தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
அன்புக்குரியவர்களே!
உங்களின் அறியாமையாலும், விளக்கமின்மையாலும் வலீமாரின் பக்தர்களையும், ஸூபிஸக் கொள்கை வாதிகளையும் மேற்கண்டவாறு பரிகாசம் செய்து வருகிறீர்கள்.
உங்களை இவ் இழி நிலைக்குத் தள்ளியவர்கள் “பத்வா” வழங்கிய மத குருக்களேயாவர். இவ்வாறு அவர்களால் தள்ளப்பட்டு வலீமாரின் நேயர்களையும், ஸூபிஸக் கொள்கைவாதிகளையும் நையாண்டி செய்கிறீர்கள். இப்படியொரு இழி நிலை இவ் ஊரில் மட்டுமே உள்ளது. வெளியூர்களிலோ, வெளிநாடுகளிலோ இவ் இழி நிலை இல்லை.
நான் இலங்கை நாட்டின் பல ஊர்களுக்கும் செல்கிறேன். பொது மக்கள் என்னோடு இன் முகத்தோடு பேசுகிறார்கள். உபசரிக்கின்றார்கள். அன்பு காட்டுகிறார்கள். அரவணைக்கின்றார்கள். உதவி, உபகாரமும் செய்கிறார்கள்.
ஆயினும் நான் எவ் ஊர் சென்றாலும் அங்கு உலமாஉகளின் “பத்வா”வுக்கு ஆதரவான ஒரு மௌலவீ இருந்தால் போதும். அவரால் எனக்கு சில சிக்கல்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
நான் பொது மக்களான உங்களுக்கு கூறும் ஆலோசனை என்னவெனில் நீங்கள் மறு வாழ்வில் இன்புற விரும்பினால் ஸூபிஸக் கொள்கைவாதிகளை “முர்தத்” என்று சொல்வதையும், வலீமார் பக்தர்களை “கப்ர் முட்டிகள்” என்று பரிகாசம் செய்வதையும் முழுமையாக நிறுத்திக் விடுங்கள். இன்றேல் மறுமையில் நீங்கள் தண்டனைக்குள்ளாகிவிடுவீர்கள்.
இவ்வாறு நான் எழுதுவதால் நீங்கள் நான் கூறும் கொள்கையை முழுமையாக ஏற்று என்னுடன் இணைந்து கொள்ள வேண்டும் என்பதோ, பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலில் நடைபெறுகின்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பதோ, உலமாஉகளுக்கு எதிராகச் செயல்பட வேண்டுமென்பதோ எனது இலட்சியமல்ல. நீங்கள் உலமாஉகளுடன் ஒற்றுமையாக வாழுங்கள். அவர்களைக் கண்ணியம் செய்யுங்கள். அவர்களுக்கு உதவி, உபகாரம் செய்யுங்கள். இவை பற்றி நான் சிந்திப்பதே இல்லை.
நீங்கள் மறுமையில் நரகின் உணவாகிவிடக் கூடாதென்பதற்காகவே இவ் ஆலோசனையை முன் வைக்கிறேன்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَوْمٌ مِنْ قَوْمٍ عَسَى أَنْ يَكُونُوا خَيْرًا مِنْهُمْ وَلَا نِسَاءٌ مِنْ نِسَاءٍ عَسَى أَنْ يَكُنَّ خَيْرًا مِنْهُنَّ وَلَا تَلْمِزُوا أَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ بِئْسَ الِاسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ وَمَنْ لَمْ يَتُبْ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ،
விசுவாசிகளே! ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை பரிகாசம் செய்ய வேண்டாம். (பரிகாசம் செய்யப்பட்ட) அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களை விடச் சிறந்தவர்களாக இருக்கலாம். அவ்வாறே எந்தப் பெண்களும், மற்ற எந்தப் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். (பரிகாசம் செய்யப்பட்ட) அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களை விட மிகச் சிறந்தவர்களாக இருக்கலாம். உங்களிற் சிலர் சிலரை குறை கூறவும் வேண்டாம். உங்களிற் சிலர் சிலரை (அவருக்கு வைக்கப்படாத) பெயர்களால் அழைக்கவும் வேண்டாம். விசுவாசம் கொண்ட பின்னர் (தீயவற்றைக் குறித்துக் காட்டும்) தீயபெயர் (கூறுவது) மிகக் கெட்டதாகிவிட்டது. எவர்கள் இவைகளிலிருந்து “தவ்பா”ச் செய்து – பாவ மன்னிப்புக் கேட்டு மீள வில்லையோ அவர்களே அநியாயக் காரர்கள். (திருக்குர்ஆன் 49-11)
திருக்குர்ஆன் வசனத்தில் வந்துள்ள قَوْمٌ – “கவ்முன்” என்ற சொல்லுக்கு ஒரு சாரார், ஒரு கூட்டம் என்று பொருள் வரும்.
ஒரு சாரார் இன்னொரு சாராரை, ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தை – ஒரு “குறூப்” இன்னொரு “குறூப்”பை பரிகாசம் செய்தல், கேலி செய்தல் வேண்டாம். கூடாது. இவ்வாறு தான் தனி நபர் ஒருவர் இன்னொரு நபரை பரிகாசம் செய்தலும் கூடாது.
நமது இலங்கை நாட்டின் பேச்சு வழக்கில் கிண்டல் செய்தல், நக்கலடித்தல் என்றும் சொல்வர்.
இதன் சுருக்கம் என்னவெனில் ஒருவன் இன்னொருவனை தன்னை விடத் தரம் குறைந்தவனாகப் பேசுதல், ஒரு “குறூப்” இன்னொரு “குறூப்”பை தம்மைவிடத் தரம் குறைவானதாக பேசுதலாகும்.
ஓர் இனம் இன்னொரு இனத்தை பரிகாசம் செய்வதும் இதில் அடங்கும். உதாரணமாக சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்களில் ஒரு சிலர் மறு சிலரை பரிகாசம் செய்வது போன்று. பணம் படைத்தவர்கள் ஏழைகளைப் பரிகாசம் செய்வதும் இதில் அடங்கும்.
முல்லாக்களின் கண்ணில்லாத “பத்வா”வை தமது கண்களை மூடிக் கொண்டு சரி கண்டவர்கள் அதைச் சரிகாணாதவர்களை தரக் குறைவாக நினைப்பதும் இதில் அடங்கும்.
பிரதேச பாகுபாடுகள், ஊர் பாகுபாடுகளை மனதில் வைத்துக் கொண்டு ஒருவர் இன்னொருவரை தூரப் படுத்துவதும் இதில் அடங்கும்.
“சகாத்” நிதி வழங்கும் ஒரு செல்வந்தனிடம் அவனின் மகன் அப்பா, நமது பள்ளிவாயல் பேஷ் இமாமுக்கும், முஅத்தினுக்கும் “சகாத்” கொடுக்க வேண்டுமல்லவா? என்னிடம் தாருங்கள் நான் கொடுத்துவிட்டு வருகிறேன் என்று கேட்கும் போது அவர்களெல்லாம் வீடு வீடாகப் போய் வாங்கிப் பழகிய ஆட்கள்தானே வந்தால் கொடுப்போம் என்று அவன் சொல்லும் வார்த்தையும் இதில் அடங்கும்.
பணக்காரக் கும்பல் “பிக்னிக்” போகும் வேளை குடும்பத்திலுள்ள அனைவருக்கும் கடையில் புத்தாடை எடுக்கும் போது குடும்பத் தலைவனின் சிறிய மகள் வாப்பா, வீட்டு வேலைக் காரிக்கும் உடுப்பு எடுங்க வாப்பா என்று சொல்லும் போது அவள் வேலைக் காரிதானே அவளுக்குத் தேவையில்லை என்று குடும்பத் தலைவன் சொல்லும் வார்த்தையும் இதில் அடங்கும்.
ஓர் அந்தகன் வீட்டின் கதவைத் தட்டி அம்மா பசிக்குது என்று சொன்னதைக் கேட்ட இரக்கமுள்ள இல்லாள் புதிய பிளேட்டில் உணவு கொடுத்ததைக் கண்ட வீட்டுக் காரன் அந்தகனுக்கு புதிய பிளேட் எதற்கு? பழைய பிளேட்டில் வைத்துக் கொடு என்று கூறிய வார்த்தையும் இதில் அடங்கும்.
தனித்தனி உதாரணம் சொல்லாமல் பொதுவாகச் சொல்வதாயின் பிறரை அவமதிக்கின்ற சொற், செயல் யாவும் பரிகாசத்தில் அடங்கும்.
ஒரு சபையில் ஓர் ஆலிம் “துஆ” ஓதினால் அங்கு இருப்பவர்கள் அனைவரும் கையேந்தி “ஆமீன்” சொல்வார்கள். காத்தான்குடி தோன்றிய காலம் முதல் இவ்வழக்கம் இங்கு இருந்து வந்துள்ளது. ஆயினும் வந்ததும் வந்தது முல்லாக்களின் “முஸீபத்” “பத்வா”.
பொது மக்கள் இரு பெரும் துருவங்களாகப் பிரிந்தனர். கண் கெட்ட “பத்வா”வுக்கு எதிரான ஆலிம் “துஆ” ஓதினால் அதற்கு எதிரானவர்கள் கையேந்தி “ஆமீன்” சொல்வார்கள். அந்த “பத்வா”வுக்கு ஆதரவான ஆலிம் “துஆ” ஓதினால் அதை எதிர்ப்பவர்கள் கையேந்தவுமாட்டார்கள். “ஆமீன்” சொல்லவுமாட்டார்கள். இவ் அவல நிலை “பத்வா”வினால் ஏற்பட்டதாகும். இதுவும் பரிகாசத்தைச் சேர்ந்ததேயாகும்.
பரிகாசம் செய்பவர்களை விட பரிகாசம் செய்யப்பட்டவர்கள் சிறந்தவர்களாயிருந்தால் பரிகாசம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறுதான் பெண்களின் நிலைகளுமாகும்.
உங்களிற் சில் சிலரை குறை கூறவும் வேண்டாம். இதுவும் அல்லாஹ்வின் ஆணைதான். ஒருவர் மற்றவரை குறை கூறும் வழக்கம் இக்காலத்தில் மலிந்து காணப்படுகிறது. இவ்வழக்கத்தையும் இன, மத பேதமின்றி அனைவரும் கைவிட வேண்டும். இது ஒற்றுமையை – நல்லிணக்கத்தை கொல்லும் நஞ்சாகும்.
உங்களிற் சிலர் சிலரை அவருக்குப் பெற்றோரால் வைக்கப்படாத பெயர்களால் அழைக்கவும் வேண்டாம். இதுவும் அல்லாஹ்வின் ஆணைதான்.
ஸூபிஸ சமூகத்தவர்களுக்கு அவர்களின் பெற்றோரால் வைக்கப்ட்ட பெயர் இருக்கும் நிலையில் சிலர் அப்பெயர்கள் கொண்டு அவர்களை அழைக்காமல் “முர்தத்” என்றும், MR என்றும் அழைப்பது தண்டனைக்குரிய செயலாகும். இதுவும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியதே.
எனவே, இலங்கைத் திரு நாட்டில் வாழ்கின்ற அன்பிற்குரிய முஸ்லிம்களே! சகோதர சகோதரிகளே!
நானும், நான் பேசிய ஸூபிஸ – “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை ஏற்றுக் கொண்டவர்களும் பரம்பரை முஃமின்களும், முஸ்லிம்களுமேயாவோம். நாங்கள் தொழுகின்றோம். நோன்பு நோற்கின்றோம். திருக்குர்ஆன் வழியிலும், நபீ வழியிலும் வாழ்கின்றோம். மாதாந்தம் “திக்ர்” மஜ்லிஸ் நடத்துகிறோம். அவ்லியாஉகளின் பெயரால் மவ்லித், கந்தூரி செய்கின்றோம். மற்றும் “ஷரீஆ” வழியையும், “தரீகா” வழியையும் பின்பற்றுகிறோம். நாங்கள் சிலைகளை வணங்குபவர்களுமல்ல. சிலைகள் வைப்பவர்களுமல்ல. சிலை வணக்கம், மற்றும் சிருட்டி வணக்கத்திற்கு ஆதரவானவர்களுமல்ல. மார்க்கத்துக்கு முரணான எந்த ஒரு விடயத்தையும் ஆகுமென்று சொல்பவர்களுமல்ல.
இத்தகைய கொள்கையுடையோரான எங்களை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் “பத்வா” குழு “முர்தத்” மதம் மாறியவர்கள் என்றும், எங்களைக் கொலை செய்ய வேண்டும் என்றும் “பத்வா” வழங்கியுள்ளார்கள். இதன் வெளிப்பாடுதான் மதிப்பிற்குரிய மௌலவீ MSM பாறூக் காதிரீ அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதுமாகும்.
குற்றவாளி என்று கருதப்பட்ட ஒருவர் விசாரிக்கப்படாமல் தீர்ப்புக் கொடுக்கப்பட்டது இவ் உலகில் இதுவே முதல் தடவை என்று நான் நினைக்கிறேன். அல்ஹம்து லில்லாஹ்!
அல்லாஹ் “அஹ்கமுல் ஹாகிமீன்” நீதிவான்களின் சிறந்த நீதிவான். மறுமை நாளில் அவனின் சரியான தீர்ப்பு வெளியாகும். யார் “முஃமின்” விசுவாசி, யார் “முர்தத்” மதம் மாறியவர் என்பது தெளிவாகும்.
وا حسرتا على ما فرطت فى جنب الله