முல்லாக்களே அல்லாஹ்வைப் பயந்தும், நமது நாட்டின் எதிர்கால சந்ததிகளின் நலன் கருதியும் தூர நோக்குடன் சிந்தித்து செயலாற்றுங்கள்!
முஸ்லிம்களை இரு கூறுகளாகப் பிளவுபடுத்தி அவர்களைப் பலவீனர்களாக்காதீர்கள்!
ஊமைகள் போல் நடிக்காமல் கேள்விகளுக்கு மட்டும் பதில் கூறுங்கள்!
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
இஸ்லாமிய தத்துவம் பேசிய என்னையும், நான் பேசிய தத்துவத்தைச் சரிகண்டு ஏற்றுக் கொண்ட பரம்பரை முஸ்லிம்களையும் மதம் மாற்றி “பத்வா” தீர்ப்பு வழங்கிவிட்டு எங்கள் அனைவரையும் கொலை செய்ய வேண்டுமென்றும் எழுத்து மூலம் பொது மக்களைத் தூண்டிய இஸ்லாமிய வழிகாட்டிகளே! முல்லாக்களே!
அல்லாஹ் திருக்குர்ஆனிலும், அஹ்மதெங்கள் கோமான் தங்களின் அருள் மொழிகளிலும், இஸ்லாமிய வரலாற்றில் விண்மீன்களாய் ஒளிர்ந்த வலீமாரும், ஸூபீ மகான்களும் தமது நூல்களில் எழுதிய இஸ்லாமிய ஸூபிஸம், மற்றும் இறையியல் அகமியங்களையும் கூறிய என்னையும், எனது கருத்துக்களை ஏற்றுக் கொண்ட பல்லாயிரம் முஸ்லிம்களையும் மதம் மாற்றி “பத்வா” தீர்ப்பு வழங்கியது போதாதென்று எங்களைக் கொலை செய்ய வேண்டுமென்றும் பொது மக்களை எழுத்து மூலம் தூண்டிய முல்லாக்களே! எங்களைப் பதுங்கு குழியில் வாழ வைத்துவிட்டு நீங்கள் ஆடம்பர வாகனங்களில் பயணிப்பதும், உலா வருவதும், உல்லாசமாக வாழ்வதும் நியாயமா? உங்களுக்கு மனச் சாட்சியே இல்லையா? மனிதாபிமானம் கூட இல்லையா? இதுதான் நீங்கள் தீனுக்குச் செய்யும் நற் பணியா?
இலங்கை அரசு எங்களை முஸ்லிம்கள் என்று ஏற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நீங்கள் எங்களை மதம் மாற்றித் தீர்ப்பு வழங்குவதற்கு நீங்கள் யார்? உங்களுக்கு இதற்கு அதிகாரம் தந்தது யார்? நீங்கள்தான் இந்நாட்டு அரசாங்கம் என்று கனவு காண்கிறீர்களா?
குற்றவாளி என்று கருதப்பட்ட என்னை விசாரிக்காமல் தீர்ப்பு வழங்குவதற்கு இஸ்லாமிய சட்ட நூல்களில் எந்த நூலில் ஆதாரமுள்ளது? உங்களால் கூற முடியுமா?
ஸூபிஸ ஞானமும், “வஹ்ததுல் வுஜூத்” தத்துவமும் நான் பேசியிருக்க நீங்கள் எனது தலைப்பை தலை கீழாய்ப் புரிந்து “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கை பிழையென்று “பத்வா” எழுதிவிட்டு அதில் எனது பெயரைக் குறிப்பிட்டிருப்பது நியாயமா? இது உங்களின் அறியாமையா? சதியா?
سُئل الإمام الفقيه محي الدين النّووي عن الشّيخ محي الدين ابن عربي رحمه الله، قال: تلك أمّة قد خلت، ولكنّ الّذي عندنا أنّه يحرم على كلّ عاقل أن يسيئَ الظّنّ بأحدٍ من أولياء الله تعالى عزّ وجلّ، ويجب عليه أن يؤوِّلَ أقوالهم ما دام لمْ يَلْحَقْ بدرجتهم، ولا يعجز عن ذلك إلّا قليلُ التوفيق، قال فى شرح المُهذّب، ثمّ إذا أُوّل فليُؤوِّلْ كلامَهم إلى سبعين وجها، ولا نقبلُ عنه تأويلا واحدا، ما ذاك إلّا تَعَنُّتٌ،
اليواقيت، ج 1، ص 8. للشيخ عبد الوهّاب الشعراني،
இமாம் முஹ்யித்தீன் அந்நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் அஷ்ஷெய்கு முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பற்றிக் கேட்கப்பட்ட போது அவர்கள் பின்வருமாறு பதில் சொன்னார்கள்.
“அவர்கள் வாழ்ந்து மரணித்த ஒரு சமூகம். ஆயினும் எங்களின் கடமை என்னவெனில் – அதாவது நாங்கள் செய்ய வேண்டியது என்னவெனில் அல்லாஹ்வின் வலீமாரின் விடயத்தில் அவர்களைப் பற்றித் தவறான எண்ணம் கொள்ளாமல் இருப்பது புத்தியுள்ள அனைவரினதும் கடமையாகும். அந்த வலீமாரின் இடத்தை அடையாத ஒவ்வொருவரும் அவர்களின் பேச்சுக்களுக்கும், செயல்களுக்கும் வலிந்துரை கொண்டு அவர்கள் மீது நல்லெண்ணம் கொள்ள வேண்டும். அவர்களின் பேச்சுக்களுக்கு வலிந்துரை கொள்வதாயினும் ஒரு வலிந்துரை மட்டும் போதாது. எழுபது வலிந்துரைகள் வைக்க வேண்டி ஏற்பட்டாலும் கூட அவ்வாறுதான் செய்ய வேண்டும். ஒரு வலிந்துரையோடு மட்டும் நின்று கொள்வது மனமுரண்டும், பிடிவாதமுமேயாகும். இவ்வாறு “ஷர்ஹுல் முஹத்தப்” என்ற நூலில் கூறியுள்ளார்கள்.
ஆதாரம்: அல்யவாகீத், பக்கம், 08, பாகம் 01, இமாம் ஷஃறானீ
இமாம் முஹ்யித்தீன் நவவீ அவர்கள் ஷாபிஈ மத்ஹபின் பிரதான சட்ட மேதை என்பதும், அவர்கள் கூறும் சட்டம் “பத்வா”வுக்கு ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படும் என்பதும் இமாம்களின் ஏகோபித்த முடிவாகும்.
“பத்வா” வழங்கிய நீங்கள் இச்சட்த்தைப் பேணிச் செயல்படவில்லை என்பதை வேதனையுடன் உங்களின் கவனத்திற்குத் தருகிறேன்.
உங்களின் “பத்வா” நூல் 05ம், 22ம் பக்கங்களில் ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ நாயகம் அவர்களையும், இமாம் ஙஸ்ஸாலீ அவர்களையும், இமாம் ஷஃறானீ அவர்களையும் நீங்கள் இமாம்களாக ஏற்றுக் கொண்டதாக எழுதியிருப்பதையும் உங்களுக்கு நினைவூட்டிக் கொள்கிறேன்.
نقل الشّيخ أبو طاهر القزويني رحمه الله فى كتابه سراج العقول عن أحمد بن زاهر السَّرخسـي اَجَلِّ أصحابِ الشّيخ أبى الحسن الأشعريّ رحمه الله قال (لمّا حضـرتِ الشّيخَ أبا الحسن الوفاةُ فى داري بِبَغْدَادَ، قال لي اِجمعْ أصحابي، فجمعتُهم، فقال لنا ، اِشْهدُوا أنِّيْ لا أقولُ بِتَكْفِيْرِ أحدٍ من أهلِ القِبلة، لِأَنِّيْ رأيتُهم كلَّهم يشيرون إلى معبودٍ واحد، والإسلام يشملُهم ويعمُّهم، (اليواقيت، ج أوّل، ص 21 )
ஸுன்னத் வல் ஜமாஅத் “அகீதா” கொள்கை தொடர்பில் உலகில் வாழும் ஸுன்னீகள் அனைவரும் பின்பற்றுகின்ற இமாம் அபுல் ஹஸன் அல்அஷ்அரீ அவர்களின் மிகப் பிரசித்தி பெற்ற தோழர் அஹ்மத் இப்னு சாஹிர் அஸ்ஸர்கஸீ அவர்கள் சொன்னதாக அஷ்ஷெய்கு அபூ தாஹிர் கஸ்வீனீ அவர்கள் தங்களின் “ஸிறாஜுல் உகூல்” எனும் நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
“இமாம் அஷ்ஷெய்கு அபுல் ஹஸன் அல் அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “பக்தாத்” நகரிலிருந்த எனது வீட்டுக்கு வந்த போது அவர்களுக்கு “வபாத்” மரண வருத்தம் ஏற்பட்டது. அவர்கள் என்னிடம், எனது தோழர்களை இங்கு அழைத்துத் தாருங்கள் என்றார்கள். நான் அவர்களை அழைத்தேன். அவர்கள் அனைவரும் வந்தார்கள். அப்போது இமாம் அவர்கள் நான் இப்போது சொல்லப் போகின்ற விடயத்திற்கு நீங்கள் அனைவரும் சாட்சிகளாக இருந்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு நான் முஸ்லிம்களில் “அவாம்முன்னாஸ்” பொது சனங்களில் எவரையும் “காபிர்”களாக்கி வைக்கமாட்டேன் – “முர்தத்” என்று சொல்லமாட்டேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் “அல்லாஹ்” ஒருவன் என்றே நம்பியுள்ளார்கள். இஸ்லாம் என்பது இவர்களை உள்வாங்கிக் கொள்ளும்” என்று கூறினார்கள்.
அல்யவாகீத், பக்கம் 21, பாகம் 01, இமாம் ஷஃறானீ
இந்த வரலாறின் மூலம் அல்லாஹ் ஒருவன் என்று நம்பினவன் எவனாயினும் அவன் முஸ்லிம்தான், இஸ்லாம் என்பது அவனையும் உள்வாங்கிக் கொள்ளும் என்ற கருத்தை எமது கொள்கையுடைய “இமாம்” என்று நாம் சொல்லிக் கொள்கின்ற அபுல் ஹஸன் அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள் என்பது தெளிவாகின்றது.
நான் மேலே எழுதிய இமாம் சட்ட மேதை நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் அறிவுரை என்னவெனில் வலீமாரில் எவராவது ஒரு பேச்சைப் பேசியிருந்தால், அல்லது ஒரு செயல் செய்திருந்தால் அச் செயல் அல்லது அப்பேச்சு “ஷரீஆ”வுக்கு – அதாவது குர்ஆன், ஹதீதுக்கு முரணானதுபோல் இருந்தால் அவரை “முர்தத்” என்று தீர்ப்பு வழங்கிவிடாமல் அவரின் பேச்சுக்கு அல்லது செயலுக்கு வலிந்துரை கொண்டு அவரைக் காப்பாற்ற வேண்டும் என்பதாகும்.
ஒரு வலிந்துரை மூலம் அவரைக் காப்பர்ற முடியாது போனால் அவரின் பேச்சுக்கு அல்லது செயலுக்கு 70 வலிந்துரைகளாவது கொடுத்து அவரைக் காப்பாற்ற வேண்டும். ஒரு வலிந்துரை மட்டும் போதும் என்று சொல்வது மனமுரண்டாகும்.
“பத்வா” வழங்கிய முப்தீகளே! முல்லாக்களே! நீங்கள் எத்தனை வலிந்துரை கொண்டு என்னையும், எனது ஸூபிஸ சமூகத்தையும் காப்பாற்ற நினைத்தீர்கள்? அந்த வலிந்துரைகளை பகிரங்கமாக கூற உங்களால் முடியுமா?
நான் வலீமார்களில் ஒருவனாக இல்லாது போனாலும் நான் இலங்கையிலும், இந்தியாவிலும் சுமார் 13 ஆண்டுகள் அகீதா – கொள்கை, தப்ஸீர், ஹதீது, தஸவ்வுப் முதலான நூல்கள் ஓதியிருக்கிறேன். ஓதிக் கொடுத்துமிருக்கிறேன். கோடி கோடியாக என் காலடியில் பணம் குவிக்கப்பட்டாலும், இந் நாட்டின் ஜனாதிபதிப் பதவி எனக்குத் தரப்பட்டாலும் “ஷரீஆ”வுக்கோ, ஸூபிஸத்திற்கோ, அகீதா – கொள்கைக்கோ முரணாக ஒரு எழுத்துக் கூட எழுதவுமாட்டேன். ஒரு சொல் கூடப் பேசவுமாட்டேன்.
பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலில் அடக்கம் பெற்று அற்புதங்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கின்ற எனது மதிப்புக்குரிய தந்தை அஷ்ஷெய்கு அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஸூபிஸ ஞானத்திலும், வஹ்ததுல் வுஜூத் இறையியலிலும் என்னை விடப் பதின்மடங்கு சிறந்தவர்களும், “இல்ஹாம்” வழங்கப்பட்ட ஒரு வலீயும் ஆவார்கள்.
நான் சில வருடங்களுக்கு முன் – என் தந்தை “வபாத்” ஆகி சில வருடங்களின் பின் தமிழ் நாட்டில் வலீ என்றும், “குத்பு” என்றும் கூட மக்களால் போற்றிப் புகழப்பட்ட “அம்பா” நாயகம் அவர்களை முதன் முதலாக சந்தித்த வேளை நான் அவர்களுக்கு ஸலாம் சொல்லுமுன் அவர்கள் என்னிடம் சொன்ன செய்தி உங்களின் தகப்பனார் அவர்களின் ஜனாஸா தொழுகையில் “அப்தால்”களில் ஒருவர் கலந்து கொண்டிருந்தார் என்பதாகும்.
இத்தகு சிறப்புக்குரிய என் தந்தை என்னை ஒரு “ஸுன்னீ”யாகவும், ஸூபிஸ கொள்கை வழியிலுமே வளர்த்துள்ளார்கள் என்பதை உங்களுக்கு அறியத்தருகிறேன். இத்தகைய சிறப்புக்குரிய ஒரு மகானின் மகனையே “முர்தத்” என்று கூறிவிட்டீர்கள். கொலை செய்ய வேண்டும் என்றும் சொல்லிவிட்டீர்கள்.
என் தந்தை மதிப்பிற்குரிய அப்துல் ஜவாத் வலிய்யுல்லாஹ் அவர்கள் என்னை விட நூறு வீதம் பேணுதலும், இறை பக்தியும், இறைஞான விளக்கமும் உள்ளவர்களாயிருந்தார்கள். விஷேடமாக “இல்ஹாம்” வழங்கப்பட்ட மகானாகவும் இருந்தார்கள். அவர்களுக்கேனும் மரியாதை கொடுக்காத விரோதிகளாகிவிட்டீர்கள். அவர்களின் பிடியிலிருந்து நீங்கள் தப்பவே முடியாது.
இதோ உண்மையை எழுதுகிறேன். குலப் பெருமை பேசுவதற்காக நான் எழுதவில்லை. அது எனக்குத் தேவையுமில்லை. என் தந்தையின் தந்தை அலீ அவர்களும் ஒரு ஆலிம்தான். அவர்களின் தந்தை மீரான் சாஹிபு அவர்களும் ஓர் ஆலிம்தான். அவர்களின் தந்தை “அல்லாஹ் பக்ஷ்” அல்லாஹ் பிச்சை என்பவரும் ஓர் ஆலிம்தான். அவர்களுக்கு முன்னுள்ளவர்களின் விபரம் எனக்குத் தெரியவில்லை. நான் எனது தந்தை வழியில் ஐந்தாம் தலைமுறையில் “ஆலிம்” ஆக உள்ளேன்.
நீங்கள் “ஹுலூல் – இத்திஹாத்” பிழையென்று “பத்வா” வழங்கிவிட்டு, “வஹ்ததுல் வுஜூத்” பேசிய எனது பெயரை அதில் குறிப்பிட்டு என்னையும், எனது கருத்தைச் சரிகண்ட பல்லாயிரம் ஸூபிஸ வழி வாழும் முஸ்லிம்களையும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்றும், எங்களைக் கொலை செய்ய வேண்டும் என்றும் “பத்வா” வழங்கியது “ஷிர்க்” வைப்பதை விடப் பெருங்குற்றமாகும். நீங்கள் முஸ்லிம் சமூகத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளாவீர்கள்.
நீங்கள் அல்லாஹ்வின் பிடியிலிருந்து தப்பிக்க விரும்பினால் “பத்வா”வை எந்த ஒரு நிபந்தனையுமின்றி வாபஸ் பெறுங்கள். இதற்கு மேல் என்னால் ஒன்றுமே சொல்ல முடியாது. நீங்கள் வாபஸ் பெற்றால் உங்களின் நேர்மையான, சரியான முன்னெடுப்புகளுக்கு மட்டும் நான் ஆதரவாகவும், ஒத்துழைப்புத் தருபவனாகவும் இருப்பேன் என்பதை மகிழ்ச்சியுடனும், நீங்கள் வாபஸ் பெறாமல் உங்கள் நிலைப்பாட்டிலேயே இருப்பீர்களாயின் என்னுடைய ஞான வழி முன்னெடுப்புகள் மிகச் சூடானதாயும், வேகமானதாயும் அமையும் என்பதை வேதனையுடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.