Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“பத்வா” வழங்கிய உலமாஉகளுக்கு தலை நகரில் பாராட்டு விழா!

“பத்வா” வழங்கிய உலமாஉகளுக்கு தலை நகரில் பாராட்டு விழா!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
முல்லாக்களின் “பத்வா” எனும் வாளால் கொல்லப்பட்ட நானும், உலகில் பரந்து வாழும் ஸூபிஸ சமூகமும் அந்த முல்லாக்களுக்கு பொன்னாடை போர்த்தியும், சிவப்பு ரோசா மலர் மாலை சூடியும் நன்றி கூற கடமைப் பட்டுள்ளோம்.

அன்பிற்குரிய ஸூபிஸ சமூகத்தவர்களே!
 
அஸ்ஸலாமு அலைக்கும்.
 
நான் மேலே எழுதியுள்ள தலைப்பு உங்களின் குருதியைச் சூடாக்கி உங்களுக்கு தலைவலியையும், என் மீது வெறுப்பையும் ஏற்படுத்தலாம் என்று நான் நினைக்கிறேன்.
 
ஆகையால் நான் பின்னால் எழுதவுள்ள விடயங்களைக் கவனத்திற் கொண்டு நீங்கள் நிம்மதியடைவீர்கள் என்றும், பொறுமை செய்வீர்கள் என்றும் நான் நம்புகிறேன்.
 
இவ் உலகமும், இதிலுள்ளவையும் எத்தனை கோடி டொலர் பெறுமதியானவை என்று நான் உங்களிடம் கேட்டால் உங்களால் பெறுமதி கூற முடியாமற் போய் மௌனிகளாக நிற்பீர்கள். ஆயினும் இவையாவும் எனக்கும், உங்களுக்கும் அன்பளிப்பாக கிடைக்கின்றன என்று நான் சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? நீங்கள் என்ன செய்வீர்கள்? என்பதை நானே சொல்லிவிடுகிறேன். அல்ஹம்து லில்லாஹ் என்று கூறி உங்களின் விருப்பத்தை தெரிவிப்பீர்கள். இல்லை. நபீ பெருமானார் மருமகன் அலீ அவர்களுக்கு أَشْبَهْتَ خَلْقِيْ وَخُلُقِيْ தோற்றத்திலும், குணத்திலும் நீங்கள் என்போல் உள்ளீர்கள் என்று சொன்னது போது அலீ அவர்கள் துள்ளிக் குதித்தது போல் நீங்களும் துள்ளிக் குதிப்பீர்கள்.
 
இவ் உலகமும், இதிலுள்ளவையும் உமக்கு கிடைப்பதற்கு வழி செய்து தருகின்ற ஒருவருக்கு அல்லது ஒரு குருவுக்கு நாம் என்ன கைமாறு – பிரதி உபகாரம் செய்யலாம் என்று நான் உங்களிடம் கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? உயிரையும் கொடுக்கலாம் என்று சொல்வீர்கள். அல்ஹம்துலில்லாஹ்!
 
ஒரு சமயம் நபீகட்கரசர் எம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களின் தோழர் – ஸஹாபீ முஆத் றழியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து, “நான் உங்களை எமன் நாட்டுக்கு ஆளுனராக அனுப்ப உள்ளேன்” என்றார்கள்.
 
முஆத் அவர்கள் இச் செய்தி கேட்டு மகிழ்ச்சியடையாமல் இருந்ததால் அவர்கள் அப்பதவியை விரும்பவில்லை போலும் என்று எண்ணிய எம் பிரான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “முஆதே!”
 
«لَأَنْ يَهْدِيَ اللَّهُ بِكَ رَجُلًا وَاحِدًا، خَيْرٌ لَكَ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا» (الزهد والرقائق لابن المبارك والزهد لنعيم بن حماد)
“உங்கள் மூலம் – உங்களைக் கொண்டு அல்லாஹ் ஒரே ஒரு மனிதனை நல்வழிப்படுத்துவது உங்களுக்கு இவ் உலகமும், இதில் உள்ளவையும் சொந்தமாவதை விடச் சிறந்தது” என்று அவர்களுக்கு அவிழ்க்கை ஊட்டினார்கள்.
 
முஆத் அவர்களின் முகம் மலர்ந்தது. என் மூலம் ஒரு மனிதன் நேர்வழி பெறுவது இத்துனை சிறந்ததா? என்று வியந்தவர்களாக உடன்பட்டார்கள்.
 
இந்த நபீ மொழி மூலம் ஒருவனின் முயற்சியால், அவனின் அறிவுரையால், அவனின் நற் பண்பால் நேர்வழி தெரியாதிருந்த ஒருவன் நேர்வழி பெறுவது அவனுக்கு இவ் உலகும், இவ் உலகிலுள்ள யாவும் சொந்தமாவதை விடச் சிறந்ததென்று விளங்குகிறது.
இந்த நபீ மொழியின் படி எவன் தனது அறிவுரையால் நல்வழி, நற் கொள்கை, மற்றும் இறை கொள்கை, சரியான “அகீதா” தெரியாதிருந்த ஒருவனை நல்வழிப்படுத்தினால் அவன்தான் உலகில் முதன்மை கோடீஸ்வரனேயன்றி சஊதி மன்னனோ, புறூனை சுல்தானோ, மொறோகோ இளவரசரோ அல்ல என்பது தெளிவாகிறது.
 
ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர்களே! பாக்கிய சாலிகளே!
இன்று நானும், நீங்களுமே உலகினதும், உலகிலுள்ள அனைத்துச் சொத்துக்களினதும் உரிமையாளர்களாக உள்ளோம். சொந்தக் காரர்களாக உள்ளோம். இதைவிடச் செல்வம் எமக்கு வேறென்ன வேண்டும்?!
 
இவ் எதார்த்த தத்துவத்தின்படி ஸூபிஸ சமூகத்தின் சொத்துக்களையே இன்று கொடி கட்டிப் பறக்கின்ற கோடீஸ்வரர்களும், மன்னர்களும், மகுடாதிபதிகளும் தமது சொத்துக்கள் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.
 
இது குறித்தோ என்னவோ சென்னையில் துயிலும் செங்கோலர் குணங்குடியார்
பிறருடைமையை எடுத்து
எம்முடைமை என்பவர்க்கு
கப்றில் வரும் துணையே
கண்ணே றஹ்மானே!
என்று சொன்னார்கள் போலும்.
 
ஸூபிஸ சமூகமே!
நான் எழுதி வரும் மேற்கண்ட தத்துவத்தின் படி இப்பரந்த பூமியும், இதிலுள்ள காணிகளும், கடல்களும், ஆறுகளும், குளம், குட்டைகளும், தோட்டங்களும், வயல்களும், மாட மாளிகைகளும், கோட கோபுரங்களும் எமது சொத்துக்களேயாகும்.
இவற்றையெல்லாம் உள்வாங்கி எமக்கு உறுதி எழுதித் தந்தவர்கள் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களேயாவர்.
உறுதியின் வசனம் மேற்கண்ட
لَأَنْ يَهْدِيَ اللَّهُ بِكَ رَجُلًا وَاحِدًا، خَيْرٌ لَكَ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا
“அல்லாஹ் உங்களைக் கொண்டு ஒரேயொரு மனிதனை நல்வழிப்படுத்துவது இவ் உலகும், இதிலுள்ளவையும் உங்களுக்கு உரிமையாவதை விடச் சிறந்ததாகும்” என்ற வசனமேயாகும்.
 
உலமாஉகளே! சந்தேகமா? தெளிவு பெறுங்கள்!
وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவையாகும்.(03-109)
وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ
வானங்களினதும், பூமியினதும் ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம். (03-189)
 
மேற்கண்ட திரு வசனங்கள் இரண்டும் எல்லாமே அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை என்று அல்லாஹ் கூறியிருக்க இவர் என்ன சொல்கிறார்? என்று நினைக்கிறீர்களா? இது உங்களின் அறியாமைதான். எனது அறியாமை அல்ல.
إِذَا زَالَ عَنْكَ أَنَا لَلَاحَ لَكَ مَنْ اَنَا
உன்னிலுள்ள “நான்” வெளியேறினால் “நான்” யார் என்பது உனக்கு தெளிவாகும். இது ஸூபீ மகான்களின் தத்துவம்.
إِذَا تَمَّ الْفَقْرُ هُوَ اللهُ
“பக்ர்” எவனுக்கு முழுமையாகிறதோ அவன் அல்லாஹ்தான்” இதுவும் ஸூபீ மகான்களின் தத்துவமேதான்.
 
“பக்ர்” என்ற சொல்லுக்கு வெளிரங்கமான பொருள் வறுமை என்பதாகும். இச் சொல் ஸூபீ மகான்களின் ஸூபிஸக் கலையில் “பனா” என்பதைக் குறிக்கும். “பனா” என்றால் இறைவனில் மறைதல் நிலைக்கு சொல்லப்படும். இதை இறைஞான மகான் ஒருவர் பின்வருமாறு பாடுகிறார்.
 
فَنَاءٌ فِى فَنَاءٍ فِى فَنَاءٍ – فَكَانَ فَنَائُهُ عَيْنَ الْبَقَاءِ
“பனா” இறைவனில் மறைதல் எனும் நிலை கடந்தால் அதற்கப்பால் “பகா”தான். அதாவது அல்லாஹ்தான்.
 
கண்ணியத்திற்குரிய ஸூபிஸ சமூகமே!
1979ம் ஆண்டு காத்தான்குடியில் ஸூபிஸ ஞானம் – வஹ்ததுல் வுஜூத் தத்துவம் உதித்த போது அது ஒளிர்ந்து உலகெலாம் பரவி விடக் கூடாது என்பதற்காக சங்கைமிகு உலமாஉகள் திரையிட்டு மறைக்க முயற்சித்தார்கள். ஆதவனை தமது உள்ளங்கையால் மறைக்க கனவு கண்டார்கள். இன்று வரை முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
 
“பத்வா” வழங்கி ஸூபிஸ சமூகத்தை துடைத்தெறிய நினைத்தார்கள். ஸூபிஸ தத்துவம் செவிகளுற் சென்றுவிடக் கூடாதென்று பள்ளிவாயல் ஒலிபெருக்கியை தடை செய்தார்கள். ஆட்களையும் அடித்தார்கள். வெள்ளை வானில் வந்து என்னைக் கடத்திச் சென்று ஸூபிஸ ஒளியை அணைக்க முயன்றார்கள். நடந்தது என்ன?
 
يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ
அவர்கள் – இறை ஞானத்தை மறுப்பவர்கள் அல்லாஹ்வின் ஒளியை வாயால் ஊதி அணைக்க முயல்கின்றனர்
 
وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ
“காபிர்”கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் அதை நிறைவு செய்து கொண்டே இருக்கிறான். (61 -08)
 
ஸூபிஸ சமூகமே!
ஸூபிஸமும், ஞானமும் “பத்ரிய்யா கோவிலுடன்” நின்று கொள்ள வேண்டும் என்று வீர முழக்கம் செய்தார்கள். இன்று அது இந்தியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர், மலேசியா தாண்டி ரஷ்யா வரை சென்றுள்ளதைப் பார்த்தும், கேட்டும் தலையில் கை வைத்து கொட்டாவி விடுகிறார்கள். இது யாரின் செயல்கள் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதன் பிறகாவது உணர்ந்து செயல்பட வேண்டும். அல்லாஹ் அவர்களுக்கு நல்வழி காட்டுவானாக!
 
ஸூபிஸ சமூகமே!
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எனக்கும். உங்களுக்கும் “முர்தத்” பத்வா தந்து இவ் விவகாரத்தை பூதாகரமாக்கவில்லையானால், உலக மட்டத்தில் பகிரங்கப்படுத்த வில்லையானால், மாறாக வீட்டுக்குள்ளேயே இருந்து உறட்டிக்கு மா குழைத்திருந்தால் இன்று ஸூபிஸ ஞானம் பன்னாடுகள் கடந்து “ரஷ்யா” வரை சென்றிருக்குமா? இந்தியாவிலும், இலங்கையிலும் பல்லாயிரம் மக்கள் நல்வழி பெற்றிருப்பார்களா? “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் இணையதளங்களில் ஊடுருவிச் சென்றிருக்குமா? பிற மதத்தவர்கள் என்னிடம் வந்து தெளிவு பெற்றிருப்பார்களா? வெளி நாடுகளில் வாழும் வெள்ளைக் காரர்கள் காத்தான்குடி மண்ணில் கால் வைத்திருப்பார்களா? அண்மையில் ரஷ்யாவில் நடைபெற்ற ஸூபிஸ மாநாட்டில் பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலின் தோற்றமும், எனது நிழற்படமும் காட்சிப்படுத்தப்பட்டிருக்குமா? மொறோக்கோ, துருக்கி போன்ற ஸூபிஸ தத்துவத்திற்கு வித்திட்ட நாடுகளுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருக்குமா? எதுவுமே நடந்திருக்காது. பெயர் குறிப்பிட விரும்பாத சில நாடுகளில் உள்ள ஜமீன்தார்கள் எமக்கு உதவ திட்டமிட்டிருப்பார்களா?
நான் பேசிய ஸூபிஸ ஞானமும், “வஹ்ததுல் வுஜூத்” இறையியல் அகமியமும் கடல் கடந்து, மலை கடந்து வெள்ளையர்களையும் திரும்பிப் பார்க்க வைப்பதற்கு உதவிய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவைச் சேர்ந்த முப்தீகள், மற்றும் இந்த ஞானம் குன்றின் மேல் தீபம் போல் ஒளிர உதவிய உலமாஉகளுக்கு பொன்னாடை போர்த்தி, சிவப்பு ரோசா மாலை சூடி நன்றி கூறுவது தவறாகுமா?
 
உலமாஉகள் தமது தவறையுணர்ந்து, சமாதானம், நல்லிணக்கம் என்பவற்றைக் கருத்திற் கொண்டு “பத்வா”வை வாபஸ் பெற வேண்டும். இதுவே நியாயமும், பெருந்தன்மையுமாகும். நாட்டின் முன்னேற்றம், மக்களின் நல்லிணக்கம், சுபீட்சமான வாழ்வு கருதி பொது நல அமைப்புக்களும், முஸ்லிம் அரசியல்வாதிகள், மற்றும் பிரமுகர்கள், படித்த, படிக்கின்ற இளைஞர் அனைவரும் முன்வர வேண்டும்.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments