Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்உயிரற்ற "முர்தத் பத்வா"வின் மூலம் முஸ்லிம்களின் உதிரங்களையும், உடைமைகளையும் மற்றவர்களுக்கு ஆகுமாக்கி வைத்த முல்லாக்களே!

உயிரற்ற “முர்தத் பத்வா”வின் மூலம் முஸ்லிம்களின் உதிரங்களையும், உடைமைகளையும் மற்றவர்களுக்கு ஆகுமாக்கி வைத்த முல்லாக்களே!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
பரம்பரை முஸ்லிம்களான ஸூபிஸ சமூகத்தவர்களை மதம் மாற்றி “பத்வா” வழங்கிவிட்டு பஞ்சணையில் படுத்துறங்குகிறீர்களா? உங்களை ஸூபிஸ சமூகம் சும்மா விடாது. உங்களை நீதி மன்றில் நிறுத்தும் காலம் நெருங்கிவிட்டது. நாட்டு மக்களை ஏமாற்றியது போதும். வட்டிலப்பம் கொடுத்து நீதிவான்களை ஏமாற்ற நினைத்ததும் போதும்.

உங்களின் போலி “பத்வா”வை தோலுரித்துக் காட்டுவோம். சத்தியத்தை நிலை நாட்ட உயிர் கொடுப்போம். 42 ஆண்டுகள் பொறுத்திருந்தோம். நீங்கள் உங்கள் தவறை உணரவில்லை. இனியாவது உணர்ந்து உங்கள் போலி “பத்வா”வை வாபஸ் பெறுங்கள்.
 
முஸ்லிம்களை மதம் மாற்றி “பத்வா” தீர்ப்பு வழங்குவதற்கு உங்களுக்கு அதிகாரம் தந்தது யார்? மனித உரிமைகளை அளவு கடந்து மீறிவிட்டீர்கள். ஜனநாயக நாட்டில் இருந்து கொண்டு ஜனநாயகத்தை மீறிவிட்டீர்கள். நாங்கள் பரம்பரை முஸ்லிம்கள். எங்களை மதம் மாற்றித் தீர்ப்பு வழங்குவதற்கு நீங்கள் யார்? “பத்வா”வில் இருட்டடிப்புச் செய்துள்ளீர்கள்.
 
குருட்டு “பத்வா” வழங்கிய முல்லாக்களே!
 
உங்களின் அறபு “பத்வா” நூல் 5ம் பக்கத்திலும், தமிழ் மொழியாக்கம் 22வது பக்கத்திலும் நீங்கள் எழுதியிருப்பது என்ன? நீங்கள் செய்வது என்ன? இதோ அறபுப் பகுதி 5ம் பக்கத்தில் நீங்கள் எழுதியுள்ள வசனத்தை எந்தவொரு மாற்றமும் செய்யாமல் நீங்கள் எழுதியவாறே எழுதிக் காட்டுகிறேன்.
 
أما بعد، فخلاصة الجواب عمّا فى السؤال المذكور ما يأتي قريبا إن شاء الله تعالى، كما عليه الأئمّة الأربعة أبو حنيفة ومالك والشّافعي وأحمد ومن تبعهم كأبي منصور الماتريدي وأبى الحسن الأشعري وأبى منصور البغدادي والغزّالي والنّووي وابن عربي والشّعراني وابن حجر والسّيوطي وغيرهم ممّن جمع بين المنقول والمعقول وبين الشّريعة والطريقة والحقيقة والمعرفة رضي اللهم عنهم،
இதோ தமிழ் மொழியாக்கம் 22வது பக்கத்தில் நீங்கள் எழுதியுள்ளதையும் இங்கு பதிவிடுகிறேன்.
 
(மேலே கூறப்பட்ட வினாவின் விடையை இங்கு கூற விரும்புகிறோம். நான்கு மத்ஹபுகளின் மேதைகளாம் இமாம்கள் அபூ ஹனீபா, மாலிக், ஷாபிஈ, அஹ்மத் பின் ஹன்பல் (றஹ்) ஆகியோரும், இவர்களைப் பின்பற்றியோரும், இஸ்லாமிய சித்தாந்த மா மேதைகளுமான மாதுறூதீ, அஷ்அரீ (றஹ்), அபூ மன்ஸூர் அல் பக்தாதீ, அல் கஸ்ஸாலீ, அந்நவவீ, இப்னு அறபீ, அஷ்ஷஃறானீ, அஸ்ஸுயூதீ (றஹ்) போன்ற ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்றெல்லாம் கூறப்படும் சகல ஞானங்களிலும் ஆழ்ந்த அறிவு பெற்று விளங்கிய மா மேதைகளின் தெளிவான போதனைகளின் அடிப்படையிலேயே எமது விடை அமைந்திருக்கும்)
 
“பத்வா” வழங்கிய முல்லாக்களே!
 
நீங்கள் அறபு மொழியிலும், தமிழ் மொழயிலும் இமாம்களிலும், தத்துவ ஞானிகளிலும் 12 பேர்களை ஏற்றுக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அவர்களில் இமாம் ஙஸ்ஸாலீ, இமாம் ஷஃறானீ, இமாம் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் ஆகியோர் அடங்குகிறார்கள்.
 
உங்களின் “பத்வா”வில் தமிழ்ப் பகுதி 22ம் பக்கத்திலும், அறபுப் பகுதி 5ம் பக்கத்திலும் (ஆழ்ந்த அறிவு பெற்று விளங்கிய மா மேதைகளின் தெளிவான போதனைகளின் அடிப்படையிலேயே எமது விடைகள் அமைந்திருக்கும்) என்று எழுதியுள்ளீர்கள்.
 
இதன் மூலம் இமாம் ஙஸ்ஸாலீ, இமாம் ஷஃறானீ, இமாம் இப்னு அறபீ ஆகியோரை அறிவாளிகளாகவும், பெரிய மனிதர்களாகவும் ஏற்றுக் கொள்கிறீர்கள். இவர்கள் மூவரும் “வஹ்ததுல் வுஜூத்” கடல்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? இவர்கள் தமது நூல்களில் என்ன சொல்லியுள்ளார்கள் என்பது உங்களுக்குப் புரியவில்லையா?
 
இம் மூவரும் தமது என்ன கிதாபில், என்ன பக்கத்தில் என்ன சொல்லியுள்ளார்கள் என்று எழுதிக் காட்டவா? காட்டுகிறேன். உங்கள் மானம், மரியாதை, கௌரவம், தன்மானமெல்லாம் காற்றில் பறந்து நாட்டில் நாற்றத்தை ஏற்படுத்துமே! என்ன செய்வது? எழுதாவிட்டால் உங்களால் எங்களை மக்கள் “முர்தத்” என்று சொல்வார்களே! என்ன செய்வது? என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று முடிவு செய்து உங்களின் பொய்யையும், புரட்டையும், இருட்டடிப்பையும் பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், எழுதாவிட்டால் உங்களின் பேச்சை நம்பி மக்கள் பாவிகளாகிவிடுவார்கள் என்பதற்காகவும் மூஸா நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கும், நபீ ஹாறூன் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கும் فَقُوْلَا لَهُ قَوْلًا لَيٍّنًا அவனோடு (பிர்அவ்ன்) மென்மையாக – மெல்லினமாக பேசுங்கள் என்று அல்லாஹ் சொன்னது போல் மென்மையான வசனத்தில் நானும் எழுதுகிறேன்.
 
முதலில் அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்று அறபீ அவர்களின் கொள்கை என்ன? அவர்கள் என்ன சொல்லியுள்ளார்கள்? என்று பேசுவோம். ஆய்வோம் வாருங்கள்.
 
ஹிஜ்ரீ 560ல் ஸ்பெய்ன் “முர்ஸியா” நகரில் பிறந்து ஹிஜ்ரீ 638ல் சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ் நகரில் “வபாத்” மறைந்த இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையைச் சரி கண்டு மக்கள் மத்தியில் பகிரங்கமாகப் பேசியும், பல நூல்களில் எழுதியும் வந்த உலகப் பிரசித்தி பெற்ற இறையியல் மேதை என்பதை இவ் உலகு அறியும். ஆதாரம் வேண்டுமா? தேவையில்லை. இது உள்ளங்கை நெல்லிக் கனிதான். குன்றின் மேல் தீபம்தான்.
 
இவர்கள் தங்களின் “அல்புதூஹாதுல் மக்கிய்யா” 13-424ம் பக்கத்தில் ما فى الوجود إلا الله என்று கூறியுள்ளார்கள். இதன் பொருள் إِنَّ جَمِيْعَ مَا يُدْرِكُوْنَ بِالْحَوَاسِّ فَهُوَ مَظْهَرٌ للهِ تَعَالَى புலன்களால் எட்டிக் கொள்ளப்படுகின்ற யாவும் அல்லாஹ்வின் “மள்ஹர்”கள் தான் என்பதாகும்.
 
மனிதன் தன்னிலுள்ள ஐம்புலன்களால் அறிந்து கொள்கின்ற யாவும் அல்லாஹ்வின் “மள்ஹர்”கள் என்பதாகும். இதன் சுருக்கம் அவை அல்லாஹ் தானானவை என்பதாகும். அதாவது அல்லாஹ்வும், அவன் படைப்பும் வேறல்ல என்பதே இதன் முடிவும், சாரமுமாகும்.
 
இங்கு இரண்டு விடயங்களை விளங்க வேண்டும். ஒன்று “ளாஹிர்”, மற்றது “மள்ஹர்” . இதை ஓர் உதாரணம் மூலம் தெளிவாக்குவோம்.
 
தங்க மாலை போன்று. இவ்வசனத்தில் தங்கமும் உண்டு. மாலையும் உண்டு. தங்கம் என்பது “ளாஹிர்” வெளியானதென்றும், மாலை என்பது “மள்ஹர்” வெளியான இடம் என்றும் சொல்லப்படும். இங்கு பெயரளவில் மட்டும் இரண்டு வஸ்த்துக்கள் உள்ளனவேயன்றி இருப்பது ஒரு பொருள்தான். அதுவே தங்கம். தங்கத்திற்குத்தான் “வுஜூத்” உள்ளமை உள்ளதேயன்றி மாலைக்கு அல்ல. ஏனெனில் மாலை என்பது ஒரு வஸ்த்து இல்லை. அது கண்ணுக்குத் தெரிகின்ற பொய் தோற்றமேயன்றி அதற்கு எதார்த்தமில்லை.
 
இவ்வுதாரணத்தில் தங்கம் வேறு, மாலை வேறென்று சொல்ல முடியாது. இரண்டும் ஒன்றுதான் என்றே சொல்ல முடியும்.
 
இவ்வாறுதான் அல்லாஹ்வும், அவன் படைப்புமாகும். படைப்பு என்பது மாலை போல் அவனின் “மள்ஹர்” ஆகும். படைத்தவன் தங்கம் போன்று “ளாஹிர்” ஆவான்.
 
இங்கு ஒரு பொது விதியை கவனத்திற் கொள்ள வேண்டும். அதாவது اَلظَّاهِرُ لَا يُفَارِقُ الْمَظْهَرَ “ளாஹிர்” வெளியானதென்பது “மள்ஹர்” வெளியான தோற்றத்தை விட்டும் ஒருபோதும் பிரியாது. இது “வஹ்ததுல் வுஜூத்” பேசுகின்ற ஸூபீ மகான்களினதும், “ஆரிபீன்” இறைஞானிகளினதும் “இஸ்திலாஹாத்” பரிபாஷை எனப்படும்.
 
மேற்கண்ட இவ்விபரத்தை உள்வாங்கியே ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் ما فى الوجود إلا الله இருப்பது அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமை மட்டும்தான் என்று கூறினார்கள்.
 
இவ்விளக்கம் “ஹுலூல் – இத்திஹாத்” எனும் வழிகேடான கொள்கையைச் சேராது. ஏனெனில் “ஹுலூல் – இத்திஹாத்” என்ற இரண்டில் ஒவ்வொன்றுக்கும் இரண்டு வஸ்த்துக்கள் தேவையாகும். இங்கு இருப்பது தங்கம் மட்டுமேயாகும். மாலை அல்ல. ஆகையால் “ஹுலூல்” என்பதற்கோ, “இத்திஹாத்” என்பதற்கோ எந்த ஓர் இடமும் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையில் இல்லை.
 
இங்கு “ஐனிய்யத்” மாலை தங்கம் தானானதென்ற கொள்கைதான் நிறுவப்படுகின்றதேயன்றி அது வேறு, இது வேறு என்ற “ஙெய்ரிய்யத்” கொள்கை நிறுவப்படவில்லை. இவ்வாறுதான் “காலிக்” படைத்தவனும், “கல்கு” படைப்புமாகும்.
இதைக் கருத்திற் கொண்டே இமாம் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் ما فى الوجود إلا الله என்று கூறினார்கள்.
 
“பத்வா” வழங்கிய முல்லாக்களே!
இமாம் ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ அவர்களை இமாம் என்றும், பெரிய மனிதர் என்றும் ஏற்றுக் கொண்டதாகச் சொல்லும் நீங்கள் அவர்கள் கூறியுள்ள தத்துவத்தை நாங்கள் கூறினால் அது “ஷிர்க்” என்றும், “குப்ர்” என்றும் கூறி எங்களுக்கு “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” கொடுக்கின்றீர்கள். இவ்வாறு சொன்னவர்களை மகான் என்று ஏற்றுக் கொள்கின்றீர்கள். இது உங்களின் உச்சக்கட்ட “ஹமாகத்” மடமையாகும்.
 
இமாம் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் இவ்வாறு சொல்வதற்கு حَقِيْقَةُ الْحَقَائِقِ “எதார்த்தங்களின் எதார்த்தம்” என்று சொல்வார்கள்.
ஆதாரம்: அல்புதூஹாதுல் மக்கிய்யா, 2-332
 
ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ அவர்களை ஏற்றுக் கொண்ட “முப்தீ” மகான்களே! அவர்கள் மேலும் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள்.
 
اَلْعَارِفُ مَنْ يَرَى الْحَقَّ فِى كُلِّ شَيْءِ، بَلْ يَرَاهُ عَيْنَ كُلِّ شَيْءٍ،
“ஆரிப்” இறைஞானி என்பவர் ஒவ்வொரு வஸ்த்திலும் இறைவனைக் காண்பவராவார். இல்லை, ஒவ்வொரு வஸ்த்தையும் இறைவன் தானானதாக காண்பவர் ஆவார் என்று கூறியுள்ளார்கள்.
ஆதாரம்: புஸூஸுல் ஹிகம் ஷர்ஹுல் கைஸரீ, 02-385
 
இதை சற்று விளக்கமாகச் சொல்வதாயின்
وَالْعَوَامُّ مِنَ النَّاسِ يُفَرِّقُوْنَ بَيْنَ الْحَقِّ وَالْخَلْقِ، وَيُثْبِتُوْنَ لِلْكَوْنِ وُجُوْدًا غَيْرَ وُجُوْدِ اللهِ، كَالْعُلَمَاءِ الَّذِيْنَ أَفْتَوْنِيْ بِالرِّدَّةِ، وَأَفْتَوُا الْقَائِلِيْنَ بِوَحْدَةِ الْوُجُوْدِ بِرِدَّتِهِمْ،
படிப்பறிவில்லாத, கொள்கை விளக்கம் தெரியாத பொது சனங்கள் – பாமரர்கள் படைத்தவன் வேறு, படைப்பு வேறு என்று பிரிக்கின்றார்கள். அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமை வேறென்றும், படைப்பின் உள்ளமையானது அல்லாஹ்வின் உள்ளமைக்கு வேறான தனியான உள்ளமை என்றும் கூறுகின்றார்கள். எனக்கும், “வஹ்ததுல் வுஜூத்” பேசுகின்றவர்களுக்கும் “முர்தத்” என்று “பத்வா” வழங்கிய உலமாஉகள் போன்று.
 
ஆனால் இப்னு அறபீ அவர்கள் படைப்பு பற்றிக் கூறுகையில் பின்வருமாறு கூறுகிறார்கள்.
إِنَّمَا الْكَوْنُ خَيَالٌ – وَهُوَ حَقٌّ فِى الْحَقِيْقَةْ
كُلُّ مَنْ يَعْرِفُ هَذَا – حَازَ أَسْرَارَ الطَّرِيْقَةْ
“படைப்பு என்பது “கயால்” ஆகும். அது எதார்த்தத்தில் அல்லாஹ்வாகவே உள்ளது. இதை அறிந்தவர்கள் “தரீகா”வின் இரகசியங்களை அறிந்தவராவர்” என்று கூறியுள்ளார்கள்.
ஆதாரம்: புஸூஸுல் ஹிகம், பக்கம் – 243
ஆசிரியர்: இப்னு அறபீ
 
இப்பாடல் தொடர்பாக இங்கு ஒரு வரலாறைக் கூறுவது இத் தத்துவத்திற்கு மெருகூட்டும் என்று நினைக்கிறேன். இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் எழுதுவேன்.
 
“பத்வா” வழங்கிய முல்லாக்களே!
நீங்கள் “பத்வா” வழங்கிய வேளை உங்களுக்கும், “பத்வா” எழுதிய இரும்பு மனிதனுக்கும் “வஹ்ததுல் வுஜூத்” என்றால் என்ன சாமான் என்பதும், அது யாரின் தயாரிப்பு, எந்த நாட்டின் உற்பத்தி என்பதும் தெரிந்திருக்கவில்லை. எனினும் “ஹுலூல் – இத்திஹாத்” தொடர்பாக அறிந்திருந்தீர்கள். இதனால் எனது பேச்சை ஒலி நாடா மூலம் செவியேற்று “பத்வா” தயாரித்த நீங்கள் எனது பேச்சை “ஹுலூல் – இத்திஹாத்” என்று விளங்கிக் கொண்டீர்கள். நீங்கள் விளங்கியது சரியா? பிழையா? என்று கூட உங்களை விட விபரம் தெரிந்த “மஷாயிகு”மார்களிடம் நீங்கள் கேட்கவுமில்லை. அத்தகையோருடன் இது தொடர்பாக ஆலோசிக்கவுமில்லை. பேசிய என்னிடம் கூட கேட்கவில்லை. உங்களை வென்ற அறிவாளி யாருள்ளார்? என்ற பாணியில் “பத்வா” வழங்கிவிட்டீர்கள். குருட்டு “பத்வா” வழங்கி 42 வருடங்கள் கடந்தும் கூட நீங்கள் உங்கள் தவறை உணர்ந்து நீதி வழிக்கு வரவுமில்லை. உங்களுக்கு “வஹ்ததுல் வுஜூத்” தெரியாதா? தெரிந்தவர்களிடம் கேளுங்கள். உங்களின் தன்மானத்தையும், கௌரவத்தையும் மூட்டை கட்டி வைத்து விட்டு மாணவர்களாக மகான்களின் காலடி செல்லுங்கள். கண் திறக்கும்.
 
தொடரும்…. (2ம் பக்கம் பார்க்க)
RELATED ARTICLES

Most Popular

Recent Comments