தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“கவ்ன்” என்ற அறபுச் சொல் அல்லாஹ் படைத்த அனைத்துப் படைப்புக்களையும் உள்வாங்கிய ஒரு சொல்லாகும். சுருக்கமாகச் சொன்னால் “பிரபஞ்சம்” என்று சொல்லலாம்.
பிரபஞ்சம் என்பது “ஐஸ்” கட்டி போன்றது. அதன் வெளித்தோற்றம் திண்மமானதும் , அதன் உள் தோற்றம் திரவமானதுமாகும். “ஐஸ்” கட்டி கரைந்து விட்டால் அதன் மூலமான தண்ணீராய் அது மாறி விடும். அப்போது “ஐஸ் கட்டி” என்ற பெயர் “இஸ்ம்” இல்லாமற் போவதுடன் அதன் “ஸிபத்” கடுங்குளிர் என்ற அதை ஒட்டி நின்ற தன்மையும் இல்லாமற் போய் விடும். ஐஸ் கட்டிக்குள்ள எல்லாத் தன்மைகளும் அற்றுப் போய் விடும். ஐஸ் கட்டி கொண்டு பெறப்பட்ட பயன்கள் அது கரைந்து தண்ணீரான பின் பெற முடியாமற் போய்விடும்.
சிறு விளக்கம்:
(உதாரணமாக மீன், இறால், இறைச்சி போன்ற நீண்ட நேரமிருந்தால் பழுதடையக் கூடிய உணவுகளை ஐஸ் கட்டியுடன் கலந்து வைத்தால் அவை பழுதடைய மாட்டா. அதற்குப் பதிலாக ஐஸ் கட்டியின் மூலமான தண்ணீருடன் கலந்து வைத்தால் அவை பழுதடைந்து விடும்.
பழங்கள், கீரைகள் போன்றவற்றை “ப்றிட்ஜ்” குளிரூட்டியில் வைத்தால் அவை பல நாட்கள் பழுதடையாமல் இருக்கும். ஆனால் தண்ணீருடன் அவற்றைக் கலந்து வைத்தால் அவை பழுதடைந்து விடும்.
மேற்கண்ட உதாரணங்கள் மூலம் “ஐஸ்கட்டி”யின் “ஸிபத்” தன்மை ஒரு வகை என்பதும், அதன் மூலமான தண்ணீரின் தன்மை அதற்கு மாறுபட்ட இன்னொரு வகை என்பதும் தெளிவாகின்றது.
மேற்கண்ட இத் தத்துவத்தை ஸூபீ மகான்கள் وَلِكُلِّ صُوْرَةٍ حُكْمٌ وَاَثَرٌ “ஒவ்வொரு அமைப்புக்கும் – உருவத்திற்கும் – ஒவ்வொரு சட்டமும், ஒவ்வொரு செயல்பாடும் உண்டு” என்று கூறுவர். இது ஒரு قَاعِدَةٌ كُلِّيَّةٌ – பொது விதியாகும். தத்துவம் எதுவாக இருந்தாலும் இவ்விதி பேணப்படுவதே மார்க்கம்.
தங்கத்தால் செய்யப்பட்ட மோதிரம், காப்பு, மாலை, கிரீடம், காதணி என்பன தங்கம் தானானவையாக இருந்தாலும் அவற்றில் ஒவ்வொன்றும் அதன் “ஸூறத்” உருவத்தை – அமைப்பை – கவனித்து ஒவ்வொரு பெயர் கொண்டும், வேறு பட்ட பாவனை முறை கொண்டும் அறியப்பட்டதாகும்.
மோதிரம் என்பது அதன் “ஸூறத்” அமைப்பைக் கவனித்து கைவிரல்களில் மட்டும் அணிய வேண்டியதேயன்றி வேறெந்த உறுப்புக்களிலும் அணியக் கூடியதல்ல. அதேபோல் காதணி என்பது காதில் மட்டும் அணிய வேண்டியதேயன்றி வேறு உறுப்புக்களில் அணியக் கூடியதல்ல. இவ்வாறுதான் ஏனைய அணிகலன்களின் பாவனையுமாகும்.
மேற்கண்ட விபரத்தின் மூலம் தண்ணீரை மூலமாகவும், ஐஸ் கட்டியை அதன் வெளிப்பாடாகவும் கொண்டு சிந்தனை செய்து பார்ப்பது போல் தண்ணீரை அல்லாஹ்வுக்கு உதாரணமாகவும், ஐஸ் கட்டியை சிருட்டிக்கு உதாரணமாகவும் கொண்டு ஆய்வு செய்து பார்க்க வேண்டும். இத்துடன் எனது சிறு விளக்கம் முற்றுப் பெற்றுவிட்டது.)
فَكَذَلِكَ الْمُكَوَّنَاتُ الْحِسِّيَّةُ
இவ்வாறுதான் புலன்களால் உணரப்படுகின்ற சிருட்டியுமாகும். சிருட்டி எது கொண்டு நிலை பெற்று நின்றதோ அது இன்னதுதான் என்று தெளிவானால் – அதாவது சிருட்டி என்பது அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமை கொண்டே நிற்கிறது என்பது தெளிவானால் – சிருட்டியின் திண்மமான “தாத்” இல்லாமற் போய் அது எந்த இரகசியம் கொண்டு நின்றதோ அந்த இரகசியம் தெரியவரும்.
இதே கருத்தை “ஐனிய்யஹ்” பாடலாசிரியர் அறிஞர் அல்லாமஹ் அப்துல் கரீம் அல் ஜீலீ றஹிமஹுல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
பாடலின் கருத்து:
சிருட்டி ஐஸ் கட்டி போன்றது. (பனிக்கட்டி போன்றது)
யா அல்லாஹ்! நீ அதிலுள்ள தண்ணீர் போன்றவன்
ஸூபீகளான எங்களிடம் ஐஸ் கட்டி வேறு
அதிலுள்ள தண்ணீர் அதற்கு வேறு
என்ற கருத்து இல்லை.
“ஷரீஅஹ்” வாதிகளிடம் அவ்விரண்டும்
வேறு வேறானவைதான்.
ஐஸ் கட்டி கரைந்தால் அதற்கான சட்டம்
இல்லாமற் போய்விடும். தண்ணீருக்குரிய
சட்டம் வந்து விடும்.
ஐஸ் கட்டியின் வெளித்தோற்றத்தோடு மட்டும் நின்றவன் அதன் கோலத்தில் – உருவத்தில் வந்த தண்ணீரை மறுத்துவிடுவான். அத்துடன் ஐஸ் கட்டியின் எதார்த்தம் தெரியாதவனாகவும் ஆகிவிடுவான். ஆனால் ஐஸ் கட்டியின் “பாதின்” உள்ரங்கத்தை ஆய்வு செய்தவன் அதன் மூலத்தையும், கோலத்தையும் சரியாக விளங்கிக் கொண்டவனாவான்.
அல்லாஹ்வுக்கும், சிருட்டிக்கும் ஸுபீகள் ஐஸ் கட்டியையும், நீரையும் உதாரணமாகக் கூறுவது போல் சிருட்டிக்கு “திஹ்யஹ்” என்ற நபீ தோழரையும் உதாரணமாகக் கூறுகின்றார்கள். இவரின் பெயர் “திஹ்யதுல் கல்பீ” என்பதாகும். “ஜிப்ரீல்” என்ற “மலக்” நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் “வஹீ” என்ற இறை செய்திகளைக் கொண்டு வரும் போது “திஹ்யதுல் கல்பீ” என்ற நபீ தோழரின் “ஸூறத்” தோற்றத்திலேயே அதிகமாக வருவார்.
இவ்வாறு தனது இயற்கையான, ஒளியிலான உருவத்திலன்றி திஹ்யஹ் வின் உருவத்தில் வருகின்ற ஜிப்ரீலை திண்மமான உடலாகக் கண்டவன் அவரை “திஹ்யஹ்” என்றுதான் சொல்வானேயன்றி அவரை “மலக்” என்று ஏற்றுக் கொள்ள மாட்டான். அவரின் மூலத்தை – அடிப்படையை – அறிந்தவன் அவர் “மலக்” என்பதை மறுக்க மாட்டான். كثافة என்ற திண்மமான உடலில் இருந்து அவர் தனது அடிப்படையான لطافة என்ற மென்மையான ஒளியுடலுக்குப் போய் விடுவாராயின் திண்மமான உடல் இல்லாமற் போய் விடும்.
சிருட்டி என்பது, “ஜிப்ரீல்” என்ற ஒளியுருவில் உள்ள “மலக்” என்பவர் “திஹ்யஹ்” என்ற சட உருவில் தோன்றுவது போன்றதாகும். அதாவது சிருட்டி என்பது ஒரு خيال ஆகும். சிருட்டி என்ற உணர்வு அதைப் பார்ப்பவனுக்கு இருக்கும் வரை அது சிருட்டியாகவே தெரியும். சிருட்டி தனது அடிப்படையான, மூலமான அல்லாஹ்வின் “வுஜூத்” என்ற எதார்த்தத்திற்குப் போய்விடுமாயின் சிருட்டி இல்லாமற் போய்விடும்.
இதே கருத்தை “ஐனிய்யஹ்” கவித் தொகுப்பாளரான பேரறிஞர் அல்லாமஹ் அப்துல் கரீம் அல் ஜீலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
நிச்சயமாக நான் சிருட்டியின்
உருவத்தில் வெளியாகியுள்ளேன்.
ஒவ்வொரு சிருட்டியிலும் எனது
அழகு இலங்குகிறது.
சிருட்டிக்கு – பிரபஞ்சத்திற்கு
“திஹ்யஹ்” என்பவரை உதாரணமாகக் கொள்ளலாம்.
ஜிப்ரீல் அவரின் தோற்றம் பெற்றது
பொய்த் தோற்றமேயாகும்.
(மேற்கண்ட வரிகள் எல்லாம் – விடயங்கள் யாவும் – இறை ஞானியும், பிரசித்தி பெற்ற ஸூபீ மகானுமான அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னு அஜீபஹ் அல் ஹஸனீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “ஈகாழுல் ஹிமம் பீ ஷர்ஹில் ஹிகம்” என்ற நூலில் இருந்து எந்த மாற்றமும் இல்லாமல் எடுக்கப்பட்டவையாகும்.
“ஹிகம்” என்ற நூல் இப்னு அதாயில்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ றஹிமஹுல்லாஹ் அவர்களுக்குரியாதாகும். அல் பகீஹுல் புனானீ றஹிமஹுல்லாஹ் அவர்களும், ஸூபீ மகான்களில் பலரும் இந் நூலைப் புகழ்ந்து கூறுகையில் , (இப்னு அதாயில்லாஹ் அவர்களால் எழுதப்பட்ட “ஹிகம்” என்ற நூல் திருக்குர்ஆன் போன்றது. அது “வஹீ”யாக இருப்பதற்கும் நெருங்கிவிட்டது என்றும், தொழுகையில் திருக்குர்ஆன் அல்லாத வேறு வசனங்கள் ஓதலாம் என்றிருந்தால் “ஹிகம்” என்ற நூலின் வசனங்களை ஓதித் தொழலாம்) என்றும் கூறியுள்ளார்கள். “ஹிகம்” என்ற நூலைப் புகழ்ந்தவர்கள் அனைவரும் (அது இறை இரகசியங்களையும், பல ஆலங்களின் தத்துவங்களையும் உள்ளடக்கிய நூல்)என்று கூறியுள்ளார்கள்.
“ஹிகம்” என்ற நூலின் விரிவுரை நூலான “ஈகாழுல் ஹிமம்” என்ற நூலின் வசனங்களிலும், “ஹிகம்” என்ற நூலின் வசனங்களிலும் “வஹ்ததுல் வுஜூத்” என்ற சொல் வராவிட்டாலும் குறித்த இரு நூல்களும் அதே ஞானத்தை உள்ளடக்கியிருப்பது எவராலும் மறுக்க முடியாத ஒன்றாகும்.
“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை விளங்கிக்கொள்ளும் விடயத்தில் “உலமாஉர் றுஸூம்” என்றழைக்கப்படுகின்ற ஆலிம்களின் புத்திகள் தடுமாறுகின்றன. மருட்சியுடைய, நீரின் மேல் நீந்துகின்ற சட்டக்கலையுடையோரின் சிந்தனைகள் தடுமாறுகின்றன. மேற்கண்ட இரண்டு நூல்களின் வசனங்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை மறுக்கின்ற உலமாஉகளின் கன்னத்தில் பழைய செருப்பால் அடிப்பது போன்றும், பலமான காலால் அவர்களின் முகத்தில் உதைப்பது போன்றும் அமைந்துள்ளன.)