“குத்புல் வுஜூத்” அல் இமாம் அபுல் ஹஸன் அலீ ஷாதுலீ றஹிமஹுல்லாஹ்!
ஷாதுலிய்யா தரீகாவின் தாபகர் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசிய இறையியல் மேதைகளில் ஒருவராவார்கள்.
இவர்கள் பின்வருமாறு சொன்னதாக இறைஞான மேதை அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னு அஜீபா றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “ஈகாழுல் ஹிமம் பீ ஷர்ஹில் ஹிகம்” எனும் நூல் 7ம் பக்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
قال الإمام قطب الوجود أبو الحسن الشّاذلي رحمه الله كما نقله صاحب كتاب إيقاظ الهمم فى شرح الحكم العارف بالله والصّوفيّ الجليل أحمد بن محمد بن عجيبة الحسني رحمه الله فى الصفحة السابعة من كتاب المذكور، (من لم يتغلغل فى علمنا هذا مات مصرّا على الكبائر وهو لا يشعر، وحيث كان فرضَ عين يجب السفرُ إلى من يأخذ عنه إذا عُرف بالتربية واشتهر الدّواءُ على يده، وإن خالف والديه حسْبَمَا نصَّ عليه غيرُ واحد كالبلالي والسنوسي وغيرهما،
“எங்களின் இந்த அறிவை எவன் வயிறு நிரம்ப கற்றுக் கொள்ளவில்லையோ அவன் பெரிய பாவத்தில் நிலை பெற்றவனாக மரணிப்பான். அது அவனுக்கு தெரியாதிருக்கும். அதைக் கற்றுக் கொள்வது கட்டாயக் கடமையாகும். இந்த அறிவைப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒருவர் இருக்கிறார் என்பதையும், அவரிடத்தில் தன்னை ஆன்மீக வழியில் வளர்க்கும் படியான மருந்து உண்டு என்பதையும் அறிந்தால் அதற்காக பெற்றோருக்கு மாறு செய்தேனும் பயணித்தல் கடமையாகும். இவ்வாறு பிலாலீ, ஸனூஸீ உற்பட இன்னும் பலர் கூறியுள்ளார்கள்” என்று கூறியுள்ளார்கள்.
قال الإمام الغزّالي ‘إنّ تعلّم علم التصوّف فرض عين إذ لا يَخْلُو أحدٌ مِن عيب أو مرض إلّا الأنبياء ‘ كما نقله أيضا صاحب الكتاب المذكور فى الصفحة السابعة،
மேலும் இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளதாகவும் இமாம் இப்னு அஜீபா அவர்கள் தனது அதே நூலில் (ஈகாழுல் ஹிமம்) குறிப்பிட்டுள்ளார்கள். “இல்முத் தஸவ்வுப்” ஸூபிஸ ஞானத்தைக் கற்றுக் கொள்வது “பர்ழ் ஐன்” கட்டாயக் கடமையாகும். ஏனெனில் நபீமார் தவிரவுள்ள எவரும் (ஆன்மீக ரீதியான) குறையை விட்டும், நோயை விட்டும் நீங்கியவராக இருக்கமாட்டார்.
குத்புல் வுஜூத் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் மேற்கண்ட வசனத்தில் வந்துள்ள يَتَغَلْغَلُ என்ற சொல் تَغَلْغَلَ என்ற சொல்லடியில் உள்ளதாகும்.
இச் சொல்லுக்கு أَسْرَعَ فِى سَيْرِهِ வேகமாக நடந்தான் என்ற பொருளும், دَخَلَ فِى الشَّيْئِ عَلَى تَعْبٍ وَشِدَّةٍ ஒரு விடயத்தில் – ஒரு வேலையில் கடும் முயற்சியோடும், களைப்போடும் இறங்கினான் என்ற பொருளும் உண்டு.
சுருங்கச் சொன்னால் ஓர் அறிவை கஷ்டப்பட்டு, சிரமப்பட்டு விளக்கமாக அறிந்து கொள்ளுதல் என்று சொல்லப்படும்.
இமாம் அபுல் ஹஸன் அலீ ஷாதுலீ நாயகம் என்ன சொல்கிறார்கள் என்றால் “எங்களுடைய அறிவை எந்தக் குறையுமின்றி நிறைவாகக் கற்றுக் கொள்ளாதவன் தான் அறியாமலேயே பெரும் பாவத்தில் நிலைத்தவனாயிருந்து மரணிப்பான்” என்று.
فِيْ عِلْمِنَا هَذَا
எங்களுடைய இந்த அறிவு என்று கூறினார்களேயன்றி அது எந்த அறிவென்று அவர்கள் குறிப்பிடவில்லை.
விஷயம் தெரியாத, அறபு மொழி நடை புரியாத சின்னஞ் சிறிசுகள் அவர்கள் சொன்ன அறிவு “ஷரீஆ”வின் அறிவுதான் என்று குரங்குப் பிடி பிடித்து நிற்கிறார்கள். இவ்வாறு அடம் பிடித்து நிற்பவர்கள் உடலில் கொழுத்தவர்களாகவும், வயதில் முதிர்ந்தவர்களாகவும் இருந்தாலும் கூட இறைஞான அறிவில் பாலர் வகுப்பு மாணவர்களாகவே உள்ளனர்.
இத்தகைய சின்னஞ் சிறிசுகளுக்கு நான் கூறும் அறிவுரை என்னவெனில் ஒரு பேச்சை பேசுகிறவர் எந்த அறிவில் “ஸ்பெஷலிஸ்ட்” என்பதை முதலில் தெரிந்து கொண்டுதான் அவரின் பேச்சை ஆய்வு செய்ய வேண்டும்.
உதாரணமாக மிருக வைத்தியர் ஒருவர் எங்களின் அறிவில் என்று சொன்னால் அது மிருக வைத்தியம் என்றும், விஞ்ஞானி ஒருவர் எங்களின் அறிவு என்று சொன்னால் அது விஞ்ஞான அறிவு என்றும், மெய்ஞ்ஞானி ஒருவர் எங்களின் என்று சொன்னால் அது மெய்ஞ்ஞானம் என்றும் விளங்கிக் கொள்ள வேண்டும். இதற்கு மாறாக மெய்ஞ்ஞானி ஒருவர் அவ்வாறு சொன்னால் அது மிருக வைத்தியம் என்று விளங்கிக் கொள்ளாமல் மெய்ஞ்ஞானம் என்றே விளங்கிக் கொள்ள வேண்டும்.
இமாம் அபுல் ஹஸன் அலீ ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “எங்களுடைய அறிவு” என்று சொன்னால் அது அவர்கள் பேசுகின்ற ஸூபிஸ ஞானம் என்றும், “வஹ்ததுல் வுஜூத்” தத்துவம் என்றும் விளங்கிக் கொள்ள வேண்டும். மிருக வைத்தியம் என்று விளங்கிக் கொள்ளுதல் அறியாமை மட்டுமல்ல. பேத்தனமுமாகும்.
இதன் பிறகு சின்னஞ் சிறுசுகள் நிதானமாக நடந்து கொள்ளுதல் அவசியமாகும்.
ஷாதுலீ நாயகம் சொன்ன அறிவு இறைஞானமேயாகும். அவர்கள் “இல்ம்” என்று பொதுவாகச் சொல்லியிருந்தாலும் அது ஸூபிஸ ஞானம், “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் என்பவற்றையும் உள்வாங்கிக் கொள்ளும்.
1959 அல்லது 1960ம் ஆண்டு காலப்பகுதியில் நான் அஷ்ஷெய்கு டொக்டர் – கலாநிதி ஷெய்கு பாஸீ நாயகம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் இலங்கைத் திரு நாட்டிற்கு விஜயம் செய்திருந்த போது காலி கோட்டைக்கும் அழைத்து வரப்பட்டார்கள். அவ்வேளை பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா அறபுக் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் “பைஅத்” வழங்கினார்கள். அவர்களில் ஒருவனாயிருந்ததால் நானும் “ஷாதுலிய்யா” தரீகா “ஸல்ஸிலா”வில் உள்ளவன்தான்.
இமாம் ஷாதுலீ நாயகம் அவர்களின் மேற்கண்ட பேச்சு மிகச் சூடான பேச்சாகும். ஸூபிஸ ஞானம், “வஹ்ததுல் வுஜூத்” தத்துவம் இரண்டிலும் ஆழமான அறிவு இல்லாதவன் பெரும்பாவத்தில் நிலைத்திருந்தவனாக மரணிப்பான் என்பது மிகக் காரசாரமான பேச்சாகும்.
இன்று ஷாதுலிய்யா சகோதரர்கள் “ஹழ்றா” செய்கிறார்கள். இது பாராட்ட வேண்டிய விடயம்தான். ஆயினும் “தரீகா” சகோதரர்கள் அதன் தாபகரின் கருத்தை – கூற்றைக் கவனத்திற் கொண்டு “தரீகா” கூறும் இறைஞானத்தை பசி தீரும் அளவு கற்றுக் கொள்ள வேண்டும் என்று அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
இதேபோல் எந்த “தரீகா”வைச் சேர்ந்தவர்களாயினும் “தரீகா” வழியில் வெளிப்படையான வணக்க வழிபாடுகள் செய்வதுடன் أَسْرَارُ الطَّرِيْقَةْ தரீகாவின் இரகசியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் இரகசியங்களைத் தெரிந்து கொள்ளாமல் நான் காதிரிய்யா, நான் ஷாதுலிய்யா, நான் ரிபாஇய்யா, நான் சிஷ்திய்யா என்று சொல்லிக் கொள்வதாலும், “ஹழ்றா”, “றாதிப்” போன்ற “திக்ர்”கள் செய்வதாலும், ஷெய்குமார்களின் கை, கால்களை முத்தமிடுவதாலும், விஷேட நிகழ்வுகளின் போது சாம்பிராணி போடுவதாலும் இறைஞானத்தையும், “தரீகா”வின் இரகசியத்தையும் தெரிந்து கொள்ளவும் முடியாது. அனுபவிக்கவும் முடியாது.
اَلْإِنْسَانُ سِرِّيْ وَأَنَا سِرُّهُ
“மனிதன் எனது இரகசியம், நான் அவனின் இரகசியம்” என்ற அல்லாஹ்வின் பேச்சின் தத்துவத்தையும்,
مَا وَسِعَنِيْ أَرْضِيْ وَلَا سَمَائِيْ، وَلَكِنْ وَسِعَنِيْ قَلْبُ عَبْدِيَ الْمُؤْمِنِ
“நான் குடியிருப்பதற்கு நான் படைத்த வானமோ, பூமியோ எனக்கு விசாலமானதாக இல்லை. ஆயினும் என்னை நம்பிய விசுவாசியின் உள்ளமே எனக்கு விசாலமானதாகும்” என்ற அல்லாஹ்வின் பேச்சின் அகமியத்தையும்,
أَتَزْعُمُ أَنَّكَ جِرْمٌ صَغِيْرٌ – وَفِيْكَ انْطَوَى الْعَالَمُ الْأَكْبَرُ
“மனிதா! நீ சிறிய உடலுள்ளவன் மட்டும்தான் என்று நினைக்கிறாயா? இல்லை. உன்னுள்ளே அகிலம் அனைத்தும் சுருண்டு கிடக்கிறது” என்ற ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ அவர்களின் பேச்சையும் கவனத்திற் கொண்டு செயல்பட வேண்டும்.
ஸூபீ மகான்கள் அனைவரும் ஏகோபித்துக் கூறிய ஒரு வசனம் உண்டு. அதை நான் இங்கு எழுதுகிறேன். இவ்வசனம் ஸூபிஸ ஞானத்தையும், வஹ்ததுல் வுஜூத் அகமியத்தையும் தூக்கியெறிந்து விட்டு “ஷரீஆ” மட்டும் போதும் என்று கூறிவருகின்ற உலமாஉகளுக்கே மிகப் பொருத்தமானதென்று நான் கருதுகிறேன்.
قال الحكماء والعارفون:
مَنْ تَشَرَّعَ وَلَمْ يَتَحَقَّقْ فَقَدْ تَفَسَّقْ – وَمَنْ تَحَقَّقَ وَلَمْ يَتَشَرَّعْ فَقَدْ تَزَنْدَقْ
وَمَنْ جَمَعَ بَيْنَهُمَا فَقَدْ تَحَقَّقْ
ஒருவன் “ஷரீஆ”வைக் கற்று “ஹகீகா”வை கற்றுக் கொள்ளவில்லையானால் அவன் “பாஸிக்” கெட்டவனாகிவிட்டான்.
ஒருவன் “ஹகீகா”வைக் கற்று “ஷரீஆ”வைக் கற்றுக் கொள்ளவில்லையானால் அவன் “சிந்தீக்” நயவஞ்சகனாகிவிட்டான்.
எவன் இரண்டும் கற்றுக் கொண்டானோ அவன்தான் நல்வழி பெற்றவன்.
எனவே, இறைஞானிகள், மஷாயிகுமார், மற்றும் ஸூபீ மகான்களின் தீர்க்கமான முடிவின்படி ஒரு மனிதன் – குறிப்பாக ஓர் ஆலிம் – மௌலவீ, விஷேடமாக அறபுக் கல்லூரிகளில் கற்றுக் கொடுக்கும் ஹழ்றத்மார் அனைவரும் “ஷரீஆ”வின் அறிவை கற்றுக் கொள்வது போல் “தரீகா”வின் அறிவையும் (ஸூபிஸ ஞானம் – வஹ்ததுல் வுஜூத்) கற்றுக் கொள்வதும், பின்னர் மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதும் அவசியமாகும்.
இலங்கையிலுள்ள அறபுக் கல்லூரிகளில் “தஸவ்வுப்” ஸூபிஸ ஞானமும், “வஹ்ததுல் வுஜூத்” எனும் “அகீததுஸ் ஸூபிய்யா” ஞானமும் கற்றுக் கொடுக்கப்படாமலிருப்பதே உலமாஉகளில் அநேகமானவர்களுக்கு குறிப்பிட்ட அறிவு ஞானங்கள் தெரியாமற் போனதற்கு பிரதான காரணம் எனலாம். அவர்களில் அநேகர் குறித்த ஞானங்களை எதிர்ப்பதற்கும் இதுவே காரணமுமாகும்.
ஸூபிஸ ஞானம் மங்கி மறைந்து போனதற்கு இன்னுமொரு காரணம் அதை அறிந்திருந்த மகான்கள் மறைந்து போனதும் – மரணித்ததும், இன்னும் பலர் எதிரிகளால் படுகொலை செய்யப்பட்டதும், நாடு கடத்தப்பட்டதும், பொருளாதாரத் தடை செய்யப்பட்டதுமேயாகும். நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
மறுமை நாளுக்குரிய அடையாளங்கள் பற்றிக் கூறிய பெருமானார் அவர்கள்
إِنَّ رَفْعَ الْعِلْمِ ذَهَابُ الْعُلَمَاءِ،
“அறிஞர்கள் மரணிப்பதன் மூலம் அறிவு உயர்த்தப்படும்” என்று அருளினார்கள்.
இந்த நபீ மொழியில் சுட்டிக் காட்டப்பட்ட அறிவு ஸூபிஸ தத்துவமும், வஹ்ததுல் வுஜூத் இறையியலுமாகும். இதற்கு ஆதாரம் ஏனைய அறிவுகள் பரந்தும், விரிந்தும் காணப்படுவதேயாகும்.
முற்றும்.