தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“கலாமுன்” என்றால் வசனம். “கலிமதுன்” என்றால் ஒரு சொல். ஒரு சொல் மட்டும் வசனமாகாது. பொருள் பூரணமானால்தான் அது வசனம்.
ஒரு வசனம் அமைவதற்கு குறைந்தது இரு சொற்கள் வேண்டும்.
ஒரு வசனம் அமைவதாயின் பல வகையில் அமையலாம். அவற்றில் ஒரு வகை “முப்ததா – கபர்” எழுவாயும், பயனிலையும் சேர வேண்டும். “முப்ததா” என்றால் எழுவாய், “கபர்” என்றால் பயனிலை.
ஒருவன் “அல்லாஹ்” என்று மட்டும் “திக்ர்” செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். இது ஒரு சொல்தானேயன்றி வசனமல்ல.
இவ்வாறு “திக்ர்” செய்யும் போது இச் சொல்லை எழுவாயாகக் கருதுவதா? பயனிலையாகக் கருதுவதா? இரண்டு விதமாகவும் கருதலாம். கொள்ளலாம்.
ஒரு விதம் என்னவெனில் “அல்லாஹ்” என்ற சொல்லை “முப்ததா” எழுவாயாகக் கொள்வது. இதை எழுவாயாகக் கொண்டால் “கபர்” பயனிலை நீக்கப்பட்டுள்ளது என்று கொள்ள வேண்டும். நீக்கப்பட்ட பயனிலை எவ்வாறு இருக்கும் என்று அறிய விரும்பினால் இடத்திற்குப் பொருத்தமான ஒரு சொல்லை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவன் “அல்லாஹ்” என்று மட்டும் “திக்ர்” செய்யும் போது இச் சொல்லை “முப்ததா” எழுவாயாகக் கருதி நீக்கப்பட்ட பயனிலை حَاضِرْ அல்லது نَاظِرْ என்று நாம் அமைக்கலாம். “ஹாழிறுன்” என்றால் சமூகமாயிருப்பவன் – உடன் இருப்பவன் என்று பொருள் வரும்.
“நாளிறுன்” என்றால் பார்த்துக் கொண்டிருப்பவன் என்று பொருள் வரும்.
இவ்விபரத்தின் படி اللهُ حَاضِرٌ என்றும், اللهُ نَاظِرٌ என்றும் வசனம் அமையும்.
இன்னொரு விதம் என்னவெனில் “அல்லாஹ்” என்ற சொல்லை நீக்கப்பட்ட எழுவாய்க்கு பயனிலையாக அமைப்பதாகும். இவ்வாறு அமைத்தால் நீக்கப்பட்ட எழுவாய் هُوَ – ஹுவ (அவன்) என்ற சொல்லாக, அல்லது أَنْتَ – “அன்த” (நீ) என்ற சொல்லாக, அல்லது أَنَا – “அன” (நான்) என்ற சொல்லாக அமைக்கலாம்.
“ஹுவ” என்று அமைத்தால் هُوَ اللهُ – “ஹுவல்லாஹு” அவன் அல்லாஹ் என்று வசனம் அமையும். “அன்த” என்று அமைத்தால் أَنْتَ اللهُ – நீ அல்லாஹ் என்று வசனம் அமையும். “அன” என்று அமைத்தால் أَنَا اللهُ – நான் அல்லாஹ் என்று வசனம் அமையும்.
மூன்று விதங்களில் நாம் விரும்பியவாறு நீக்கப்பட்ட எழுவாயை அமைக்கலாம். நீக்கப்பட்ட எழுவாய் தோன்றா எழுவாய் என்று சொல்லப்படும். இதை அறபு மொழியில் மொழியிலக்கணக் கலையில் مُبْتَدَأٌ مَحْذُوْفٌ என்று அழைக்கப்படும்.
ஹுவ, அன்த, அன என்பவை – அதாவது அவன், நீ, நான் என்பன ضَمَائِرْ பிரதிப் பெயர்கள் என்று மொழியிலக்கணத்தில் அழைக்கப்படும்.
நீக்கப்பட்ட எழுவாய் மூன்றில் ஒன்றாக இருக்கலாம். இதில் பிழை ஒன்றுமில்லை. இம் மூன்றில் எவ்வாறு அமைப்பது சிறந்ததென்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
வாசக நேயனே! நீ ஞான வழி தெரியாத “ஷரீஆ” வழியில் மட்டும் நடப்பவனாயின் மூன்று பிரதிப் பெயர்களில் அவன் என்ற பொருளுக்குரிய “ஹுவ” என்பதை அல்லது நீ என்ற பொருளுக்குரிய “அன்த” என்பதை அமைப்பதே சிறந்ததென்று சொல்வாய். இவ்வாறு அமைப்பது மட்டுமே சரி என்றும், “அன” என்று அமைப்பது மா பெரும் “ஷிர்க்” இணையென்றும் சொல்வாய். உன்னை இந்த அளவு மடையனாக்கிய மகான்கள் யார் தெரியுமா? “ஷரீஆ”வை மட்டும் கற்றுக் கொண்டு நாங்கள்தான் மார்க்க அறிஞர்கள் என்று மார் தட்டும் போலி உலமாஉகளேயாவர்.
நான் ஏன் இவ்வாறு சொல்கின்றேன் என்றால் ஒரு மரம் தன்னை அல்லாஹ் என்று சொன்னதாக திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறியுள்ளான்.
தாஹா அத்தியாயம், வசனம்: 09, 10, 11, 12
கஸஸ் அத்தியாயம், வசனம்: 30
பகுத்தறிவு இல்லாத ஒரு மரம் “நான் அல்லாஹ்” என்று சொன்னதாக திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறியிருப்பதால் பகுத்தறிவுள்ள மனிதன் அவ்வாறு சொல்வது எவ்வாறு பிழையாகும்? பிழையாகாது.
எனவே, அன்பிற்குரிய வாசக நேயனே! நீ அல்லாஹ்வின் பேச்சை ஏற்றுக் கொள்வாயா? போலிகளின் பேச்சை ஏற்றுக் கொள்வாயா? அல்லாஹ்வின் பேச்சை நீ ஏற்றுக் கொண்டால் பின்னால் நான் சொல்வதையும் ஏற்றுக் கொள்.
அதாவது “அல்லாஹ்” என்று மட்டும் நீ “திக்ர்” செய்யும் போது அல்லாஹ் என்ற சொல்லை அவன் என்ற பொருளுக்குரிய “ஹுவ” என்ற தோன்றா எழுவாய்க்கு, அல்லது நீ என்ற பொருளுக்குரிய “அன்த” என்ற தோன்றா எழுவாய்க்கு, அல்லது நான் என்ற பொருளுக்குரிய “அன” என்ற தோன்றா எழுவாய்க்கு பயனிலையாகக் கொடு. மூன்றில் எதையும் தோன்றா எழுவாயாக நீ கொடுக்க முடியும். எனினும் மூன்றில் நான் என்ற பொருளுக்குரிய “அன” என்ற சொல்லை தோன்றா எழுவாயாகக் கொடுப்பதே சிறந்ததாகும்.
இதற்கான காரணம் என்னவெனில் “ஹுவ” அவன் என்ற படர்க்கையும், “அன்த” நீ என்ற முன்னிலையும் உறுதிப்பாட்டில் பலம் குறைந்ததாகும். அதாவது கேள்வி கேட்பதற்குச் சாத்தியமானதாகும்.
உதாரணமாக “அவன் அல்லாஹ்” என்றால் எவன் என்ற கேள்விக்கும், “நீ அல்லாஹ்” என்றால் யார் என்ற கேள்விக்கும் சாத்தியம் உண்டு. எனினும் “நான் அல்லாஹ்” என்ற வசனத்தில் கேள்விக்கு இடமில்லாமற் போகும்.
எனவே, கேள்விக்கு இடமில்லாத “தன்மை” மட்டுமே பலம் கூடியதாக கணிக்கப்படும்.
அறபு மொழியிலக்கணத்தில் أَعْرَفُ الْمَعَارِفْ சந்தேகத்திற்கு இடமில்லாத பிரதிப் பெயர் “அன” “நான்” என்று சொல்லப்பட்டுள்ளதேயன்றி “ஹுவ” என்றோ, “அன்த” என்றோ சொல்லப்படவில்லை.
இவ் அடிப்படையில் “அல்லாஹ்” என்று மட்டும் “திக்ர்” செய்கின்ற ஒருவன் أَنَا اللهُ – நான் அல்லாஹ் என்று நினைத்துக் கொள்வதே சிறந்தது.
“அல்லாஹ்” என்ற சொல் பெயர்ச் சொல். இது இறைவனைக் குறிக்கும் சொல். அவனின் திரு நாமமாகும். இறைவனுக்கு “அல்லாஹ்” என்று முதலில் பெயர் வைத்தவர் ஆதிபிதா நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களேயாவர். இது இறைவனின் “தாத்”திற்குரிய பெயரேயன்றி அவனின் தன்மைகளைக் குறிக்கும் பெயரல்ல. இப்பெயர் தவிரவுள்ள ஏனைய பெயர்களே “ஸிபாத்” தன்மைகளைக் குறிக்கும் பெயர்களாகும். இப்பெயர் இறைவனின் ஏனைய பெயர்களை உள்வாங்கிய பெயராகும். இப் பெயர் جَامِعُ الْأَسْمَاءِ ஏனைய 99 பெயர்களையும் தன்னுள் அடக்கிய பெயராகும். இப் பெயரையும் சேர்த்தால் இறைவனின் பெயர்கள் மொத்தம் நூறாகும். இது தவிர அவனின் பெயர்கள் 99 பெயர்கள்தான். இத்தத்துவத்தையே பின்வரும் நபீ மொழி சுட்டிக் காட்டுகிறது.
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا،
அல்லாஹ்வுக்கு 99 திரு நாமங்கள் உள்ளன என்று நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள். இந்த நபீ மொழியில் إِنَّ للهِ அல்லாஹ்வுக்கு 99 திருநாமங்கள் உள்ளன என்றுதான் வசனம் வந்துள்ளதேயன்றி إِنَّ لِذَاتِ اللهِ அல்லாஹ்வின் “தாத்”திற்கு – அந்த மெய்ப் பொருளுக்கு 99 திருநாமங்கள் உள்ளதாக வரவில்லை. ஆகையால் இந்த நபீ மொழியை إِنَّ لِاسْمِ اللهِ அல்லாஹ் என்ற பெயருக்கு 99 திருநாமங்கள் உள்ளன என்றும், அல்லாஹ் என்ற பெயர் அவனின் “தாத்”திற்குரியதென்றும், அவனின் ஏனைய திரு நாமங்கள் யாவும் أَسْمَاءُ الْإِسْمِ திரு நாமத்தின் திரு நாமங்கள் என்றும் விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ் என்ற திரு நாமத்தோடு அவனுக்கு 100 திரு நாமங்கள் உள்ளன. இவ்வடிப்படையில் அல்லாஹ் என்ற திரு நாமம் اِسْمُ الْأَسْمَاءِ திருநாமங்களின் திரு நாமம் என்றும், ஜாமிஉல் அஸ்மாஇ جَامِعُ الْأَسْمَاءِ அனைத்துத் திரு நாமங்களையும் உள் வாங்கிய திரு நாமம் என்றும் சொல்லப்படும்.
“அல்லாஹ்” என்ற திரு நாமத்திலுள்ள விஷேடம் என்னவெனில் மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே இதே நேரம் வரை (27.11.2022 அதிகாலை 03.40 மணி வரை) எந்த ஒரு மனிதனுக்கும் இப் பெயர் சூட்டப்படாததேயாகும். இதன் பிறகும் சூட்டப்படமாட்டாது. அப்படியொரு பெயர் வைக்கும் எண்ணம் எவரின் மனதிலும் உதிக்கவுமாட்டாது.
ஆயினும் “றப்புன்” என்று பெயர் சூட்டலாம். பெற்றோருக்கு றப்பு, றப்பதுன் என்று சொல்லலாம். رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِيْ صَغِيْرًا இதுவே ஆதாரமாகும்.
அல்லாஹ் எனும் திரு நாமத்திலுள்ள இன்னுமொரு விஷேடம் என்னவெனில் அதிலுள்ள அலிப், லாம், லாம், ஹே நான்கு எழுத்துக்களில் எந்த ஓர் எழுத்தை நீக்கினாலும் ஏனைய எழுத்துக்கள் அவனையே குறிக்கும். வாகசர்கள் நீக்கிப் பாருங்கள். விளங்காவிட்டால் எனக்கு எழுதுங்கள். (லில்லாஹ், லஹூ, ஹூ)
இறைவனுக்கு அல்லாஹ் என்று பெயர் சொன்னவர் ஆதிபிதா நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்தான்.
அல்லாஹ் அவர்களைப் படைத்து முடிந்ததும் அவர்கள் தங்களின் ஒரு காலை நிலத்தில் குத்தியவர்களாகவும், மறு காலை மடக்கியவர்களாகவும் எழுந்த போது இறைவனின் “தஜல்லீ” திருத் தரிசனம் அவர்களுக்கு கிடைத்தது. கண்டதும் அல்லாஹ் என்றார்கள். கண் கண்டதற்குப் பொருத்தமான பெயரைச் சூட்டினார்கள். இறைவனின் திரு நாமங்களிற் சில திருநாமங்கள் நபீமாருக்கு கிடைத்த காட்சிக்கேற்ப அவர்களால் சூட்டப்பட்டவையேயாகும்.
தொடரும்…. (2ம் பக்கம் பார்க்க)
Pages: 1 2