Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்காத்தான்குடியில் இலைமறை காய்களாய் வாழ்ந்து மரணித்த மகான்கள்!

காத்தான்குடியில் இலைமறை காய்களாய் வாழ்ந்து மரணித்த மகான்கள்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
ஒருவர். இவர் யார் தெரியுமா? இவர்தான் காத்தான்குடியில் இலைமறை காய் போல் வாழ்ந்த “மஜ்தூப்” முஹம்மது முஸ்தபா றஹிமஹுல்லாஹ் அவர்கள்.
 
இவர் “முடிச்சு முஸ்தபா, அபின் குடி முஸ்தபா” என்ற பெயர்களால் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1954ம் ஆண்டு நான் பத்து வயதுச் சிறுவனாயிருந்த காலப் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவம்.
 
குறித்த காலப் பகுதியில் எனது வயதையொத்த, காத்தான்குடி 06ம் குறிச்சியில் வாழ்ந்த மக்களுக்கு நான் எழுதும் விடயங்கள் தெரியும்.
 
காத்தான்குடியில் முஸ்தபா என்ற பெயரில் ஒருவர் இருந்தார். இவர் யார்? எவ் ஊரைச் சேர்ந்தவர்? இவரின் பெற்றோர் யார்? முதலான எந்தவொரு விபரமும் எவருக்கும் தெரியாது. காத்தான்குடி மக்களில் அதிகமானவர்கள் இவரைக் கண்டிருப்பதற்கும் வாய்ப்பு இல்லை.
 
இவரின் நடமாட்டமெல்லாம் காத்தான்குடி ஜாமிஉள்ளாபிரீன் பள்ளிவாயல் சந்தைக்கும், 06ம் குறிச்சி பிரதான வீதி இரும்புத் தைக்கா பள்ளிவாயலுக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே இருந்தது.
 
நான் இவரை நேரில் பல தரம் கண்டிருக்கிறேன். ஆயினும் அவ்வேளை நான் பத்து வயதுச் சிறுவனாயிருந்ததால் அவருடன் பேச முடியாமற் போயிற்று.
 
இவர் கறுப்பு நிறமுள்ள ஒல்லிய மனிதன். அடர்ந்த தாடியும், மீசையும் உள்ளவர். இவரின் வாயை மீசை மறைத்திருக்கும். இவரின் தாடியில் மூட்டைப் பூச்சி, எறும்பு, ஈ போன்றவை குடியிருக்கும்.
 
சாரம் மட்டும் உடுத்திருப்பார். இது பல நூறு வருடங்களுக்கு முன்னுள்ளது போலும், யாழ்ப்பாணப் புணாட்டுத் தட்டு போலும் தெரியும். ஷேட் போடமாட்டார். இவரின் தலைமுடி முறுக்கேறி ஒரு மலைப் பாம்பு போல் தோற்றும்.
 
இவர் எங்கே உறங்குகிறார்? எங்கே போகிறார்? எங்கே மல சலம் கழிக்கிறார்? என்ற விபரங்கள் எவருக்கும் தெரியாது. ஊர் மக்கள் இவரை ஒரு பைத்தியம் என்று நினைத்துக் கொண்டதால் இவர் பற்றி எவரும் ஆராயவில்லை.
 
இவர் தோளில் ஒரு சால்வை போட்டிருப்பார். இது சாக்குப் போல் பார்வைக்குத் தோற்றும். அதில் சிறிய அளவிலான பல நூறு முடிச்சுகள் இருக்கும். அவற்றுள் உள்ளது எவருக்கும் தெரியாது. எனினும் நான் பத்து வயதுச் சிறுவனாயிருந்த போது எனது நண்பர்களுடன் அவற்றில் சில முடிச்சுக்களை அவிழ்த்துப் பார்த்துள்ளேன். அவற்றில் தேயிலைத் தூளும், சீனியும், இஞ்சியும் இருந்ததைக் கண்டுள்ளேன். இதனால் இவர் முடிச்சு முஸ்தபா என்று மக்களால் அழைக்கப்பட்டார்.
 
இரும்புத் தைக்கா மையவாடியில்தான் இவரை அதிகமாக காண முடியும். இவரின் உடைமைகள் – சொத்துக்கள் தேங்காய்ச் சிரட்டை ஒன்றும், சிறிய தகரக்குவளை “டின்” ஒன்று மட்டும்தான். “பிலேண்டீ” மட்டும் தயாரித்து இவற்றில் குடிப்பார்.
 
இவர் “அபின்” பாவிப்பதாக மக்கள் பேசிக் கொள்வார்கள். ஆயினும் இதற்கு நம்பத் தகுந்த ஆதாரமில்லை. இவர் மரணித்து அடக்கம் செய்யப்பட்ட பின் இவரின் “கப்ர்” அடக்கவிடத்தில் இருந்து ஓர் ஒளிப் பிளம்பு தூண் அமைப்பில் விண்ணை நோக்கிச் செல்வதைப் பலர் கண்டுள்ளனர். இது அவரின் “கறாமத்” அற்புதமென்று அவ்வேளை மக்கள் பேசிக் கொண்டார்கள். 1954ம் ஆண்டு காலப்பகுதியில் இவர்தான் பேசும் பொருளாக இருந்தார். “மஜ்தூப்”களின் தரத்தையும், அவர்களுக்கு அல்லாஹ்விடமுள்ள அந்தஸ்த்தையும் விளங்கிக் கொள்ளாத சிலர் “அபின் குடி முஸ்தபாவுக்கு கறாமத்தா?” என்றெண்ணி அவரின் “கப்று” அடக்கவிடத்தை அழித்து தரைமட்டமாக்கிவிட்டனர்.
 
இச்சம்பவம் நடந்த வேளை காத்தான்குடிக்கு “வஹ்ஹாபிஸம்” இறக்குமதி செய்யப் படவில்லையாயினும் அபின் குடிப்பவனுக்கு “கறாமத்” அற்புதம் எவ்வாறு வரும் என்று கருதிய சில இளைஞர்களே அவரின் “கப்ர்”ஐ தரை மட்டமாக்கியவர்களாவர். வஹ்ஹாபீகள் அல்ல.
 
அவர் பாதையால் செல்லும் போது நானும், என் போன்ற சிறுவர்களும் அவருக்கு கல்லால் எறிவதுண்டு. ஒரு நாள் என் தந்தை என்னை அழைத்து நீ சிறுவன். உனக்கு ஒன்றுமே தெரியாது. அவர் ஒரு பெரிய மனிதன். இதன் பிறகு அவருக்கு எறிய வேண்டாம் என்று “வஸிய்யத்” நல்லுபதேசம் செய்தார்கள். இவ்வாறு என் தந்தை சொன்னது அவர் பெரிய மனிதர் என்பதற்கு ஓர் ஆதாரமாகும்.
 
இன்னொருவர்: இவர் என் தந்தையின் தந்தை. என் மூத்த வாப்பா ஆவார். இவரின் பெயர் முஹம்மத் அலீ. என் தந்தையின் பெயர் அப்துல் ஜவாத். முஹம்மத் அலீ அவர்கள் நாஹூர் ஆலிம் அவர்களின் மகன் என்று பிரசித்தி பெற்றிருந்ததால் அவரின் இயற் பெயரை ஊர் மக்களில் அநேகர் அறிந்திருக்கவில்லை. இவரின் தந்தையின் பெயர் மீரான் ஸாஹிபு. இவரின் தந்தையின் பெயர் “அல்லாஹ் பக்ஷ்” الله بَخْشْ எனது தந்தை வழியில் மேற்கண்ட நால்வரின் பெயர்கள் மட்டுமே எனக்குத் தெரியும். நான் அவர்களைக் கண்டதில்லை. எனினும் என் தந்தையின் தந்தை முஹம்மத் அலீ அவர்களின் வரலாறுகள் சிலதையும், அவர்களுக்கு முந்தினவர்களின் வரலாறுகளிற் சிலதையும் என் தந்தை மூலம் கேள்விப்பட்டுள்ளேன்.
 
“அல்லாஹ் பக்ஷ்” என்ற சொல் பாரசீக மொழியாக அல்லது உர்து மொழியாக இருக்க வேண்டும். இதன் பொருள் “அல்லாஹ் பிச்சை” என்பதாகும்.
 
சுமார் 100 வருடங்களுக்கு முன் வாழ்ந்த முஸ்லிம்களிற் பலர் தமக்குப் பல வருடங்களாகப் பிள்ளைப் பாக்கியம் இல்லாதிருந்து பிள்ளை கிடைத்தால் அது ஆண் குழந்தையாயின் அதற்கு “அல்லாஹ் பிச்சை” அல்லாஹ் தந்த பிச்சை என்ற கருத்தில் இவ்வாறு பெயர் வைத்திருக்கிறார்கள்.
 
என்னுடைய 78 வருட வாழ்க்கையில் காத்தான்குடியில் ஒரேயொருவர் மட்டும் இப்பெயரில் வாழ்ந்ததை நான் அறிவேன்.
 
என் தந்தை வழியில் நான் பெயர் குறித்த நால்வரும் உலமாஉகளாக – மார்க்க அறிஞர்களாகவே இருந்துள்ளார்கள்.
 
“அல்லாஹ் பக்ஷ்” என்பவர் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர். இவர் இந்தியா – தமிழ் நாட்டுக்கு வந்து திருமணம் செய்துள்ளார். நாஹூர் நகரிலேயே இவரின் திருமணம் நடந்துள்ளது. நாஹூர் மனைவி மூலம் இவருக்குப் பிறந்த ஆண் குழந்தைதான் மீரான் ஸாஹிபு ஆவார். இவர்தான் நாஹூர் ஆலிம் என்றழைக்கப்பட்டார்.
 
இவர் நாஹூரிலிருந்து மன்னார் வந்து அங்கு திருமணம் செய்துள்ளார். மன்னார் மனைவிக்குப் பிறந்த ஆண் குழந்தை தான் எனது தந்தையின் தந்தை முஹம்மது அலீ ஆவார். இவர் அலியார் ஆலிம் என்றும், நாஹூர் ஆலிமின் மகன் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளார்.
 
இவர் அலியார் ஆலிம் மருதமுனையில் திருமணம் செய்துள்ளார். மருதமுனை மனைவியிலிருந்து இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு நபீஸா உம்மா என்று பெயர் வைத்துள்ளார்.
 
அதன் பின் அலியார் ஆலிம் காத்தான்குடிக்கு வந்து மூஸா உம்மா என்ற பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். அவருக்கு காத்தான்குடி மனைவி மூலம் மூன்று ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் எனது மதிப்பிற்குரிய தந்தை அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் அவர்கள்.
 
அலியார் ஆலிமின் நான்கு பிள்ளைகளில் மூத்தவர் பெண். மற்றவர்கள் மூவரும் ஆண்கள். இவர்களில் மூத்தவரின் பெயர் அபூ பக்ர். இரண்டாவது என் தந்தை. மூன்றாமவர் அப்துல் குத்தூஸ். இவர் சின்னத் தம்பி என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளார்.
 
என் தந்தை வழியில் பெயர் குறித்த என் தந்தை உள்ளிட்ட நால்வரும் மார்க்க அறிஞர்களாகவே – உலமாஉகளாகவே இருந்துள்ளனர்.
 
என் தந்தையின் சகோதரர்கள் இருவரில் மூத்தவர் போயிலை வியாபாரி. மற்றவர் ஓரளவு படித்தவர். கடையொன்றில் கணக்காளராக வேலை செய்தவர்.
 
நான் என் தந்தை வழியில் ஐந்தாவது ஆலிம் ஆவேன்.
 
என் மூத்தவாப்பா அலியார் ஆலிம் அவர்கள் காத்தான்குடியில் இலைமறை காய் போல் வாழ்ந்த ஒரு மகான் ஆவார்கள்.
 
இவர்கள் காத்தான்குடி பிரதான வீதி அருகில் உள்ள “மஸ்ஜிதுல் ஹஸனாத்” இரும்புத் தைக்கா என்றழைக்கப்படும் பள்ளிவாயலின் வெளியிலேயே அடக்கம் பெற்றிருந்தார்கள். ஏன் அங்கு அடக்கப்பட்டார்கள்? என்ற விபரம் எனக்குத் தெரியாது. என் தந்தையும் சொல்லவில்லை.
 
அவர்களின் “கப்ர்” தற்போது இரும்புத் தைக்கா பள்ளிவாயலின் “ஹவ்ழ்” இருக்கும் இடத்தில் இருந்தது.
 
லங்கா ஹார்ட்வெயார் மர்ஹூம் இஸ்மாயீல் ஹாஜியார் பழைய பள்ளிவாயலை உடைத்து தற்போதுள்ள புதிய பள்ளிவாயல் கட்டுவதற்காக திட்ட வரைபடம் “ப்ளேன்” எடுத்த போது “ஹவ்ழு” உடைய சுவர் எனது மூத்தவாப்பா அலியார் ஆலிம் அவர்களின் “கப்ர்”க்கு மேல் வருகிறது.
 
மர்ஹூம் இஸ்மாயீல் ஹாஜியார் “கப்ர்”க்கு மேல் சுவர் கட்டுவதற்குப் பயந்து எனது தந்தையிடம் வந்து விடயத்தைக் கூறி ஆலோசனை கேட்ட போது என் தந்தை அவருக்குச் சொன்ன ஆலோசனையை அவர் சொன்னது போன்றே நான் இங்கு எழுதுகிறேன்.
 
“இஸ்மாயீல் ஹாஜியார்! நேற்றிரவு என் தந்தை அலியார் ஆலிம் என் கனவில் தோன்றி, நாளை இரும்புத் தைக்கா பள்ளிவாயல் தலைவர் இஸ்மாயீல் ஹாஜியார் உங்களிடம் எனது “கப்ர்” மீது கட்டிடம் கட்டுவது தொடர்பாக ஆலோசனை கேட்டு வருவார். அவரிடம் நான் தற்போது அந்த இடத்தை விட்டும் வெளியேறி வேறு இடம் சென்று விட்டேன். ஆகையால் என் “கப்ர்” மீது கட்டிடம் கட்டலாமென்று சொல்லிவிடுங்கள் என்று அறிவித்து விட்டார்கள். ஆகையால் எந்தவொரு ஆட்சேபனையுமின்றி நீங்கள் கட்டிடம் கட்டலாம்” என்று கூறினார்கள். இதன் பிறகுதான் இஸ்மாயீல் ஹாஜியார் கட்டிடம் கட்டினார்.
 
அலியார் ஆலிம் கனவில் தோன்றி அறிவித்த செய்தியை என்னிடம் சொன்னவர் மர்ஹூம் இஸ்மாயீல் ஹாஜியார்தான்.
 
அலியார் ஆலிம் அவர்கள் பள்ளிவாயல் காணியில் அடக்கம் பெற்றிருந்த இடத்திலேயே தற்போது “ஹவ்ழ்” கட்டிடம் அமைந்துள்ளது.
 
எனது மூத்தவாப்பா அலியார் ஆலிம் அவர்கள் அங்கு அடக்கப்பட்ட பிறகு “கப்ர்”ஐ சுற்றி பாதுகாப்பு இல்லாதிருந்ததால் ஆடு, நாய் போன்ற பிராணிகள் அந்த “கப்ர்”ஐ மிதித்துச் சென்று கொண்டிருந்தன. இதை அக்கால நிர்வாகிகள் கவனத்திற் கொள்ளாமல் விட்டதால் அலியார் ஆலிம் அவர்கள் இரும்புத் தைக்காப் பள்ளிவாயலின் பக்கத்திலிருந்த மணல் ஒழுங்கையில் வசித்துக் கொண்டிருந்த “அண்ணாவி அப்பா” அவர்களின் கனவில் தோன்றி ஆடு, நாய் என் கப்ரை மிதிக்காமல் பாதுகாப்புச் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டதால் “அண்ணாவி அப்பா” அன்றே பாலமுனை சென்று பனை மட்டை எடுத்து வந்து பாதுகாப்புச் செய்தார்கள்.
 
மேற்கண்ட இவ்விரு சம்பவங்களும் அலியார் ஆலிம் அவர்கள் காத்தான்குடியில் இலைமறை காய் போல் வாழ்ந்து வந்த பெரிய மனிதன் என்பதை காட்டுகின்றன.
 
காத்தான்குடியில் இலைமறை காய் போல் வாழ்ந்த மகான்களில் இரு பெரும் மகான்கள் பற்றி மட்டுமே குறிப்பிட்டேன். இவ்விருவர் போல் இன்னும் பல மகான்கள் வாழ்ந்துள்ளனர்.
 
அவர்களில், மௌலவீ முஹம்மது அமீன் பலாஹீ ஹழ்றத் அவர்களின் தந்தை மர்ஹூம் அப்துல் கபூர் ஆலிம், ஓடைக்கரை மர்ஹூம் அஹ்மத் லெப்பை ஆலிம், காத்தான்குடி 5ம் குறிச்சி மர்ஹூம் இப்றாஹீம் ஆலிம், மர்ஹூம் இப்றாஹீம் (கப்பல் ஆலிம்) ஆகியோரும், இன்னும் பலரும் அடங்குவர்.
 
இவர்களில் ஓடைக்கரை ஆலிம் அவர்களும், 5ம் குறிச்சி இப்றாஹீம் ஆலிம் அவர்களும் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய இமாம்கள் போன்ற மகான்களாவர். அறிவு ஞான மலைகளாவர்.
 
மர்ஹூம் ஓடைக்கரை அஹ்மத் லெப்பை ஆலிம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் சம்மாந்துறை “மல்கம்பிட்டி”யில் அடக்கம் பெற்றுள்ள குறாஸான் நாட்டைச் சேர்ந்த இரு பெரும் வலீமார்களான அஸ்ஸெய்யித் சிக்கந்தர், அஸ்ஸெய்யித் கலந்தர் றஹிமஹுமல்லாஹ் ஆகியோர் மீதும், காத்தான்குடி மௌலானா கபுறடியில் அடக்கம் பெற்றுள்ள மகான் அஸ்ஸெய்யித் அப்துல் காதிரில் பார்றுல் பாஅலவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் மீதும் அறபு மொழியில் “மௌலித்” எழுதிய பெரும் மகான் ஆவார்கள்.
 
காத்தான்குடி 5ம் குறிச்சியில் வாழ்ந்த மகான் மர்ஹூம் முஹம்மத் இப்றாஹீம் ஆலிம் அவர்கள் இமாம் புகாரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பேரில் அறபு மொழியில் “மௌலித்” எழுதிய மகான் ஆவார்கள்.
 
இவ்விரு மகான்களும், மற்றும் மேலே நான் பெயர் குறிப்பிட்ட ஏனைய மகான்களும் “தர்ஹா”க்கள் கட்டி “சியாறத்” தரிசிக்கப்பட வேண்டிய மகான்களாவர். அக்காலத்தில் வாழ்ந்த ஏனைய உலமாஉகள் இப்பணியை செய்வதற்கு தவறிவிட்டார்கள். இன்று குறித்த மகான்களின் அடக்கத்தலங்கள் எவையென்று கூட இனங்கண்டு கொள்ள முடியாமல் அழிந்து மண்ணுடன் மண்ணாகி விட்டன. இது கவலைக்குரியதும், கண்ணீர் வடிக்க வேண்டியதுமாகும். குறித்த நாதாக்களின் உறவினர்கள் கூட மையவாடி சென்று அவர்களைத் தரிசித்து “துஆ” ஓதுவதைக் காண முடியாமலிருப்பது வேதனையான விடயமேயாகும்.
 
ஸுன்னீ உலமாஉகள் ஒன்றிணைந்தால் வஹ்ஹாபிஸம் யானைக் காடு சென்று விடும்.
يا عليّ! يا ولي!
نوّر ضرائح العلماء والعرفاء الّذين دفنوا فى مقبرة هذه المدينة – مدينة كاتّانكودي، واغفر لهم واعف عنهم، وعطّر قبورهم وعتباتهم المقدّسة بعطورات الفضل والفيض والرضوان، واحم هذه المدينة وسكانها من الهدم والغرق والحرق وغيرها من الآفات الأرضيّة والسماويّة، وبارك لهم فى جميع أمورهم ببركات وأسرار العلماء والعرفاء المدفونين رحمهم الله رحمة واسعة،
RELATED ARTICLES

Most Popular

Recent Comments