தொடர் – 3
உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். விடை தாருங்கள். விடை தரத் துணிவின்றேல், அல்லது கப்பலில் சரக்கின்றேல் உங்கள் மனதில் கேள்வியை இருத்திக் கொண்டு இராப் பகலாக ஆய்வு செய்யுங்கள். எப்போது விடை காண்கிறீர்களோ அப்போது எமக்கு அறிவியுங்கள்.
“லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற திரு வசனத்திற்கு நீங்கள் வலிந்துரை வைத்து “வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு எந்த நாயனும் இல்லை” என்று ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் அதற்குப் பொருள் சொல்வது சரியென்றால் அவ்வசனம் لَا إِلَهَ مُسْتَحِقٌّ لِلْعِبَادَةِ إِلَّا اللهُ என்று அமைந்திருக்க வேண்டும். مُسْتَحِقٌّ لِلْعِبَادَةِ என்ற வசனம் இல்லாமலேயே அதற்குரிய பொருள் கூறுகிறீர்கள். ஏன் பொய் சொல்கிறீர்கள்? ஏன் திருக்கலிமாவின் பொருளைப் புரட்டுகிறீர்கள்? இது திருக்குர்ஆன் வசனமல்லவா? திருக்குர்ஆன் வசனத்திற்கு உங்களின் விருப்பத்திற்கேற்ப வலிந்துரை கொள்ள முடியுமா? எனது இக்கேள்வி நியாயமானதா? இல்லையா?
مُسْتَحِقٌّ لِلْعِبَادَةِ “வணக்கத்திற்குப் பாத்திரமான – தகுதியான” என்ற பொருளைத் தருகின்ற சொல் வசனத்தில் வராதிருக்கும் நிலையில் நீங்களாக இப்படியொரு வசனத்தைக் கற்பனை செய்து திரு வசனத்திற்குப் பொருள் அமைப்பது ஏன்? கையாலும், மடியாலும், பொக்கட்டாலும் போட்டுச் சொல்ல உங்களுக்கு அனுமதி தந்தது யார்?
ذَهَبْتُ إِلَى الدُّكَّانِ என்றால் “கடைக்குச் சென்றேன்” என்றுதானே பொருள் வரும். “வாழைப் பழம் வாங்குவதற்கு” என்று இவ்வசனத்தை மொழியாக்கம் செய்யலாமா? அவ்வாறாயின் வசனம் ذَهَبْتُ إِلَى الدُّكَّانِ لِشِرَاءِ الْمَوْزِ என்றல்லவா வந்திருக்க வேண்டும்! நீங்கள் ஏன் திருக்கலிமாவின் பொருளைப் புரட்டுகிறீர்கள்? நீங்கள் அல்லாஹ்வுக்கு வசனம் சொல்லிக் கொடுக்கின்றீர்களா? ஏன் இவ்வாறு ஏமாற்றுகிறீர்கள்?
“லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற இத்திரு வசனம் “முஹ்கம்” வலிந்துரைக்கு இடமில்லாத வசனமல்லவா? இது உங்களுக்குத் தெரியாதா? தெரிந்திருந்தும் தெரியாதவர்கள் போல் நடிக்கின்றீர்களா?
திருக்குர்ஆன் வசனங்களில் இரண்டு வகையுண்டு. ஒன்று مُحْكَمْ – “முஹ்கம்” எனப்படும். மற்றது مُتَشَابِهْ “முதஷாபிஹ்” எனப்படும். “முஹ்கம்” என்றால் வலிந்துரைக்கு இடமில்லாத வசனங்கள். மற்றது வலிந்துரை மூலம் பொருள் கொள்ளக் கூடிய வசனங்கள்.
இது தொடர்பாக அல்லாஹ் திருக்குர்ஆனில் பின்வருமாறு பிரஸ்தாபித்துள்ளான்.
هُوَ الَّذِي أَنْزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ كُلٌّ مِنْ عِنْدِ رَبِّنَا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ
அவன் எத்தகையவனென்றால் இவ் வேதத்தை அவன் உங்கள் மீது இறக்கி வைத்தான். இதில் தெளிவான கருத்துக்களுடைய வசனங்களும் உள்ளன. அவைதான் இவ் வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை, பல பொருள்களைக் கொண்டவையாகும். ஆகவே, எவர்களுடைய இதயத்தில் சறுகுதல் இருக்கின்றதோ அத்தகையோர் அதில் குழப்பத்தை உண்டு பண்ணக் கருதி – அதில் பல பொருள் கொண்டவைகளையே தேடிப் பின்பற்றுவார்கள். மேலும் இதன் உண்மைக் கருத்தை அல்லாஹ்வையன்றி எவரும் அறியமாட்டார்கள். கல்வியறிவில் நிலை பெற்றவர்களோ (அதன் கருத்து தங்களுக்குப் பூரணமாக விளங்காவிடினும்) இதனை நாங்கள் விசுவாசிக்கிறோம், (இவ்விரு வசனங்கள்) ஒவ்வொன்றும் எங்கள் இரட்சகனிடமிருந்து உள்ளவைதாம் என்று கூறுவார்கள். அறிவுடையோர்களன்றி மற்றெவரும் இவைகளைக் கொண்டு நல்லுபதேசம் அடையமாட்டார்கள். (அத்தியாயம்: ஆலு இம்றான், வசனம்: 07)
மேலே எழுதிக் காட்டிய வசனங்கள் மூலம் திருக்குர்ஆன் வசனங்கள் யாவும் மேற்கண்ட “முஹ்கம்”, “முதஷாபிஹ்” என்பவற்றில் அடங்கிவிடும் என்று தெளிவாகிறது. மேலும் ஓர் உண்மையும் தெளிவாகிறது. அதாவது “முதஷாபிஹ்” பல பொருள்களுக்குச் சாத்தியமான வசனங்களின் உண்மையான கருத்தை அல்லாஹ்வேயன்றி வேறெவரும் அறியாமாட்டார்கள் என்ற உண்மையும் விளங்கப்படுகிறது.
“லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற திருக்கலிமா – திரு வசனம் “முஹ்கம்” வலிந்துரைக்கு இடமில்லாத வசனமாகும். திருக்குர்ஆன் ஆய்வாளர்கள் இத்திரு வசனம் வலிந்துரைக்கு இடமில்லாத வசனம் என்றே முடிவு செய்துள்ளார்கள். இவ்வாறிருந்தும் நீங்கள் அவ்வசனத்திற்கு வலிந்துரை கொள்வது உங்களின் அறியாமையேதான்.
இத்திரு வசனம் “முஹ்கம்” வலிந்துரைக்கு இடமில்லாத வசனம் என்பதை பின்வரும் விளக்கம் மூலம் நான் உங்களுக்குத் தெளிவு படுத்துகிறேன். சற்று நிதானமாக சிந்தியுங்கள்.
இத்திரு வசனம் “முஹ்கம்” பல பொருளுக்குச் சாத்தியமற்றது, வலிந்துரைக்கு இடமில்லாதது என்பதை பல வகையில், பல ஆதாரங்கள் மூலம் நாம் நிறுவலாம்.
அவற்றில் ஒன்று என்னவெனில் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் குறித்த திரு வசனத்தை திரு மக்கா நகரில் முதல் முறையாகச் சொல்ல நினைத்த போது மக்கா நகரில் வாழ்ந்த புத்தி ஜீவிகள், மற்றும் அறிஞர்களை மட்டும் அபூ குபைஸ் மலைக்கு அழைக்காமல் அங்குள்ள படித்தவர்கள், படிக்காதவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் அனைவரையும் பாகுபாடின்றி அழைத்து அவர்கள் மத்தியில் பகிரங்கமாகச் சொன்னதேயாகும்.
ஏனெனில் அது பல பொருளுக்குச் சாத்தியமான “முதஷாபிஹத்”தான திரு வசனமாயிருந்தால் பெருமானார் அவர்கள் அதை அறிவு ஞானம், மற்றும் விளக்கமுள்ளவர்களை மட்டும் அழைத்துக் கூறியிருப்பார்களேயன்றி சிறியவர், பெரியவர், ஆண், பெண், புத்திகுறைந்தோர் போன்ற பல தரத்தையுடையவர்கள் மத்தியில் சொல்லியிருக்கமாட்டார்கள். அவர்கள் أَعْلَمُ الْعَالَمِيْنْ அகிலத்தாரில் மிக்க அறிவுள்ளவர்களும், أَعْقَلُ الْعَاقِلِيْنْ புத்தியுள்ளவர்களில் அதிக புத்தியுள்ளவர்களுமேயாவார்கள். அவர்கள் நம் போன்ற சாதாரண மனிதரல்ல.
மேலே நான் எழுதிக் காட்டிய திருக்குர்ஆன் வசனத்தின் படி பல பொருளுக்கு சாத்தியமான, பல பொருளுக்குப் பொருத்தமான வசனங்களின் கருத்துக்களை அல்லாஹ் மட்டுமே அறிவான். அதேபோல் அறிவு ஞானத்தில் வேரூன்றியவர்களுமே அறிவார்கள்.
وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ
அத்தகைய வசனத்தின் வலிந்துரையை அல்லாஹ்வும், அறிவு ஞானம் பெற்றவர்களுமே அறிவர். (03-07)
இத்திரு வசனத்தின் விளக்கத்தில் இன்னும் ஆழமான விளக்கம் உண்டு. இங்கு அதை நான் தொடவில்லை. யாராவது அதை அறிய விரும்பினால் என்னுடன் தொடர்பு கொள்ளலாம். அல்லது தரமான அறிஞர்கள் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
“லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற திரு வசனம் தெளிவான, ஒரே கருத்துக்குரிய “முஹ்கம்” ஆன வசனமேயன்றி பல கருத்துக்களுக்குச் சாத்தியமான வசனம் அல்ல என்பது தெளிவாகிறது.
இத்திரு வசனம் “முஹகம்”தான் என்று இன்னொரு வழியிலும் நிறுவலாம். அதையும் இங்கு குறிப்பிடுகிறேன்.
ஓர் ஊரில் வாழ்பவர்களுக்கு அவர்கள் மிக அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு செய்தியை ஊர் தலைவர் சொல்வதாயின் அவர்களில் படித்தவர், படிக்காதவர், சிறியவர், பெரியவர், ஆண்கள், பெண்கள் அனைவரும் மிக இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையிலும், பாணியிலும் அவர்கள் அனைவரும் அறிந்த சொற்களைப் பிரயோகித்து அச் செய்தியைச் சொல்ல வேண்டும். இதுவே புத்திமான்களின் வழக்கம். அவர்கள் எளிதில் புரிந்து கொள்ளாத வசனங்களைப் பயன்படுத்தி அச் செய்தியை சொல்வது அறியாமையும், ஆபத்தானதுமாகும்.
உதாரணமாக மக்களின் நடமாட்டம் அதிகமுள்ள ஓர் இடத்தில் ஒரு பாம்பு வந்துவிடுமாயின் அது தொடர்பாக பொது மக்களுக்கு அறிவிக்கும் போது அனைவரும் அறிந்த சொல்லைப் பயன்படுத்தியே அறிவிக்க வேண்டும். அனைவருக்கும் தெரியாத ஒரு சொல்லைப் பயன்படுத்திச் சொல்வது பொருத்தமற்றதாகும்.
உதாரணமாக (இவ்விடத்தில் பாம்பு நடமாடுகிறது எச்சரிக்கை!) என்று சொன்னால் அனைவரும் புரிந்து கொள்வார்கள். இதற்கு மாறாக அனைவருக்கும் தெரியாத ஒரு சொல்லைப் பயன்படுத்தி “இவ்விடத்தில் சர்ப்பம் நடமாடுகிறது எச்சரிக்கை!” என்று சொன்னால் அனைவரும் புரிந்து கொள்ளமாட்டார்கள். இச் செய்தி சிறுவர்கள் உட்பட அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாயிருப்பதால் அனைவரும் புரிந்து கொள்ளும் பாணியிலேயே சொல்ல வேண்டும். சிலர் மட்டும் புரிந்து கொள்ளும் பாணியில் இத்தகைய செய்தியைச் சொல்வது பொருத்தமற்றதாகும்.
இவ்வாறுதான் சன நடமாட்டம் அதிகமுள்ள ஓர் இடத்தில் “கரண்ட் லீக்”கானால் பொது அறிவித்தல் அறிவிப்பதுமாகும். இவ்வாறான கட்டத்தில் “எச்சரிக்கை! இவ்விடத்தில் கரண்ட் அடிக்கும்” என்று அறிவித்தால் சிறுவர், படிக்காதவர் உள்ளிட்ட அனைவரும் புரிந்து கொள்வார்கள். இதற்கு மாறாக படித்தவர், பெரியவர் மட்டும் அறிந்து கொள்ளும் வகையில் “ஜாக்கிரதை! இவ்விடத்தில் மின் ஒழுக்கு உண்டு” என்று அறிவித்தல் செய்தல் பொருத்தமற்றது.
ஏனெனில் பாம்புக்கு சர்ப்பம் என்று சொல்வது அனைவரும் அறிந்த சொல் அல்ல. இவ்வாறுதான் “ஜாக்கிரதை” என்ற சொல்லுமாகும்.
இது போன்றுதான் “மின் ஒழுக்கு” என்ற சொல்லுமாகும். இது சிறுவர், படிக்காதவர்களுக்கு அறிமுகமான சொல் அல்ல. “ஜாக்கிரதை! இவ்விடத்தில் மின் ஒழுக்கு உண்டு” என்பதை விட “எச்சரிக்கை! இவ்விடத்தில் கரண்ட் அடிக்கும்” என்பது எவரும் எளிதில் விளங்கிக் கொள்ளக் கூடிய வசனம்.
இவ்வாறுதான் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனமுமாகும்.
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் முதலாவதாக இவ்வசனத்தை சொல்வதற்காக மக்கத்து மக்கள் அனைவரையும் – சிறியவர், பெரியவர், படிக்காதவர், புத்தியுள்ளவர், புத்தியில்லாதவர், ஆண்கள், பெண்கள் அனைவரையும் ஒன்று கூட்டியே “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று சொன்னார்கள். அவ்வேளை அவர்களில் படிக்காதவர்களும், பொது அறிவில்லாதவர்களுமே அதிகமாக இருந்தார்கள். அவர்கள் அனைவரும் பெருமானார் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை எவரிடமும் கேட்காமலும், வலிந்துரை கொள்ளமாலுமே அதன் சரியான பொருளைப் புரிந்து கொண்டார்கள். அதாவது அல்லாஹ் தவிர எந்த ஒரு தெய்வமும் – நாயனும் இல்லை என்ற கருத்தை, அதாவது எந்த தெய்வமாயினும், எந்த விக்கிரகமாயினும் அது அல்லாஹ் தானானதேயன்றி அவனுக்கு வேறானதல்ல என்ற செய்தியை புரிந்து கொண்டார்கள்.
தொடரும்… (4ம் பக்கம் பார்க்க)