“வஹ்ததுல் வுஜூத்” கொள்கையும், இப்னு அறபீ நாயகமும்.
“பத்வா” வழங்கிய முல்லாக்களே!
சென்ற முதலாவது தொடரில் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய “வஹ்ததுல் வுஜூத்” தத்துவங்களில் சிலதை மட்டும் எழுதினேன். اَلْعَاقِلُ بِالْإِشَارَةِ “புத்தியுள்ளவனுக்கு ஜாடை போதும்” என்ற வகையில் நீங்கள் அனைவரும் புத்தியுள்ளவர்களாயிருப்பதால் இப்னு அறபீ நாயகம் யார்? என்ன கொள்கை உள்ளவர்கள்? என்று விளங்கியிருப்பீர்கள். “வஹ்ததுல் வுஜூத்” என்றால் என்னவென்றும் புரிந்திருப்பீர்கள்.
இருந்தாலும் உங்களில் அறிவு, விளக்கம் குறைந்தவர்களும் இருக்கலாம் என்பதற்காக மீண்டும் ஒரு சில வரிகள் எழுதுகிறேன்.
இற்றைக்கு சுமார் 75 வருடங்களுக்கு முன் தமிழ் நாட்டு உலமாஉகளில் சிலர் “ஹைதறாபாத்” நகரில் ஒரு “குத்பு” இருப்பதாக அறிந்து அவர்களைச் சென்னைக்கு அழைத்து வந்து உலமாஉகள் மாநாடு ஒன்று நடாத்தினார்கள்.
அங்கு வந்த “குத்பு” முஹம்மத் அப்துல் காதிர் ஸூபீ ஹைதறாபாதீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் பின்வரும் பாடலுக்கு விளக்கம் தருமாறு வேண்டினார்கள். அவர்கள் அப்பாடலுக்கு விளக்கம் கூறி, அதை அறபியில் اَلْحَقِيْقَةْ – “அல்ஹகீகா” என்ற பெயரில் ஒரு சிறு நூலாகவும் எழுதிக் கொடுத்தார்கள். பாடல் இதுதான்.
إِنَّمَا الْكَوْنُ خَيَالٌ – وَهُوَ حَقٌّ فِى الْحَقِيْقَةْ
كُلُّ مَنْ يَعْرِفُ هَذَا – حَازَ أَسْرَارَ الطَّرِيْقَةْ
இதன் பொருள்: “சிருஷ்டி என்பது “கயால்” ஆகும். ஆயினும் அது எதார்த்தத்தில் அல்லாஹ்வாயிருக்கும். இதை அறிந்தவர் அனைவரும் “தரீகா”வின் இரகசியங்களை பெற்றுக் கொண்டார்கள்”
இப்பாடலின் சுருக்கம் என்னவெனில் “கவ்ன்” என்ற படைப்பு அல்லது பிரபஞ்சம் அல்லாஹ் தானானதாகும். இவ் உண்மையை அறிந்து கொண்டவர்கள் “தரீகா”வின் இரகசியங்களை அறிந்தவராகிவிடுவார்கள் என்பதாகும்.
இப்பாடல் மிக ஆழமான அகமியங்களை உள் வாங்கிய பாடல்.
“கயால்” என்றால் தமிழில் “பொய்த் தோற்றம்” என்று சுருக்கமாகக் கூறலாம். ஆயினும் இதற்கு ஒரு வரைவிலக்கணம் உண்டு.
اَلْخَيَالُ كُلُّ مَا يُرَى وَلَا يُوْجَدُ فِى الْخَارِجِ بِالذَّاتِ
“கயால்” என்றால் கண் பார்வைக்குத் தெரியும். ஆனால் எதார்த்தத்தில் பார்வைக்குத் தெரிந்த பொருளாக அது இருக்காது. இதுவே “கயால்” எனப்படும். தமிழில் பொய்த் தோற்றம் என்று சொல்லப்படும்.
உதாரணமாக سَرَابْ “ஸறாப்” கானல் நீர் போன்று. கானல் நீர் என்பது பார்வைக்கு நீர் போல் தெரியும். ஆனால் நீர் இருக்காது. நீர் போல் தோற்றியது வெப்பம்தான். இதை சூடான, வெயில் கடுமையான பிரதேசங்களில் திறந்த வெளிகளில் காணலாம்.
கானல் நீர் போன்றதே சிருட்டியாகும். படைப்பாகும். கானல் நீர் இல்லாதது. ஆயினும் இல்லாத ஒன்று இருப்பது போல் தோற்றுகிறது. இவ்வாறுதான் படைப்பு. அது எதார்த்தத்தில் இல்லையாயினும் இருப்பது போல் தோற்றுகிறது என்று கூறிய ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் படைப்பு என்பது எதார்த்தத்தில் அல்லாஹ்தான் என்றும், இதை எவர் அறிந்தாரோ அவர் “தரீகா”வின் இரகசியங்களைப் பெற்றுக் கொண்டார் என்றும் கூறியுள்ளார்கள்.
“வஹ்ததுல் வுஜூத்” பேசிய எனக்கும், எனது பேச்சை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் மதம் மாறியவர்கள் என்று “பத்வா” வழங்கிய முல்லாக்களே!
இப்னு அறபீ அவர்களை மகான் என்று போற்றிப் புகழ்கிறீர்கள். அவர்கள் ஷரீஆ, தரீகா, ஹகீகா, மஃரிபா வழி நடந்தவர்கள் என்றும் பாராட்டுகிறீர்கள். ஆனால் அவர்கள் கூறிய அதே கருத்தை நான் சொன்னால் என்னையும் மதம் மாற்றி, எனது பேச்சை ஏற்றுக் கொண்டவர்களையும் மதம் மாற்றி எனக்கும், அவர்களுக்கும் “முர்தத்” என்று “பத்வா”வும் வழங்குகிறீர்கள். அது போதாதென்று எங்கள் அனைவரையும் கொலை செய்ய வேண்டும் என்றும் மக்களைப் பகிரங்கமாகத் தூண்டுகிறீர்கள். எங்களின் பெற்றோர் எங்களைப் பெற்றதும், வளர்த்ததும் நீங்கள் எங்களை மதம் மாற்றி வைப்பதற்கும், எங்களை நீங்கள் கொலை செய்வதற்குமா என்று உங்களிடம் கேட்கிறேன்.
உங்களின் இச்செயல் பைத்தியக் காரர்களின் செயல் போல் உள்ளது.
உண்மையில் உங்களுக்குப் பைத்தியம்தானா? அல்லது எங்களைப் பழி வாங்குகிறீர்களா? பைத்தியம்தான் என்றால் அதற்கு உரிய நடவடிக்கை எடுங்கள். பழி வாங்குகிறீர்கள் என்றாலும் சொல்லுங்கள். நாங்களும் உங்களை அறிவு ரீதியாக நீங்கள் யாரென்று முஸ்லிம் சமூகத்திற்கு காட்டுவோம்.
“பத்வா” வழங்கிய முல்லாக்களே!
மேலே நான் எழுதியுள்ள பாடலில் நீங்களே மகான் என்று ஏற்றுக் கொண்ட இப்னு அறபீ நாயகம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பிரபஞ்சம் அல்லாஹ்வின் வெளிப்பாடு – அல்லாஹ்தான் என்று சொல்லியிருக்க அவ்வாறு சொன்ன அவர்களை மகான் என்றும், அதே கருத்தைச் சொல்லிய என்னையும், எனது கருத்தை ஏற்றுக் கொண்டவர்களையும் மதம் மாற்றி வைக்கிறீர்களே இது நியாயமா? உங்கள் மனச் சாட்சியில் கை வைத்துக் கேளுங்கள்.
இன்னும் நீங்களே ஏற்றுக் கொண்ட அந்த மகான் இப்னு அறபீ அவர்கள் சொல்வதைப் பாருங்கள்.
وَلَوْ لَا سَرَيَانُ الْحَقِّ فِى الْمَوْجُوْدَاتِ بِالصُّوْرَةِ مَا كَانَ لِلْعَالَمِ وُجُوْدٌ
“சிருஷ்டிகளின் உருவத்தில் அல்லாஹ் வெளியாகவில்லையானால் உலகமே இருக்க முடியாது” என்று கூறியுள்ளார்கள்.
புஸூஸுல் ஹிகம், 29
ஆசிரியர்: இப்னு அறபீ
“ஆலம்” எனும் அகிலம் “அதம்” எனும் இல்லாமையின் வெளிப்பாடல்ல. அது அல்லாஹ்வின் “தாத்”தின் “தஜல்லீ”யாகும் என்று கூறியுள்ளார்கள்.
புஸூஸுல் ஹிகம் கைஸரீ
01 – 365
சிருஷ்டி – படைப்பு என்பது அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமையின் வெளிப்பாடேயன்றி அது “அதம்” இல்லாமையின் வெளிப்பாடல்ல. ஏனெனில் “அதம்” இல்லாமை என்பது இல்லாததுதான். இல்லாமையில் இன்னொன்று உண்டாவதென்பது – வெளியாவதென்பது சிந்தனைக் கெட்டாத, அசாத்தியமான ஒன்றாகும்.
அல்லாஹ் இல்லாத ஒன்றைப் படைப்பான். உண்டாக்குவான். ஆனால் இல்லாமை உண்டாகும் என்பது அசாத்தியமானதாகும். இல்லாமை என்பதே இல்லாததுதான். அதிலிருந்து இன்னொன்று வருவதென்பது சிந்தனைக்கு எட்டாத, “அக்ல்” புத்தி ஏற்றுக் கொள்ளாத ஒன்றாகும்.
இது குறித்தே இமாம் இப்னு அறபீ அவர்கள் தங்களின் பல நூல்களிலும், அவர்களின் إنما الكون خيال என்ற பாடலுக்கு விளக்கம் எழுதிய மகான் முஹம்மத் அப்துல் காதிர் ஸூபீ ஹைதறாபாதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அல்ஹகீகா” என்ற நூலிலும் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
اَلْعَدَمُ لَا يُوْجَدُ وَالْوُجُوْدُ لَا يَنْعَدِمُ
“இல்லாமை உண்டாகாது, உள்ளமை இல்லாமற் போகாது” என்று கூறியுள்ளார்கள்.
இது “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசுகின்ற ஸூபீ மகான்களின் தத்துவங்களில் ஒன்றாகும்.
இது முஸ்லிம்களுக்கு மட்டுமுள்ள தத்துவமல்ல. அனைத்து மத, இன மக்களுக்குமுள்ள தத்துவமேயாகும்.
இதன் சுருக்கமான விளக்கம் என்னவெனில் எந்த ஒரு வஸ்த்து உண்டாவதாயினும் அதற்கு ஒரு மூலம் அவசியமாகும். அதாவது ஒரு கரு அவசியமாகும். எந்த ஒரு மூலமும் – கருவுமின்றியவன் இறைவன் மட்டுமேயாவான். மற்றெல்லாப் படைப்புகளுக்கும் ஒரு கரு இருக்க வேண்டும். கருவின்றி வந்தவன் இறைவன் ஒருவனேயாவான். பிரபஞ்சத்திலுள்ள உயிருள்ளவையோ, உயிரில்லாதவையோ எதுவாயினும், கண் பார்வை எட்டிக் கொள்ளாத படைப்பாயினும் அதற்கு ஒரு கரு அவசியம்தான். கரு இல்லாத ஒரு வஸ்த்து உண்டு என்று ஒருவன் நம்பினால் – அதாவது சுயமாக உண்டானது ஒன்று இருக்குமென்று ஒருவன் நம்பினால் அவன் இவ்விடயத்தில் கொள்கையில் இறைவனுக்கு இணை வைத்தவனாகிவிடுவான். இவனை இஸ்லாம் “முஷ்ரிக்” இணை வைத்தவனென்று சொல்லும். ஏனெனில் இறைவனைப் போல் எதுவுமில்லை என்று நம்புவதே சரியான இறை நம்பிக்கையாகும். இதையே திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
அல்லாஹ் திருக்குர்ஆனில் وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ “அவனுக்கு – இறைவனுக்கு நிகராக எவருமில்லை” என்று கூறியுள்ளான். (திருக்குர்ஆன் அத்தியாயம் 112 – வசனம் 04)
இதன் பொருள் “அவனுக்கு – இறைவனுக்கு நிகராக எதுவுமில்லை” என்பதாகும். இதன் விளக்கம் என்னவெனில் அவனுக்கு நிகராக உயர்திணையில் ஒன்றுமில்லை என்பதாகும்.
திருக்குர்ஆனில் இன்னுமோர் இடத்தில் لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ “அவன் போல் – இறைவன் போல் எதுவுமில்லை” என்று கூறியுள்ளான். (திருக்குர்ஆன் அத்தியாயம் 42 – வசனம்11)
முதலாம் வசனத்தில் أَحَدٌ “அஹதுன்” என்ற சொல் வந்துள்ளது. இது உயர்திணையை மட்டும் குறிக்கும். இரண்டாம் வசனத்தில் شَيْءٌ – “ஷெய்உன்” என்ற சொல் வந்துள்ளது. இது அஃறிணையை மட்டும் குறிக்கும். இதன் விளக்கம் உயர்திணையிலும் அவனுக்கு நிகராக ஒன்றுமில்லை, அஃறிணையிலும் அவனுக்கு நிகராக ஒன்றுமில்லை என்பதாகும். மொத்தத்தில் எதிலும் அவனுக்கு நிகரில்லை என்பதாகும். தனக்குத் தானே சுயமாக உண்டானவன் இறைவன் மட்டும்தான். அவனுக்கு கரு இல்லை. மற்றெல்லாப் படைப்புகளும் அவனில் நின்றுமுள்ளவையாகும். அதாவது அவனின் – “தாத்” பிரம்மத்தின் வெளிப்பாடாகும். முஸ்லிம்கள் பிரம்மம் என்று சொல்லாமல் அவனின் “தாத்” அல்லது “வுஜூத்” உள்ளமையின் வெளிப்பாடு என்று கூறுவர். எந்த வசனத்தில் கூறினாலும் விஷயம் ஒன்றுதான்.
அதாவது இறைவனுக்கு கரு எதுவுமில்லை என்றும், ஏனைய படைப்பு எதுவாயினும் அதற்கு இறைவன்தான் கரு என்றும் நம்ப வேண்டும். இவ்வாறு நம்புதல்தான் சரியானதும், எதார்த்தத்திற்கு பொருத்தமானதுமாகும்.
மேற்கண்ட விபரங்களின் சுருக்கம் என்னவெனில் இறைவனுக்கு கரு இல்லை என்பதும், படைப்புக்கு கரு உண்டு என்பதுமாகும். இதற்கு மாறாக படைப்பு என்பதற்கு கரு இல்லை என்று ஒருவன் நம்பினால் அவன் இவ்விடயத்தில் – கரு இல்லை என்ற விடயத்தில் இறைவனுக்கு நிகர் வைத்தவனாவான்.
எனவே, இத்தகைய இணை வைப்பிலிருந்து ஒருவன் தப்பித்துக் கொள்வதாயின் இறைவன் மட்டுமே கருவின்றித் தோன்றியவன் என்றும், ஏனைய எப்படைப்பாயினும் அதற்கு கரு உண்டு என்றும், அக்கருதான் இறைவன் என்றும் நம்ப வேண்டும்.
ஒரு கருவிலிருந்து எது வெளியானதோ அது அந்தக் கரு தானானதாயிருக்குமேயன்றி அதற்கு வேறானதாயிருக்காது. இருக்கவும் முடியாது.
உதாரணமாக கழுத்தில் அணியும் தங்க மாலைக்கு தங்கம் கருவென்றால் மாலையும் தங்கம்தான் என்றும், தங்கத்திற்கு மாலை வேறான ஒன்றல்ல என்றும், மாலை தங்கம் தானானதுதான் என்றும் நம்ப வேண்டும். இவ்வாறு நம்புதல்தான் சரியான நம்பிக்கையாகும். இறைவனையும், படைப்பையும் இவ்வாறுதான் நம்ப வேண்டும்.
அலையின் கரு கடல் என்றால் அலை கடல் தானானதேயன்றி கடலுக்கு வேறான ஒன்றல்ல. நூலின் கரு பஞ்சென்றால் நூல் பஞ்சு தானானதேயன்றி பஞ்சுக்கு வேறான ஒன்றல்ல. ஆணியின் கரு இரும்பு என்றால் ஆணி இரும்பு தானானதேயன்றி இரும்புக்கு வேறான ஒன்றல்ல.
எனவே, இல்லாமை உண்டாகாது, உள்ளதுதான் உண்டாகும் என்றால் படைப்பு எதுவாயினும் அது இறைவனின் “தாத்” பிரம்மத்திலிருந்தே உண்டாகும். பிரம்மத்திலிருந்து உண்டாகும் என்றால் இது பிரம்மம் தானாக இருக்குமேயன்றி அதற்கு வேறானதாக இருக்காது.
இரும்பால் செய்யப்பட்ட அதாவது இரும்பு என்ற கருவிலிருந்து வெளியான ஆணி இரும்பு தானானதாயிருக்குமேயன்றி இரும்புக்கு வேறானதாக இருக்காது.
தங்கத்தால் செய்யப்பட்ட, அதாவது தங்கம் என்ற கருவிலிருந்து வெளியான மாலை தங்கம் தானானதாயிருக்குமேயன்றி தங்கத்திற்கு வேறானதாயிருக்காது.
மேற்கண்ட விபரங்களும், விளக்கங்களும் அஷ் ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் மேலே நான் எழுதிக் காட்டிய அறபு வசனங்களின் வியாக்கியானமேயாகும்.
“பத்வா” வழங்கிய முல்லாக்களே!
“வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தின் “கிங்” அரசர் என்று வர்ணிக்கப்படுகின்ற ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ அவர்களை இமாம் என்றும், பெரும் மகான் என்றும் ஏற்றுக் கொண்டுள்ளதாக உங்கள் “பத்வா”வில் நீங்கள் தெளிவாக எழுதிவிட்டு அவர்கள் அறபு மொழியில் கூறியுள்ள அகமியத்தை – “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை நாங்கள் கூறினால் எங்களை “முர்தத்” ஆக்கி “பத்வா” வழங்குகிறீர்கள்.
“உலமா சபை” என்று ஒரு சங்கத்தை வைத்துக் கொண்டு நீங்கள் கற்ற கல்வியை மட்டும் தராசாக வைத்துக் கொண்டு மற்றவர்கள் கூறும் கருத்துக்களை உங்கள் தராசில் நிறுத்து முடிவு செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். தராசு பழுதாயிருக்கலாம். மாற்றிக் கொள்ளுங்கள். கண்டதையெல்லாம் “ஷிர்க்”, “குப்ர்” என்று சொல்வதை நிறுத்திவிட்டு திருக்குர்ஆனையும், நபீ மொழிகளையும் ஆதாரங்களாகக் கொண்டு அவ்லியாஉகளும், இஸ்லாமிய தத்துவ ஞானிகளும், ஆரிபீன்களும் எழுதிய நூல்களை வாசியுங்கள். அறபுக் கல்லூரிகளில் குறிப்பிட்ட பாடங்களில் உள்ளவை மட்டும்தான் அறிவென்று எடை போடாமல் கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என்ற அருள் மொழியை மனதிற் கொண்டு செயல்படுங்கள். மரணிக்குமுன் நீங்கள் செய்த மாபெரும் பாதகச் செயலுக்காக அல்லாஹ்விடம் இரு கரமேந்தி இணையிலிருந்து வெளியேறுங்கள்.
தொடரும்…. (3ம் பக்கம் பார்க்க)
குட் நைட் – உங்கள் இரவு நல்லிரவாகட்டும்.
لا تضعوا أقدامكم فى البحر قبل أن تعرفوا عمقه