தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
قال الإمام الحسن البصري رضي الله عنه لَوْ لَا الْعُلَمَاءُ لَكَانَ النَّاسُ كَالْبَهَائِمِ
மத போதகர்கள் இல்லையெனில் மக்கள் மிருகங்களாகிவிடுவர்.
இமாம் ஹஸனுல் பஸரீ றழியல்லாஹு அன்ஹு.
இவ்வுலகில் மனிதர்களை மனிதர்களாக வாழ வழிகாட்டிய மனிதர் யார்? அவர்கள்தான் 124,000 நபீமாரில் அல்லாஹ்வினால் “ஹபீப்” என்றழைக்கப்பட்ட, சிருட்டிகளின் உடலுக்கும், உயிருக்கும் கருவான ஏந்தல் எம் பெருமான் “பயகம்பர்” முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்.
அவர்களின் வெளிப்படையான மறைவுக்குப் பின் அவர்கள் விட்டுச் சென்ற “வழிகாட்டல் ஸ்கீம்” திருக்குர்ஆனையும், அவர்களின் அருள் மொழிகளையும் கற்றறிந்த மேதைகளாம் இஸ்லாமிய மத போதகர்களாவர்.
இதனால்தான் لَوْ لَا الْعُلَمَاءُ لَكَانَ النَّاسُ كَالْبَهَائِمِ மத போதகர்கள் இல்லையெனில் மனிதர்கள் மிருகங்களாக மாறிவிடுவர்கள் என்று இஸ்லாமிய தத்துவ மேதைகள் சொல்கிறார்கள்.
மிருகங்களெல்லாம் மல, சலம் கழிப்பது நின்ற நிலையில்தான். அவற்றில் எதுவும் குந்திய நிலையில் மல, சலம் கழிப்பதில்லை. ஆனால் மனிதனை அவற்றுக்கு மாறாக குந்திய நிலையில் மல, சலம் கழிக்க வழிகாட்டியவர்கள் எம் பிரான் அவர்களேயாவர்.
மிருகங்களில் எதுவும் மல, சலம் கழிக்கும் போது தலை மறைப்பதில்லை. ஆனால் அவற்றுக்கு மாறாக தலை மறைத்து மல, சலம் கழிக்க வழி காட்டியவர்கள் கஸ்தூரி மணங் கமழும் எம்பிரான் அவர்களேயாவர்.
மிருகங்களில் எதுவும் மல, சலம் கழிக்கச் செல்லும் போது اَللهم إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ இறைவா! ஆண் ஷாத்தான், பெண் ஷாத்தான்களின் தீமையிலிருந்து உன்னைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன் என்று மந்திரித்துக் கொண்டு செல்வதில்லை. இவற்றுக்கு மாறாக மேற்கண்டவாறு மந்திரித்துக் கொண்டு மல, சல கூடத்தில் நுழைய வேண்டுமென்று வழிகாட்டிய “ஹாதீ” எங்கள் மா நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களேயாவர்.
மல, சலம் கழித்து சுத்தம் செய்த பின் اَللهم طَهِّرْ قَلْبِيْ مِنَ النِّفَاقِ وَحَصِّنْ فَرْجِيْ مِنَ الْفَوَاحِشِ இறைவா! எனது உள்ளத்தை நயவஞ்சகம் வராமல் சுத்தம் செய்வாயாக! எனது மர்ம உறுப்புக்களை தீமையிலிருந்து பாதுகாத்துக் கொள்வாயாக! என்று மிருகங்களில் எதுவும் சொல்வதில்லை. ஆயினும் மேற்கண்ட மந்திரத்தை ஜெபிக்க வேண்டுமென்று வழிகாட்டிய ஞானமேதை எம்பிரான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களேயாவர்.
மல, சலம் கழித்துச் சுத்தம் செய்தபின் மல சல கூடத்திலிருந்து வெளியேறும் போது غُفْرَانَكَ الْحَمْدُ للهِ الَّذِيْ أَذْهَبَ عَنِّيَ الْأَذَى وَعَافَانِيْ இறைவா! என் பாவத்தை மன்னிப்பாயாக! என்னிலிருந்து அசூசியை வெளியாக்கி எனக்கு ஆராக்கியம் தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று எந்தவொரு மிருகமும் சொல்வதில்லை. ஆயினும் மேற்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டும் என்று வழிகாட்டிய தத்துவமேதை எம் பிரான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களேயாவர்.
உண்ணும் போதும், பருகும் போதும் “பிஸ்மில்லாஹ்” என்று சொல்லி மிருகங்களில் எதுவும் உண்ணுவதுமில்லை, பருகுவதுமில்லை. இதற்கு மாறாக குறித்த ஓதலை ஓதிய பின்புதான் குடிக்கவும், பருகவும் வேண்டுமென்று வழிகாட்டியவர்கள் யார்? எம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களேயாவர்.
உறங்கும் போது بِسْمِكَ رَبِّيْ وَضَعْتُ جَنْبِيْ عَلَيْكَ تَوَكَّلْتُ وَأَنْتَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ இறைவா! உனது திரு நாமம் சொன்னவனாக எனது உடலை படுக்கையில் வைத்தேன். உன்னிடமே எனது காரியங்களை ஒப்புவித்தேன். வலுப்பமிகு “அர்ஷ்” இன் இரட்சகனாக நீயே உள்ளாய் என்று மிருகங்களில் எதுவும் ஓதிக் கொண்டு உறங்குவதில்லை. இதற்கு மாறாக அதே மந்திரத்தை மொழிந்து கொண்டே உறங்க வேண்டும் என்று வழிகாட்டிய மா பெரும் மேதை எங்கள் நபீயே ஆவார்கள்.
உடலுறவின் போது – சேர்க்கையின் போது – கர்ப்பாசனத்தைக் குறி வைத்து ஆணின் விந்து படியும் வேளை اَللهم جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا “இறைவா! ஷாத்தானின் தீமை எங்களை அணுகாமலும், எங்களுக்கு நீ தருகின்ற குழந்தையை அணுகாமலும் பாதுகாத்துக் கொள்” என்று மிருகங்களில் எதுவும் ஓதுவதில்லை. ஆனால் அவற்றுக்கு மாறாக மேற்கண்டவாறு ஓத வேண்டுமென்று வழிகாட்டியவர்கள் “தாஹா” நபீ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களேயாவார்கள்.
மாதாந்தம் மலரும் பிறையை கண்டால் اَلْحَمْدُ للهِ الَّذِيْ نَوَّرَكَ وَدَوَّرَكَ وَكَبَّرَكَ “பிறையே! உன்னை ஒளியாக்கியும், வட்டமாக்கியும், வலுப்பமாக்கியும் வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று எந்த ஒரு மிருகமும் சொல்வதில்லை. இதற்கு மாறாக மேற்கண்டவாறு சொல்ல வேண்டுமென்று வழிகாட்டிய மஹா நபீ எம் பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களேயாவார்கள்.
உறக்கத்திலிருந்த கண் விழித்த பின், اَلْحَمْدُ للهِ الّذِيْ أَحْيَانِيْ بَعْدَ مَا أَمَاتَنِيْ وَإِلَيْهِ النُّشُوْرُ என்னை மரணிக்கச் செய்து அதன் பின் என்னை உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவனிடமே உயிர்த்தெழ வேண்டும் என்று எந்த ஒரு மிருகமும் ஓதுவதில்லை. இதற்கு மாறாக குறித்த ஓதலை குறித்த நேரம் ஓதுவதற்கு வழிகாட்டிய ஞானத் தாரகை நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களேயாவர்.
மல, சல கூடங்களில் நுழையும் வேளை இடது காலை முற்படுத்தியும், அவற்றிலிருந்து வெளியேறும் வேளை வலது காலை முற்படுத்தியும் மிருகங்களில் எதுவும் செய்வதில்லை. அவற்றுக்கு மாறாக மனிதனுக்கு வழிகாட்டியவர்கள் மணலில் பாதம் பதியாத எம்பிரான் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களேயாவார்கள்.
கொடுப்பதற்கும், எடுப்பதற்கும் வலக் கரம் பாவிக்க வேண்டுமென்று வழி காட்டியவர்கள் எங்களின் நபீகளார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களேயாவார்கள்.
தும்மினால் “அல்ஹம்து லில்லாஹ்” எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று சொல்ல வேண்டுமென்று வழிகாட்டியவர்களும், கொட்டாவி விட்ட பின் “அஊது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் றஜீம்” என்று கூற வேண்டுமென்று வழிகாட்டியவர்களும் எங்கள் மஹ்மூத் நபீ அவர்களேயாவார்கள். கொட்டாவி விட்டால் முதலை போல் வாயை பிளக்காமல் கையால், அல்லது துணியால் வாயை மறைக்க வேண்டுமென்று வழிகாட்டியவர்களும் மாசற்ற மா நபீ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களேயாவார்கள்.
தொழுகை என்ற வணக்கத்திற்கு முன் “வுழூ” எனும் சுத்தம் செய்ய வேண்டுமென்று கட்டாயப்படுத்தியவர்களும் நபீகட்கரசர் அவர்களேயாவார்கள்.
கை, கால் விரல்களில் வாரத்தில் ஒரு முறை நகங்களைக் களைந்து கொள்ள வேண்டுமென்று சுகாதாரத்திற்கு வழிகாட்டியவர்கள் “றஊப்” என்ற எங்கள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களேயாவார்கள்.
கமுக்கட்டு முடி, அப முடி, மூக்கு முடிகளை களைய வேண்டுமென்று சுத்தம், சுகாதாரத்திற்கு வழிகாட்டியவர்கள் எம் பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களேயாவார்கள்.
மல, சல கூடத்துள் தலை மறைத்தும், பாதணி அணிந்தும் செல்ல வேண்டுமென்று சுத்தம், சுகாதாரத்திற்கு வழிகாட்டியவர்களும் எம்பிரான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களேயாவார்கள்.
ஒருவர் மற்றவரைச் சந்தித்தால் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கூறி “முஸாபஹா” கை குலுக்குவதையும், “முஆனகா” கட்டியணைப்பதையும் மார்க்க அனுஷ்டானமாக்கியவர்களும் தத்துவத்தின் தந்தை “தாஹா” நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களேயாவார்கள்.
“மஸ்ஜித்” வணக்க வழிபாட்டுத் தலமான பள்ளிவாயலில் நுழையும் போது முதலில் வலக் காலை முன் வைத்து اَللهم اغْفِرْ لِيْ ذُنُوْبِيْ وَافْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ இறைவா! என் பாவங்களை நீ மன்னித்து விடுவாயாக! எனக்காக உனது அருள் வாசல்களையும் திறந்து விடுவாயாக என்று ஓத வேண்டுமென்று வழிகாட்டியவர்களும் எமது கல்புக் கனி கருணை நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களேயாவார்கள்.
வலக் கரத்தால் சாப்பிட வேண்டும், பருக வேண்டும் என்று ஒழுக்கத்திற்கு வழிகாட்டியவர்களும் எம் பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களேயாவார்கள்.
ஆணுக்கோ, பெண்ணுக்கோ விந்து வெளியானால் அவர்கள் نَوَيْتُ رَفْعَ الْجَنَابَةِ முழுக்கை நீக்குகிறேன் என்ற எண்ணத்தோடு உடல் முழுவதையும் கழுவ வேண்டுமென்று கடமையாக்கியவர்களும் எம்பிரான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களேயாவார்கள்.
تَبَسُّمَكَ فِى وَجْهِ أَخِيْكَ صَدَقَةٌ
உனது சகோதரனைக் காணும் போது நீ அவன் முகம் பார்த்து புன்னகைப்பது நீ அவனுக்கு வழங்கும் நன்கொடை என்று பரஸ்பர அன்புக்கு வழிகாட்டியவர்களும் எம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களேயாவார்கள்.
أَعْدَى عَدُوِّكَ نَفْسُكَ الَّتِيْ بَيْنَ جَنْبَيْكَ
“உனது விரோதிகளில் கடும் விரோதி உனது இரு விலாக்களுக்கிடையில் உள்ள உனது “நப்ஸ்” எனும் மனவாசையாகும்” என்று மனவெழுச்சி பற்றி எச்சரித்தவர்களும் எங்கள் நபீகள் திலகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களேயாவார்கள்.
அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே!
மனிதர்கள் மனிதர்களாக வாழ்வதற்கு வழி சொல்லித் தந்த நபீகள் நாயகம் முஹம்மத் முஸ்தபா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் வழிகாட்டலில் சிலதை நான் சுட்டிக் காட்டியுள்ளேன்.
அல்லாஹ் படைத்த படைப்புக்களில் அர்ஷைவிட, குர்ஸைவிட, லவ்ஹை விட, கலமை விட சுவர்க்கத்தை விடச் சிறந்த படைப்பு எங்களுக்கு நபீயாக அருளப்பட்ட முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களேயாவார்கள்.
உலகில் தோன்றிய நபீமார், றசூல்மார், வலீமார், குத்புமார் அனைவரையும் விடச் சிறந்தவர்கள் எங்களின் நபீ பெருமான் அவர்களேயாவார்கள். படைப்புக்களில் சிறந்தவர்கள் மட்டுமன்றி முதற் படைப்பும் அவர்களேதான்.
உலகில் தோன்றிய அரசர்கள், மன்னர்கள், மகுடாதிபதிகள், கோடீஸ்வரர்கள் அனைவரும் சரணடைந்த மா பெரும் மனிதர் நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்தான்.
இத்தகு சிறப்புக்குரிய எம் பெருமான் பிறந்த இம்மாதத்தை நாம் சங்கைப்படுத்தவில்லையானால் நம் போன்ற பாக்கியம் இழந்தவர்கள் உலகில் எவரும் இருக்கமாட்டார்கள்.
ஆகையால் இன்று மலரவுள்ள அவர்கள் பிறந்த இம்மாதத்தில் அவர்களின் புகழ் பாடியும், அவர்களின் அகமியங்களை மக்களுக்கு எடுத்துக் கூறியும், நமது இல்லங்களையும், அல்லாஹ்வின் பள்ளிவாயல்களையும் மின் குமிழ்களால் அலங்கரித்தும், மக்களுக்கு அன்னதானம் வழங்கியும் சங்கைப் படுத்துவோம்.
அவர்கள் மீது நமக்குள்ள “மஹப்பத்” அன்பை வெளிப்படுத்தும் வகையில் அவர்களின் புகழ் பாடும் பள்ளிவாயல்களுக்கு நம்மால் முடிந்த காணிக்கைகள் வழங்கி அவர்களின் அருளைப் பெற்றுக் கொள்வோம்.