும்.
சிலர் உளர். அவர்களுக்கு மார்க்க அறிவுமில்லை, உலக அறிவுமில்லை. அவர்களுக்கு ஆனாவும் தெரியாது, அலிபும் தெரியாது. எழுதவும் தெரியாது, வாசிக்கவும் தெரியாது. இவர்கள் ஆளை விடப் பெரிய தாடி வைத்துக் கொண்டு பிறமத வாதிகள் எள்ளி நகையாடும் வகையில் படித்தவர்கள் மட்டத்தில் நடைபெறும் கூட்டங்களிலும், கருத்தரங்குகளிலும் கலந்து கொள்வதும் அறியாமையின் உச்சக்கட்டமென்று சொன்னாற் கூட அது மிகையாகாது.
சிலர் ஒரு முழத்திற்கும் நீளமான தாடி வைத்துள்ளார்கள். தமது பெண் பிள்ளைகளை மோட்டார் சைக்கிள்களில் பாடசாலைகள், கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அவர்கள் வேகமாக வண்டியை செலுத்தும் போது அவர்களின் தாடி பின்னால் இருந்து செல்கின்ற மகளின் வாய்க்குள் நுழைகிறது. அவளோ அதை தனது கையால் தட்டிக் கொண்டே இருக்கிறாள். தந்தைக்குப் புத்தி சொல்ல முடியுமா? என்ற கேள்வியுடன் பொறுமையோடு செல்கிறாள். இத்தகைய பெற்றோர்கள் நல்வழி பெற வேண்டும். தமது பிள்ளைகளிடமாவது உலக அறிவைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இன்னும் சிலர் உளர். அவர்கள் தம்மை ஸூபீகள் என்றும், துறவிகள் என்றும் சமூகத்திற்கு காட்டிக் கொள்ள விரும்புகிறார்கள் போலும். கிழிந்த, அழுக்கான, ஆளுக்குப் பெரிய உடைகளை உடலில் அள்ளிப் போட்டுக் கொள்கிறார்கள். குளிப்பதுமில்லை, பல் துலக்குவதுமில்லை. வாசனைத் திரவியங்கள் பாவிப்பதுமில்லை. உடைகளைக் கழுவிச் சுத்தம் செய்வதுமில்லை. துர் நாற்றத்தோடு பள்ளிவாயலுக்கும் வருகிறார்கள். விருந்துகளிலும் கலந்து கொள்கிறார்கள். இவர்களிடம் நீங்கள் ஏன் இவ்வாறு இருக்கிறீர்கள் என்று கேட்டால் நாங்கள் உலகை வெறுத்தவர்கள் என்றும், ஸூபீகள் என்றும் சொல்கிறார்கள்.
உலகை வெறுத்தவன் உலகில் ஏன் இருக்க வேண்டும்? ஸூபீகள் அழுக்கான, சுத்தமில்லாத உடையில் இருக்க வேண்டுமென்று எங்காவது சொல்லப்பட்டிருக்கின்றதா? ஸூபிஸம் என்பது அழுக்கான, கிழிந்த ஆடைகளுடனும், பட்டினி, பசியுடனும் கிடக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளதா? முடி வெட்டாமலும், தாடியை சீர் செய்யாமலும் பேயன், பைத்தியக்காரன் போல் வாழ வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளதா?
ஸூபிஸம் என்பதும், துறவறம் என்பதும் கிழிந்த, அழுக்கான உடைகள் உடுக்க வேண்டும் என்றோ, பட்டினி பசியுடன் தலைவிரிக் கோலமாக வாழ வேண்டும் என்றோ, தலைமுடி சரி செய்யாமலும், தாடியை சீர் படுத்தாமலும் வாழ வேண்டும் என்றோ சொல்லவில்லை. அழகான, விலையுயர்ந்த வாகனம் ஓடக் கூடாதென்றோ, மாடி வீட்டில் வசிக்கக் கூடாதென்றோ, அழகிய கைக் கடிகாரம் கட்டக் கூடாதென்றோ, அழகிய பாதணி அணியக் கூடாதென்றோ சொல்லவில்லை.
لَيْسَ التَّصَوُّفُ لُبْسَ الصُّوْفِيْ وَالْخَلِقِ – بَلِ التَّصَوُّفُ حُسْنُ الصَّمْتِ وَالْخُلُقِ
“ஸூபிஸம்” என்பது கிழிந்த உடை உடுப்பதுமில்லை, கம்பளி உடுப்பதுமில்லை. எனினும் ஸூபிஸம் என்பது அழகிய பண்பும், அழகிய மௌனமுமேயாகும்.
இதன் விபரம் ஸூபிஸம் என்பது அழுக்கான, கிழிந்த உடை உடுத்துக் கொண்டு ஊர் சுற்றுவதுமில்லை, குப்பை மேட்டில், நடை பாதையில், அசுத்தமான இடங்களில் படுத்துறங்குவதுமில்லை. இதற்கு மாறாக ஸூபிஸம் என்பது அழகிய மௌனமும், அழகிய நற்குணமுமேயாகும்.
எம் பெருமான், என் இதய ஒளி விளக்கு பயகம்பர் முஸ்தபா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் ஒரு சமயம் திரு மதீனாப் பள்ளிவாயலில் தங்களின் தோழர்களுக்கு உரை நிகழ்த்திக் கொண்டிருந்த சமயம் தோழர்களில் ஒருவர்
إِنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَنًا وَنَعْلُهُ حَسَنَةً،
அல்லாஹ்வின் திருத்தூதரே! ஒரு மனிதன் தனது உடை அழகாகவும், தனது பாதணி அழகாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புவது ஆகுமா? என்று கேட்ட போது
إِنَّ اللهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ،
அல்லாஹ் அழகன். அவன் அழகையே விரும்புகிறான் என்று பதிலளித்தார்கள்.
அவர்களின் சுருக்கமான இந்தப் பதில் மூலம் ஒருவன் அழகாக ஆடை அணிவதிலோ, ஆபரணம் அணிவதிலோ, வீடு அமைப்பதிலோ, பாதணி அணிவதிலோ, அழகிய மனைவியை தெரிவதிலோ தப்பில்லை என்ற உண்மை வெளிச்சமாகிறது.
துறவறம், ஸூபிஸம் என்பது வாயால் மட்டும் சொல்லிக் கொண்டு உடலையும், உடைகளையும் சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருக்காமல் வாழ்வதை இறைவன் விரும்பமாட்டான் என்பதும் தெளிவாகிறது.
எனவே, “ஷரீஆ”வின் அடிப்படையில் தாடி வைப்பது “ஸுன்னத்” நபீ வழி தானாயினும் அதை பேய், பிசாசு போல் வைக்காமல் அழகாகவும், கவர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். பாலருந்தும் பச்சிளங் குழவிகள் கண்டால் பயப்படுமளவு தாடி வளர்ப்பதும் விரும்பத் தக்கதல்ல. குறிப்பாக “ஷாபிஈ மத்ஹப்” வழி செல்வோருக்கு பொருத்தமானதுமல்ல.
பலரை நாங்கள் பார்க்கிறோம். தாடியைப் பெரிதாக வைத்திருப்பார்கள். மீசையை மொட்டை அடித்திருப்பார்கள். இவர்கள் மீசை வைப்பதும் “ஸுன்னத்” நபீ வழிதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
1400 ஆண்டுகளுக்கு முன் பின்னொரு காலத்தில் தோன்றவுள்ள வழி கேடர்கள் பற்றிக் கூறிய எம்பிரான் முஹம்மத் அலைஹிஸ்லாது வஸ்ஸலாம் அவர்கள் அவ் வழிகேடர்களின் அடையாளம் பற்றிக் கூறுகையில் سِيْمَاهُمُ التَّحْلِيْقُ அவர்களின் அடையாளம் “சிரைத்தல்” என்று கூறினார்கள்.
இன்று உலகில் வாழும் முஸ்லிம்களில் “சிரைத்தல்” அடையாளம் உள்ளவர்கள் யார் என்று நான் சொல்லி யாரும் அறிந்து கொள்ளத் தேவையில்லை.
தாடி வைத்தல் தொடர்பாக “மிஸ்ர்” நாட்டைச் சேர்ந்த “ஷாபிஈ மத்ஹப்” சட்ட மேதைகளில் ஒருவரான அஷ்ஷெய்கு ஸுலைமான் இப்னு முஹம்மத் இப்னு உமர் அல்புஜைரமீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “புஜைரமீ” எனும் சட்டக் களஞ்சியத்தில் குறிப்பிட்டுள்ள சில தகவல்களை இங்கு தருகிறேன்.
இவர்கள் “புஜைரமீ” எனும் ஊரில் ஹிஜ்ரீ 1131ல் பிறந்து ஹிஜ்ரீ 1221ல் மறைந்தார்கள். (கி.பி. 1719 – 1806)
சிறு வயதிலேயே கெய்ரோ வந்து “அல் அஸ்ஹர்” பல்கலைக் கழகத்தில் படித்துப் பட்டம் பெற்று அங்கேயே படித்துக் கொடுத்தார்கள். இவர்கள் பன்னூல்கள் எழுதிய பிரசித்தி பெற்ற ஓர் எழுத்தாளர் ஆவார்கள்.
இவர்கள் “அத்தஜ்ரீத்” என்ற பெயரில் “ஷாபிஈ மத்ஹப்” அடிப்படையில் நான்கு பாகங்கள் கொண்ட ஒரு நூல் எழுதியுள்ளார்கள். இதுபோல் இன்னும் பல நூல்கள் எழுதியவர்களுமாவார்கள். 216 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு சட்ட மேதை ஆவார்கள்.
அளவுக்கு அதிகமாக தாடியை நீளமாக வைப்பவர்கள் தொடர்பாக அவர்கள் கூறியுள்ளதை நான் இங்கு குறிப்பிடுகிறேன்.
قَالَ – عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ -: «مَا طَالَتْ لِحْيَةُ إنْسَانٍ قَطُّ إلَّا وَنَقَصَ مِنْ عَقْلِهِ مِقْدَارُ مَا طَالَ مِنْ لِحْيَتِهِ»
“எந்த ஒரு மனிதனின் தாடியும் நீளமாகவில்லை. அவனின் தாடியிலிருந்து நீளமான அளவுக் அவன் புத்தி குறைந்தே ஒழிய” என்று நபீ பெருமான் அருளினார்கள்.
இது இமாம் புஜைரமீ அவர்கள் ஹதீது என்று கூறியிருந்தாலும் இதற்கான ஆதார நூலை அவர்கள் குறிப்பிடவில்லையாதலால் இது நபீ மொழி இல்லாது போனாலும் நிச்சயமாக இது ஓர் ஆய்வாளரான அறிஞரின் பேச்சாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.
ஏனெனில் கூறப்பட்ட மொழி யாருடையதாயினும் கருத்தைப் பொறுத்து அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் போல் எனக்குத் தெரிகிறது. ஏனெனில் உடல் கூறு ஞானமென்று ஒன்று இருப்பது உண்மையே! இது தொடர்பாக இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்களின் அபிப்பிராயங்களும் உள்ளன. அவற்றை இங்கு கூற இடமில்லை.
இதே கருத்தை மையப்படுத்தி ஓர் அறிஞர் இவ்வாறு கவியில் கூறியுள்ளார்.
إذَا كَبُرَتْ لِلْفَتَى لِحْيَتُهُ … فَطَالَتْ وَصَارَتْ إلَى سُرَّتِهْ
فَنُقْصَانُ عَقْلِ الْفَتَى عِنْدَنَا … بِمِقْدَارِ مَا طَالَ مِنْ لِحْيَتِهْ
எனவே, இமாம் ஷாபிஈ வழி செல்லும் நாம் ஏனைய விடயங்களில் அவர்களின் “மத்ஹப்” ஐப் பின்பற்றுவது போல் தாடி, மீசை விடயத்திலும் அதே “மத்ஹப்” வழியில் நடப்போம்.