Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“இல்முத் தஸவ்வுப்” ஸூபிஸ ஞானம் கற்பது “பர்ழ்ஐன்” கட்டாயக் கடமையாகும்!

“இல்முத் தஸவ்வுப்” ஸூபிஸ ஞானம் கற்பது “பர்ழ்ஐன்” கட்டாயக் கடமையாகும்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
وأمّا حكم الشارع فى أمر تعلّم علم التصوّف فقال حجّة الإسلام محمد الغزّالي رحمه الله إنّه فرضُ عين، إذ لا يخلو أحد من عيب أو مرض إلّا الأنبياء عليهم الصّلاة والسّلام،
 
“இல்முத் தஸவ்வுப்” – ஸூபிஸ ஞானம் கற்றுக் கொள்வது தொடர்பாக இஸ்லாம் – திருக்குர்ஆனும், திரு நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் அருள் மொழிகளும் சொல்வதென்ன? இஸ்லாம் இது கடமை என்று சொல்கிறதா? அல்லது “ஸுன்னத்” என்று சொல்கிறதா? இதற்கான சட்டம் என்ன? என்பது தொடர்பான விபரங்கள் அடங்கிய ஓர் ஆய்வுக் கட்டுரைதான் இது.

ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் இது தொடர்பாக தங்களின் கருத்தைக் கூறுகையில் இது “பர்ழ்ஐன்” ஒவ்வொருவர் மீதும் கட்டாயக் கடமை என்று சொல்கிறார்கள். அவர்களின் “இஹ்யா உலூமித்தீன்” என்ற நூலை – ஞானக் களஞ்சியத்தை திறந்து பார்த்தவர்கள் இவ் உண்மையை அறிந்திருப்பார்கள்.
 
இமாம் ஙஸ்ஸாலீ அவர்கள் ஸூபிஸம் கற்றுக் கொள்வது “பர்ழ்ஐன்” கட்டாயக் கடமை என்று கூறியதற்குப் பின்வருமாறு விளக்கம் சொல்லியுள்ளார்கள்.
 
அதாவது நபீமார் தவிர ஏனைய எந்த ஒரு மனிதனாயினும் குறையுள்ளவனாகவே இருப்பான். அதாவது உள்ளத்தைப் பாதிக்கும் பெருமை, பொறாமை, வஞ்சகம், எரிச்சல், மமதை, ஆணவம், அகங்காரம், பதவி மோகம், பணவாசை, பொருளாசை, மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை மற்றும் உள்ளத்தைப் பாதிக்கும் படியான கோள் சொல்லுதல், புறம் பேசுதல் போன்ற தீக்குணங்கள் குடிகொண்ட உள்ளம் உடையவனாகவே இருப்பான். இந் நோய்களில் எந்தவொரு நோயாலேனும் அல்லது பல நோய்களாலேனும் பாதிக்கப்பட்ட நோயாளனாகவே இருப்பான். இவ்வாறிருப்பதை நிதர்சனமாக நாம் பார்க்கின்றோம்.
 
ஒரு பாடசாலையில் பல ஆசிரியர்கள் இருந்தால் ஒரு சிலர் மறு சிலர் மீது பொறாமை உள்ளவர்களாக இருப்பதையும், ஓர் அறபுக் கல்லூரியில் பல ஹஸ்றத்மார் இருந்தால் அவர்களில் ஒரு சிலர் மறு சிலர் மீது எரிச்சல் உள்ளவர்களாக இருப்பதையும், ஓர் ஊரில் பல கடைக்காரர்கள் இருந்தால் அவர்களில் ஒரு சிலர் மறு சிலர் மீது வஞ்சகம் உள்ளவர்களாக இருப்பதையும் நாம் பார்க்கிறோம். ஒரு பள்ளிவாயலில் இரு பேஷ் இமாம்கள் இருந்தால் அவர்களில் ஒருவர் மற்றவர் மீது மன உளைச்சல் உள்ளவராக இருப்பதையும், ஒரே நிர்வாகத்தில் இரு பட்டதாரிகள் இருந்தால் அவர்களில் ஒருவர் மற்றவர் மீது பொறாமை உள்ளவராக இருப்பதையும், பதவி எதுவுமின்றி சும்மா கிடந்த, நற்குணமுள்ளவனாயிருந்த ஒருவன் பதவி கிடைத்ததும் நாய்க்குணமுள்ளவனாக மாறுவதையும், இன்னுமிதுபோன்ற காழ்ப்புணர்வு உள்ளவர்களையும் நாம் நிதர்சனமாக காண்கிறோம்.
 
மேற்கண்ட தீக்குணங்கள் யாவும் மனிதனின் உள்ளத்தைப் பாதிக்கும் நோய்களாகும்.
இத்தகைய நோய்களுக்கான மருந்தும், மாத்திரைகளும் “தஸவ்வுப்” எனும் ஸூபிஸக் கலையில்தான் கூறப்பட்டுள்ளதேயன்றி “பிக்ஹ்” எனும் “ஷரீஆ”வைக் கூறும் சட்டக் கலைகளில் கூறப்படவில்லை.
 
எனவே, மேற்கண்ட தீக்குணங்களில் ஒரு குணமோ, அல்லது பல குணங்களோ உள்ள ஒருவர் சாகும் வரை “பிக்ஹ்” சட்டக் கலை படித்தாலும் மன நோய்களால் பாதிக்கப்பட்டவராகவே மரணிக்க நேரிடும். சட்டக் கலையில் மட்டுமன்றி இலக்கணம், இலக்கியம், சரித்திரம், தர்க்கவியல் முதலான கலைகள் கற்றவரின் நிலையும் இவ்வாறுதான் இருக்கும்.
 
இத்தகைய ஒருவன் “தஸவ்வுப்” ஸூபிஸக் கலை கற்றுக் கொள்ளாமல் மரணித்தானாயின் அவன் மிருகங்கள் போன்றே மரணிக்க நேரிடும்.
 
ஒருவன் இருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். அவன் ஐந்து நேரமும் “அவ்வல் ஜமாஅத்”துடன் முதல் வரிசையில் தொழுகின்றான் என்றும், தொழுகையின் முன், பின் “ஸுன்னத்” ஆன தொழுகைகளும் தொழுகின்றான் என்றும், காலையும், மாலையும் “திக்ர், ஸலவாத்” முதலான வணக்கங்கள் செய்கின்றான் என்றும் வைத்துக் கொள்வோம். பல ஊர்களுக்கும், நாடுகளுக்கும் சென்று நற் பணிகள் செய்கின்றான் என்றும், அவ்லியாஉகள், நாதாக்கள் பேரில் மௌலித் ஓதியும், கொடியேற்றியும், அன்னதானம் வழங்கியும் கொண்டாடுகிறான் என்றும், வருடத்திற்கு ஒரு முறை திரு மக்கா நகர் சென்று “உம்றா” செய்கிறான் என்றும் வைத்துக் கொள்வோம்.
 
இத்தகைய மேற்கண்ட அமல்கள் செய்ததற்கான நற்கூலி அவனுக்கு கிடைக்குமேயன்றி அவன் ஸூபிஸம் கற்று தன்னிலுள்ள தீக்குணங்களை அகற்றி சுத்தம் பெற்றவனாக மாட்டான் என்பதில் சந்தேகமே இல்லை.
الأمراض القلبيّة
உள்ளம் தொடர்பான நோய்களுக்கு அவற்றுக்குரிய வைத்தியங்கள் எவையென்று அறிந்து அவ் வைத்தியம் செய்ய வேண்டும்.
 
ஒருவன் தன்னிலுள்ள கோபத்தை நீக்குவதாயின் அதற்கான மருந்தும், பொறாமையை நீக்குவதாயின் அதற்கான மருந்தும், பதவி மோகத்தை நீக்குவதாயின் அதற்கான மருந்துமே செய்ய வேண்டும். மருந்து செய்யுமுன் என்ன நோய்க்கு என்ன மருந்து செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். தலை வலிக்குப் பூசும் “பாம்” ஐ வயிற்று வலிக்கு தண்ணீரில் கரைத்து குடிக்க முடியாது. சிரங்குக்கு பூசும் மருந்தை கண்ணோய்க்கு பாவிக்க முடியாது.
 
உடல் ரீதியான எந்த நோயாயினும் மருத்துவம் கற்ற ஒரு வைத்தியரிடம் கூறி அதற்கான மருந்தையே பாவிக்க வேண்டும்.
 
இதேபோல் உள ரீதியான பொறாமை, கோபம், கவலை, ஆணவம் போன்ற நோய்களுக்கு உள ரீதியான மருத்துவம் கற்ற ஒரு ஸூபீ மகானிடம் சென்று தனக்குள்ள நோயை கூறி அதற்கான மருந்தை பாவிக்க வேண்டும்.
 
ஸூபிஸம் கற்ற ஸூபீ மகான் உள வைத்திய மேதையாவார். அவரிடம் சென்று சோதனை செய்து அவர் கூறும் மருந்து மாத்திரைகள் பாவிக்க வேண்டும்.
 
நபீகள் பெருமானாரிடம் நபீ தோழர் ஒருவர் வந்து தனது கண் நோயை முறையிட்ட போது அவர்கள் அவருக்கு சொல்லிக் கொடுத்த மருந்து ஒரு பிரார்த்தனைதான். வேறொன்றும் சொல்லிக் கொடுக்கவில்லை.
 
நபீ தோழர் ஒருவர் அவர்களிடம் தனது கண் நோயை முறையிட்ட போது அது உடல் ரீதியான நோயாயிருந்தும் கூட அதற்கும் உள ரீதியான, ஆன்மிக அடிப்படையிலான மருந்து கொடுத்தே சுகப்படுத்தினார்கள்.
 
அவரிடம் “வுழூ” செய்து இரண்டு “றக்அத்” தொழுமாறும், தாங்கள் சொல்லிக் கொடுக்கும் ஓதலை – “துஆ”வை ஓதுமாறும் பணித்து “துஆ” வசனங்களையும் சொல்லிக் கொடுத்தார்கள்.
 
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ وَأَتَوَجَّهُ إِلَيْكَ بِنَبِيِّكَ مُحَمَّدٍ نَبِيِّ الرَّحْمَةِ، يَا مُحَمَّدْ إِنِّي تَوَجَّهْتُ بِكَ إِلَى رَبِّي فِي حَاجَتِي هَذِهِ لِتُقْضَى لِيَ، اللَّهُمَّ فَشَفِّعْهُ فِيَّ
பொருள்: யா அல்லாஹ்! நான் உன்னிடம் கேட்கிறேன். உன்னுடைய அருள் நபீ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களைக் கொண்டு உன்னளவில் முன்னோக்குகிறேன். அருள் நபீயே! நான் உங்களைக் கொண்டு எனது இரட்சகன் அளவில் முன்னோக்கி என் தேவை நிறைவேற்றப்பட வேண்டுமென்று கேட்கிறேன். இறைவா! அவர்களை எனக்குப் பரிந்துரைப்பவர்களாக ஆக்கி வைப்பாயாக!
பெருமானாரிடமிருந்து இதைக் கேட்ட நபீ தோழர் அவ்வேளையே சொன்னபடி செய்தார். அக்கணமே அவரின் கண்ணோய் குணமாகியது.
ضَرِيْرْ
என்றால் கண் நோயால் பாதிக்கப்பட்டவன் அல்லது கண் பார்வை இழந்தவன் என்று பொருள் வரும். மேற்கண்ட நபீ மொழியில் ضَرِيْرْ என்ற இச் சொல்தான் வந்துள்ளது. இரண்டு விதமாகவும் பொருள் கொள்ள சாத்தியமுண்டு. எனினும் கண் பார்வை இழந்தவர் என்று பொருள் கொள்வதே சிறந்தது.
 
கண் பார்வை முற்றாக இழப்பதும், அல்லது கண் நோய் ஏற்படுவதும் உடலோடு சம்பந்தப்பட்ட நோய்களேயன்றி உள்ளத்தோடு சம்பந்தப்பட்ட நோய்கள் அல்ல. நபீ பெருமானார் அவர்களின் மேற்கண்ட நடவடிக்கை மூலம் அவர்கள் உடல் வியாதிக்கும், உள வியாதிக்கும் மருத்துவர் என்று தெரிய வருகிறது.
 
இதனால்தான்
اللهم صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ طِبِّ الْقُلُوْبِ وَدَوَائِهَا وَعَافِيَةِ الْأَبْدَانِ وَشِفَائِهَا
என்ற “ஸலவாத்”தில் பெருமானார் அவர்கள் உள நோய்களுக்கும், உடல் நோய்களுக்கும் மருந்தானவர்கள் என்று சொல்கிறோம்.
 
பெருமானார் அவர்கள் طَبِيْبُ الْقُلُوْبِ وَالْأَبْدَانِ உடல் நோய்களுக்கும், உள நோய்களுக்கும் “தபீப்” டொக்டர் என்பதை நிறுவ பல ஆதாரங்கள் உள்ளன. கட்டுரை நீண்டுவிடுமென்பதற்காகச் சுருக்கிக் கொள்கிறேன்.
 
இப்போது இக்கட்டுரையின் தலைப்போடு தொடர்புள்ள விடயங்களைத் தொடர்கிறேன்.
 
உள்ளத்தில் ஏற்படுகின்ற, மேலே நான் குறிப்பிட்ட பொறாமை, வஞ்சகம், கோபம் போன்ற தீக்குணங்களை ஒருவன் முற்றாகக் களைந்து அவன் முழு மனிதனாவதாயின் ஸூபிஸ ஞானம் கற்பது கடமையாகும். இதனால்தான் இமாம் ஙஸ்ஸாலீ அவர்கள் ஸூபிஸம் கற்பது “பர்ழ்ஐன்” கட்டாயக் கடமை என்று கூறினார்கள்.
 
இமாம் ஙஸ்ஸாலீ அவர்கள் சொன்னது ஒரு புறமிருந்தாலும் நாம் நமது பகுத்தறிவு கொண்டும், தூர நோக்கோடும் ஆய்வு செய்தால் தீக்குணங்களை அகற்றி மனத் தூய்மை பெறுவதாயின் ஸூபிஸ ஞானம் கற்பது கடமை என்பது தெளிவாகிறது. இவ்விடயத்தில் இரண்டாம் கருத்தக்கு இடமில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
 
இக்காலத்தைப் பொறுத்த வரை ஸூபிஸம் கற்றுத் தருவதற்கு தகுதியானவர்கள் மிகவும் குறைவு. இருந்தார்களாயினும் அவர்களிடம் கற்றக் கொள்வதில் சில சிக்கல்கள் உள்ளன. என்னதான் சிக்கல் இருந்தாலும் அந்தச் சிக்கலைத்தாண்டி நாம் வெற்றி பெற வேண்டுமாயின் அச் சிக்கல்களைத் தாண்டத்தான் வேண்டும்.
 
இது தொடர்பாக இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
 
وحيث كان فرضَ عين يجب السفرُ إلى من يأخذ عنه إذا عُرف بالتربية واشتهر الدّواءُ على يده، وإن خالف والديه حسْبَمَا نصَّ عليه غيرُ واحد كالبلالي والسنوسي وغيرهما،
ஸூபிஸம் கற்பது கட்டாயக் கடமையாயிருப்பதால் ஸூபிஸ ஞானம் தெரிந்த ஒருவர் எங்கிருந்தாலும் அவரிட்ம் செல்வது கற்பவன் மீது கடமையாகும். தூரப் பிரதேசத்தில் இருந்தால் அங்கு அவன் பயணிப்பதும் கடமைதான்.
 
ஸூபிஸம் கற்றுக் கொடுப்பவர் “தர்பியத்” உள்ளவராக இருக்க வேண்டும். அதாவது “தர்பியத்” என்றால் வளர்த்தல் என்று பொருள் வரும். இதன் சுருக்கம் என்னவெனில் ஸூபிஸம் கற்றுக் கொடுப்பவர் திறமையுள்ளவர், தகுதியானவர், தரமானவர், நல்வழிப் படுத்துபவர் என்று அவர் இருக்கும் பிரதேசத்தில் அறியப்பட்டவராக இருத்தல் வேண்டும். அதோடு பலர் அவர் மூலம் பயனடைந்தவர்களாகவும் இருத்தல் வேண்டும். ஸூபிஸம் கற்றுக் கொடுப்பவர் மேற்கண்ட நிபந்தனையுள்ளவராக இருந்தால் அவர் எங்கிருந்தாலும் அவர் இருக்குமிடத்திற்கு பயணிப்பது கடமை. இவ்விடயத்தில் கற்றுக் கொள்ள விரும்புகிறவன் தனது பெற்றோருக்கு மாறு செய்தாலும் சரியே. இவ்வாறு இமாம் பிலாலீ, இமாம் ஸனூஸீ அவர்களும், இன்னும் பலரும் கூறியுள்ளார்கள். அதாவது பெற்றோர் போக வேண்டாமென்று தடுத்தாலும் போகலாம். பெற்றோருக்கு மாறு செய்ததாகாது.
 
ஸூபிஸம் கற்றுக் கொடுப்பவர் என்று இங்கு கூறப்படுபவர் ஒரு “காமில்” ஆன “ஷெய்கு”வாக இருக்க வேண்டும். அதாவது “பைஅத்” வழங்கி மக்களை நல்வழிப் படுத்துபவராகவும், ஸூபிஸம் குறையின்றித் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். சுருங்கச் சொன்னால் அவர் போலிக் குருவாக இருத்தல் ஆகாது.
 
இமாம் பிலாலீ அவர்களும், இமாம் ஸனூஸீ அவர்களும் இப்படியொரு நிபந்தனை கூறியதற்கான காரணம் என்னவெனில் போலி ஷெய்குமார்களை மக்கள் பின்பற்றாமல் அவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டுமென்பதற்காகவேயாகும். மேற்கண்ட இமாம்களின் காலத்திலேயே போலிகளின் நடமாட்டம் இருந்துள்ளதென்றால் இக்காலத்தில் போலிகள் இல்லாமலிருக்க முடியாது.
 
இன்று நாம் பல போலிகளைக் காண்கிறோம். அவர்கள் “ஷெய்கு” மார்களாயிருந்து “பைஅத்” வழங்கி சிஷ்யர்களை நல்வழிப்படுத்துவதற்கு தகுதியற்றவர்களாயுள்ளார்கள். ஆயினுமவர்கள் தமது சுய நலம் கருதி நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
ஒரு “காமில்” சம்பூரணம் பெற்ற ஒரு “ஷெய்கு” தங்களின் சிஷ்யர்களுக்கு திருக்கலிமாவின் உண்மையான விளக்கத்தை முதலில் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதோடு “ஷரீஆ”வையும் அவர்களுக்கு வலியுறுத்த வேண்டும்.
 
“பைஅத்” வழங்கி மனிதர்களை நல்வழிப்படுத்தும் “ஷெய்கு” பணவாசை இல்லாதவராகவும், பதவி மோகம் இல்லாதவராகவும், ஊழல் செய்யாதவராகவும் இருக்க வேண்டும். இதேபோல் எவருக்கும் பயந்து இறை ஞான தத்துவத்தையும், திருக்கலிமாவின் சரியான பொருளையும், மற்றும் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தையும் மறைக்காமல் தனது “முரீது” சிஷ்யர்களை வளர்ப்பவராக இருத்தல் வேண்டும்.
 
இக்கட்டுரையின் சுருக்கம் என்னவெனில் ஒரு மனிதன் இறைவனை அறிந்து அவனை அடைவதற்கும், அவன் தன்னையறிவதற்கும், தனது தலைவனை அறிந்து பேரின்பம் பெறுவதற்கும் ஸூபிஸம் கற்று அதன் வழி செல்ல வேண்டும் என்பதேயாகும்.
 
முற்றும்.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments