Saturday, October 12, 2024
Homeஎழுத்தாக்கங்கள்யார் இந்த இறை ஞானி?

யார் இந்த இறை ஞானி?

தொடர் – 5

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
“லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் திருக்கலிமாவுக்கு அல்லது திரு வசனத்திற்கு வலிந்துரை கொள்கிறீர்கள். “வணக்கத்திற்குப் பாத்திரமான – தகுதியான நாயன் – தெய்வம் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை” என்று சொல்கிறீர்கள்.
 
நீங்கள் சொல்வது பிழையென்று நாங்கள் எத்தனை ஆதாரங்கள் கூறி நிறுவினாலும் நீங்கள் செவிடர்களாகவும், குருடர்களாகவுமே உள்ளீர்கள். இதன் மூலம் நீங்கள் ஒரு கவிஞன் சொன்னது போல் சாய்ந்தால் சாய்கிற பக்கம் சாய்கிற செம்மறியாடுகள் போன்றுதான் உள்ளீர்கள். இன்று வரை நடை கரத்தை தள்ளிக் கொண்டே இருக்கிறீர்கள். உங்களைப் பார்த்து அறிவுலகம் கிண்டல் செய்கிறதே இதைக் கூட நீங்கள் விளங்கவில்லையா? உங்களின் மௌனம் கண்டு உங்களை நையாண்டி பண்ணுகிறதே இதைக் கேட்டு உங்களுக்கு ரோசம் வரவில்லையா? அல்லது ரோசம் என்ற சாமானே உங்களுக்கு இல்லையா?
 
நாம் ஆளும் ஆளும் மோதாமல் அறிவும் அறிவும் மோதட்டும் என்றுதான் நினைக்கிறோம். எதிர்பார்க்கிறோம். ஆனால் நீங்களோ மௌன விரதம் அனுஷ்டிக்கிறீர்கள். இது அறிஞர்களுக்கு அழகல்ல. உங்களின் மௌனம் உங்களின் அறியாமையின் வெளிப்பாடு என்றே அறிவுலகம் கூறுகிறது.
 
நீங்கள் திருக்கலிமாவுக்கு வலிந்துரை கூறுவதன் மூலம் அறபு மொழி இலக்கணத்திற்கும் மாறு செய்கிறீர்கள். திருக்கலிமாவை இறக்கி வைத்த அல்லாஹ்வின் இலட்சியத்திற்கும் முரண்படுகிறீர்கள்.
 
நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். இதற்காவது ஒரு பதில் தாருங்கள். இது வயது வராத சிறு பிள்ளைகளிடம் கேட்க வேண்டிய கேள்விதான். ஆயினும் அதை உங்களிடம் கேட்கிறேன்.
 
நீங்கள் திருக்கலிமாவுக்கு “வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு எந்த நாயனுமில்லை” என்று பொருள் கூறுகிறீர்கள்.
 
திருக்கலிமாவை முதலில் சொன்ன நபீ யார்? நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லவா? அவர்கள் நீங்கள் சொல்கின்ற கருத்தின் படி அதாவது வலிந்துரை கொண்டு திருக்கலிமாவைக் கூறினார்களா? அல்லது வலிந்துரை இல்லாமல் கூறினார்களா? நீங்கள் சொல்வது போல் வலிந்துரை கொண்டுதான் அவர்களும் சொன்னார்கள் என்பதற்கு ஓர் ஆதாரம் மட்டுமாவது உங்களால் கூற முடியுமா? கூறுங்கள் அதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம். நாங்கள் சொல்வது போல் வலிந்துரை எதுவுமின்றியே அவர்கள் சொன்னார்கள் என்றால் அவ்வாறுதான் சொன்னார்கள் என்பதற்கு நீங்கள் ஓர் ஆதாரமாவது காட்டுங்கள் என்று நீங்கள் எங்களிடம் கேட்டால் நாங்கள் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனத்தையே ஆதாரமாகக் காட்டுவோம். ஏனெனில் நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் لَا إِلَهَ مُسْتَحِقٌّ لِلْعِبَادَةِ إِلَّا اللهُ என்று சொல்லவில்லை. இதுவே நாங்கள் கூறும் ஆதாரம்.
 
நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதன் முதலாக திருக்கலிமா சொன்ன வேளை அவர்கள் மட்டுமே இருந்தார்கள். வேறெவரையும் அல்லாஹ் படைத்திருக்கவில்லை. ஆகையால் “வணக்கத்திற்குரிய தெய்வம் அல்லாஹ் தவிர வேறு தெய்வம் உண்டு” என்று சொல்வதற்கு எந்த ஒரு மனிதனும் அங்கு அவ்வேளை இருக்கவில்லை. எவனாவது ஒருவன் இருந்து அவ்வாறு சொல்லியிருந்தால்தான் அவனுக்கு மறுப்பாக ஆதம் நபீ அவர்கள் வலிந்துரை கொண்டு நீங்கள் சொல்வது போல் சொல்லியிருக்க முடியும்.
 
நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் படைத்து முடிந்ததும் அவர்கள் கண்ணைத் திறந்த போது அவர்களின் கண்களுக்கு எத்தனையோ படைப்புக்கள் தெரிந்திருக்கும். அவை யாவையும் அவர்கள் “இலாஹ்” தெய்வமாகக் கண்டதினால்தான் அல்லாஹ் அல்லாத எந்த வஸ்த்துவும் இல்லை என்று கண்டதைச் சொன்னார்கள்.
 
வலிந்துரையாளர்களே!
நீங்கள் திருக்கலிமாவின் முதல் சொல்லான “லா” என்ற சொல்லைச் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை. இதனால்தான் வலிந்துரை வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள்.
 
திருக்கலிமாவின் முதற் சொல்லே “லா” இல்லை என்பதுதான். இது கூட அல்லாஹ் மட்டுமே உள்ளான் என்பதற்கும், வேறொன்றுமில்லை என்பதற்கும் முதல் “சிக்னல்” சமிக்ஞை என்று புரிந்து கொள்ள வேண்டும்.
 
திருக்கலிமாவின் முதற் சொல்லாக வந்துள்ள “லா” என்ற சொல் அறபு மொழி இலக்கணத்தில் لَا الَّتِيْ لِنَفْيِ الْجِنْسِ ஓர் இனமே இல்லை என்று சொல்வதற்கு பயன்படுத்துகின்ற சொல்லாகும்.
 
உதாரணமாக هَلْ فِى الْبَيْتِ رَجُلٌ வீட்டில் மனிதன் யாராவது இருக்கின்றானா? என்று ஒருவன் கேட்டால் ஒருவருமில்லை என்று கேட்டவனுக்கு பதில் சொல்வதாயின் அறபு மொழியில் لَا رَجُلَ فِى الْبَيْتِ إِلَّا مُزَمِّلٌ வீட்டில் முசம்மில் தவிர வேறு எந்த ஒரு மனிதனுமில்லை என்றுதான் பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு பதில் சொல்லப்படும் போது வீட்டில் மனித இனத்தில் முசம்மில் தவிர வேறெந்த மனிதனுமில்லை என்று மட்டும் தான் பொருள் விளங்கப்பட வேண்டும்.
 
இது போன்றதே لَا إِلَهَ إِلَّا اللهُ அல்லாஹ் தவிர தெய்வ இனத்தில் எந்த ஒரு தெய்வமும் இல்லை என்ற திருக்கலிமா வசனமுமாகும். لَا رَجُلَ فِى الْبَيْتِ إِلَّا مُزَمِّلٌ என்ற உதாரணத்தில் “லா” என்ற சொல்லின் பின்னால் رَجُلَ – றஜுல – மனிதன் என்ற சொல் வந்துள்ளது போல் لَا إِلَهَ إِلَّا الله என்ற வசனத்தில் “லா” என்ற சொல்லின் பின்னால் “இலாஹ” என்ற சொல் வந்துள்ளது. இச் சொல் “றஜுல” என்ற சொல் போன்றதே. அதாவது இவ்விரு சொற்களும் அறபு மொழி இலக்கணக் கலையில் نَكِرَةٌ “நகிறா” என்று சொல்லப்படும்.
“நகிறா” என்றால் குறிப்பற்றது – பொதுவானது என்று பொருள். “றஜுல்” மனிதன் என்ற சொல் போன்று. இச் சொல் மனித உருவத்திலுள்ள அனைவருக்கும் பயன்படுத்த முடியும். மனிதர்களில் ஒருவனை மட்டும் குறிக்காது.
 
உதாரணமாக ஓர் அறையில் பத்துப் பேர் இருந்தார்களாயின் அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும். இப்றாஹீம், இஸ்மாயீல் என்பன போன்று. எனினும் பத்துப் பேர்களில் ஒவ்வொருவருக்கும் “றஜுல்” மனிதன் என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் رَجُلٌ என்ற சொல் “நகிறா” பொதுவானதென்றும், ஒரு மனிதனை மட்டும் குறிக்காத எல்லா மனிதர்களுக்கும் பயன்படுத்தப்படுகின்ற சொல் என்பதும், இப்றாஹீம், இஸ்மாயீல் எனும் பெயர்கள் ஒருவரை மட்டும் குறிக்கும் சொல் என்பதும் தெளிவாகிறது.
 
இவ்வாறுதான் “இலாஹ்” தெய்வம் என்ற சொல்லுமாகும். இது “றஜுல்” என்ற சொல் போன்று எதுவெல்லாம் தெய்வமாகக் கருதப்பட்டு வணங்கப்படுகின்றதோ அதற்கெல்லாம் “இலாஹ்” தெய்வம் என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்.
 
அன்று “கஃபா”வினுள் இருந்த அல்லாத், அல் உஸ்ஸா, ஹுபல், மனாத் போன்றவையும், இன்று வணங்கப்படும் பொருளாகக் கருதப்படுகின்ற காளி, முருகன், சரஸ்வதி, ஐயப்பன் போன்ற சிலைகளும், மற்றும் பாம்பு, நெருப்பு, சூரியன் போன்றவையும் “இலாஹ்” தெய்வம் என்ற சொல்லில் அடங்கிவிடும்.
 
அல்லாஹ் திருக்குர்ஆனின் பல இடங்களில் மேற்கண்ட வணங்கப்படும் பொருள்களுக்கு “இலாஹ்”, “ஆலிஹத்” என்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ளான். அல்லாஹ்வும் “இலாஹ்” என்ற சொல்லுக்குப் பொருத்தமானவனேயாவான்.
 
“இலாஹ்” என்ற சொல் தொடர்பாக விரிவான விளக்கம் உண்டு. இச் சொல் படைத்தவனுக்கும், படைப்புக்கும் பொதுவாக பாவிக்கப்படும் சொல் என்பதை அறிந்து கொள்தல் அவசியம்.
 
இக்கட்டுரையை நுகரும் புத்திமான்கள் என்னிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். நான் இங்கு அக்கேள்வியை எழுதிய பிறகுதான் இது கட்டாயம் கேட்க வேண்டிய கேள்விதான் என்று அவர்கள் எண்ணிக் கொள்வார்கள்.
 
அதாவது திருக்கலிமாவுக்கு “வணக்கத்திற்குரிய நாயன் – தெய்வம் அல்லாஹ் தவிர வேறெந்த தெய்வமும் – நாயனும் இல்லை” என்று பொருள் கொள்வது பிழை என்று கூறுகிறீர்கள். இவ்வாறு பொருள் கொள்வது “தஃவீல்” வலிந்துரை அடிப்படையிலான பொருள் என்று கூறுகிறீர்கள்.
 
அல்லாஹ் அல்லாத – அல்லாஹ்வுக்கு வேறான எந்த “இலாஹ்” தெய்வமும் இல்லை என்று பொருள் கொள்வதே சரியென்றும் சொல்கிறீர்கள்.
 
எனினும் நீங்கள் பேசும் போதும், எழுதும் போதும் அல்லாஹ் அல்லாத – அல்லாஹ்வுக்கு வேறான எந்த ஒரு வஸ்த்துவும் இல்லை, எதுவுமில்லை என்று பேசுகிறீர்கள். எழுதுகிறீர்கள். இவ்வாறு பொருள் கொள்வதற்கு என்ன ஆதாரம்? இதுவே நீங்கள் என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியாகும். கேள்வி நல்ல கேள்விதான். அவசியம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். இன்ஷா அல்லாஹ்! அடுத்த தொடர்களில் இது தொடர்பாக விளக்கம் எழுதுவேன். எதிர்பாருங்கள்.
 
வலிந்துரையாளர்களே!
வலிந்துரை கொள்ளாமல் திருக்கலிமா நேரடியாகத் தருகின்ற “அல்லாஹ் அல்லாத – அல்லாஹ்வுக்கு வேறான எந்த ஒரு தெய்வமும் இல்லை” என்று பொருள் கூறாமல் “வணக்கத்திற்குப் பாத்திரமான – தகுதியான நாயன்” என்று வலிந்துரை செய்வதேன்? வலிந்துரை வைக்காமல் அவ் வசனத்திற்கான நேரடிப் பொருள் சொல்ல நீங்கள் தயங்குவது ஏன்? உங்களில் யாராவதொருவர் சொல்லுங்கள். நீங்கள் சொல்வது சரியானதாயின் உங்களின் நெற்றி முகந்து முழுமையாக ஏற்றுக் கொள்வேன். உங்களின் விளக்கம் பிழையாயின் பிழையை ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டுவேன். இன்ஷா அல்லாஹ்!
 
நீங்கள் அவ்வாறு சொல்வதால் – வலிந்துரை கொண்டு பொருள் சொல்வதினால்தான் சிக்கலும், பிரச்சினையும், முரண்பாடும் ஏற்படுமேயன்றி நாங்கள் சொல்வது போல் வலிந்துரையின்றிப் பொருள் கொள்வதால் எந்த ஒரு சிக்கலுமே இல்லை. எந்த ஒரு முரண்பாடும் ஏற்படமாட்டாது. தெரிந்தால் தெளிவு கிடைக்கும். துணிந்தால் வழி திறக்கும்.
 
அன்பிற்குரிய முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!
 
நான் பேசியும், எழுதியும் வருகின்ற கொள்கை எந்த வகையிலும் திருக்குர்ஆனுக்கோ, நபீ மொழிகளுக்கோ, இஸ்லாமிய “அஷ்அரிய்யா அகீதா” கொள்கைக்கோ முரணானதல்ல. இவ்விடயத்தில் நான் மிகத் தெளிவாக உள்ளேன்.
 
நான் கூறிவரும் இறையியல் தத்துவம் பல்லாண்டுகள் தவமிருந்தும், பல நாடுகள் சென்றும், பல இன்னல்களை அனுபவித்தும் கூட பெறுதற்கரிய தத்துவமாகும்.
 
மறுமைநாளின் அடையாளங்களில் ஒன்று يُرفَعُ الْعِلْمُ அறிவு உயர்த்தப்படும் என்று நபீ மொழிகள் எச்சரிக்கின்றன. இன்னுமிதேபோல் يُرْفَعُ الْعِلْمُ بِقَبْضِ الْعُلَمَاءِ – உலமாஉகள் – மார்க்க அறிஞர்கள் மரணிப்பதன் மூலம் அறிவு உயர்த்தப்படும் என்ற பொருளில் பல ஹதீதுகளும், இறைஞானிகளின் வியாக்கியானங்களும் உள்ளன.
 
அல்லாஹ் திருக்குர்ஆனில் لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَمِنْهَاجًا என்று கூறியுள்ளான். உங்களில் ஒவ்வொருவருக்கும் “ஷிர்அத்” ஷரீஆவையும், “மின்ஹாஜ்” தரீகாவையும், ஆன்மிக ஞானத்தையும் நாங்கள் ஆக்கியுள்ளோம் என்று கூறியுள்ளான்.
 
இவ் அடிப்படையில் ஒரு முஸ்லிம் “ஷரீஆ”வையும் அறிந்திருக்க வேண்டும், அதன்படி செயற்படவும் வேண்டும். அதேபோல் “தரீகா”வையும் அறிந்திருக்க வேண்டும். அதன்படி செயல்படவும் வேண்டும். இவ்விரண்டும் ஒரு முஸ்லிமுக்கு அவசியம் வேண்டும்.
 
“இன்ஸான்” எனும் மனித வண்டி “எண் ஷான்” உடம்பில் இருந்தாலும் கூட அது தனது கருவும், குருவுமான மெய்ப் பொருளை அறிதலும், அதை அடைவதும் அவசியமாகும். அவனை அடைவதற்கு அவன் பற்றிய ஞானம் இன்றியமையாததாகும்.
 
“ஷரீஆ” அவசியமாயினும் அது கொண்டு மட்டும் அல்லாஹ்வை அறியவும் முடியாது, அவனை அடையவும் முடியாது. அவனை அறிவதாயினும், அடைவதாயினும் தரீகா, ஹகீகா, மஃரிபா எனும் வழிகளிலும் நடந்து பார்க்க வேண்டும்.
 
مَنْ تَشَرَّعَ وَلَمْ يَتَحَقَّقْ فَقَدْ تَفَسَّقْ – وَمَنْ تَحَقَّقَ وَلَمْ يَتَشَرَّعْ فَقَدْ تَزَنْدَقْ
இறைஞானம் கற்றுக் கொள்ளாமல் “ஷரீஆ”வை மட்டும் கற்றுக் கொண்டவன் “பாஸிக்” கெட்டவனாகிவிட்டான். இறைஞானம் கற்றுக் கொண்டு “ஷரீஆ”வை கற்றுக் கொள்ளாதவன் “சிந்தீக்” ஆகிவிட்டான் என்று இறையியல் மேதைகளும், ஸூபீ மகான்களும் ஏகோபித்து ஒரே குரலில் சொல்லியுள்ளார்கள். இதைக் கவனத்திற் கொண்டு “இன்ஸான்” மனிதன் எனும் வண்டியை “ஷரீஆ” “தரீகா” இரு வழிகள் மூலமும் அல்லாஹ் அளவில் நகர்த்துவோம். இன்ஷா அல்லாஹ்!
 
ஸூபிஸம் இன்றேல் இஸ்லாம் இல்லை!
இஸ்லாம் இன்றேல் இறை தரிசனம் இல்லை!
 
தொடரும்… (6ம் பக்கம் பார்க்க)
RELATED ARTICLES

Most Popular

Recent Comments