Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்தர்மம் மறைத்துக் கொடுக்கப்பட வேண்டும்

தர்மம் மறைத்துக் கொடுக்கப்பட வேண்டும்

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
قال الشّيخ الأكبر محي الدين ابن عربي قُدِّس سرُّه فى حديث ‘ الّذي تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حتّى لا تعلم شمالُه ما تُنْفِقُ يمينه ‘
 
(فى هذا الحديث إنّ جَوارِحَ الإنسان تعلمُ بالأشياء، ولهذا وصَفَها اللهُ تعالى بأنّها تَشْهَدُ يوم القيامة، بقوله يومَ تشهد عليهم أَلْسِنَتُهم وأَيدِيهم وأرجُلُهم، فافهم، ثمّ اعلَمْ أنّ إِخفائَها يكون على وجوهٍ،
 
منها أن لا يعلمَ بِكَ مَنْ تصدَّقْتَ عليه، بِأَنْ أعطيتَها لشَخصٍ فأعطاها لذلك الفقير من غيرِ أن يعلمه، ومنها أن تُعطِيَ صدَقَتَكَ لعاملِ السُّلطان، فيُعطِيَها للأصنافِ الثمانية، فلا يعلم الفقير من ربُّ ذلك المال الّذي أخَذَهُ على التَّعْيِيْنِ ، فلم يكن لهذا المُتصدِّقِ على الفقير مِنَّةٌ ولا عِزَّةُ نفسٍ، قال وليس فى الإخفاء اَخْفَى من هذا)
(الكبرين الأحمر، اليواقيت، ص – 83 )

“ஒருவன் தனது இடதுக்கு தெரியாமல் வலதால் “ஸதகா” தர்மம் செய்தான்” என்ற நபீ மொழி தொடர்பாக அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ அவர்கள் கூறுகையில், மனித உறுப்புக்கள் எல்லாம் அவன் செய்வதையெல்லாம் அறிகின்றன. இதனால்தான் மறுமை நாளில் மனிதர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் சாட்சி சொல்கின்றன என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளான். இதை நீ அறிந்து விளங்கிக் கொள்.
 
“ஸதகா” தர்மம் எவருக்கும் தெரியாமல் மறைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என்று நபீ மொழி கூறுகிறது. வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியக் கூடாது என்று இன்னொரு அருள் மொழி அறிவிக்கிறது.
 
தர்மம் மறைத்துக் கொடுக்கப்படுவதற்குப் பல வழிகள் உள்ளன. மறைத்துக் கொடுத்தல் என்பதில் ஒரு நுட்பம் உண்டு. அதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது ஓர் ஏழைக்கு தர்மம் செய்யும் போது அதை அந்த ஏழையும் அறியக் கூடாது. மற்றவர்களும் அறிந்து கொள்ளக் கூடாது.
 
ஓர் ஏழைக்கு தர்மம் செய்வதை மற்றவர்கள் அறிந்து கொள்ளாமல் தர்மம் செய்ய வேண்டும் என்றே மேற்கண்ட ஹதீதுக்கு அதிகமானோர் விளக்கம் கொள்கிறார்கள். இவ்வாறு விளக்கம் கொள்வது பிழையானதல்ல. எனினும் இது இரண்டாவது விளக்கம்தான். முதல் விளக்கம் இதுவல்ல.
 
முதல் விளக்கம் என்னவெனில் ஓர் ஏழைக்கு தர்மம் செய்யும் போது செய்தவன் யாரென்று அந்த ஏழை அறிந்து கொள்ளக் கூடாது என்பதாகும். அதை மற்றவர்கள் அறிந்து கொள்ளக் கூடாது என்பது இரண்டாவது விளக்கம்தான்.
 
ஏனெனில் தர்மம் செய்தவன் அதைப் பெற்றுக் கொண்டவனிடம் ஒரு சந்தர்ப்பத்தில் நான் உனக்கு தர்மம் செய்துள்ளேன் என்று சொல்லிக் காட்டுவதற்கு வாய்ப்பு உண்டு. இந்த வாய்ப்பு தர்மம் வழங்கியவன் யாரென்று அதைப் பெற்றுக் கொண்டவன் அறிந்திருந்தால் மட்டும்தான் சாத்தியமாகும். ஒருவன் ஓர் ஏழைக்கு தர்மம் செய்வதை இன்னொருவன் காண்பதால் சொல்லிக் காட்டுதல் என்பதற்கு இடமில்லாது போய்விடும்.
 
எனவே, தர்மம் செய்தவன் யார் என்று தர்மத்தை பெற்றவன் அறிந்து கொள்ளாமலிருப்பதே முக்கியமானதாகும்.
 
இதற்கான பல வழிகளில் ஒன்று ஓர் ஏழைக்கு தர்மம் செய்ய விரும்பும் ஒருவன் தனது தர்மத்தை அந்த ஏழையிடம் நேரில் கொடுக்காமல் இன்னொருவனிடம் கொடுத்து அதை அந்த ஏழைக்கு கிடைக்கச் செய்வதாகும். இவ்வாறு செய்வதால் தர்மம் கொடுத்தவன் அதை பெற்றவனிடம் சொல்லிக் காட்டுவதற்கு வாய்ப்பு இல்லாமற் போய்விடும்.
 
எனவே, தர்மம் செய்கின்றவன் அதைப் பெறுகின்றவன் அறியாமற் செய்வதற்கு மேலே சொன்னது ஒரு வழியாகும்.
 
இரண்டாவது வழி என்னவெனில் ஒருவன் தனது தர்மத்தை ஓர் ஊரின் தலைவரால் நியமிக்கப்பட்ட வேலையாளிடம் – தர்மம் வசூல் செய்வதற்கென்று நியமிக்கப்பட்டவரிடம் ஒப்படைப்பதாகும். இவ்வாறு செய்தாலும் தர்மத்தை பெறுகின்றவன் தனக்கு தர்மம் வழங்கியவன் யார் என்பதை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பு இல்லாமற் போய்விடும். தர்மம் மறைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்கு மேற்கண்ட இரண்டு வழிகளும் சிறந்த வழிகளேயாகும்.
 
ஆதாரம்: அல்கிப்ரீதுல் அஹ்மர், அல்யவாகீத், பக்கம் 83
RELATED ARTICLES

Most Popular

Recent Comments