தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“தஸவ்வுப்” எனும் ஸூபிஸ ஞானமும், “வஹ்ததுல் வுஜூத்” எனும் இறையியல் தத்துவமும் பேசிய எனக்கும், நான் கூறிய கருத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று தீர்ப்பு வழங்கியதுடன் எங்கள் அனைவரையும் கொலை செய்ய வேண்டும் என்றும் எழுத்து மூலம் பொது மக்களுக்கு பகிரங்கப்படுத்திய “முப்தீ”களே!
நீங்கள் செய்தது சரியா? என்றும், 42 ஆண்டுகள் கடந்தும்கூட அதை அமுல் செய்து கொண்டிருப்பது சரியா? என்றும் உங்கள் உள்ளங்களில் கை வைத்துக் கேட்டுப் பதில் கூறுங்கள். உங்கள் மனச் சாட்சி தூய்மையானதாயிருக்குமாயின் 100 வீதமும் பிழை என்றே அது சொல்லுமென்று நான் நம்புகிறேன். உங்கள் மனச் சாட்சி அவ்வாறு சொன்னாலும் கூட உங்களின் தன்மானம், கௌரவம் கருதி நீங்கள் அதன்படி செயல்பட முன்வரமாட்டீர்கள் என்றும் நான் நம்புகிறேன்.
இவ்விடயத்தில் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் அருள் மொழியொன்றை உங்களின் நன்மை கருதி உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ رَمَى مُؤْمِنًا بِكُفْرٍ فَهُوَ كَقَتْلِهِ
“ஒரு முஃமினை “காபிர்” என்று சொல்லுதல் அவனைக் கொலை செய்வது போன்றதாகும்” என்று அருள் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் எச்சரித்துள்ளார்கள். (புகாரீ)
மேற்கண்ட நபீ மொழியில் வந்துள்ள “மன் றமா முஃமினன் பிகுப்ரின்” என்ற வசனம் முஃமினாக இருக்கின்ற ஒருவனைக் “காபிர்” ஆக்கி வைத்தல் என்ற கருத்தையே தரும்.
ஒரு முஃமினை “காபிர்” ஆக்கி வைப்பதாயின் – அதாவது அவனைக் காபிர் என்றோ, “முர்தத்” மதம் மாறியவன் என்றோ சொல்வதாயின் அவனால் மத மாற்றத்திற்கான ஒரு சொல்லோ, அல்லது ஒரு செயலோ நடந்திருக்க வேண்டும். அவ்வாறு நடக்காமல் ஒருவனைக் காபிர் என்றோ, முர்தத் என்றோ சொல்ல முடியாது. அவ்வாறு ஒருவன் சொன்னால் சொன்னவன்தான் “காபிர்” ஆகிவிடுவான்.
قال رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا قَالَ الرَّجُلُ لِأَخِيهِ يَا كَافِرُ، فَقَدْ بَاءَ بِهِ أَحَدُهُمَا»
மேற்கண்ட இந்த நபீ மொழியின் படி ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை உரிய காரணமின்றிக் “காபிர்” என்று சொன்னால் இருவரில் ஒருவர் “காபிர்” ஆகிவிடுவார் என்பது தெளிவாகிறது.
இதன் கருத்து என்னவெனில் முசம்மில் என்பவன் முனீர் என்பவனிடம் நீ காபிர் அல்லது முர்தத் என்று சொன்னால் முனீர் என்பவன் மத மாற்றத்திற்கான ஒரு சொல்லைச் சொல்லியிருந்தால் அல்லது அத்தகைய ஒரு செயலைச் செய்திருந்தால்தான் அவ்வாறு சொன்னவன் தப்புவான். இன்றேல் சொன்ன முசம்மில்தான் காபிர் – அல்லது “முர்தத்” ஆகிவிடுவான்.
இன்று “பத்வா” வழங்கிய “முப்தீ”கள் என்னையும், எனது கருத்தைச் சரி கண்டவர்களையும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று சொல்கிறார்கள். அதேபோல் அவர்களின் “பத்வா”வை சரிகண்ட ஏனைய உலமாஉகளும், பொது மக்களும் சொல்கிறார்கள்.
என்னால் மத மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சொல் அல்லது செயல் வெளியாகியிருந்தால் மட்டுமே அவர்கள் அல்லாஹ்வின் பிடியில் இருந்து தப்புவார்கள். இன்றேல் நான் தப்பிக் கொள்வேன். என்னை “முர்தத்” என்று சொன்னவர்கள் அனைவரும் மதம் மாறியவர்களாகிவிடுவார்கள். இதுவே மேற்கண்ட நபீ மொழியின் விளக்கமாகும்.
நான் கற்ற அறிவின் படி அல்லது அல்லாஹ் எனக்குக் கற்றுத் தந்த அறிவின்படி நான் மத மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய எந்தவொரு சொல்லைச் சொல்லவுமில்லை, எந்தவொரு செயலைச் செய்யவுமில்லை.
நானும் மற்ற முஸ்லிம்கள் சொல்வது போல் “அல்லாஹு அஹத்” அல்லாஹ் ஒருவன் என்றுதான் சொல்கிறேன். அவன் இருவர் என்றோ, பலர் என்றோ எனது 79 வருட வாழ்வில் நான் சொன்னதேயில்லை. இவ்வாறு நான் சொன்னதாக எவராலும் நிரூபிக்கவும் முடியாது. சிலை வணக்கம் ஆகுமென்றும் எனது வாழ்வில் நான் சொன்னதே கிடையாது. இதையும் எவராலும் நிரூபிக்கவே முடியாது. அல்லது சிருஷ்டி வணக்கம் ஆகுமென்றும் நான் சொன்னதே இல்லை. இதையும் எவராலும் நிரூபிக்கவே முடியாது. எனது 79 வருட வாழ்வில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தொழத் தேவையில்லை என்று நான் சொன்னதே இல்லை. இவ்வாறு சொன்னதாக எவராலும் நிரூபிக்கவே முடியாது.
பொதுவாகச் சொல்வதாயின் “ஷரீஆ”வுக்கு முரணான எந்த ஒரு சொல்லும் நான் சொல்லவுமில்லை. எந்த ஒரு செயலும் நான் செய்யவுமில்லை.
நான் ஐங்காலமும் தொழுகின்றேன். ஏனைய “ஸுன்னத்” ஆன தொழுகைகளும் முடிந்தவரை தொழுகிறேன். முதுமை, மற்றும் இயலாமை காரணமாக தற்போது நோன்பு நோற்காமல் இருக்கிறேன். ஆயினும் நோன்பு கடமையில்லை என்று நான் அதை மறுக்கவில்லை. “சகாத்”தை நான் மறுக்கவில்லை. ஆயினும் கடந்த காலங்களில் “சகாத்” கொடுக்க வசதியில்லாதவனாக இருந்ததால் கொடுக்கவில்லை. ஆனால் அதை நான் மறுக்கவில்லை. அல்லாஹ்வின் அருளாலும், அவ்லியாஉகளின் பொருட்டாலும் தற்போது நான் பண வசதியோடு உள்ளேன். “சகாத்” நிதி கொடுத்தும் வருகிறேன். மேலதிகமாக ஏழைகளுக்கும், கல்வி கற்கும் மாணவர்களுக்கும் மாதாந்தம் பண உதவி செய்தும் வருகிறேன்.
பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலின் தலைவனாயிருந்து அதை சிறப்பாக ஊழல் செய்யாமலும், செய்ய விடாமலும் நடத்தி வருகிறேன். ஒரு வருடத்தில் 15க்கும் மேற்பட்ட வலீமார் பெயரால் சிறிய மட்டத்திலும், பெரிய மட்டத்திலும் கந்தூரிகள் நடத்தியும் வருகிறேன். இலங்கை நாட்டில் அதிக கந்தூரிகள் நடைபெறும் இடங்களில் எனது தலைமையிலான பள்ளிவாயல்தான் முதலிடத்தில் உள்ளதென்று சொன்னால் அது மிகையாகாது.
காத்தான்குடியில் “மன்பஉல் கைறாத்” ஜும்ஆப் பள்ளிவாயல், “இப்றாஹீமிய்யா” பள்ளிவாயல், மற்றும் பாலமுனை ஸூபீ மன்ஸில் தைக்கா பள்ளிவாயல் என்பனவும், காத்தான்குடி அல்ஜாமிஅதுர் றப்பானிய்யா அறபுக் கல்லூரி, முஹ்ஸின் மௌலானா தர்ஹா, மற்றும் குர்ஆன் மத்றஸா, கைறாத் குர்ஆன் மத்றஸா, இப்றாஹீமிய்யா குர்ஆன் மத்றஸா, ஸூபீ மன்ஸில் குர்ஆன் மத்றஸா, றஹ்மானிய்யா குர்ஆன் மத்றஸா என்பனவும், கல்முனை இறாக் ஒன்றியம் “மஸ்ஜிதுல் பத்ரிய்யா” பள்ளிவாயல், மற்றும் குர்ஆன் மத்றஸா என்பனவும் எனது தலைமையில் ஸுன்னவத் வல் ஜமாஅத் கொள்கை அடிப்படையில் எந்த ஓர் ஊழலுமின்றி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
காத்தான்குடியில் உள்ள மக்களில் எனக்கு கொள்கையில் எதிரானவர்கள் வஹ்ஹாபீகளும், உலமாஉகளின் “பத்வா”வை சரிகண்ட உலமாஉகளும், பொது மக்களில் ஒரு சாராருமேயாவர். ஏனையோர் என்னுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்களாயிருந்தால் அவர்களுக்கும் “முர்தத்” என்று பட்டம் சூட்டிவிடுவார்கள் என்று பயந்து பகிரங்கமாக ஆதரவு தராமல் மனவேதனையோடு வாழ்கிறார்கள்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும், வஹ்ஹாபீ அமைப்புக்களும் இல்லையெனில் இந்நாட்டில் ஒருவர் கூட எனக்கு எதிரானவர் இருக்கமாட்டார் என்றே சொல்ல வேண்டும்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும், அவர்களின் “பத்வா”வைச் சரி கண்டவர்களும், தீவிரப் போக்குள்ள வஹ்ஹாபீகளும் இல்லையானால் இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களில் 75 சதவீதமானோர் எனக்கு ஆதரவானவர்களாக இருப்பார்கள் என்பதே காலத்தின் கணிப்பாகும்.
எனது கொள்கை:
நான் “ஷரீஆ”வை முழுமையாக ஏற்றுக் கொண்டு ஸூபிஸ வழி நடப்பவனாக உள்ளேன். அத்துடன் “வஹ்ததுல் வுஜூத்” எனும் இறையியல் தத்துவம் பேசுபவனாகவும் உள்ளேன். திருக்கலிமாவான, இஸ்லாமின் அடிப்படை உயிரான “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற திரு வசனத்தின் பொருள் “அல்லாஹ் அல்லாத ஒன்றுமே இல்லை” என்றும், அதற்கு “வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை” என்று பொருள் கொள்வது பிழை என்றும், புரட்டல் பொருள் என்றும் கூறி வருகிறேன். “வுஜூத்” உள்ளமை என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு என்றும், அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமைதான் படைப்புக்களாக வெளியாகித் தோற்றுகிறதென்றும், அல்லாஹ்வுக்கு “தன்ஸீஹ்” அரூப நிலை என்றும், “தஷ்பீஹ்” ரூப நிலை என்றும் இரு நிலைகள் இருப்பதாகவும் நம்பியும் பேசியும் வருகிறேன். அல்லாஹ்வுக்கும், படைப்புக்குமுள்ள தொடர்பு பஞ்சுக்கும், துணிக்கும், தங்கத்திற்கும், நகைக்கும், நீருக்கும், குமிழிக்கும், கடலுக்கும், அலைக்குமுள்ள தொடர்பு போன்றதென்றும் சொல்லி வருகிறேன். சர்வ பிரபஞ்சங்களாகவும் வெளியாகியிருப்பது அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமைதான் என்றும், பிரபஞ்சம் அல்லாஹ்வுக்கு வேறானதல்ல என்றும் சொல்லி வருகிறேன்.
துணி பஞ்சு தானானதாயிருப்பது போன்றும், நகை தங்கம் தானானதாயிருப்பது போன்றும், குமிழி நீர் தானானதாயிருப்பது போன்றும், அலை கடல் தானானதாயிருப்பது போன்றும் சிருஷ்டி அல்லாஹ் தானானதாகவே உள்ளது என்றும் பேசி வருகின்றேன். எல்லாமே அல்லாஹ்வின் வெளிப்பாடுகள் தானானதாயிருந்தாலும் أَعْطِ كُلَّ ذِيْ حَقٍّ حَقَّهُ ஒவ்வாரு வஸ்த்துவுக்கும் அதற்கு “ஷரீஆ” கூறும் சட்டத்தை கொடுத்து நடக்க வேண்டும் என்றும், وَلِكُلِّ صُوْرَةٍ حُكْمٌ وَأَثَرٌ ஒவ்வொரு வஸ்த்துவிற்கும் ஒவ்வொரு சட்டமும், குணபாடும் உண்டு என்றும் பேசி வருகிறேன்.
ஒரே வரியில், ஒரே வசனத்தில் எனது கருத்தையும், கொள்கையையும் சொல்வதாயின் اَلْخَلْقُ عَيْنُ الْخَالِقِ படைப்பு படைத்தவன் தானானதென்றும், படைத்தவனுக்கும், படைப்புக்கும் عَيْنِيَّةْ உண்டென்றும், غَيْرِيَّةْ இல்லையென்றுமே சொல்ல வேண்டும்.
மேற்கண்டவாறு நான் சொல்வதால் இவை எனது கற்பனை என்று எவரும் நினைத்துவிடக் கூடாது. நான் மேலே சொன்ன எனது கொள்கைக்கு திருக்குர்ஆன் வசனங்களும், நபீ மொழிகளும், இமாம்கள், வலீமார், தரீகாக்களின் மஷாயிகுமார் ஆகியோர்களின் பேச்சுக்களும் ஆதாரங்களாக உள்ளன. தேவை ஏற்படும் போது அவை முன்வைக்கப்படும். இன்ஷா அல்லாஹ்!
எம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மேலே நான் கூறிய “வஹ்ததுல் வுஜூத்” கருத்துக்களை நிறுவுவதற்கு சத்தியம் செய்து சொன்னது போல் நானும் சத்தியம் செய்து சொல்கிறேன்.
وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ أَنَّكُمْ دَلَّيْتُمْ بِحَبْلٍ إِلَى الأَرْضِ السُّفْلَى لَهَبَطَ عَلَى اللَّهِ. ثُمَّ قَرَأَ {هُوَ الأَوَّلُ وَالآخِرُ وَالظَّاهِرُ وَالبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ.
وَالَّذِي نَفْسُ عَبْدِ الرَّؤُوْفِ بِيَدِهِ لَوْ أَنَّكُمْ دَلَّيْتُمْ بِحَبْلٍ إِلَى الأَرْضِ السُّفْلَى لَهَبَطَ عَلَى اللَّهِ.
“ஏகத்துவத்தில் ஊடுருவல்” اَلتَّدْسِيْسُ عَلَى التَّوْحِيْدِ என்ற உலமாஉகளின் “பத்வா” “ஹுலூல் – இத்திஹாத்” பிழை என்பதற்கான “பத்வா”வேயன்றி “வஹ்ததுல் வுஜூத்” பிழையென்பதற்கான “பத்வா” அல்ல. இது தொடர்பான தெளிவான கட்டுரை தொடரும். எதிர் பாருங்கள்.
உலமாஉகளின் இருட்டடிப்பும், தில்லு முல்லும் சந்திக்கு வரும்.