தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
باب النّهي عن الكذب وبيان أقسامه
பொய் சொல்லுதல் தொடர்பான தடைகளும், அதன் வகைகளும்.
قد تظاهرتْ نصوصُ الكتاب والسنّة على تحريم الكذب في الجملة، وهو من قبائح الذنوب وفواحش العيوب.وإجماعُ الأمة منعقدٌ على تحريمه مع النصوص المتظاهرة،
பொதுவாக பொய் சொல்லுதல் “ஹறாம்” விலக்கப்பட்ட விடயம் என்பதற்கு திருக்குர்ஆனிலும், நபீ மொழிகளிலும் ஆதாரங்கள் உள்ளன. பொய் சொல்லுதல் பாவங்களில் மிகக் கீழ்த்தரமானதாகும். பொய் சொல்லுதல் “ஹறாம்” தண்டனைக்குரிய குற்றமென்பது இஸ்லாமிய மூலாதாரங்களினதும், மார்க்க மேதைகளினதும் முடிவாகும்.
பொய் என்றால் என்ன?
இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லுதல் பொய். நடக்காத ஒன்றை நடந்ததாகச் சொல்லுதல் பொய். உண்மைக்கு மாறாகச் சொல்லுதல் பொய். பொய்யை மெய்யென்று நம்புதலும் பொய்யே! இல்லாத ஒன்றை இருப்பதாக நம்புவதும் பொய்யே!
கலப்புத் தங்கத்தை 24 “கரட்” என்று சொல்வதும் பொய்யே! பொய்யான உலகை மெய்யென்று நம்புவதும் பொய்யே! இந்தியாத் தயாரிப்பை இத்தாலி தயாரிப்பென்பதும் பொய்யே! நாற்ற மீனை உயிர் மீன் என்று சொல்வதும் பொய்யே! “ஸுப்ஹ்” தொழாமல் தொழுதுவிட்டேன் என்பதும் பொய்யே! மருதமுனைத் தயாரிப்பை இந்தியா தயாரிப்பென்பதும் பொய்யே! “இமிடேஷன்” கல்லை இரத்தினக்கல் என்பதும் பொய்யே! சாப்பிட்ட ஒருவன் மீண்டும் சாப்பிடுவதற்காக சாப்பிடவில்லை என்பதும் பொய்யே! அரிசிச் சாயத்தால் பீங்கானில் “இஸ்ம்” எழுதிவிட்டு இஸ்பெய்ன் குங்குமப் பூ சாயத்தால் எழுதப்பட்டுள்ளது என்பதும் பொய்யே! நாய் இறைச்சை ஆட்டிறைச்சென்பதும் பொய்யே! அத்தருடன் எண்ணெய் கலந்துவிட்டு ஒரிஜினல் பொம்பாய் சாமான் என்பதும் பொய்யே! “முஸ்ஹப்” திருக்குர்ஆன் பிரதியில் ஒரு தாளுக்கு இரண்டு தாள்களைப் புரட்டி ஓதி விட்டு ஓதிவிட்டேன் என்பதும் பொய்யே! நீர் கலந்த பாலை சுத்தமான பால் என்பதும் பொய்யே! மாட்டு சூப்பை ஆட்டு சூப் என்பதும் பொய்யே! பழைய பாணை புதிய பாண் என்று சொல்வதும் பொய்யே! காலால் ஒப்பம் போட்டுவிட்டு கையொப்பம் இடவில்லை என்பதும் பொய்யே! மூக்குக் கண்ணாடி மூலம் பார்த்து விட்டு கண்ணால் பார்க்கவில்லை என்பதும் பொய்யே! சீனிப் பாணியை தேன் பாணி என்பதும் பொய்யே! வாழைச்சேனை சுறா மீனை காத்தான்குடி சுறா என்பதும் பொய்யே! இவை பொய் மட்டுமல்ல மக்களை ஏமாற்றுவதுமாகும்.
இவ்வாறு பொய்யில் பல பொய்யுண்டு. எவ்வகையாயினும் உண்மைக்குப் புறம்பான எல்லாமே பொய்தான்.
عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ‘ آيَةُ المُنافِقِ ثَلاثٌ: إذا حَدّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أخْلَفَ، وَإِذَا ائتُمن خَانَ ‘(متفق عليه، الأذكار، ص 306)
“முனாபிக்” நயவஞ்சகனுக்குரிய அடையாளம் மூன்று. பேசினால் பொய் சொல்வான். வாக்களித்தால் மாறு செய்வான். நம்பினால் துரோகம் செய்வான் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அருளினார்கள்.
ஆதாரம்: புகாரீ, முஸ்லிம், அல் அத்கார்: பக்கம் 306)
மேற்கண்ட இந்த நபீ மொழியில் “முனாபிக்” நயவஞ்சகனின் அடையாளங்கள் பற்றி நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
இந்த நபீ மொழியில் வந்துள்ள “ஆயத்” என்ற சொல்லுக்கு வசனம் என்று பொருள் கொள்ளாமல் عَلَامَةٌ அடையாளம் என்று பொருள் கொள்ள வேண்டும்.
இதன் கருத்து என்னவெனில் நபீ மொழியில் கூறப்பட்ட மூன்று அடையாளங்களில் ஒன்றேனும் ஒருவனில் இருந்தால் அவன் “முனாபிக்” நயவஞ்சகன் என்று அறிந்து கொள்ள முடியும். ஒருவனில் குறித்த மூன்று அடையாளங்களும் ஒரே நேரத்தில் இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. ஓர் அடையாளம் இருந்தாலும் அவன் “முனாபிக்” நயவஞ்சகன்தான்.
ஆயினும் அவனில் மூன்று அடையாளங்களும் ஒரே நேரத்தில் இருந்தால் அவன் நயவஞ்சகத்தில் முதலிடத்தில் உள்ளவன் என்று அறிந்து கொள்ள முடியும்.
பொய் சொல்பவர்களிலும் பல வகையினர் உள்ளனர். அவர்களிற் சிலர் வாய் திறந்தால் – கதைக்கத் தொடங்கினால் முடியும் வரை பொய்தான் சொல்வார்கள். இத்தகையோர் முஸ்லிம்களிலும், முஸ்லிம் அல்லாதவர்களிலும் உள்ளார்கள். சுருங்கச் சொன்னால் பொய் சொல்வது அவர்களின் புறப்புவாசி – பிறவிக்குணம் என்று சொல்லலாம். அது அவர்களுக்கு சுவாசம் போல் தவிரக்க முடியாததாகிவிடும்.
இத்தன்மையுள்ள ஒருவன் كَذَّابٌ – “கத்தாப்” கடும் பொய்யன் என்று அழைக்கப்படுவான். சில கிராமவாசிகளிடம் இவன் “அண்டப் புளுகன்” என்றும், “ஆகாயப் புளுகன்” என்றும் சொல்லப்படுவான். இவன் “காதிப்” كَاذِبٌ பொய்யன் என்று அழைக்கப்படுவதில்லை. كَاذِبٌ “காதிப்” என்பவன் 40 வீதம் சொல்பவனாக இருப்பான். كَذَّابٌ 60 வீதம் பொய் சொல்பவனாக இருப்பான்.
மேற்கண்ட நபீ மொழியில் முதலில் கூறப்பட்ட அடையாளம் “பேசினால் பொய் பேசுவான்” என்பதாகும். إِذَا حَدَّثَ كَذَبَஎன்ற அறபு வசன நடை “வாய் திறந்தால் பொய்தான்” என்ற பாணியில் அமைந்துள்ளது ஆய்வாளர்களுக்காக குறிப்பிட வேண்டியதாகும்.
பொய் சொல்பவர்களிற் சிலர் பொய் சொல்லிப் பயிற்சி எடுக்காதவர்களாயிருப்பார்கள். இவர்கள் ஏதாவதொரு விடயத்தில் பொய் சொல்ல வேண்டியிருந்தால் அதற்குப் பல மணி நேரங்களுக்கு முன் கற்பனை செய்து பொய்யைத் தயார் செய்து கொள்வார்கள். அதுமட்டுமல்ல அது மறந்து போகுமென்று பயந்து திரு வசனங்களை மனனம் செய்வது போல் அவற்றை மனனம் செய்தும் கொள்வார்கள்.
இன்னோர் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்களல்ல. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த அண்டப் புளுகன் இருக்கிறானே அவன் கற்பனை செய்து பொய் தயார் பண்ணத் தேவையில்லை. அவனின் நாக்கு பொய் பேசிப் பேசி உண்மை அந்த நாவால் வெளியாவது அசாத்தியமாகிவிடும்.
புகழ் பெற்ற கள்ளனுக்கு – பல நாட் கள்ளனுக்கு களவைக் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை. அவன் எளிதில் மாட்டிக் கொள்ளவும் மாட்டான். ஆயினும் வருடத்தில் ஒரு தரம் களவு செய்பவன் களவைக் கற்றுக் கொள்ளவும் வேண்டும். பல தரம் ஒத்திகை பார்த்துக் கொள்ளவும் வேண்டும். இன்றேல் அவன் மாட்டிக் கொள்வான். இவ்வாறுதான் வருடத்தில் ஒரு தரம் பொய் சொல்பவனுமாவான்.
எனினும் ஒரு சுவாசத்திற்கு ஒரு பொய் சொல்லிப் பயிற்சி எடுத்தவன் ஒரே நாளில் 21600 பொய்கள் மிக எளிதாகச் சொல்லிவிடுவான்.
புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் தமது படிப்பு, பயிற்சி மூலம் ஒருவனின் பொய்யை அவனின் வாயசைவின் மூலமும், கண் பார்வை மூலமும் மிக எளிதில் கண்டு பிடித்துவிடுவார்கள்.
ஆன்மிக அறிவு பெற்ற வலீமார் புலனாய்வுப் பிரிவினரை விட மிக எளிதில் கண்டு பிடித்து விடுவார்கள். அவர்களுக்கு முன்னிலையில் ஒருவன் பொய் சொன்னால் அவனின் வாய் வழியாக கருமையான – இருளான புகை குளாய் அமைப்பில் வெளியாவதைக் கண்ணால் கண்டு கொள்வார்கள். இவ்வாறான சக்தியை வலீமாருக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான். இதனால் வலீமார் முன்னிலையில் எவரும் பொய் சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது.
عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما أن النبيَّ (صلى الله عليه وسلم) قال: ‘ أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كانَ مُنافِقاً خالِصاً، وَمَنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْ نِفاقٍ حتَّى يَدَعَها: إِذَا ائتُمِن خانَ، وَإذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا عاهَدَ غَدَرَ، وَإِذَا خاصَمَ فَجَرَ ‘ وفي رواية مسلم ‘ إذا وعدَ أخلفَ ‘ بدل ‘ وإذا ائتُمِن خان ‘
நான்கு அம்சங்கள் ஒரே நேரத்தில் எவனில் உள்ளதோ அவன் முழு “முனாபிக்” நயவஞ்சகன் ஆவான். நான்கு அம்சங்களில் ஒன்று மட்டும் ஒருவனில் இருந்தால் அவனில் நயவஞ்சகத்தில் ஓர் அம்சம் மட்டும் உள்ளதென்று அர்த்தம். ஆயினும் அதை அவன் விட்டால் அவன் நயவஞ்சகன் அல்ல.
நான்கு அம்சங்களும் பின்வருமாறு. ஒன்று – நம்பினால் துரோகம் செய்வான். இரண்டு – பேசினால் பொய் சொல்வான். மூன்று – ஒப்பந்தம் செய்தால் துரோகம் செய்வான். நான்கு – வழக்குத் தொடர்ந்தால் சதி செய்வான் என்று நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
ஆதாரம்: புகாரீ, முஸ்லிம், அறிவிப்பு: அப்துல்லாஹ் இப்னு அம்றிப்னுல் ஆஸ்
(அல்அத்கார்: 306)
இந்த நபீ மொழியில் நான்கு அம்சங்கள் கூறப்பட்டுள்ளன. முஸ்லிமின் அறிவிப்பில் “வாக்களித்தால் மாறு செய்வான்” என்று வந்துள்ளது.
ஒருவனை “முனாபிக்” என்று சொல்வதற்கான அடையாளங்கள் பற்றி மேலே இரண்டு நபீ மொழிகள் கூறியுள்ளேன்.
அவ் இரண்டிலும் பேசினால் பொய் சொல்வான் என்ற அம்சம் உள்ளது. நான் இதுவரை இந்த அம்சம் பற்றி மட்டுமே விபரித்துள்ளேன். ஏனைய அம்சங்களில் இன்னும் கை வைக்கவில்லை. இவ் அம்சத்தை முடித்துவிட்டு மற்றவைகளைக் கூறுவேன்.
இதுவரை பொய் என்றால் என்னவென்றும், அது “முனாபிக்” நயவஞ்சகனுக்குரிய அடையாளம் என்றும் தெரிந்து கொண்டோம்.
பொய் சொல்வது ஆகுமான கட்டங்கள்:
பொய் சொல்வது மார்க்கச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட கட்டங்களும் உள்ளன. இது பற்றி சுருக்கமாக சில வரிகள்.
عن أُمّ كلثوم رضي الله عنها أنها سمعت رسول الله (صلى الله عليه وسلم) يقول: ‘ لَيْسَ الكَذَّابُ الَّذي يُصْلِحُ بَيْنَ النَّاسِ فَيَنْمي خَيْراً أوْ يَقُولُ خَيْراً ‘
மனிதர்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துபவன் பொய்யன் அல்ல என்று பெருமானார் சொல்ல உம்மு குல்தூம் நாயகி றழியல்லாஹு அன்ஹா கேட்டதாக அறிவித்துள்ளார்கள்.
ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்., அறிவிப்பு: உம்மு குல்தூம், அல் அத்கார் – 306
இந்த நபீ மொழியின் சுருக்கமான விளக்கம் என்னவெனில் மனிதர்களுக்கிடையில் பொய் சொல்லியாவது ஒற்றுமையை, நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற ஒருவன் பொய்யனாக மாட்டான். அவனுக்கு பொய் சொன்ன பாவம் கிடைக்காது என்பதாகும்.
ஒற்றுமையின்றி மனக் கசப்புடன் வாழ்கின்ற கணவன், மனைவிக்கிடையில், அல்லது சகோதர, சகோதரிக்கிடையில், அல்லது நண்பர்களுக்கிடையில் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்குடன் பொய் சொல்பவன் எதார்த்தத்தில் பொய்யனாகமாட்டான். ஏனெனில் அவனின் “நிய்யத்” எண்ணம் புனிதமானதாயிருப்பதேயாகும்.
ஒருவன் இதற்கு மாறாக இருவருக்கிடையில் பகைமையையும், விரோதத்தையும் ஏற்படுத்தும் எண்ணத்துடன் ஆயிரம் உண்மை பேசினாலும் மெய்யனாக மாட்டான். ஏனெனில் அவனின் எண்ணம் தீமையானதாயிருப்பதேயாகும்.
எனவே, இருவருக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்தோடும், இலட்சியத்தோடும் ஆயிரம் பொய் சொன்னாலும் அவை பொய்யாயிருந்தாலும் கூட எதார்த்தத்தில் அவை பொய்யாகாதென்பதும், அந் நோக்கத்தோடு பொய் சொன்னவன் பொய்யனாக மாட்டான் என்பதும், அவனுக்கு அல்லாஹ்விடம் தண்டனை இல்லை என்பதும் மேற்கண்ட நபீ மொழி மூலம் தெளிவாகின்றன.
إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ
يقول الإمام النووي رحمه الله فى كتابه الأذكار – وأحسنُ ما رأيتُه في ضبطه، ما ذكرَه الإِمامُ أبو حامد الغزالي فقال: الكلامُ وسيلةٌ إلى المقاصد، فكلُّ مقصودٍ محمودٍ يُمكن التوصلُ إليه بالصدق والكذب جميعاً، فالكذبُ فيه حرامٌ، لعدم الحاجة إليه، وإن أمكنَ التوصل إليه بالكذب، ولم يمكن بالصدق، فالكذبُ فيه مباحٌ إن كان تحصيل ذلك المقصود مباحاً، وواجبٌ إن كان المقصود واجباً، فإذا اختفى مسلم من ظالم وسأل عنه، وجبَ الكذبُ بإخفائه، وكذا لو كان عندَه أو عندَ غيره وديعة وسأل عنها ظالمٌ يُريدُ أخذَها، وجبَ عليه الكذب بإخفائها،
இது தொடரபான முழு விபரங்களையும் நான் இலங்கையில் இருந்தால் நானே எழுதுவேன். இன்றேல் எனது செயலாளர் மௌலவீ ஜஹானீ றப்பானீ அவர்கள் எழுதுவார்கள். இன்ஷா அல்லாஹ்!
நான் எனது சிஷ்யர்கள் 19 பேர்களுடன் பாரதத்தில் பல மாநிலங்களிலும் சமாதி கொண்டுள்ள இறை நேசச் செல்வர்களான குத்புமார், வலீமார்களை தரிசிப்பதற்காகச் செல்கிறேன்.
இப்புனித பயணத்தின் மூலம் எங்களின் இலட்சியம் நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கால் பதித்த நமது இலங்கைத் திரு நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பஞ்சம், பட்டினி, பசி, அரசியல் கருத்து வெறுபாடுகள், மார்க்க கருத்து வேறுபாடுகள், பொறாமை, எரிச்சல், வஞ்சகம் போன்றவை யாவும் இல்லாமற் போய் நாடு செழிக்க வேண்டும், நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவும், புரிந்துணர்வோடும், செல்வத்தோடும், செழிப்போடும் வாழ அல்லாஹ் அருள் செய்ய வேண்டும் என்று குத்புமார்களின் பொருட்டு கொண்டு அல்லாஹ்விடம் உதவி தேடுவதேயாகும்.
இக்கட்டுரையை வாசிக்கின்ற சகோதர, சகோதரிகள் அனைவரும் எமது இலட்சியம் நிறைவேற எல்லாமாய் “தஜல்லீ” வெளியாகி, எங்குமாய் நிறைந்து நிற்கும், இணையற்ற, நிகரற்ற அல்லாஹ்விடம் இரு கரமேந்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
வாழ்க ஞானம்!
வளர்க ஸூபிஸம்!