Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்மனிதா! அல்லாஹ் பொய் சொல்லவில்லை. நீதான் அவனைப் புரிந்து கொள்ளவில்லை.

மனிதா! அல்லாஹ் பொய் சொல்லவில்லை. நீதான் அவனைப் புரிந்து கொள்ளவில்லை.

தொகுப்பு: ஷெய்குனா மிஸ்பாஹீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலி)
 
மனிதா! அல்லாஹ்வின் படைப்புக்களில் நீதான் சிறந்தவன். ஆயினும் இதை நீ உணராமல் இருக்கிறாய். விளங்காமல் இருக்கிறாய்.
أَتَـزْعُمُ أَنَّكَ جِـرْمٌ صَغِـيْـرٌ
وَفِيْكَ انْطَوَى الْعَالَمُ الْأَكْبَرُ
 
நீ சிறிய படைப்பு என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? ஒரு முழம் அகலமும், நான்கு முழம் நீளமும் உள்ள ஒரு மனித கட்டையென்றா உன்னை நீ நினைத்துக் கொண்டிருக்கின்றாய்? உன் நினைப்பு தவறானது. நீ நினைப்பவன் போன்றவனல்ல நீ. நீ பெரிய பொக்கிஷம். பரந்து விரிந்த பெருங்கடல்.
مَا ظَهَرْتُ فِى شَيْئٍ كَظُهُوْرِيْ فِى الْإِنْسَانِ
நான் மனிதனில் வெளியானதுபோல் வேறெதிலும் வெளியாகவில்லை. இது இறைவாக்கு. பரிசுத்த வாக்கு. இது பொய்யல்ல. நீதான் இதைப் புரியாமல் உள்ளாய்.
 
இறைவன் படைத்த படைப்புக்கள் யாவும் அவனின் வேறுபடாத வெளிப்பாடுகளே! படைப்புகள் அனைத்துமாக அவனேதான் வெளியாகியுள்ளான். ஆயினும் அவன் மனிதனாக வெளியாகியது போல் வேறெதுவாகவும் வெளியாகவில்லை. இதனால்தான் படைப்புகளில் மனிதன் சிறந்தவனானான். மனிதனில் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களே சிறந்தவரானார்கள்.
 
اَلْإِنْسَانُ سِرِّيْ وَأَنَا سِرُّهُ
மனிதன் எனது இரகசியம். நான் அவனின் இரகசியம். இதுவும் இறை வாக்குதான். اَلْإِبْنُ سِرُّ أَبِيْهِ தனயன் தந்தையின் இரகசியம். இது இறை வாக்கல்ல. இறைவனை அறிந்த மகான்களின் வாக்கு.
 
இவையாவும் சேர்த்து தருகின்ற தத்துவம் ஒன்றே ஒன்றுதான். அது பின்வருமாறு.
 
إِنَّا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْجِبَالِ فَأَبَيْنَ أَنْ يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْإِنْسَانُ إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا
 
வானங்கள் மீதும், பூமியின் மீதும், மலைகள் மீதும் அமானிதத்தை நாங்கள் எடுத்துக் காட்டினோம். அவை அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டன. அதைப்பற்றி அவை அஞ்சின. எனினும் அதை மனிதன் சுமந்து கொண்டான். அவன் கடுமையாக அநீதி செய்பவனாகவும், கடுமையான அறிவிலியாகவும் ஆகிவிட்டான். (திருக்குர்ஆன் 33-72)
 
மேலே இரகசியம் என்று கூறப்பட்டது மனிதன் சுமந்து கொண்ட அமானிதத்தையே குறிக்குமென்று ஸூபீ மகான்கள் கூறியுள்ளார்கள்.
 
திருமறை வசனத்தில் வந்துள்ள “அல் அமானத்” என்ற சொல்லுக்கு “ளாஹிர்” வெளிரங்க அறிஞர்கள் அதாவது திருக்குர்ஆன் என்ற கடலில் நீருக்கு மேல் நீந்துபவர்களான அறிஞர்கள் ஒரு விளக்கமும், அக்கடலில் நீரின் உள்ளே நீந்துபவர்களான இறை ஞானிகள் இன்னொரு விளக்கமும் சொல்கிறார்கள்.
 
வெளிரங்க அறிஞர்கள் கூறும் விளக்கம் திருக்குர்ஆன் விரிவுரை நூல்களில் இடம் பெற்றுள்ளதை பலர் அறிவர். ஆகையால் அவர்களின் விளக்கத்தை இங்கு கூறாமல் இறைஞான மகான்கள் கூறும் கருத்தை மட்டும் இங்கு எழுதுகிறேன்.
 
வானங்களும், பூமியும் ஏற்க மறுத்து மனிதன் ஏற்றுக் கொண்ட அமானிதம் என்பது படைத்தவனுக்கும், படைப்புக்குமுள்ள தொடர்பு பற்றிய விளக்கம் என்றும், அதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் என்றும் ஞான மகான்கள் கூறுகின்றனர்.
 
உயிரினங்களில் மனிதனால் மட்டுமே அந்த விளக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும். அவர்களிலும் நற்பாக்கியம் விதியாக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அது கிடைக்கும். அவர்கள்தான் வலீமார்களாவர்.
 
எனவே, வலீமார்கள் இது தொடர்பாக எவ்வாறு விளக்கம் கூறுகிறார்கள் என்று கவனிப்போம். இப்போது நான் கூறப் போகும் விளக்கம் வஹ்ஹாபிகளான வழிகேடர்களுக்குப் புரியாத புதிராகவே இருக்கும். அவர்களிற் பலர் திறமையுள்ளவர்களாயிருந்தும் புரியாமற் போனதற்கான காரணம் “நஸீப்” என்ற விதியில்லாமையே.
 
اَلنَّصِيْبُ يُصِيْبُ وَلَوْ كَانَ بَيْنَ جَـبَلَـيْـنِ
اَلنَّصِيْبُ لَا يُصِيْبُ وَلَوْ كَانَ بَيْنَ شَفَتَيْنِ
தலைவிதி கெட்டதாயின் இரு உதடுகளுக்கு இடையிலுள்ள விடயம் கூட நடக்காது. அது நல்லதாயிருந்தால் இரு மலைகளுக்கு இடையிலுள்ள விடயமாயினும் அது நடந்தே தீரும்.
 
வஹ்ஹாபிகள் “நஸீப்” இல்லாதவர்கள். நாம் என்ன செய்யலாம். இக்காலத்திற்குத் தேவையானவர்களிற் சிலர் வஹ்ஹாபீகளாக இருப்பது எனக்கு வேதனையான விடயமே!
 
اللهم فقِّهْ من أحببتُه من الوهّابيّين فى أمر وحدة الوجود، وَأَرِهِ الْحَقَّ حقًّا وَارْزُقْهُ اتِّبَاعَه وأَرِهِ الْبَاطِلَ باطلا وارزقه اجْتِنَابَهُ، وعلّمه ما لم يعلم، وألهمه ما أشكل عليه، وائت به إلى فِنائنا ليذوق فَنَائَنَا، اللهم اصرف قلبه إلى كهف العارفين الواصلين، وقلّب قلبه كما قلّبت قلب عمر إلى دين الإسلام،
இறைவனுக்கும், படைப்புக்குமுள்ள தொடர்பு العلاقة الذاتيّة என்று சொல்லப்படும்.
 
இதை ஓர் உதாரணம் மூலம் கூறினால் இலகுவாக தெளிவு கிடைக்கும். தச்சனுக்கும், கதிரைக்கும் தொடர்பு உண்டு. கதிரைக்கும், மரத்துக்கும் தொடர்பு உண்டு. இவ்விரு வகைத் தொடர்புகளில் அல்லாஹ்வுக்கும் – படைத்தவனுக்கும், படைப்புக்குமுள்ள தொடர்பு கதிரைக்கும் மரத்திற்குமுள்ள தொடர்பு போன்றதேயன்றி கதிரைக்கும், தச்சனுக்கும் உள்ள தொடர்பு போன்றதல்ல.
 
தச்சனுக்கும், கதிரைக்குமுள்ள தொடர்பு அவன் கதிரையைச் செய்து முடிக்கும் வரையுள்ள தொடர்புதானேயன்றி நிரந்தரமான தொடர்பு இல்லை. தச்சன் கதிரையை செய்து முடிக்கும் வரைதான் அவனுக்கும், கதிரைக்கும் தொடர்பு இருந்தது. இது சில மணித்தியாலத் தொடர்புதான். அதோடு இந்த வகைத் தொடர்புக்கு இரண்டு வஸ்த்துக்கள் தேவை. ஒன்று தச்சன், மற்றது கதிரை. ஆயினும் கதிரைக்கும், மரத்திற்குமுள்ள தொடர்புக்கு இரண்டு வஸ்த்துக்கள் தேவையுமில்லை. கதிரையும், மரமும் என்று சொல்லவும் முடியாது. ஏனெனில் இருப்பது மரம் மட்டுமேயாகும். கதிரைக்கு “ஹகீகத்” எதார்த்தமில்லை. கதிரையின் வடிவம் கலைந்தால் மரம் மட்டுமே மிஞ்சும்.
 
படைத்தவனுக்கும், படைப்புக்குமுள்ள தொடர்பு தச்சனுக்கும், கதிரைக்குமுள்ள தொடர்பு போன்றதல்ல என்றும், கதிரைக்கும் மரத்திற்குமுள்ள தொடர்பு போன்றதென்றும் நான் குறிப்பிட்டதிலிருந்து படைத்தவனும், படைப்பும் பெயரளவில்தான் இரண்டு பொருட்கள் – வஸ்த்துக்களாக விளங்கப்படுகின்றனவேயன்றி எதார்த்தத்தில் இரண்டு பொருட்களே இல்லை. படைத்தவன் படைப்பின் தோற்றத்தில் உள்ளான்.
 
மரமும், கதிரையும் போன்ற உதாரணங்கள் பல உள்ளன. அவற்றையும் உதாரணங்களாகக் கொண்டு சிந்திக்கலாம்.
 
உதாரணமாக தங்கம், மோதிரம் போன்று. இவ்விரண்டுக்குமுள்ள தொடர்பு விட்டுப்பிரிய முடியாத தொடர்பாகும். இவ்விரண்டும் பெயரளவில்தான் இரண்டென்று விளங்கப்படுகிறதேயன்றி எதார்த்தத்தில் தங்கம் மட்டுமே உள்ளது. மோதிரத்திற்கு எதார்த்தமில்லை. எதார்த்தத்தில் மோதிரம் என்று ஒன்று இல்லவே இல்லை. எதார்த்தத்தில் இல்லாததை இருப்பதாக “அக்ல்” அறிவு சொல்வதால் மனிதன் ஏமாந்து, மருட்சியடைந்து எதார்த்தத்தில் இல்லாத பொருளை இருப்பதாக நினைத்து அதற்கு ஒரு பெயரும் சொல்லி அழைக்கிறான். இது அவனின் அறியாமையும், ஏமாற்றமுமாகும்.
 
எதார்த்தத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாக அறிவதும், நம்புவதும், சொல்வதும் பொய்யேதான். மெய்யல்ல. இது பொய் சொல்வதாகவே ஆகும்.
 
மனிதன் பொய்யுலகில் வாழ்வதால் பொய் சொல்லாமல் வாழவே முடியாது.
 
“எல்லாம் அவனே” என்று நம்புவதும், சொல்வதும் “ஷரீஆ”வுக்கு முரணானதென்று இத்துறையில் விளக்கம் குறைந்தவர்கள் தமது அறியாமை காரணமாகக் கூறலாம். ஆயினும் அவர்கள் தமது அறியாமைத் திரைகளை அகற்றி கலப்பற்ற “நிய்யத்”தோடு செயல்பட்டார்களாயின் சத்தியத்தைப் புரிந்து கொள்வார்கள்.
 
“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தைப் பகிரங்கமாக நானும், என்னுடனுள்ள மௌலவீமார்களிற் சிலரும் பறை சாற்றி வருகின்றோம். இந்த ஞானத்தை மனம் முரண்டாக எதிர்க்கும் போலி உலமாஉகளை சாடி எழுதியும், பேசியும் வருகிறோம். குறிப்பாக மௌலவீ ரிஸ்வீ அவர்களையும் சாடி எழுதியும், வருகின்றோம்.
 
உலமா சபையில் இருக்கின்ற “பத்வா” குழு “தக்வா” இல்லாத “புத்வா” குழுவாகும். இந்தக் குழு தமது “புத்வா”வில் செய்துள்ள இருட்டடிப்புக்களை மக்களுக்கு புட்டுப் புட்டுக் காட்டியும் வந்துள்ளோம். வந்து கொண்டுமிருக்கிறோம். இந்த முல்லாக்கள் போல் பொறாமை கொண்ட உலமாஉகள் உலகில் எங்குமே தோன்றியிருக்கவும் மாட்டார்கள். இதன்பின் தோன்றவும் மாட்டார்கள்.
 
இவர்கள் உலமாஉகளாயிருந்தும் கூட இப்படியொரு அநீதி செய்வார்களென்று நான் கனவில் கூட நினைக்கவில்லை.
 
நான் பேசி வருகின்ற இறையியல் தத்துவம் சாதாரணமானதல்ல. பலகோடி ரூபாய்கள் செலவிட்டும், பல நாடுகளுக்குச் சென்றும், பல இறையியல் மேதைகளைச் சந்தித்தும் பெற வேண்டிய இறை ஞானமாகும். தேடியலைந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஞானமாகும். உலமாஉகளிற் சிலர் தமது அறியாமையினாலும், வேறு சிலர் பொறாமையினாலும் இந்த ஞானத்தை கால் பந்தாக்கிவிட்டார்கள்.
فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ، وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
RELATED ARTICLES

Most Popular

Recent Comments