“இல்முல் கலாம்” என்பதும், “இல்முத் தவ்ஹீத்” என்பதும், “இல்மு வஹ்ததில் வுஜூத்” என்பதும் இறையியலைக் குறிக்கும் பல சொற்களாகும். சொற்கள் பலதாயினும் அச் சொற்கள் உணர்த்துகின்ற விடயம் ஒன்றுதான். அதுவே இறையியலாகும். எனினும் இம் மூன்றுக்குமிடையில் சிறிய அளவிலான வித்தியாசம் இருப்பது ஆய்வாளர்களுக்கு விளங்கும்.
مدقّقين ، محقّقين ، متكلّمين
“முதகல்லிமீன்”, “முஹக்கிகீன்”, “முதக்கிகீன்” என்பவர்களே ஒரே மூலக் கருத்தைக் கூறுபவர்களாக இருந்தாலும் கூட விளக்கம் கூறும் பாணியில் இவர்களுக்கிடையில் வித்தியாசமுண்டு. முதலாமவர்கள் “அகீதஹ்” கொள்கையை – இஸ்லாமிய கோட்பாட்டை – மேலோட்டமாகக் கூறுவார்கள். உதாரணமாக “நூறுள்ளலாம்”, “ஸனூஸீ பாஜூரீ”, “ஜவ்ஹறதுத் தவ்ஹீத்” முதலான நூல்களின் ஆசிரியர்கள் போன்று. இரண்டாமவர்கள் “இஹ்யாஉ உலூமித்தீன்”, “அல் ஹிகம்” நூலாசிரியர்கள் போன்று. மூன்றாமவர்கள் “அல் புதூஹாதுல் மக்கிய்யஹ்”, “அல் இன்ஸானுல் காமில்” நூலாசிரியர்கள் போன்று.
இவர்கள் அனைவரிலும் அதி விஷேடமானவர்கள் அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ, அஷ் ஷெய்கு அப்துல் கரீம் அல் ஜீலீ, அஷ் ஷெய்கு இப்னுல் பாரிழ் ஆகியோர்களாவர். இவர்களும், இவர்களின் ஆன்மிகப் படித்தரத்தை உடையவர்களுமே “முதக்கீகீன்” எனப்படுவர்.
இவர்களின் பேச்சு அல்லாஹ்வின் பேச்சுப் போன்றதாகும். இல்லை அவனின் பேச்சேதான். ஏனெனில் இவர்கள் எதை எழுதினாலும் இவர்களுக்கு வசனம் சொல்லிக் கொடுப்பவன் அல்லாஹ்தான். இது சொல்வதெழுதல் என்று கூறப்படும். வசனத்திற்கும், கருத்திற்கும் உரியவன் அல்லாஹ்தான். எழுத்து மட்டுமே இவர்களுக்குரியது.
وسُئل الحافظ أبو عبد الله الذّهبي عن قول الشيخ محي الدين في كتابه الفصوص أنّه ما صنّفه إلّا بإذن من الحضرة النّبويّة ، فقال الحافظ ‘ ما أظنّ انّ مثل هذا الشيخ محي الدين يكذب أصلا ‘، مع أنّ الحافظ الذّهبي كان من أشدّ المنكرين على الشيخ محي الدين وعلى طائفة الصوفيّة هو وابن تيميّة (اليواقيت والجواهر ، الجزء الأوّل ، ص 8 )
அஷ் ஷெய்கு முஹ்யித்தீன் இப்னு அறபீ அவர்கள் தங்களின் “புஸூஸ்” என்ற நூலில் அந்த நூலை நபீயவர்களின் அனுமதியுடன்தான் எழுதியதாக குறிப்பிட்டிருப்பது பற்றி அபூ அப்தில்லாஹ் அத் தஹபீ அவர்களிடம் கேட்கப் பட்டபோது “ஷெய்கு முஹ்யித்தீன் பொய் சொல்வார்கள் என்று நான் நினைக்கவில்லை” என்று பதில் கூறினார்கள். அத் தஹபீ அவர்களும், இப்னு தைமிய்யஹ்வும் இப்னு அறபீ அவர்களையும், ஏனைய ஸூபீ மகான்களையும் அளவு கடந்து எதிர்த்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
ஒருவன் இன்னொருவனின் கொள்கைக்கு ஆதரவாக இருக்கும் போது அவன் அவனைப் புகழ்வது வியப்பான ஒன்றல்ல. எனினும் அவனின் கொள்கைக்கு எதிரானவனாக இருக்கும் நிலையில் அவனைப் புகழ்வது வியப்புக்குரியதே.
இமாம் அபூ அப்தில்லாஹ் அத் தஹபீ அவர்கள் உலகம் போற்றும் அறிஞர்களில் ஒருவராவார். அத்துடன் ஹதீதுக் கலை மேதைகளில் ஒருவராகவும் உள்ளார். இவரின் கால் வாசிக்கும் பெறுமதியற்ற, இமாம் என்று பிரசித்தி பெற்ற பலர் இப்னு அறபீ அவர்கள் கூறிய “வஹ்ததுல் வுஜூத்” இறையியலைச் சரிகண்டவர்களாக இருக்கும் நிலையில் ஹாபிழ் இமாம் தஹபீ அவர்கள் அதைச் சரிகாணாமல் அவர்களை எதிர்த்துக் கொண்டிருந்தது வியப்பிற்குரிய ஒன்றாகும்.
இந்த தஹபீ போல் இப்னு அறபீ அவர்களின் தத்துவத்தை மறுத்து வந்த, இமாம்கள் என்று பல அறிஞர்களாலும் புகழப்பட்ட பலர் உலகில் வாழ்ந்து மறைந்துள்ளனர். இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இன்னோருக்கு “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் விளங்காமல் போனதற்கான பிரதான காரணம் இவர்களுக்கு இக்கலையில் “நஸீப்” விதியில்லாமற் போனதென்றே நான் கருதுகின்றேன். நக்குத் தின்பதற்கும் “நஸீப்” விதி வேண்டுமென்று முதியவர்கள் சொல்வார்கள். இது கிராமத்து மக்கள் கூறும் தத்துவம். நக்குத் தின்பதென்றால் அழைப்பில்லாத வீடுகளுக்கு அழைக்கப்பட்டவர் போல் சென்று உண்ணுதலைக் குறிக்கும்.
“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தில் மூழ்குவது மிக ஆழமாக ஆய்வு செய்வது கூடாதென்று வைத்துக் கொண்டாலும் கூட அத்தடை “கஷ்பு”, “இல்ஹாம்”, “இல்முல்லதுன்னீ” முதலான மேலே சொல்லப்பட்ட அறிவு ஞானம் இல்லாதவர்களுக்கும், ஸூபீ மகான்களின் “இஸ்திலாஹாத்” பரிபாஷை – கலைச் சொற்கள் – தெரியாதவர்களுக்குமேயாகும். ஸூபீ களின் கலைச் சொற்கள் தெரிந்த, மேற்கண்ட ஞானமுள்ளவர்களுக்கல்ல.
மேற்கண்ட மூன்று வகை அறிவில் ஒரு வகையேனும் இல்லாதவரும், ஸூபீ மகான்களின் பரிபாஷை தெரியாதவரும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தில் மூழ்குவது கூடாது. خوض – கவ்ழ் – என்ற சொல்லுக்கு மூழ்குதல் என்று பொருள் வரும். மூழ்குதல் என்பது மிக ஆழமாக ஆய்வு செய்வதைக் குறிக்குமேயன்றி அதைக் கற்றுக் கொள்வதைக் குறிக்காது.
“விலாயத்” என்ற வலீத்தன்மை – வலித்தனம் – இல்லாதவர் குறித்த ஞானம் பேசுதல் கூடாதென்று எவரும் சொன்னதில்லை. இக்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஷெய்குமார்களில் – ஞான குருக்களில் – ஒருவர் அவ்வாறு சொன்னால் அவரிடம் பின்வருமாறு நாம் கேட்போம்.
ஒருவர் “வலீ” என்று எவ்வாறு அவரை இனம் கண்டு கொள்வது? அதற்கவர் “கறாமத்” எனும் அற்புதம் நிகழ்த்துவது கொண்டு என்று சொன்னால் அவர் பெயரளவிலான ஒரு குருவாயிருப்பாரேயன்றி அறிவு ஞானமுள்ள குருவாயிருக்க மாட்டார். ஏனெனில் “விலாயத்” என்ற வலீத் தன்மைக்கு – வலீத் தனத்திற்கு – “கறாமத்” என்ற அற்புதம் நிபந்தனையல்ல.
“ஷரீஅஹ்”வுக்கு சிறிதளவும் மாறு செய்யாத, ஆன்மிகத் துறையில் அளவற்ற அறிவும், அனுபவமும் உள்ள மக்களுக்கு “பைஅத்” வழங்கி அவர்களை நல் வழிப்படுத்திக் கொண்டிருக்கின்ற ஒரு ஞான குருவின் மூலம் “கறாமத்” அற்புதம் வெளியாகாவிட்டால் அதைக்கொண்டு அவர் “வலீ” அல்ல என்று முடிவெடுத்தல் பிழையானதாகும்.
ஆகவே, “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசுவதற்கு “விலாயத்” அவசியம் என்ற கூற்றை ஏற்றுக் கொண்டாலும் கூட ஒருவர் “விலாயத்” உடையவரென்று தெரிந்து கொள்வதற்கு “கறாமத்” அற்புதம் நிகழ்த்துவதை நிபந்தனையாக ஏற்றுக் கொள்ள டியாது. இந்த விபரத்தின் மூலம் மன்னர் அஹ்மத் ஷா அவர்களின் வாதம் தவிடுபொடியாகிவிட்டது.
Pages: 1 2