Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“பனா” என்பது மூன்று வகை

“பனா” என்பது மூன்று வகை

والذكر لفناء العبد فى ذاته تعالى ‘ لا موجود إلّا الله ‘ فإذا نفى الوجود من كلّ خلق ومن كلّ شيئ وأثبته لله فقط، فقد فنى فى الله تعالى، فحينئذ كلّ ما صدر منه صدر من الله، لأنّه غائب عن كلّ شيئ حتّى عن نفسه، فلا يرى إلّا الحقّ تعالى شأنه،
 
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
ஷெய்குல் இஸ்லாம் ஸகரிய்யா அல் அன்ஸாரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள். (ஸகரிய்யா அல் அன்ஸாரீ அல் கஸ்றஜீ மிஸ்ர் நாட்டில் ஹிஜ்ரீ 926ல் வபாத் ஆனார்கள்)

“பனா” என்பது மூன்று வகை என்பதாக “ஸூபிய்யாக்கள்” கூறுகின்றார்கள்.
 
ஒன்று: செயல்களில் “பனா” ஆகுதல். “லா பாஇல இல்லல்லாஹ்” செய்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.
 
இரண்டு: “ஸிபத்”துக்களில் (தன்மைகளில்) “பனா” ஆகுதல். “லா ஹய்ய, வலா ஆலிம, வலா கதீற, வலா முரீத, வலா ஸமீஅ, வலா பஸீற, வலா முதகல்லிம அலல் ஹகீகதி இல்லல்லாஹ்” உயிருள்ளவன், அறிவுள்ளவன், சக்தி உள்ளவன், நாட்டம் உடையவன், கேள்வியுடையவன், பார்வையுடையவன், பேசுபவன் அல்லாஹ்வைத் தவிர எதார்த்தத்தில் யாருமில்லை.
 
மூன்று: உள்ளமையில் “பனா” ஆகுதல். பொதுவாக, உள்ளமையாக இருப்பவன் அல்லாஹ் மாத்திரமே. இக்கருத்தை மையமாகக் கொண்டு ஸூபிய்யாக்கள் பின்வரும் கவியைப் பாடியுள்ளனர்.
 
“பனா” ஆகி மீண்டும் “பனா” ஆகி மீண்டும் “பனா” ஆகுவான்
 
அவனுடைய “பனா” ஆகிறது அது “பகா” (தரிபாடாகுதல்) ஆக ஆகிவிடும்.
(ரிஸாலதுல் குஷைரீ ஓரக்குறிப்பு: பக்கம் 28, ஹாஷியதுல் அரூஸீ ஓரக்குறிப்பு, 2 – 3)
இக்கவியில் வந்துள்ள முதலாவது சொல் (பனா) ஓர் அடியான் செயல்களில் “பனா” ஆகுவதைக் குறிக்கும். இரண்டாவது சொல் (பனா) ஓர் அடியான் ஸிபாத் – தன்மைகளில் “பனா” ஆகுவதைக் குறிக்கும். மூன்றாவது சொல் (பனா) உள்ளமையில் (தாத்) “பனா” ஆகுவதைக் குறிக்கும்.
 
ஓர் அடியான் செயல்களில் “பனா” ஆகுவதற்கான “திக்ர்” ஆகிறது “லா பாஇல இல்லல்லாஹ்” ஆகும். இந்த திக்ரின் கருத்தாகிறது நிச்சயமாக செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அவனல்லாத எவருக்கும் எச் செயலும் சொந்தம் இல்லை. “உங்களையும், உங்கள் செயல்களையும் அல்லாஹ்வே படைத்தான்” என்று அல்லாஹ் திருமறையில் கூறுவது போன்று. அதாவது படைப்புக்களின் உருவிலும், அப்படைப்புக்களில் நின்றும் வெளியாகின்ற செயல்களாகவும் அல்லாஹ்வே வெளியாகின்றான். எதார்த்தத்தில் செய்பவன் அல்லாஹ்வே! அவனுடைய செயல் எப்படைப்பில் வெளியானாலும் சரியே! நெருப்பலிருந்து “எரித்தல்” என்ற தன்மை வெளியாவது போன்று, வெட்டுதல் என்ற தன்மை கத்தயிலிருந்து வெளியாவது போன்று. நெருப்பாகிறது எப்பொருளையும் எரிக்காது. அல்லாஹ் அந் நெருப்பில் எரித்தல் என்ற தன்மை கொண்டு வெளியானாலே தவிர. அதே போன்றுதான் கத்தியும். அது எப் பொருளையும் வெட்டாது. அல்லாஹ் அக்கத்தியில் வெட்டுதல் என்ற தன்மை கொண்டு வெளியானாலே தவிர.
 
ஓர் அடியான் “ஸிபாத்” எனப்படுகின்ற தன்மைகளில் “பனா” ஆகுவதற்குரிய “திக்ர்” ஆகிறது “லா ஹய்ய இல்லல்லாஹ், வலா அலீம இல்லல்லாஹ், வலா கதீற இல்லல்லாஹ், வலா முரீத இல்லல்லாஹ், வலா ஸமீஅ இல்லல்லாஹ், வலா பஸீற இல்லல்லாஹ், வலா முதகல்லிம இல்லல்லாஹ்” என்பதாகும். ஓர் அடியான் தன்னிலிருந்து ஹயாத் – உயிர் வாழுதல் என்ற தன்மையை “லா ஹய்ய இல்லல்லாஹ்” என்ற “திக்ர்” கொண்டும், அறிவு என்ற தன்மையை “லா அலீம இல்லல்லாஹ்” என்ற “திக்ர்” கொண்டும், சக்தி என்ற தன்மையை “லா கதீற இல்லல்லாஹ்” என்ற “திக்ர்” கொண்டும், நாட்டம் என்ற தன்மையை “லா முரீத இல்லல்லாஹ்” என்ற “திக்ர்” கொண்டும், கேள்வி என்ற தன்மையை “லா ஸமீஅ இல்லல்லாஹ்” என்ற “திக்ர்” கொண்டும், பார்வை என்ற தன்மையை “லா பஸீற இல்லல்லாஹ்” என்ற “திக்ர்” கொண்டும், பேச்சு என்ற தன்மையை “லா முதகல்லிம இல்லல்லாஹ்” என்ற “திக்ர்” கொண்டும் நீக்குவான். (பனா ஆகுவான்)
 
குறித்த அடியான் தன்னிலிருந்து மேற்குறித்த அனைத்து தன்மைகளையும் அழித்துவிட்டானேயானால் அவன் ஒரு “மையித்” போன்று ஆகிவிடுகின்றான். இந்த அந்தஸ்த்தையே நபீகள் கோமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “மூதூ கப்ல அன் தமூதூ” மரணிக்குமுன் மரணியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
 
ஓர் அடியான் அல்லாஹ்வின் “தாத்” உள்ளமையில் “பனா” ஆவதற்குரிய “திக்ர்” ஆகிறது “லா மவ்ஜூத இல்லல்லாஹ்” அல்லாஹ் அன்றி எதுவுமே இல்லை என்பதாகும். சகல வஸ்த்துக்களினதும் உள்ளமையை நீக்கி அதை அல்லாஹ்வுக்கே உரியது என்று தரிபடுத்தினானேயானால் அவன் அல்லாஹ்வில் “பனா” ஆகிவிடுவான். அந் நேரத்தில் இவனில் நின்றும் வெளியாகக் கூடிய அனைத்தும் அல்லாஹ்வில் நின்றும் வெளியானதாக ஆகும். ஏனெனில் அவன் அனைத்தைவிட்டும், தன்னைவிட்டும் மறைந்தவனாக ஆகிவிடுகின்றான். ஹக் தஆலா தவிர எதையுமே பார்க்க மாட்டான்.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments