Sunday, October 13, 2024
Homeஎழுத்தாக்கங்கள்யார் இந்த இறை ஞானி?

யார் இந்த இறை ஞானி?

தொடர் – 4

அண்ணன் ரிஸா அவர்களே! தம்பி பத்ஹீ அவர்களே!
 
நீங்கள் இருவரும் சுமார் இரண்டு அல்லது மூன்று வயதுச் சிறுவர்களாயிருந்த வேளை உங்களுக்கு நடை பயிற்றுவிப்பதற்காக உங்கள் பெற்றோர் உங்களுக்கு “நடை கரத்தை” செய்து தந்திருப்பார்கள். நீங்கள் இருவரும் அதைப் பிடித்துக் கொண்டு நடை பயின்றிருப்பீர்கள்.
 
எனினும் நீங்கள் இப்போது – இந்த வயதில் அதே “நடை கரத்தை”யை கொழும்பு கொல்லுப்பிட்டி சந்தியில் தள்ளிக் கொண்டு நடப்பீர்களா? நடந்தால் மக்கள் எப் பெயர் கொண்டு உங்களை அழைப்பார்கள்? சமூகம் உங்களை எங்கு அனுப்ப வேண்டுமென்று கூறும்?
 
சிந்தியுங்கள். செயற்படுங்கள். பிறரையும் செயற்படச் செய்யுங்கள்.
 
“லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற திருக்கலிமாவுக்கு அல்லது இறை வசனத்திற்கு “வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை, எந்த “இலாஹ்” தெய்வமும், கடவுளும் இல்லை” என்ற இப்பொருள் உண்மைக்குப் புறம்பானதாகும். எதார்த்தத்திற்கு முரணானதாகும். அறபு மொழியிலக்கணத்திற்கும் பிழையானதாகும். நீங்கள் சிறு வயதாயிருந்த வேளை நடை கரத்தை போல் பெற்றோரும், மற்றோரும் உங்களுக்குக் கற்றுத் தந்த பொருள்தான் உண்மைக்குப் புறம்பான இப் பொருள். நடைப் பயிற்சி பெற்ற பின் கரத்தை தேவையில்லாதது போல் இப்போது அந்தப் பொருள் உங்களுக்குத் தேவையா? ஆனால் நீங்களோ இந்த வயதிலும் கொல்லுப்பிட்டி சந்தியில் நடை கரத்தை தள்ளுகிறீர்கள்.
 
மேற்கண்டவாறு திரு வசனத்திற்கு பொருள் கூறுவதுதான் பிழை என்று நான் கூறுகின்றேனேயன்றி அல்லாஹ் வணக்கத்திற்குப் பாத்திரமானவன், தகுதியானவன் அல்ல என்று நான் நம்பவுமில்லை, சொல்லவுமில்லை. எனது கொள்கையும் அது அல்ல.
வணக்கத்திற்குரியவனும், வணங்கப்படுவதற்குத் தகுதியானவனும் “அல்லாஹ்” என்ற வலுப்பமிகு பெயருக்குரிய மெய்ப் பொருளேயாகும். அவன் தவிர வேறு எவனையும், எதையும் வணங்க முடியவே முடியாது.
 
நமது உயிரினும் மேலான, எமது உடலுக்கும், உயிருக்கும் உயிரான எம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களைக் கூட வணங்க முடியாது.
 
أُصَلِّيْ للهِ تَعَالَى
அல்லாஹ்வுக்காக தொழுகிறேன்
أَصُوْمُ للهِ تَعَالَى
அல்லாஹ்வுக்காகவே நோன்பு நோற்கிறேன்
أُزَكِّيْ للهِ تَعَالَى
அல்லாஹ்வுக்காகவே “சகாத்” கொடுக்கிறேன்
أَحُجُّ للهِ تَعَالَى
அல்லாஹ்வுக்காகவே “ஹஜ்” செய்கிறேன்
 
என்றுதான் மேற்கண்ட கடமைகள் செய்யும் போது நான் “நிய்யத்” நாட்டம் வைக்கிறேன். எந்தவொரு விசுவாசியாயினும் இவ்வாறுதான் “நிய்யத்” வைக்கவும் வேண்டும்.
 
படைப்புகளில் எதையும் ஒரு விசுவாசி அல்லது ஒரு முஸ்லிம் வணங்குதல் கூடாது.
 
இதுவே எனது கொள்கையும், ஸூபிஸ சமூகத்தவர்களின் கொள்கையுமாகும்.
 
நான் சொல்வது என்னவெனில் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற திரு வசனத்திற்கு “வணக்கத்திற்குரிய நாயன் – தெய்வம் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை” என்று பொருள் சொல்வது பிழை என்பதேயாகும். இவ்வாறு திரு வசனத்திற்குப் பொருள் சொல்வதுதான் பிழையேயன்றி வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் என்று சொல்வது பிழையென்று நான் சொல்லவில்லை.
 
எனது கொள்கைப்படி குறித்த திரு வசனத்திற்கு இரண்டு விதமாக மட்டுமே பொருள் கூறலாம். ஒன்று – “அல்லாஹ் அல்லாத எத்தெய்வமும் இல்லை” அல்லது “அல்லாஹ்வுக்கு வேறான எத்தெய்வமும் இல்லை” என்பதாகும்.
 
இரண்டு – இதை விட ஒரு படி மேலே சென்று “அல்லாஹ் அல்லாத எந்த ஒரு வஸ்த்துவும் இல்லை அல்லது அல்லாஹ்வுக்கு வேறான எந்த ஒரு வஸ்த்துவும் இல்லை” என்றும் சொல்ல முடியும்.
 
திருக்கலிமாவுக்குப் பொருள் சொல்வோர் முதலில் கவனிக்க வேண்டியவை.
 
திருக்கலிமாவுக்குப் பொருள் சொல்வோர் முதலில் “லா” பற்றியும், “இலாஹ்” பற்றியும், “இல்லா” பற்றியும், “அல்லாஹ்” பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.
 
இந்நான்கையும் விளக்கமாக அறிந்து கொண்ட பின்புதான் அதற்குப் பொருள் கூற வேண்டும்.
 
இதற்கும் முதல் உலமாஉகள் – மார்க்க அறிஞர்கள் திருக்கலிமா தொடர்பாக இமாம் ஷெய்குல் இஸ்லாம் பக்றுத்தீன் றாஸீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “லவாமிஉல் பையினாத்” என்ற தனது நூலில் கூறியுள்ள சில குறிப்புக்களையும் அறிந்து கொள்ள வேண்டும்.
 
يقول الإمام فخر الدين الرازي رحمه الله ‘ومتى كان الأمر كذلك لم يكن بنا حاجة إلى ذلك الإضمار البتَّةَ، فصحَّ أنّ قولَنا لا إله إلا الله يُفيد المقصودَ بظاهره من غير حاجةٍ إلى الإضمار، (لوامع البينات، ص 94، للإمام فخر الدين الرازي(
 
திருக்கலிமாவின் வசனத்திற்கு எந்த வகையிலேனும் வலிந்துரை கொள்வதோ, لا إلأه مستحق للعبادة إلا الله அல்லாஹ் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று வலிந்துரை கொள்வதோ, لا إله موجود إلا الله அல்லாஹ் தவிர இருக்கின்ற தெய்வம் எதுவுமில்லை என்று வலிந்துரை கொள்வதோ தேவையில்லை. இத்திரு வசனம் எந்தவொரு வலிந்தரையுமின்றியே அதன் சரியான கருத்தை தருகிறது என்று இமாம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆதாரம்: லவாமிஉல் பையினாத், ஆசிரியர்: ஷெய்குல் இஸ்லாம் பக்றுத்தீன் றாஸீ
 
يقول الإمام فخر الدين الرازي رحمه الله ‘ قال النحويّون قولُنا لا إله إلّا الله أو إلّا هُوْ اِرْتَفَعَ فيه هُو، لأنّه بدلٌ عن موضع إلّا مع الإسم، بيانُه أنّك إذا قُلتَ مَا جَاءَنِيْ رجلٌ إلَّا زيدٌ، فزيدٌ مرفوع بالبدليّة، لأنّ البدلَ هو الإعراضُ عن الأوّل والأخذُ بالثاني، فصار التقديرُ ما جائني إلّا زيدٌ، وهذا معقولٌ لأنّه يفيد نَفْيَ المجيئِ عن الكلّ إلا عن زيد، أمّا قولُه جائني القومُ إلا زيدٌ فهاهنا البدليّة غيرُ مُمكنةٍ، لأنّه يصير التقديرُ جائني إلّا زيدٌ، وهذا يقتضي أنّه جَائَهُ كلّ أحدٍ إلّا زيدٌ، وذلك محالٌ فظهر الفرقُ،
ஆதாரம்: லவாமிஉல் பையினாத், பக்கம்: 94, ஆசிரியர்: இமாம் பக்றுத்தீன் றாஸீ
 
மேலே அறபு மொழியில் நான் எழுதியது திருக்கலிமாவுக்குரிய மொழியிலக்கண إِعْرَابْ சட்டமாகும். இது உலமாஉகளுக்கும், அறபுக் கல்லூரி மாணவர்களுக்கும் மட்டுமே விளங்கும். பொது மக்களுக்கு விளங்காது. விளங்கப்படுத்துவதற்கும் முடியாது.
 
يقول الإمام فخر الدين الرازي رحمه الله، اِتَّفَقَ النّحويُّون على أنّ مَحَلَّ إِلَّا فى هذه الكلمة محلُّ غير، والتقديرُ ‘ لا إله غيرُ الله ‘، وهو كقول الشّاعر ،
وَكُلُّ أَخٍ مُفَارِقُهُ أَخُوْهُ – لَعَمْرُ أَبِيْكَ إِلَّا الْفَرْقَدَانِ
والمعنى كلُّ أخ غيرُ الفرقدان فإنّه يفارقُه أخوه، وقال تعالى ‘ لو كان فيهما آلهةٌ إلّا الله لفسدتا ‘ قالوا التقديرُ غير الله،
 
மேலே நான் எழுதியுள்ள அறபு மொழிப் பந்தி உலமாஉகளுக்கும், அறபு மொழியிலக்கணம் கற்றுக் கொண்டிருக்கின்ற அறபுக் கல்லூரி மாணவர்களுக்கும் பொருத்தமான விளக்கமாகும். இதை பொது மக்களுக்கு விளக்கி வைக்கவும் முடியாது, அவர்களால் விளங்கவும் முடியாது.
 
எனினும் ஒன்றை மட்டும் சுட்டிக் காட்ட முடியும். அதாவது لا إله إلا الله என்ற திரு வசனத்தில் வந்துள்ள إِلَّا “இல்லா” என்ற சொல்லுக்கு “தவிர” என்றுதான் அதிகமானவர்கள் பொருள் கூறுவார்கள். இவ்வாறு கூறுதல் استثناء என்ற அடிப்படையிலாகும். ஆயினும் இமாம் பக்றுத்தீன் றாஸீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் இது பிழை என்று கூறி அந்த إِلَّا – “இல்லா” என்ற சொல்லுக்கு “தவிர” என்று பொருள் கொள்ளாமல் غَيْرْ என்ற சொல்லுக்குரிய வேறான அல்லது அல்லாத என்ற பொருள் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
 
ஆதாரம்: லவாமிஉல் பையினாத், பக்கம்: 94, 95, ஆசிரியர்;: இமாம் பக்றுத்தீன் றாஸீ
இமாம் பக்றுத்தீன் றாஸீ அவர்களின் விளக்கத்தின் படி لا إله إلا الله என்ற வசனத்திற்கு “அல்லாஹ்வுக்கு வேறான அல்லது அல்லாஹ் அல்லாத எந்த ஒரு தெய்வமும் இல்லை” என்று பொருள் வரும். இப்பொருளை மறு பக்கம் மாற்றிப் பார்த்தால் “அல்லாஹ் தானான “இலாஹ்” தெய்வம் உண்டு” என்று பொருள் வரும். இதன் சுருக்கம் என்னவெனில் “கஃபா”வில் இருந்த அல்லாத், அல்உஸ்ஸா, ஹுபல், மனாத் போன்ற தெய்வங்களும், முருகன், காளி போன்ற தெய்வங்களும் அல்லாஹ் தானானவை என்ற கருத்து வரும். அதாவது “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தின்படி இவ்வாறு கருத்து வரும். இன்னும் இதைத் தெளிவாகச் சொல்வதாயின் நாம் காணுகின்ற “சிலைகளும், சிருட்டிகளும் அவனே” என்ற கருத்து வந்து விடும்.
 
மேலும் ஷெய்குல் இஸ்லாம் பக்றுத்தீன் றாஸீ அவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள்.
 
ولما اجتمعت العقلاءُ على أنّه يُفيد التّوحيد المحضَ وجب حملُ إلّا على معنى غير حتّى يصير معنى الكلام لا إله غير الله،
(لوامع البينات، ص95)
 
“லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற திரு வசனத்திற்கு எந்த ஒரு வலிந்துரையும் கொள்ளாமல், “இல்லா” என்ற சொல்லுக்கு ஷெய்குல் இஸ்லாம் பக்றுத்தீன் றாஸீ அவர்கள் சொன்னது போல் غَيْرْ – “ஙைர்” உடைய பொருள் கொடுத்து “அல்லாஹ் அல்லாத எந்த ஓர் “இலாஹ்” தெய்வமும் இல்லை” என்றோ, அல்லது “அல்லாஹ்வுக்கு வேறான எந்த ஒரு தெய்வமும் இல்லை” என்றோ பொருள் கொண்டால் எந்த ஒரு சிக்கலும், பிரச்சினையும் ஏற்படமாட்டாது. திருக்கலிமாவின் பொருள் لا إله غيرُ الله என்றாகிவிடும்.
 
“இல்லா” என்ற சொல்லுக்கு غَيْرْ – “ஙெய்ர்” உடைய பொருள் கொடுக்க வேண்டுமென்று பக்றுத்தீன் றாஸீ சொன்னதற்கு ஆதாரம் ஏதாவது உண்டா? அல்லது அவர் தனது விருப்பத்தின் படி சொன்னாரா? என்று வலிந்துரை செய்யும் பொடியன்மாரில் யாராவது ஒருவர் என்னிடம் கேட்டாராயின் அவருக்குப் பின்வரும் பெருமானாரின் அருள் மொழியை ஆதாரமாகக் கூறுவேன். அதோடு அந்தப் பொடியன் தலை சொறிந்து கொண்டு திரும்பிச் செல்வது தவிர அவனுக்கு வேறு வழி இருக்காது. தெரியாது. எல்லாமே இருள்மயமாகிவிடும்.
 
عَنِ ابْنِ عَبَّاسٍ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يَتَهَجَّدُ، قَالَ: ‘ اللَّهُمَّ لَكَ الحَمْدُ، أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ، وَلَكَ الحَمْدُ، أَنْتَ قَيِّمُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ، وَلَكَ الحَمْدُ، أَنْتَ الحَقُّ، وَوَعْدُكَ حَقٌّ، وَقَوْلُكَ حَقٌّ، وَلِقَاؤُكَ حَقٌّ، وَالجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، وَالسَّاعَةُ حَقٌّ، وَالنَّبِيُّونَ حَقٌّ، وَمُحَمَّدٌ حَقٌّ، اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَبِكَ آمَنْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، وَإِلَيْكَ حَاكَمْتُ، فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، أَنْتَ المُقَدِّمُ وَأَنْتَ المُؤَخِّرُ، لاَ إِلَهَ إِلَّا أَنْتَ، أَوْ: لاَ إِلَهَ غَيْرُكَ ‘صحيح البخاري – 6317
عَنْ أَبِي عُبَيْدَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ: «سُبْحَانَ ذِي الْمَلَكُوتِ وَالْجَبَرُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ» وَكَانَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ: «سُبْحَانَكَ لَا إِلَهَ غَيْرُكَ» (مختصر قيام اللّيل وقيام رمضان وقيام الوتر)
 
மேற்கண்ட இரு நபீ மொழிகளுக்கும் பொருளும் எழுதி, விளக்கமும் எழுதத் தொடங்கினால் தலைப்பு நீண்டுவிடுமாகையால் இரு ஹதீதுகளிலிருந்தும் தலைப்புக்குத் தேவையான அம்சத்தை மட்டும் தொட்டுக் காட்டுகிறேன்.
 
முந்தின ஹதீதில் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் لا إله غيرك உன்னல்லாத அல்லது உனக்கு வேறான எந்த ஒரு தெய்வமும் இல்லை என்று கூறியதற்கு ஆதாரம் உண்டு. இரண்டாவது ஹதீதில் அதே வசனத்தை அபூ பக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னதற்கு ஆதாரம் உண்டு.
لَا إِلَهَ غَيٍرُكَ
என்ற வசனம் لا إله إلا الله என்ற வனத்துக்கு விளக்கமாக அமைந்திருப்பது இங்கு குறிப்பிடற்குரியதாகும். “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனம் என்ன பொருளைத் தருகின்றதோ அதே பொருளை விளக்கமாக தருகிறது لا إله غيرك என்ற வசனம்.
 
ஆகையால் திருக்கலிமாவில் வந்துள்ள “இல்லா” என்ற சொல்லுக்கு ஷெய்குல் இஸ்லாம் பக்றுத்தீன் றாஸீ அவர்கள் சொன்னது போல் غير உடைய பொருள் கொடுத்து நாம் விளங்க வேண்டும்.
 
“இல்லா” என்ற சொல்லுக்கு غير உடைய பொருள் கொடுப்பதற்கு இரண்டு நபீ மொழிகளை ஆதாரங்களாக கூறினேன். அதேபோல் அறபு அகராதியிலும் “இல்லா” என்ற சொல்லுக்கு غير உடைய பொருள் கொடுக்க முடியும் என்பதற்கு ஆதாரம் உண்டு.
பொதுவாக அதிகமான உலமாஉகளும், அறபு மொழியோடு தொடர்புள்ள உலமாஉகள் அல்லாத படித்தவர்கள், அறபு மொழி படிக்கின்றவர்கள் ஆகியோர் பாவிக்கின்ற அறபு அகராதி “முன்ஜித்” என்ற அகராதியாகும். இதில் 15ம் பக்கத்தில் إِلَّا أَدَاةُ اسْتِثْنَاءٍ وصفةٌ بمعنى غَيْر، نحو لِيْ رِجَالٌ إِلَّا رِجَالُكَ என்று எழுதப்பட்டுள்ளது இங்கு கவனிக்கப்பட வேண்டும்.
 
திருக்கலிமாவில் உள்ள “இல்லா” என்ற சொல்லுக்கு தவிர என்ற பொருள் கொள்ளாமல் غير உடைய பொருள் கொண்டு “இலாஹ்” என்ற சொல்லுக்கு مُسْتَحِقٌّ لِلْعِبَادَةِ என்று வலிந்துரை கொள்வதையும் விட்டால் திருக்கலிமாவின் பொருள் பின்வருமாறு வந்து விடும். உதாரணமாக “அல்லாஹ் அல்லாத எந்த ஒரு தெய்வமும் இல்லை”
 
அல்லாஹ் அல்லாத எந்தவொரு தெய்வமும் இல்லை என்ற பொருளின் எதிர் மறை “அல்லாஹ்வான தெய்வங்கள் உண்டு” என்பதாகும்.
 
அதாவது கஃபாவில் இருந்த தெய்வங்களாயினும் அல்லது இப்போது உலகிலுள்ள தெய்வங்களாயினும், இதை இன்னும் சற்று விபரமாகச் சொல்வதாயின் புத்தர், இயேசு, காளி, முருகன், நெருப்பு, சிலைகள் போன்ற வணங்கப்படுகின்ற தெய்வங்கள் யாவும் அல்லாஹ்வுக்கு வேறானவைகள் அல்ல. அவையாவும் அவன் தானானவையோயாகும். இதுவே எதார்த்தம். இதுவே தத்துவம். இதுவே சத்தியம். இதுவே ஸூபீ மகான்களினதும், இறையியல் மேதைகளினதும் கருத்து. திருக்கலிமாவின் வசனத்தின் மூலம் அல்லாஹ் நாடிய பொருள் ஸூபீகள் கூறும் கருத்துதான் என்பது ஸூபீ மகான்களின் முடிவாகும்.
 
இறைஞானிகள் என்றும், ஸூபீ மகான்கள் என்றும் உலகில் வாழ்ந்தவர்கள் அனைவரும் இதே கருத்தையே சரி கண்டுமிருக்கிறார்கள். இதே கருத்தை வலியுறுத்தியே பல்லாயிரம் ஸூபீகள் பல்லாயிரம் நூல்களும் எழுதியுள்ளார்கள். உலக முடிவு வரை ஸூபிஸமும், வஹ்ததுல் வுஜூத் கருத்தும் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும்.
 
ஒருவர் இந்த ஞானத்தை விளங்குவதற்கு திறமை மட்டும் போதாது. பல பட்டங்களும் போதாது. “நஸீப்” தலை விதியும் அவசியமே. நக்குண்பதற்கும் “நஸீப்” வேண்டும்.
 
தொடரும்… (5ம் பக்கம் பார்க்க)
 
விஷேட குறிப்பும், வேண்டுகோளும்.
 
தெளிவான மனமும், திறமையுமுள்ள ஒருவர் திருக்கலிமாவை சரியாகவும், விளக்கமாகவும் அறிந்து கொண்டாராயின் அவர் இவ் அறிவில் அரசனாகிவிடுவார். எனது ஆக்கங்களை வாசிப்பவர்கள் எனது ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும், அல்லாஹ் என்னைப் பொருந்திக் கொள்வதற்கும் “துஆ” செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments