Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்தமிழ் நாட்டு வஹ்ஹாபீயின் தலையில்லாப் பேச்சு!

தமிழ் நாட்டு வஹ்ஹாபீயின் தலையில்லாப் பேச்சு!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
தமிழகத்திலும், இலங்கைத் திரு நாட்டிலும் வஹ்ஹாபிஸத்திற்கு வித்திட்ட வஹ்ஹாபீ ஒருவரின் பேச்சைக் கேட்டேன். அவர் தனது வாய்க்கும், தனது மூளைக்கும் தொடர்பின்றிப் பேசுவதைக் கேட்டு வியப்படைந்தேன்.
 
அவர் தனது உரையில் “ஷாபிஈ மத்ஹப்” காரர்களைச் சாடிப் பேசுகிறார். இல்லை ஏசுகிறார். அவரின் வாயிலிருந்து வெளியாகும் ஒவ்வொரு சொல்லும் கரு நிறப் புகையாக வெளியாவதைக் கண்டு வியந்தேன். அப்போது இறைஞானி ஒருவரின் தத்துவம் என் நினைவுக்கு வந்தது.

ஒருவன் பேசுகின்ற போது அவனின் பேச்சு அல்லாஹ்வுக்கும், இறசூலுக்கும் பொருத்தமற்றதாயிருக்குமாயின் அவனின் வாயிலிருந்து கரு நிறப்புகை வெளியாகுமே தவிர ஒளிப் பிரகாசம் வெளியாகாது,
 
இது எது போலென்றால் இலங்கையில் நுவரெலியா போன்றும், தமிழ் நாட்டில் ஊட்டி போன்றுமுள்ள குளிர் பிரதேசத்தில் ஒருவன் காலை வேளை தனது வாயை அகலவிரித்து “ஹா” என்று சொல்லும் போது ஒரு வகை ஆவி வெளியாகும். அது போன்றே அந்த வஹ்ஹாபீயின் வாயிலிருந்து அவர் பேசும் போது கரு நிறப் புகை வெளியானது.
 
இவர் தனது பேச்சில் “ஷாபிஈ மத்ஹப்” ஐச் சார்ந்தவர்களைச் சாடினார். “ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்தவர்கள்தான் செத்துப்போன ஆட்டையும், மாட்டையும் புதைத்து விட்டு அவற்றுக்கு “தர்ஹா” கட்டுவார்கள்” என்று உளறினார். அதோடு “ஹனபீ மத்ஹப்” காரர்களையும் ஓரளவு சாடினார்.
 
இதோடு மட்டும் அவர் நின்றுவிடவில்லை. “ஷாபிஈ மத்ஹப் காரர்கள் என்று தம்மைச் சொல்லிக் கொள்பவர்கள் இமாம் ஷாபிஈ அவர்களால் எழுதப்பட்ட “அல்உம்மு” என்ற நூலை அறபுக் கல்லூரிகளில் கற்கும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்காமல் மலையாளி எழுதிய “பத்ஹுல் முயீன்” என்ற நூலை கற்றுக் கொடுப்பதேன்?” என்றும் உளறினார்.
 
இவரின் மேற்கண்ட உளறல்களைச் செவியேற்ற “ஷாபிஈ மத்ஹப்” ஐச் சேர்ந்த, வஹ்ஹாபிஸ வழிகேட்டை எதிர்த்து பிரச்சாரம் செய்தும் வருகின்ற, அவருடன் விவாதம் நடத்தியும் வருகின்ற தமிழகத்து உலமாஉகள் அவரின் உளறல்களுக்கு எதிராக சீற்றம் கொண்டு சீறியெழுவார்கள் என்று இதுவரை எதிர்பார்த்தேன். அவர்கள் சீற்றம் கொள்ளவுமில்லை. சீறியெழவுமில்லை. அவர்களுக்கு ரோஷம் வரவுமில்லை. நான் “ஷாபிஈ மத்ஹப்” ஐ பின்பற்றுகின்றவன். மலையாள அறிவுமலை அஸ்ஸெய்யித் செய்னுத்தீன் றஹிமஹுல்லாஹ் அவர்களின் “பத்ஹுல் முயீன்” சட்ட நூலை எனது “அல் ஜாமிஅதுர் றப்பானிய்யா” அறபுக் கல்லூரியில் கற்றுக் கொடுப்பவன் என்ற வகையில் அவரின் உளறலைக் கேட்டுக் கொண்டு மௌனியாயிருக்க முடியாமற் போனதால் என் பேனாவை – எழுதுகோலை எடுத்து எனது கருத்துக்களை எழுதத் தொடங்கினேன்.
 
நான் வாழும் இலங்கைத் திரு நாடு நூறு வருடங்களுக்கு முன்னர் ஒரு வஹ்ஹாபீ கூட இல்லாத பரிசுத்த நாடாகவும், “வஹ்ஹாபீ” என்ற சொல்லைக் கூட அறியாத நன் மக்கள் வாழும் நாடாகவுமே இருந்தது. நூறு வீதம் இங்கு “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கை ஒளிர்ந்து கொண்டிருந்தது.
 
அல்லாஹ்வின் இல்லங்களான பள்ளி வாயல்களிலும், மக்களின் இல்லங்களிலும் ஸுப்ஹான மௌலித், முஹ்யித்தீன் மௌலித், பத்று ஸஹாபாக்கள் மௌலித், ஷாஹுல் ஹமீத் ஆண்டகை மௌலித் முதலான மௌலிதுகள் ஓதப்பட்டே வந்தன. இதேபோல் காதிரிய்யா றாதிப், ஷாதுலிய்யா ஹழ்றா, ஹத்தாத் றாதிப் போன்ற “திக்ர்” மஜ்லிஸ்களும் நடைபெற்று வந்தன.
 
உலமாஉகள், ஷெய்குமார்கள், ஸெய்யித்மார்கள், உஸ்தாதுமார்கள் அனைவரும் மேற்கண்ட நற்காரியங்களை பக்திப் பரவசத்துடன் செய்து கொண்டே வந்தார்கள். அல்ஹம்து லில்லாஹ், நாடு செழிப்பாயிருந்தது. நாட்டு மக்களும் செல்வத்தோடு இருந்தார்கள். இறையருள் பொங்கி வழிந்தது. இறைநேசர்களின் “பறகத்”தும் இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்!
 
இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “அல் உம்மு” எனும் சட்ட நூல் இருக்கும் நிலையில் அதைக் கற்றுக் கொடுக்காமல் மலையாளி எழுதிய “பத்ஹுல் முயீன்” எனும் நூலை ஏன் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பும் தமிழ் நாட்டு வஹ்ஹாபீ தூர நோக்கின்றியும், பரவலாகவும், ஆழமாகவும் சிந்திக்காமலும் அம்பு எய்வது அவரின் உள்ளம் இன்னும் சுத்தமடையவில்லை என்பதையே படம் பிடித்துக் காட்டுகிறது.
 
இவருக்கு நான் கூறும் பதில் என்னவெனில் இவர் சொல்வது ஒரு வகையில் சரியாக இருந்தாலும் கூட ஒருவன் “உம்மு” எனும் நூலை ஓதி முடிக்க நீண்ட காலம் தேவைப்படும்.
 
ஏனெனில் “அல் உம்மு” எனும் நூல் சுமார் 6465 பக்கங்களையும், 8 வால்யூம்களையும் கொண்ட பெரிய நூல். இந்நூலில் ஒரு நாளைக்கு ஒரு பக்கம் வீதம் கற்றாலும் அனைத்துப் பக்கங்களையும் கற்று முடிப்பதற்கு 6465 நாட்கள் தேவைப்படும். அதாவது சுமார் 18 ஆண்டுகள் தேவைப்படும். இவற்றில் லீவு நாட்களையும் சேர்த்தால் 20 ஆண்டுகள் தேவைப்படும்.
 
ஒருவன் “அல் உம்மு” எனும் நூலைக் கற்றுக் கொள்வதாயின் முதலில் ஒரு கல்லூரியில் சுமார் 8 ஆண்டுகள் தொடராகக் கற்று மௌலவீ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
 
ஒருவன் ஒரு கல்லூரியில் சேர்ந்து கல்வி கற்பதற்கு அவன் குறைந்தது சுமார் 15 வயதை அடைந்தவனாயிருக்க வேண்டும்.
 
எனவே, ஒருவன் மேற்கண்ட அனைத்தையும் கற்று முடிக்கும் போது அவனுக்கு சுமார் 43 வயதாகிவிடும். அதன் பிறகு அவன் தனது திருமணத்திற்காக – அதன் செலவினங்களுக்காக குறைந்தது ஐந்து ஆண்டுகளேனும் உழைக்க வேண்டும்.
 
எனவே, அவன் திருமணம் செய்வதாயின் சுமார் 48 வயதிலேயே திருமணம் செய்ய வேண்டும்.
 
தமிழ் நாடு வஹ்ஹாபீயின் கூற்றின்படி ஒரு மௌலவீ 48 வயதிலேயே திருமணம் செய்ய வேண்டியேற்படும். 48 வயதுள்ள ஒரு மௌலவீ திருமணம் செய்வதாயின் சுமார் 40 வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண்ணையே திருமணம் செய்ய நேரிடும். இது திருமணம் செய்வதற்குப் பொருத்தமற்ற வயதாகும்.
 
குறித்த தமிழ் நாட்டு வஹ்ஹாபீ தூர நோக்குடன் இவற்றையெல்லாம் சிந்திக்காமல் தனது மூளைக்கும், வாய்க்கும் தொடர்பின்றிப் பேசுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் தான் எத்தனை வயதில் திருமணம் செய்தார் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
 
மேலும் தமிழகத்தின் இந்த வஹ்ஹாபீ மகான் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் பற்றிக் குறிப்பிடுகையில் “அவர் அவர்” என்று அந்த மகானைப் பேசியது அவ்லியாஉகளின் நேசர்களின் நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போல் இருந்தது. “அவர்” என்ற சொல்லுடன் “கள்” என்ற இரு எழுத்துகளைச் சேர்த்து அவர்களுக்கு கண்ணியம் கொடுக்காமல் பேசியது பேசியவரின் உள்ளத்திலுள்ள நோக்கம் புரிகிறது.
தமிழ் நாட்டு வஹ்ஹாபீ மகானின் பேச்சை பல்கலை கற்ற, பல அனுபவங்கள் பெற்ற, எதையும் மிக நுட்பமாக ஆய்வு செய்யக் கூடிய ஒரு வித்துவான் – மேதை தொடர்ந்து கேட்பாராயின் மகானின் உள்ளத்தின் அடித்தளத்தில் உறைந்து போயுள்ள அவரின் அடிப்படை நோக்கத்தை அவர் அறிந்து கொள்வார்.
 
தமிழக மகான் அவர்களின் உளறல் மலைபார் அறிவுமலை அஸ்ஸெய்யித் செய்னுத்தீன் றஹிமஹுல்லாஹ் அவர்கள் எழுதிய “பத்ஹுல் முயீன்” எனும் நூலையும், அவர்களையும் நையாண்டி பண்ணும் வகையில் அமைந்திருந்தது எனது மனதிற்கும், “பத்ஹுல் முயீன்” எனும் நூலின் தரத்தை அறிந்தவர்களின் மனதிற்கும் சொல்லொணா வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வஹ்ஹாபீ மகான் இந்தியராக இருந்தும் கூட மலைபார் மகானின் தராதரத்தைப் புரிந்து கொள்ளவில்லை. இலங்கை நாட்டில் அவர்களின் குறித்த நூலை கற்றுக் கொள்ளாத எந்த ஓர் ஆலிமும் – மௌலவீயும் – இல்லை என்றே சொல்ல முடியும்.
 
அவர்கள் ஓர் சட்டக்கலை மேதை மட்டுமன்றி “விலாயத்” எனும் ஒலித்தனம் பெற்ற ஒரு வலிய்யுல்லாஹ் என்பதையும் வஹ்ஹாபீ மகான் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களை அவமதித்ததற்குப் பரிகாரமாக மலைபார் பொன்னானி சென்று அவர்களின் சமாதியை முத்தி முத்தி அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அதை வீடியோ பண்ணி அனைவருமறிய ஒளிப்பதிவு செய்யவும் வேண்டும்.
 
நாஹூர் நாயகம், ஏர்வாடி இப்ஹாஹீம் ஷஹீத் நாயகம், குத்பு நாயகம், மற்றும் வலீமார் பற்றிப் பேசும் போது “அவர் அவர்” என்று இவரின் கூட்டாளியை பேசுவது போல் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இன்னோரை கௌரவக் குறைவாக – கீழ்த்தரமாகப் பேசுவது இன்னோரின் ஆதரவாளர்களான பக்தர்களின் நெஞ்சங்களை வேதனைப்படுத்துகிறது.
 
தமிழ்நாடு ஜமாஅதுல் உலமாவின் மதிப்பிற்குரிய தலைவர், மற்றும் உறுப்பினர்களே! குறிப்பாக நான் எழுதி வெளியிட்ட “வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம்” எனும் நுலில் கையெழுத்திடப் பயந்த எனது அன்பிற்குரிய (أبو الدلائل، أسوة الواعظين، أسد الغابة) அபுத்தலாயில், உஸ்வதுல் வாயிளீன், அஸதுல் ஙாபா அப்துல்லாஹ் ஜமாலீ ஹழ்றத் அவர்களே!
 
நீங்களும், உங்களுடன் உள்ள “ஸுன்னீ” உலமாஉகளும் எனது இக்கட்டுரையின் கதாநாயகரான தமிழ் நாடு வஹ்ஹாபீ மகான் அவர்களுடன் பல்வேறு தலைப்புக்கள் தொடர்பாக விவாதித்து வருகிறீர்கள். எத்தனையோ விவாத மாநாடுகள் நடந்து முடிந்து விட்டன. எனினும் எந்தவொரு மாநாட்டிலும் தீர்க்கமான முடிவு எட்டப்படாமலேயே மாநாடுகள் கலைந்துள்ளன. எங்கு மாநாடுகள் நடந்தாலும் அவை முடிந்த பின் வாதிகளும். பிரதி வாதிகளும் தாமே வெற்றி பெற்றதாக அறிவிக்கிறார்கள். ஆனால் கண்ட பலன் ஒன்றுமில்லை கண்ணே றஹ்மானே! என்று மகான் மஸ்தான் ஸாஹிப் அவர்கள் சொன்னது போலவே உள்ளது.
 
ஜமாஅதுல் உலமா தமிழ் நாடு வஹ்ஹாபீயுடன் விவாதிக்கச் செல்வது தவறென்று சொல்வதை விட தப்பு என்று சொல்வதே சரியானதாகும். இது எனது கருத்து.
 
உங்களின் சிந்தனைக்காக பின்வரும் தகவலைத் தருகிறேன்.
سمعت سيّدي عَلِيًّا الخَوَّاص رضي الله عنه يقول ( الجدَال في الشريعة مِن بَقَايَا نِفَاقٍ في القلب ، لأنّه يُريد به إدحاضَ حُجَّةِ الْغَيْرِ ، وفي القرآن العظيم . ” فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّىٰ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا ” فَنَفَى الْإِيْمَانَ – الكاملَ – عمَّن يَجِد في الحكم عليه بالشرِيعة حَرَجًا، ومعلوم أنَّ الجَدالَ مع (أئمة الشرِيعة ) جَدَالٌ معه صلّى الله عليه وسلّم . وإن تَفَاوَت المقامُ ، فإنّ العلماء على مدرجة الرُّسُل سَلَكُوْا ، فكما يجب علينا الإيمان والتّصديقُ بِكُلِّ ما جائت به الرّسل ، وإن لم نَفهَمْه ، فكذلك يجب علينا الإيمان والتّصديقُ بكلام الأئمة إذا لم نفهمه ، حتّى يأتينا عن الشارع ما يخالِفُه)
( الميزان الخضرية، لعبد الوهّاب الشعراني ص – ٤٨ )
RELATED ARTICLES

Most Popular

Recent Comments