Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்பாதிரியார் ஒருவரின் மூலம் இணை வைத்தல் பற்றி அறிந்து கொண்ட பெருமானார்! அண்ணனின் புதிய கண்டுபிடிப்பு!

பாதிரியார் ஒருவரின் மூலம் இணை வைத்தல் பற்றி அறிந்து கொண்ட பெருமானார்! அண்ணனின் புதிய கண்டுபிடிப்பு!

தொகுப்பு: மௌலவீ MJM ஜஹானீ றப்பானீ

عَنْ قُتَيْلَةَ بِنْتِ صَيْفِيٍّ الْجُهَنِيَّةِ قَالَتْ: أَتَى حَبْرٌ مِنَ الْأَحْبَارِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا مُحَمَّدُ، نِعْمَ الْقَوْمُ أَنْتُمْ، لَوْلَا أَنَّكُمْ تُشْرِكُونَ، قَالَ: «سُبْحَانَ اللَّهِ، وَمَا ذَاكَ؟» ، قَالَ: تَقُولُونَ إِذَا حَلَفْتُمْ وَالْكَعْبَةِ، قَالَتْ: فَأَمْهَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا ثُمَّ قَالَ: ‘ إِنَّهُ قَدْ قَالَ: فَمَنْ حَلَفَ فَلْيَحْلِفْ بِرَبِّ الْكَعْبَةِ ‘، ثُمَّ قَالَ: يَا مُحَمَّدُ، نِعْمَ الْقَوْمُ أَنْتُمْ، لَوْلَا أَنَّكُمْ تَجْعَلُونَ لِلَّهِ نِدًّا، قَالَ: «سُبْحَانَ اللَّهِ، وَمَا ذَاكَ؟» ، قَالَ: تَقُولُونَ مَا شَاءَ اللَّهُ وَشِئْتَ، قَالَ: فَأَمْهَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا ثُمَّ قَالَ: «إِنَّهُ قَدْ قَالَ، فَمَنْ قَالَ مَا شَاءَ اللَّهُ فَلْيَفْصِلْ بَيْنَهُمَا ثُمَّ شِئْتَ»

மேற்கண்ட ஹதீது “முஸ்னத் அஹ்மத்”, “அல்முஃஜமுல் கபீர் லித்தபறானீ” போன்ற பல கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது.

ஹதீதின் சுருக்கம்: பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அன்னவர்களிடம் வந்த ஒரு பாதிரியார் “முஹம்மதே! நீங்கள் “ஷிர்க்” இணை வைக்கவில்லையானால் நீங்கள்தான் சிறந்த கூட்டம்” என்றார். அதற்கு பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அன்னவர்கள் “ஸுப்ஹானல்லாஹ்! அது என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அந்த பாதிரியார் நீங்கள் சத்தியம் செய்தால் “கஃபா” மீது சத்தியமாக! என்று சொல்கிறீர்கள். அதைச் செவிமடுத்த பெருமானார் அவர்கள் சற்று நேரம் தாமதித்து விட்டு “அவர் சொல்லிவிட்டார். யாரும் சத்தியம் செய்தால் “கஃபா” மீது சத்தியம் என்று சொல்லாமல் “கஃபாவின் றப்” மீது சத்தியமாக! என்று சொல்லுங்கள் என்றார்கள். பின்பு அந்த பாதிரியார் பெருமானாரை நோக்கி “நீங்கள் அல்லாஹ்வுக்கு நிகரை ஆக்கவில்லையானால் நீங்கள்தான் சிறந்த கூட்டம்” என்றார். அதற்கும் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அன்னவர்கள் “ஸுப்ஹானல்லாஹ்! அது என்ன? என்றார்கள். அதற்கு அந்த பாதிரியார் நீங்கள் “மாஷாஅல்லாஹ் வஷிஃத” என்று சொல்கிறீர்கள் என்றார். (ஒரு விடயம் நடந்தால் இது அல்லாஹ்வும், றஸூலும் நாடியது” என்று சொல்கிறீர்கள் என்றார்) அதற்கும் சிறிது நேரம் தாமதித்து விட்டு “அவர் சொல்லிவிட்டார். யாரும் சொல்வதாயின் “மாஷாஅல்லாஹ் என்று சொல்லி சிறிது நேரம் இடைவெளி விட்டு “ஷிஃத” நாயகமே நீங்கள் நாடியது என்று சொல்லுங்கள்” என்றார்கள்.

இந்த ஹதீதை ஆதாரமாக வைத்து அண்ணன் பீ.ஜே அவர்கள் மேலே ஹதீதில் குறிப்பிடப்பட்ட இரண்டு விடயங்களும் (கஃபா மீது சத்தியம் செய்வதும், “மாஷாஅல்லாஹு வஷிஃத என்று சொல்வதும்) நுணுக்கமான “ஷிர்க்” ஆகும். அது பற்றி பெருமானார் அவர்கள் யோசிக்காமல் இருந்தார்கள். அந்த பாதிரியார் சொன்னவுடன்தான் அவர்களுக்கு அது புரிந்தது. புரிந்தவுடன் திருத்திக் கொண்டார்கள். மேலும் அல்லாஹ் நுணுக்கமான “ஷிர்க்”ஐ மன்னிப்பான் என்றும் விளக்கம் கூறி பெருமானார் அவர்களின் அந்தஸ்த்தை குறைக்க முற்படுகின்றார். “மஆதல்லாஹ்”

குறித்த ஹதீதை இஸ்லாமியர் அல்லாத ஒரு மாற்று மத சகோதரர் பார்த்தால் அண்ணன் அவர்கள் விளங்குவது போன்றே அவரும் அதை விளங்க சாத்தியமுண்டு. காரணம் அவருக்கு அல்லாஹ், றசூல் பற்றிய ஞானம் இல்லாததேயாகும். ஆனால் அண்ணன் அவர்கள் இஸ்லாமியர் என்று மட்டுமன்றி இஸ்லாமிய மத போதகர், அறிஞன் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு அவரும் ஒரு மாற்று மத சகோதரர் போன்று ஹதீதை விளங்குவது, விளக்கி மக்களை வழிகேட்டில் சேர்ப்பது வெட்கக் கேடான செயலாகும்.

ஹதீதில் கூறப்பட்ட விடயங்களையும், பெருமானார் அவர்கள் நடந்து கொண்ட விதத்தையும் நுணுக்கமாக ஆராயாமல் நுணுக்கமான ஷிர்க் பற்றிப் பேசுதல் கூடாது. ஹதீதில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் இரண்டு. ஒன்று “கஃபா” மீது சத்தியம் செய்தல். இரண்டு ஒரு விடயம் நடந்த பிறகு இது அல்லாஹ்வும், நீங்களும் நாடியது என்று சொல்வது.

முதலாவது விடயத்தைக் குறிப்பிடும் போது குறித்த பாதிரியார் “முஹம்மதே! நீங்கள் இணை வைக்கவில்லையானால் நீங்கள்தான் சிறந்த கூட்டம்” என்றார். ஸுப்ஹானல்லாஹ்! அது என்ன என்று கேட்டவுடன் நீங்கள் “கஃபா” மீது சத்தியம் செய்கிறீர்கள். என்றார்.

இது “ஷிர்க்” என்று பாதிரியார்தான் பெருமானாருக்குச் சொல்லிக் கொடுத்ததாகவும், அதன் பிறகுதான் பெருமானார் அவர்கள் அதை உணர்ந்து கொண்டதாகவும் அண்ணன் குறிப்பிடுகிறார்.

பாதிரியார் சொன்ன விடயத்தை பெருமானார் ஏற்று பெருமானார் அதை நடைமுறைப்படுத்தினார்கள். இது நடந்த ஒன்றுதான். இங்கு நாம் சிந்திக்க வேண்டிய விடயம் என்னவெனில் படைப்பினங்கள் மீது சத்தியம் செய்தல் “ஷிர்க்” என்ற இணையை ஏற்படுத்துமா? ஏற்படுத்தும் என்றால் அது ஏன் அல்லாஹ்வின் றஸூலுக்கு தெரியாமற் போனது? அல்லாஹ்வின் தூதருக்குத் தெரியாமற் போனதென்றால் அது அல்லாஹ்வுக்குத் தெரியாமற் போனதற்குச் சமமாகிவிடும். ஏனெனில் “வஹீ” என்ற இறைத்தூதையே பேசுகின்ற நபீ பெருமானார், இணை வைப்பை ஒழித்து அல்லாஹ்வைப் பற்றிய ஞானத்தை மக்களுக்கு போதிக்க வந்த பெருந்தகை தானும், தன்னுடனுள்ளவர்களும் “ஷிர்க்” வைத்துக் கொண்டு அதை எவ்வாறு ஒழிப்பது? அல்லது “கஃபா”வின் மீது சத்தியம் செய்தல் இணையை ஏற்படுத்தாதா? ஏற்படுத்தாதென்றால் எதற்காக பெருமானார் அவர்கள் அதை ஏற்றுச் செயல்பட்டார்கள்?

இஸ்லாமிய ஷரீஆவின் அடிப்படையில் படைப்பினங்கள் மீது அது “கஃபா”வாக இருந்தாலும் மற்றுமுள்ள ஏனைய படைப்பினங்களாக இருந்தாலும் சத்தியம் செய்தல் மனிதர்களாகிய எங்களுக்கு “ஹறாம்” தடுக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால் அதை அல்லாஹ் செய்வான். அவனுக்கு “ஹறாம்” அல்ல. அல்குர்ஆனில் பல இடங்களில் படைப்பினங்கள் மீது அவன் சத்தியம் செய்துள்ளான். சூரியன் மீது, சந்திரன் மீது, அத்திப் பழத்தின் மீது, ஸெய்துதூன் மீது, தூர் ஸீனா மலை மீது சத்தியம் செய்துள்ளான். எனவே, படைப்பினங்கள் மீது சத்தியம் செய்தல் ஹறாம் – தடுக்கப்பட்ட விடயமேயன்றி “ஷிர்க்” இணையை ஏற்படுத்தும் செயலல்ல. இங்கு ஒரு கேள்வி பிறக்கும். அதாவது அது ஹறாம் – தடுக்கப்பட்ட விடயம் என்றே வைத்துக் கொள்வோம். ஏன் அது பெருமானாருக்குத் தெரியவில்லை? அல்லது அதை ஏன் ஏற்றுச் செயல்பட்டார்கள்?

ஒரு காலத்தில் “ஹலால்” ஆகுமானதாக இருந்த விடயம் பின்னொரு காலத்தில் “ஹறாம்” தடுக்கப்பட்டதாக மாற்றப்படுவதும், ஒரு காலத்தில் “ஹறாம்” தடுக்கப்பட்டதாக இருந்த விடயம் பின்னொரு காலத்தில் “ஹலால்” ஆகுமானதாக ஆக்கப்படுவதும் இஸ்லாமிய வழிமுறையில் உள்ள ஒன்றுதான். அந்த வகையில் ஆகுமானதாக இருந்த இந்த விடயம் (கஃபா மீது சத்தியம் செய்தல்) அந்த பாதிரியார் சொன்னவுடன் தடுக்கப்படுகிறது.

பெருமானார் நுணுக்கமான “ஷிர்க்” இணை வைத்திருந்தார்கள். பாதிரியார்தான் அதை உணர்த்தினார் என்று பெருமானாரின் அந்தஸ்த்தை குறைத்து மதிப்பிடாமல் இங்கு நாம் விளங்க வேண்டிய விடயம் என்னவெனில் பெருமானார் அவர்கள் ஏற்றுச் செயல்பட்டதற்கான காரணம் என்ன? என்பதுதான்.

பெருமானார் அவர்கள் சத்திய மார்க்கத்தை போதிக்க வந்தவர்கள். ஒரு பாமரனுக்கு அதைப் போதித்து ஏற்கச் செய்வதற்கும், ஒரு மத போதகரை – பாதிரியாரை வளைத்துப் போடுவதற்கும் வித்தயாசம் உண்டு. பாதிரியாரின் கூற்றுப்படி குறித்த இந்த சத்தியத்தை விட்டால் நீங்கள்தான் சிறந்த கூட்டம் என்பதுதான். அவரை வளைத்துப் போடுவதற்காக ஆகுமாக இருந்த அந்த விடயத்தை தடுப்பதால் எந்தக் குறையும் வந்துவிடாது. இதனையே பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் செய்தார்களே தவிர அண்ணன் சொல்வது போல் பெருமானார் நுணுக்கமான இணை வைத்திருந்து அதை பாதிரியார் உணர்த்தினார் என்பதல்ல. இவ்வாறு ஒருவர் விளங்கினால் அவர் ஒரு மாற்று மத சகோதரரின் தரத்திலேயே இருக்கிறார் என்பதையே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டாவது விடயம் “மாஷாஅல்லாஹ் வஷிஃத” (அல்லாஹ்வும், நீங்களும் நாடிய ஒன்று சொல்வது). குறித்த விடயத்தைச் சுட்டிக்காட்டிய பாதிரியார் நீங்கள் அல்லாஹ்வுக்கு நிகர் வைக்கவில்லையானால் நீங்கள்தான் சிறந்த கூட்டம் என்றார். அதைச் செவிமடுத்த பெருமானார் அதை முற்றாக விட்டு விடுங்கள் என்று சொல்லவில்லை. மாறாக “மாஷாஅல்லாஹ்” என்பதறகும் ” வஷிஃத” (நீங்கள் நாடியது) என்பதற்கும் மத்தியில் இடை வெளி விடுங்கள் என்றுதான் சொன்னார்கள். உண்மையில் இது இணையாக இருந்திருந்தால் பெருமானார் அவர்கள் “வஷிஃத” என்பதை விட்டு விடுங்கள் என்று கட்டளையிட்டிருப்பார்கள். ஒரு விடயம் நடந்தால் அந்த விடயத்தை அல்லாஹ்வின் நாட்டம் என்று சொல்வது சரி. சற்று தாமதித்து உங்களின் நாட்டம் என்று சொல்வதால் இருந்த நிகர் இல்லாமல் போய் விடுமா?

அதுமட்டுமன்றி “மஷீஅத்” நாட்டம் என்ற விடயத்தில் மட்டுமன்றி எதிலும் நிகர் வைப்பது கூடாது. அது பெரும்பாவமாகும். ஸஹாபாக்கள் அவர்களுக்குத் தெரியாத விடயத்தை பெருமானாரோ அல்லது வேறு யாரோ சொல்லும் போது “அல்லாஹு வறஸூலுஹூ அஃலம்” அல்லாஹ்வும், றசூலும்தான் அறிவார்கள் என்று சொல்வார்கள். இது ஸஹீஹான ஹதீதுகள் மூலம் அறியப்பட்ட நடைமுறையாகும். பாதிரியாரின் குற்றச்சாட்டுக்கு வழிப்பட்ட பெருமானார் அதேபோன்றே இவ்வாறு சொன்ன ஸஹாபாக்களிடமும் “அல்லாஹு அஃலம்” என்று கூறிவிட்டு சற்று தாமதித்து “வறஸூலுஹூ அஃலம்” என்று சொல்லுங்கள் என்று கூறியிருக்க வேண்டும். அவ்வாறு சொன்னதற்கு வரலாறில்லை.

எனவே, இங்கு பெருமானார் அவர்கள் அவருக்கு – பாதிரியாருக்கு வழிப்பட்டது போன்று அல்லது பெருமானாருக்கே அவர் சொல்லிக் கொடுத்தது போன்று நாடகமாடியது அவரை வளைத்துப் போட்டு நானும் எனது “உம்மத்” சமூகமும்தான் சிறந்த கூட்டம் என்பதை நிரூபிப்பதற்கேயன்றி அவர் சொல்லிக் கொடுத்தார் என்பதும், பெருமானார் நுணுக்கமான இணையில் இருந்தார்கள் என்பதும் வடிகட்டிய முட்டாளின் பேச்சாகும்.

இவர்கள் இந்த ஹதீதை இடக்குமடக்காக விளங்கியிருப்பதுதான் சரி என்று வாதிட்டால் அல்லாஹ்வின் விடயத்திலும் அவ்வாறு சொல்ல வேண்டி ஏற்படும். நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு “ஸுஜூத்” செய்யுமாறு பணித்தது இறைவன்தான். அதைச் செய்ய மறுத்து நான் நெருப்பினால் படைக்கப்பட்டவன், நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மண்ணினால் படைக்கப்பட்டவர்கள். எனவே, அவர்களை விட நானே உயர்ந்தவன் என்று வாதிட்டவன் ஷெய்தான். அன்று நபீ ஆதமுக்கு “ஸுஜூத்” சிரம் தாழ்த்துவது “ஹலால்” ஆகுமானமாக இருந்தது. இன்று எந்தப் படைப்புக்கும் “ஸுஜூத்” சிரம் தாழத்துவது “ஹறாம்” ஆக்கப்பட்டுள்ளது. ஆக அல்லாஹ்வுக்குத் தெரியாததை ஷெய்தான் சொல்லிக் கொடுத்தான் என்று இவர்கள் சொல்ல வேண்டும். “மஆதல்லாஹ்”

RELATED ARTICLES

Most Popular

Recent Comments