தொடர் – 2
வரிந்து கட்டிக் கொண்டு வலிந்துரை வைப்பவர்களே!
مُسْتَحِقٌّ لِلْعِبَادَةِ “வணக்கத்திற்கு பாத்திரமான – தகுதியான நாயன் – தெய்வம் அல்லாஹ் தவிர வேறு நாயன் யாருமில்லை” எனும் வலிந்துரை கொண்டு திருக்கலிமாவிற்குப் பொருளும், விளக்கமும் கூறுகின்றவர்கள் தமது வாதத்திற்குச் சரியான – நியாயமான – நம்பத் தகுந்த ஆதாரங்கள் முன்வைக்க வேண்டும். அவர்கள் கூறும் ஆதாரங்கள் வெறும் மழுப்பலாக இருத்தலாகாது. ஏன் வலிந்துரை வைக்க வேண்டும், அவ்வாறு வலிந்துரை வைக்காமல் வசனத்திற்கான நேரடிப் பொருள் கொள்வதால் ஏற்படுகின்ற விபரீதம், முரண்பாடு என்ன என்பதையும் விளக்கி வைக்க வேண்டும்.
ஏனெனில் ஒரு வசனத்தில் வலிந்துரை கொள்ள வேண்டிய அவசியம் இருந்தால் மட்டுமே வலிந்துரை கொள்ள வேண்டும். இன்றேல் வலிந்துரை கொள்ளுதல் கூடாது.
வலிந்துரை கொள்வது அவசியம் என்பதற்கு உதாரணம் எந்த ஒரு வசனமாயினும் அதற்கான நேரடிப் பொருள் கொள்வது “ஷரீஆ”விற்கோ, இஸ்லாமிய “பிக்ஹ்” சட்டத்திற்கோ, “அகீதா” கொள்கைக்கோ முரண்படுமென்றிருந்தால் மட்டுமே வலிந்துரை அவசியமாகும்.
இதனால்தான் இமாம் பக்றுத்தீன் றாஸீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கேட்கிறார்கள்.
وأيُّ حاملٍ يحمِلُكم على التزام هذا الإضمارِ، أي التأويل، بل نقول إجراءُ الكلام على ظاهره أَوْلَى، أي تركُ التأويل والأخذُ بالظاهر أَوْلَى،
வலிந்துரை வைப்பவர்களே! திரு வசனத்தில் நீங்கள் சொல்வது போல் வலிந்துரை வைப்பதற்கு உங்களுக்கு என்ன அவசியம் ஏற்பட்டது? அவசியம் என்னவென்று உங்களால் சொல்ல முடியவில்லையா? நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். எந்த அவசியமுமில்லையா? விலிந்துரையை விட்டுவிட்டு திரு வசனத்திற்கு வெளிரங்கமான பொருளைக் கொடுங்கள். அதுவே சிறந்தது.
வலிந்துரையாளர்களே! பக்றுத்தீன் றாஸீ இவ்வாறு சொல்வதற்கு இவர் யார்? என்று கேட்டு விடாதீர்கள். நீங்கள் அவ்வாறு கேட்டீர்களாயின் அதே கேள்வியை மாற்றி உங்களிடம் கேட்பதற்கு எங்களாலும் முடியுமல்லவா? இது சரி பிழை காண்பதற்கு வழி செய்யாது. பிடிவாதம் எமக்கு வேண்டாம்.
திருக்குர்ஆன் வசனமாயினும், ஹதீது வசனமாயினும், அல்லது மகான்களின் வசனமாயினும் அவ்வசனத்தின் வெளிரங்கமான பொருள் திருக்குர்ஆனுக்கோ, நபீ மொழிகளுக்கோ, “அகீதா” இஸ்லாமிய கொள்கைக்கோ முரண்பட்டால் மட்டுமே வலிந்துரையின் பக்கம் திரும்பிப் பார்க்க வேண்டும்.
இதை ஓர் உதாரணம் மூலம் தெளிவு படுத்துகிறேன்.
இமாம் அபூ யஸீத் அல் பிஸ்தாமீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் மாபெரும் இறைஞானி. இறையியல் மேதை. “இல்ஹாம்” வழங்கப்பட்ட ஒரு மகான். அல்லாஹ்வில் தன்னையிழந்த ஒரு பானீ – فَانِيْ
அபூ யஸீத் அல் பிஸ்தாமீ
أبو يزيد البسطامي
اسمُه بو يزيد طيفورُ بنُ عيسـى بن شروشان البسطامي، عالمٌ مسلم من أهل القرن الثالث الهجري، يُلقّب بـ سلطان العارفين، اسمه الفارسي ‘ با يزيد ‘ كما عُرف كذلك باسم ‘طيفور’، كان جدّه شروشان مجوسيّا وأسلمَ، وله أخوان آدم وعليّ، وُلد سنة 188 هـ فى بسطام فى بلاد خراسان، توفّي سنة 261، قال البسطامي بوحدة الوجود، ونُسبت إليه بعضُ الشّطحات، كقوله ‘لا إله إلّا أنا فاعبدوني ‘ وقوله ‘ سبحاني ما أعظم شأني ‘ يُعرف أتباعُه بالطّيفوريّة أو البسطاميّة، وما زال قبرُه إلى يومنا هذا محلّ تقدير الصوفيّة وإجلالِهم،
இம்மகானின் பெயர் அபூ யஸீத் தைபூர். தந்தையின் பெயர் ஈஸா, அவரின் தந்தையின் பெயர் ஷறூஷான். இவர் ஹிஜ்ரீ மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்லாமிய அறிஞர். “ஸுல்தானுல் ஆரிபீன்” என்று பட்டம் வழங்கப்பட்டவர். பாரசீக மொழியில் “பா யஸீத்” என்றும், “தைபூர்” என்றும் அறிமுகமானவர். இவரின் பாட்டன் “ஷறூஷான்” மஜூஸியாக இருந்து இஸ்லாமானவர். “மஜூஸீ” என்றால் நெருப்பு வணங்கி என்று பொருள். இவருக்கு ஆதம், அலீ என்ற பெயர்களில் இரு சகோதரர்கள் இருந்தனர். ஹிஜ்ரீ 188ல் பிறந்து 261ல் “வபாத்” மறைந்தார்கள். “குறாஸான்” பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
இறையியல் மேதைகளான “அவ்லியாஉ”களுக்கு ஒரு ஆன்மீக நிலை உண்டு. இந்நிலை “பனா” فَنَاءٌ நிலை எனப்படும். இந்நிலையில் அவர்களால் ஏற்படுகின்ற சொற், செயல்கள் யாவும் அவர் சுய நினைவிழந்த நிலையில் அவரால் வெளியாகுபவையாகும். இந்நிலை விதி, விலக்கிற்கு அப்பாற்பட்ட நிலை.
விதி விலக்கு அமுல் செய்வதற்குரியவர் “ஆகில்” சுய நினைவு, புத்தியுள்ளவராயிருத்தல் அவசியம். அல்லாஹ்வில் மறைந்தவர் சுய நினைவு, சுய புத்தி இழந்தவராவார். “ஷரீஆ” சட்டத்தின் அடிப்படையிற் கூட இவர் தவறு செய்தால் தண்டிக்கப்படமாட்டார். அவ்வேளை இவரில்லையாதலால் இவரால் வெளியாகும் சொல்லும், செயலும் அல்லாஹ்வினது சொல்லும், செயலுமாகும். இவர்தான் “மஜ்தூப்” என்றும், “பானீ பில்லாஹ்” என்றும் அழைக்கப்படுவார்.
தலைப்பிற்குரிய மகான் அபூ யஸீத் பிஸ்தாமீ அவர்கள் ஒரு சமயம் خُضْتُ بَحْرًا وَقَفَ الْأَنْبِيَاءُ بِسَاحِلِهِ “நான் கடலின் – ஞானக் கடலின் நடுவில் நிற்கிறேன். முழுமையாக மூழ்கியுள்ளேன். நபீமார் அதன் கரையில் நிற்கின்றார்கள்” என்று கூறினார்கள்.
மகான் அவர்களின் இப் பேச்சை இரு கோணத்தில் நோக்கலாம்.
ஒன்று: (நபீமார், அபூ யஸீத் அனைவரும் ஞானக் கடலில் குளிப்பதற்காக விரும்பி கடற் கரைக்குச் சென்றார்கள். கடல் வங்காள விரிகுடாவை விடப் பெரிய கடல். அனைவரும் கரையில் கை கட்டி நின்றவர்களாக சிந்திக்கின்றார்கள். இக்கடலில் குதித்தால் மூச்சுத் திணறி மரணிக்க வந்தாலும் வருமே என்று யோசித்துக் கொண்டிருந்த நேரம் மகான் அபூ யஸீத் திடீரென்று ஞானக் கடலில் குதித்து வேகமாக நீச்சலடித்து ஞானக்கடலின் நடுவில் சென்று கரையை திரும்பிப் பார்த்தார்கள். நபீமார்களோ கடலில் குதிக்கப் பயந்தவர்களாக கரையிலேயே நின்று கெண்டிருந்தார்கள். அவ்வேளையில்தான் خُضْتُ بَحْرًا وَقَفَ الْأَنْبِيَاءُ بِسَاحِلِهِ நான் நடுக்கடலில் நிற்கிறேன். நபீமார் பயந்தவர்களாக கரையில் நிற்கிறார்கள்) என்றும் அவர்களின் மேற்கண்ட பேச்சுக்கு விளக்கம் எடுக்கலாம்.
இரண்டு: (ஞானக் கடலில் குளிக்கச் சென்ற அவர்கள் அனைவரும் கடலில் குதித்து, உள் நீச்சல், வெளி நீச்சல் அடித்து ஞானத்தின் ஆழ்கடலின் மத்திக்குச் சென்று விட்டார்கள். நபீமாரோ தமது அதி அபார சக்தியால் நீந்திக் கரை சேர்ந்து விட்டார்கள். ஆயினும் அபூ யஸீதோ கரைக்கு வரச் சாத்தியமின்றி நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வேளையில்தான் அபூ யஸீத் அவ்வாறு சொன்னார்கள்) என்றும் அவர்களின் மேற்கண்ட பேச்சுக்கு விளக்கம் எடுக்கலாம்.
இலக்கம் ஒன்றில் சொன்னது போல் விளக்கம் எடுத்தல் “ஷரீஆ”வுக்கு முரணானதாகும். “அகீதா” கொள்கைக்கும் முரணானதாகும். ஏனெனில் அபூ யஸீத் எந்த வகையிலும் நபீமாரை விடச் சிறந்தவர் என்று “ஷரீஆ” அடிப்படையில் சொல்ல முடியாது.
எனவே, இவ்வாறான கட்டம் நிச்சயமாக வலிந்துரை கொள்ள வேண்டிய கட்டமாகும். இதனால் இலக்கம் இரண்டில் சொன்னது போல் வலிந்துரை கொண்டே அவர்களின் பேச்சுக்கு விளக்கம் கொள்ள வேண்டும்.
எனினும் மகான் அபூ யஸீத் அவர்களின் பேச்சின் வெளித் தோற்றம் நபீமாரை விட அவர்கள் சிறந்தவர்கள் என்ற கருத்தை தருவதால் அவருக்கு “முர்தத்” என்றோ, “முஷ்ரிக்” என்றோ “பத்வா” தீர்ப்புக் கூறிவிடாமல் இரண்டாம் இலக்கத்தில் கூறப்பட்டவாறு வலிந்துரை வைத்து விளக்கம் கொள்ள வேண்டும்.
“லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற திரு வசனத்தைப் பொறுத்த மட்டில் இது தருகின்ற வெளிப்படையான பொருள் “அல்லாஹ் தவிர எந்த ஓர் “இலாஹ்” தெய்வமும் இல்லை” என்பதாகும். இதன்படி “இலாஹ்” தெய்வம் என்ற பெயரில் இருப்பவை யாவும் அல்லாஹ்தான் என்று விளக்கம் கொள்ள வேண்டும்.
இதை விரித்துச் சொல்வதாயின் அன்று – நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் திரு மக்கா நகரிலுள்ள “கஃபா”வினுள்ளே இருந்த அல்லாத், அல் உஸ்ஸா, ஹுபல், மனாத் போன்ற தெய்வங்கள் – விக்கிரகங்கள் யாவும் அல்லாஹ் என்றே கொள்ள வேண்டும். இதேபோல் இன்று எவையெல்லாம் “இலாஹ்” தெய்வங்கள் என்று சொல்லப்படுகின்றனவோ அவையாவும் அல்லாஹ் என்றே சொல்ல வேண்டும்.
இத் தத்துவத்தின் படி இன்று பௌத்தர்கள் தமது வணக்க வழிபாட்டின் போது முன்வைத்து வணங்குகின்ற புத்தர், இந்துக்கள் தமது வணக்க வழிபாட்டின் போது முன்வைத்து வணங்குகின்ற காளி, முருகன் போன்றவைகளும், கிறித்துவர்கள் தமது வணக்க வழிபாட்டின் போது முன்வைத்து வணங்குகின்ற ஈஸா – இயேசு, மரியாள் – மர்யம் முதலான விக்கிறகங்கள் யாவும் அல்லாஹ் என்றே சொல்ல வேண்டும்.
“லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற திருக்கலிமாவின் வெளிப்படையான, வலிந்துரையில்லாத பொருள் நான் கூறிய “அல்லாஹ் தவிர எந்த ஓர் “இலாஹ்” தெய்வமும் இல்லை” என்ற இப்பொருளாகும். இதுவே திருக்குர்ஆன் கூறுகின்ற தத்துவம். இதுவே நபீமார் சொன்ன தத்துவம். இதுவே வலீமார் சொன்ன தத்துவம். இதுவே “ஆரிபீன்” இறையியல் மேதைகள் சொன்ன தத்துவம். இதுவே ஓர் இலட்சத்து இருபத்து நான்காயிரம் நபீமாரும் சொன்ன தத்துவம். இதுவே “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற திருக்கலிமா – திருவசனம் தருகின்ற தத்துவம். இதுவே இஸ்லாம். இதுவே “ஈமான்”. இதுவே ஸூபிஸம். இதுவே “அஷ்அரிய்யா” கொள்கை. இதுவே “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கையின் “பௌண்டேஷன்” அத்திவாரம்.
“லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் திரு வசனத்திற்கு அதன் நேரடிப் பொருளான, வெளிப்படைப் பொருளான “அல்லாஹ் தவிர எத் தெய்வமும் இல்லை” என்ற இப் பொருளின் படி நான் மேலே கூறியது போல் சிலைகள், விக்கிரகங்கள் பொதுவாக வணங்குவோர் முன்வைத்து வணங்குகின்ற சிருட்டிகள் எல்லாமே அல்லாஹ் என்று சொல்ல வேண்டிவரும் என்று பயந்ததினால்தான் திருக்கலிமா விளக்கம் தெரியாதவர்களால் வலிந்துரை கொள்ளப்பட்டு திருக்கலிமாவின் பொருள் தலை கீழாய்ப் புரட்டப்பட்டு “ஈமான்” விசுவாசம் “ஷிர்க்” இணையென்றும், இணை “ஈமான்” என்றும் படம் பிடித்துக் காட்டப்படுகிறது.
முஸ்லிம்களே! கொஞ்சம் நில்லுங்கள்! முப்தீகளே! சற்றுப் பொறுங்கள்!
ஹஸ்றத்மார்களே! பொறுமை செய்யுங்கள்! அவசரப்படாதீர்கள்! கோபம் கொள்ளாதீர்கள்! சீறி எழும்பாதீர்கள்! சீற்றம் கொள்ளாதீர்கள்!
எம்பிரான் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் நான் மேலே கூறிய இதே பொருளில் – இதே கருத்துப்பட திருக்கலிமாவைச் சொன்ன போதுதான் அவர்களை மக்கத்து காபிர்கள் – அபூ ஜஹ்ல், அபூ லஹப், ஷைபா, உத்பா போன்ற மக்கத்தில் வாழ்ந்த குறைஷித் தலைவர்கள் பெருமானாரை எதிர்த்தனர். “லூஸி”, “மஜ்னூன்” பைத்தியக் காரன் என்றார்கள். சூனியக் காரன் என்றார்கள்.
أَجَعَلَ الْآلِهَةَ إِلَهًا وَاحِدًا إِنَّ هَذَا لَشَيْءٌ عُجَابٌ، وَانْطَلَقَ الْمَلَأُ مِنْهُمْ أَنِ امْشُوا وَاصْبِرُوا عَلَى آلِهَتِكُمْ إِنَّ هَذَا لَشَيْءٌ يُرَادُ، مَا سَمِعْنَا بِهَذَا فِي الْمِلَّةِ الْآخِرَةِ إِنْ هَذَا إِلَّا اخْتِلَاقٌ،
“எல்லாத் தெய்வங்களையும் ஒரே தெய்வமாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது வியப்பான விடயமாகும் என்றும் கூறினர். “(இவரை விட்டும் விலகிச்) செல்லுங்கள். உங்கள் தெய்வங்களை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். நிச்சயமாக இதில் (இவரது பிரச்சாரத்தில்) ஏதோ (சுயநலம்) நாடப்படுகிறது” என்று தலைவர்கள் கூறிச் சென்றனர். “வேறு எந்த மார்க்கத்திலும் இது (போன்று) கேள்விப்பட்டதில்லை. இது (இவருடைய) கற்பனையே – பொய்யே அன்றி வேறில்லை”. (38:05, 06, 07)
அன்பிற்குரிய முஸ்லிம் சகோதர, சகோதரிகளே! நாள் மேலே எழுதிய கருத்துக்கள் இன்றோ, நேற்றோ சொன்ன கருத்துக்கள் அல்ல. 1979ம் ஆண்டிலிருந்து சொல்லியும், எழுதியும் வருகிறேன். “எல்லாம் அவனே” என்று பல்லாயிரம் தரம் என் பேச்சில் கூறியுள்ளேன். இதேபோல் எழுதியும் உள்ளேன். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவைச் சேர்ந்த உலமாஉகளை என்னிடம் வந்து ஸூபிஸ தத்துவத்தைக் கற்றுக் கொள்ளுமாறு பதின்முறை அழைத்துமிருக்கிறேன். எத்தனை பேர் வர விரும்பினாலும் வாருங்கள் என்றும், உங்களுக்கு சொகுசான தங்குமிட வசதியும், மூன்று வேளை உணவும், தேனீர் வசதியும் செய்து தருகிறேன் என்றும், போக்குவரத்துக்கான கொடுப்பனவுகள் தருவேன் என்றும் கூறி அவர்களை பல தரம் அழைத்துமுள்ளேன். குறிப்பாக அறபுக் கல்லூரி ஆசிரியர்களையும் அழைத்துள்ளேன். ஆயினும் அவர்களில் எவரும் எந்த ஒரு பதிலும் இதுவரை தரவுமில்லை, அவர்களில் எவரும் என்னிடம் வரவுமில்லை. இதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடியாது. இவர்களின் வீடு வீடாகச் சென்று கதவு தட்டிக் கல்வி கொடுக்க நான் தயாராகவுமில்லை. கல்வியைத் தேடித்தான் கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர கற்பவர்களின் காலடிக்கு கல்வி ஒரு போதும் செல்லாது.
இந்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழ்கின்ற முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!
“வஹ்ததுல் வுஜூத்” “எல்லாம் அவனே” என்ற ஸூபிஸ தத்துவம் நான் பேசுகின்றேனே தவிர “ஷரீஆ”வுக்கு முரணாக நான் பேசவுமில்லை, எழுதவுமில்லை. நான் அல்லாஹ் இல்லை என்று கூறும் நாத்திகனுமல்ல. அல்லாஹ் இரண்டென்று சொல்பவனுமல்ல. அல்லாஹ் “அஹத்” ஒருவன் என்றும், அவன் ஏகன் என்றும், அவனுக்கு நிகராக எவருமில்லை என்றும், அவனுக்குப் பெற்றோருமில்லை, பிள்ளைகளுமில்லை, அவனுக்கு நிகராக எதுவுமில்லை, எவனுமில்லை என்றுமே பேசியும், எழுதியும் வருகிறேன்.
நான் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று மனதால் நம்பி வாயால் சொன்ன ஒரு முஃமின். விசுவாசி. ஒரு நாளில் குறைந்த அளவு ஐந்து முறை “அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் றஸூலுல்லாஹ்” என்று சொல்லிக் கொண்டே இருக்கிறேன். தொழுகிறேன். தொழத் தேவையில்லை என்றோ, தொழுகை கடமையல்ல என்றோ எப்போதும், எங்கேயும் நான் சொன்னதுமில்லை, எழுதவுமில்லை. சிலை வணக்கம், மற்றும் சிருட்டி வணக்கம் கூடுமென்று பேசியதுமில்லை. எழுதியதுமில்லை. மதுபானம் அருந்துவது ஆகுமென்றோ, வட்டி ஆகுமென்றோ, விபச்சாரம் ஆகுமென்றோ சொன்னதுமில்லை, எழுதியதுமில்லை. “ஷரீஆ” சட்டங்களில் எதையும் நான் மறுத்துதுமில்லை. மறுக்கப் போவதுமில்லை.
நான் பேசுவது “தஸவ்வுப்” எனும் ஸூபிஸ ஞானமும், “வஹ்ததுல் வுஜூத்” எனும் இறையியல் தத்துவமுமேயாகும். நான் பேசுகின்ற இறைஞானம் இந்நாட்டில் வாழும் உலமாஉகளில் அதிகமானவர்களுக்குத் தெரியாது. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா முப்தீகளுக்கும் தெரியாது. அதன் தலைவர்களுக்கும் தெரியாது. ஆயினும் இவர்களுக்கு “ஷரீஆ”வின் வெளிரங்கமான சட்டங்கள் தெரியும். இதை நான் மறுக்கவுமில்லை. மறைக்கவுமில்லை.
எனினும் நான் அறிந்திருப்பது போல் ஸூபிஸ ஞானம், வஹ்ததுல் வுஜூத் இறையியல் தத்துவம் தெரிந்த உலமாஉகள் சிலர் உள்ளார்கள். இதையும் நான் மறுக்கவில்லை. ஆயினுமிவர்கள் இலை மறை காய்கள் போல் வெளிச்சத்திற்கு வந்து உள்ளதை உள்ளபடி சொல்லாமல் வீடுகளில் இருந்து கொண்டு றஊப் மௌலவீ பேசுவது சரிதான். ஆயினும் அதை வெளியில் சொல்லக் கூடாதே என்று தம்முடன் நெருங்கியவர்களின் காதுகளில் “குசுகுசு” மந்திரம் சொல்கிறார்கள். இவர்களும் வெளிச்சத்திற்கு வந்து தாமறிந்ததை மக்கள் மத்தியில் பகிரங்கமாகப் பேச வேண்டும். இவர்கள் பதுங்கு குழிகளிலேயே தொடர்ந்தும் இருந்தார்களாயின் இவர்களின் பெயர் முகவரிகளையும், இவர்கள் எழுதிய நூல்களில் உள்ள கருத்துக்களையும், இவர்கள் செய்து வருகின்ற “ஓம்” என்ற “திக்ர்”களையும் ஆதாரத்துடன் பகிரங்கப்படுத்துவது எனக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். இதற்கு முன் அவர்கள் வெளியே வந்து “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேச வேண்டும். பேசத் தெரியாது போனால் நாங்கள் பேசுவது சரியென்றாவது சொல்ல வேண்டும்.
தொடரும்… (3ம் பக்கம் பார்க்க)