Home எழுத்தாக்கங்கள் அல்லாஹ்வின் திரு நாமங்கள் நாலாயிரம்! அல்லாஹ்வுக்கு 4000 திரு நாமங்கள்!

அல்லாஹ்வின் திரு நாமங்கள் நாலாயிரம்! அல்லாஹ்வுக்கு 4000 திரு நாமங்கள்!

0
552

தொடர் – 2

اَلْاِسْمُ الْأَعْظَمُ
அல் இஸ்முல் அஃளம்!
 
அல்லாஹ்வின் 4000 திரு நாமங்களில், அல்லது 99 திரு நாமங்களில் ஒன்று “இஸ்முல் அஃளம்” வலுப்பமிகு திரு நாமமாக இருக்கும். இதில் சந்தேகமில்லை. ஆயினும் அது எதுவென்று எவருக்கும் தெரியாது. ஆயினும் நபீமார், வலீமாருக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருப்பான் என்று நான் நம்புகிறேன்.
 
ஸூபீ மகான்கள், இறையியல் மேதைகளாம் “ஆரிபீன்” இறைஞானிகள் அது இன்ன திருநாமமாக இருக்கும் என்று தமது ஆன்மிக பலம் கொண்டும், அனுபவம் கொண்டும் சில திரு நாமங்களைக் கூறுகின்றார்கள்.
 
நான் அறிந்த வகையில், நான் பெற்ற அனுபவத்தில் சில திரு நாமங்களை நான் தெரிவு செய்து அவற்றில் ஒன்றாக “இஸ்முல் அஃளம்” எனும் திருநாமம் இருக்கலாம் என்று யூகித்து செயல்பட்டு வருகிறேன். அவற்றை இதோ எழுதுகிறேன்.
 
يَا حَيُّ، يَا قَيُّوْمُ، يَا بَدِيْعَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامْ، يَا اَللهْ، يَا هُوْ، يَا وَاحِدْ، يَا أَحَدْ، يَا صَمَدْ، يَا وِتْرُ، يَا دَائِمْ، يَا قَائِمْ
என்பனவாகும். குறித்த அத்திரு நாமம் இவற்றில் ஒன்றாக இருக்கலாம் என்று நான் நம்புகிறேன். ஆகையால் இவையாவையும் சொல்லியே “துஆ” ஓதியும் வருகிறேன்.
 
விலாயத், கறாமத், இல்ஹாம் உடைய வலீமார்கள் அத்திரு நாமத்தை அறிந்திருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை.
 
யார் எவ்வாறு சொன்னாலும் ஸூபீ மகான்கள் இது தொடர்பாக தனது கருத்தை பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
 
اختلف النّاسُ فيه، فقال قائلون ليس الاسم الأعظم لله اسما معلوما مُعَيَّنًا، بل كلُّ اسمٍ يذكر العبدُ ربَّهُ حالَ ما يكونُ مُستغرِقًا فى معرفة الله تعالى، فيَنْقَطِعُ الفكرُ والعقلُ عن كلّ ما سواه، فذلك الاسمُ هو الاسمُ الأعظمُ،
 
“இஸ்முல் அஃளம்” எது என்பதில் மனிதர்களுக்கிடையில் – அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு உண்டு. அல்லாஹ்வின் “இஸ்முல் அஃளம்” என்பது குறிப்பான, அறியப்பட்ட ஒன்றல்ல. பொதுவாக ஓர் அடியான் தனது இறைவனில் “பனா” லயித்துப் போயிருக்கும் நிலையில் தன்னை அறியாமல் அனைத்தையும் அவன் இழந்த நிலையில் சொல்கின்ற “திக்ர்” அல்லாஹ்வின் திரு நாமம் எதுவாயினும் அதுவே அவனுக்கு “இஸ்முல் அஃளம்” ஆகும் என்று ஞானிகள் கூறியுள்ளனர்.
 
ஒருவன் “திக்ர்” அல்லாஹ்வை நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவன் தனது சுய நினைவிழந்து, அல்லாஹ் எனும் சமுத்திரத்தில் – அவனின் “தாத்”தில், அல்லது “ஸிபாத்” அவனின் தன்மைகளில், அல்லது அவனின் “அஸ்மா” நாமங்களில் “பனா”வாகிவிடுவான். அவ்வாறு அவனுக்கு “பனா” ஏற்படுமாயின் அவன் அந்நிலையில் சொல்லும் அல்லாஹ்வின் திரு நாமம்தான் அவனுக்கு “இஸ்முல் அஃளம்” ஆக இருக்கும்.
 
“இஸ்முல் அஃளம்” இன்னதுதான் என்று ஏதோ ஒரு வழியில் தெரிந்து கொண்டவன்தான் தான் தெரிந்து கொண்டபடி செயல்படுவான். செயல்படவும் வேண்டும். அத்திரு நாமம் எது என்று தெரியாதவன் அல்லாஹ்வின் இத்திரு நாமம் கொண்டு “திக்ர்” செய்தாலும் தனது சுய நினைவிழந்து “திக்ர்” செய்யும் நிலை ஏற்பட சாத்தியமுண்டு. அது “ஜத்ப்” உடைய நிலை என்றும், “பனா” உடைய நிலை என்றும் ஸூபீ மகான்கள் சொல்வார்கள்.
 
அந்த நிலை அடைந்தவன் எது சொன்னாலும் அது அவன் சொன்னதாக ஆகமாட்டாது. எதார்த்தத்தில் அவன் மூலம் சொன்னவன் அல்லாஹ்தான் என்றே முடிவு செய்தல் வேண்டும்.
 
அல்லாஹ் திருக்குர்ஆனில் وَاذْكُرْ رَبَّكَ إِذَا نَسِيْتَ “உனது “றப்பு” இரட்சகனை – அல்லாஹ்வை நினை. நினைத்துக் கொள். நீ மறந்தால்” என்று கூறியுள்ளான். (18-24)
இத்திரு வசனத்தில் எதை மறந்தால் என்று அவன் சொல்லவில்லை. இதை அறபு மொழியிலக்கணத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தால் ஓர் உண்மை தெளிவாகும்.
நான் இப்போது எழுதும் விளக்கம் அறபு மொழியிலக்கணத்தோடு தொடர்புள்ளதாகையால் அறபுக் கல்லூரிகளில் மொழியிலக்கணம் கற்கும் மாணவர்களுக்குத் தெளிவாகப் புரியுமென்றும், ஏனையோருக்கு ஓரளவு விளங்குமென்றும் நினைக்கிறேன்.
 
ஒரு வசனத்தில் “பிஅல்”, “பாஇல்”, “மப்ஊல்” என்று மூன்று அம்சங்கள் வரும். உதாரணமாக ضَرَبَ زَيْدٌ مٌخْتَارًا என்பது போன்று. இது முறைப்படி வந்துள்ள வசனம். இதில் ضَرَبَ – “ளறப” என்பது فِعْلْ என்றும், முசம்மில் என்பது “பாயில்” என்றும், “முக்தாறன்” “மப்ஊல்” என்றும் சொல்லப்படும். இவ்வசனத்தின் பொருள் “முசம்மில் முக்தாரை அடித்தான்” என்பதாகும். இவ்வசனத்தில் அடி பட்டவன் “மப்ஊல்” என்று சொல்லப்படும். அதாவது செயப்படு பொருள் என்று சொல்லப்படும்.
 
ஒரு வசனத்தில் “மப்ஊல்” செயப்படு பொருள் வரவில்லையாயின் பொருள் சரியாக விளங்காது.
 
மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்தில் إِذَا نَسِيْتَ நீ மறந்தால் என்று மட்டும்தான் வசனம் வந்துள்ளதேயன்றி எதை மறந்தால் என்ற விபரம் கூறப்படவில்லை. அதாவது “மப்ஊல்” செயப்படு பொருள் கூறப்படவில்லை.
 
செயப்படு பொருள் எதுவாக இருக்கலாம் என்பதில் “ளாஹிர்” வெளி நீச்சலடிப்பவர்களான “உலமாஉள் ளாஹிர்” என்பவர்களுக்கும், உள் நீச்சலடிப்பவர்களான “உலமாஉல் பாதின்” என்பவர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடு உண்டு.
 
வெளி நீச்சல் அடிப்பவர்கள் வசனத்தில் கூறப்படாத செயப்படு பொருள் رَبَّكَ உனது இரட்சகனை – இறைவனை என்றிருக்குமென்று கூறுகின்றனர்.
 
இவர்களின் இக்கூற்றின் படி திரு வசனத்தின் பொருள் “நீ உனது இறைவனை மறந்தால் நீ நினைத்துக் கொள் – அதாவது மறந்த இறைவனை நினைத்துக் கொள்” என்று பொருள் வரும். اَلْمَنْسِيُّ فِى الْحَقِيْقَةِ مَنْسِيٌّ எதார்த்தத்தில் மறந்தது மறந்ததேயாகும். அதை நினைப்பதென்பது அசாத்தியமானது. மறந்தது மறந்ததே. அதை நினைக்க முடியாது.
 
நினைவின் இருப்பிடம் கல்பு – மனம். ஒரு விடயம் மனதை விட்டும் நீங்காமல் அதன் மூலையிலேனும் இருக்குமானால் அது மறந்ததல்ல. அது உள்ளத்தில் ஒட்டியிருப்பதேயாகும். இதை நினைக்க முடியும். எனினும் உள்ளத்தை விட்டும் நூறு வீதம் வெளியான ஒன்று அது வெளியானதேதான். அதை நினைக்க வாய்ப்பில்லை.
 
ஆகையால் “இறைவனை மறந்தால் இறைவனை நினை” என்று பொருள் எடுத்தல் பொருந்தாத ஒன்றாகும்.
 
ஆகையால் வெளி நீச்சல் காரர்கள் சொல்கின்ற செயப்படு பொருள் பொருத்தமற்றதாகும். எனவே, உள் நீச்சலடிப்பவர்களான உள்ரங்க அறிஞர்கள், ஸூபீ மகான்கள் கூறப்படாத “மப்ஊல்” செயப்படு பொருள் نَفْسَكَ உன்னை என்றிருக்கும் என்று சொல்கிறார்கள். அதாவது وَاذْكُرْ رَبَّكَ إِذَا نَسِيْتَ نَفْسَكَ நீ உனது இறைவனை நினை. நீ உன்னை மறந்தால் என்று விளக்கம் சொல்கிறார்கள்.
 
ஸூபீ மகான்கள் சொல்கின்ற இவ் விளக்கம் “பைவ் ஸ்டார்” ஹோட்டல் “பலூடா” போலுள்ளது. குடித்தவர்கள் பாராட்டுவர். ருசியை அறிந்திருப்பர்.
 
“நான்” எனும் உணர்வில் இரு வகையுண்டு. ஒன்று அறபு மொழியில் أَنِّيَّةْ – “அன்னிய்யத்” என்று சொல்லப்படும். மற்றது أَنَانِيَّةْ – “அனானிய்யத்” என்று சொல்லப்படும்.
 
“அன்னிய்யத்” என்றால் தன்னுணர்வு என்று பொருள். அதாவது எந்த ஒரு மனிதனாயினும் அவனிடம் “அன்னிய்யத்” நான் என்ற சுய உணர்வு இருக்கவே செய்யும். இவ்வாறு என்னிடம் “நான்” அப்துர் றஊப் என்ற உணர்வு இருக்கவே செய்யும். இவ் உணர்வு தவிர்க்க முடியாத ஒன்றுதான். ஆயினும் விடாப் பயிற்சி மூலம் இதை வெல்ல முடியும். இவ் உணர்வு இருப்பது “ஷரீஆ”வில் தடுக்கப்பட்டதோ, இகழப்பட்டதோ அல்ல. எனினும் “தரீகா” வழியில் – ஸூபிஸ வழியில் இது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். இன்றேல் ஞான வாசல் திறக்காது. ஞான வாசம் கூட கிடைக்காது.
 
இது தொடர்பாக ஞான மகான் ஒருவர் பின்வருமாறு பாடியுள்ளார்.
நான் என்றிருந்தேனே – நாளும் கழிந்தேனே
தானாயிருந்த தன்மை அறியேனே
என்று கவலைக் குரல் எழுப்பியுள்ளார். சோகக்குரலில் சொல்லியுள்ளார்.
 
நான் ஒருவன் இருப்பதாக நினைத்திருந்து என் நாட்களை வீணாகக் கழித்து விட்டேனே. அல்லாஹ்தான் என்னாக இருந்துள்ளான் என்பதை அறியாதவனாய் வாழ்ந்து விட்டேனே! என்று கண்ணீர் வடிக்கிறார்.
 
இவ் உணர்வை உள்ளத்திற்கு ஊட்டுவதற்காகவே ஆன்மிக வழி காட்டும் சில “தரீகா”க்களில் لَا أَنَا إِلَّا هُوْ “நான் அவனாகவே ஒழிய இல்லை” “நான் அவன்தான்” என்ற பொருளைத் தருகின்ற “திக்ர்”களை அமைத்து பயிற்சி கொடுக்கிறார்கள்.
 
எனினும் “ளாஹிர்” வெளி நீச்சல் அடிக்கும் عُلَمَاءُ الرُّسُوْمْ ஏட்டுச் சுரைக்காய்கள் அதை எதிர்ப்பார்கள். இது தொடர்பாக இவர்களுடன் தர்க்கம் செய்யாமல் لكم دينكم ولي دين உங்களுக்கு உங்கள் மார்க்கம், எங்களுக்கு எங்கள் மார்க்கம் என்று சொல்வதே ஈடேற்றத்திற்கு வழி செய்யுமென்று நான் நம்புகிறேன். ذَنَبُ الْكَلْبِ لَا يَسْتَقِيْمُ நாய் வால் நிமிராது என்பது முதியவர்களின் தத்துவம்.
 
“இஸ்முல் அஃளம்” பற்றி நான் எழுதி வந்தேன். அதே தொடரில் இன்னும் சில தகவல்கள் தருகிறேன்.
 
إنّ واحدا سأل جعفر الصادق رضي الله عنه عن الاسم الأعظم، فقال له قُمْ واشْرَعْ فى هذا الحوض واغتسل، حتّى أعلّمك الاسم الأعظم، فلمّا شرع فى الماء واغتسل، وكان الزمان زمانَ الشِّتاءِ، والماءُ فى غاية البرد، فلمّا أراد أن يخرج من جانب الماء أَمَرَ جعفرٌ أصحابَه حتّى منعوه من الخروج عن الماء، وكلّما أراد أن يخرج ألقوه فى ذلك الماء البارد، فتضرَّعَ الرَّجُلُ إليهم كثيرا فلم يقبلوا قولَه، فغَلَبَ على ظنِّ ذلك الرجل أنّهم يريدون قتلَه وإهلاكَه فتضرّعَ إلى الله تعالى فى أن يخلِّصَه منهم، فلمّا سمعوا منه ذلك الدعاءَ أخرجوه من الماء وأَلْبَسُوْهُ الثيابَ وتركوه حتّى عادتِ القُوَّةُ إليه، ثمّ قال لجعفر الصادق علِّمنِيْ اسمَ الاعظمَ، فقال جعفرٌ يا هذا أنّك قد تعلّمت الاسمَ الأعظمَ ودعوتَ اللهَ به وأجابك، فقال وكيف ذلك؟ فقال جعفرٌ إنّ كلّ اسمٍ من أسمائه تعالى يكون فى غاية العظمة، إلّا أنّ الإنسانَ إذا ذكر اسمَ الله عند تعلُّقِ قلبِه بغير الله لم ينتفع به، وإذا ذكرَهُ عند انقطاع طَمَعِه من غير الله كان ذلك الاسمَ الأعظمَ، وأنت لمّا غلب على ظَنِّكَ أنّا نقتلُكَ لم يبق فى قلبك تعويلٌ إلّا على فضل الله، ففى تلك الحالة أيُّ اسمٍ ذكرتَه فإنّ ذلك الاسمَ هو الاسمُ الأعظمُ،
(لوامع البيّنات، ص 62-63، للإمام فخر الدين الرازي)
 
உயிருக்கும், உடலுக்கும் உயிரான பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரான ஸெய்யிதுனா இமாம் ஜஃபர் ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒருவர் வந்து “இஸ்முல் அஃளம்” வலுப்பமிகு திரு நாமத்தை கற்றுத் தாருங்கள் என்று கேட்டார்.
 
அதற்கவர்கள் பக்கத்திலிருந்த குளத்தைக் காட்டி இதில் நீ குளித்து விட்டு வா நான் அதைச் சொல்லித் தருகிறேன் என்றார்கள்.
 
கேள்வி கேட்டவர் குளத்தண்டை சென்று அதில் குளித்தார். அவ்வேளை கால நிலை கடுங்குளிராக இருந்தது. குளம் சேறும், சகதியுமாகவும் இருந்தது.
 
இமாம் ஜஃபர் ஸாதிக் அவர்கள் அவனுக்கு தெரியாமல் தங்களின் தோழர்களை அழைத்து, (அவன் குளித்து வெளியேறுவதற்காக கரைக்கு வரும் போது நீங்கள் கம்பு தடியோடு கூட்டமாகச் சென்று அவனுக்கு அடித்து அவனை மீண்டும் குளத்தில் தள்ளிவிடுங்கள். அவன் கத்துவான். கதறுவான். மீண்டும் கரைக்கு வருவான். நீங்களும் அவனை மறு தரமும் அடித்து குளத்தில் தள்ளிவிடுங்கள். இவ்வாறு பலமுறை செய்யுங்கள். அவன் நீங்கள் தள்ளிவிடும் போதெல்லாம் அம்மா என்று கத்துவான். அப்பா என்று கத்துவான். ஐயோ என்னைக் கொல்கிறார்கள் என்று சத்தமிடுவான். சாச்சா என்பான். மாமா என்பான். அவன் யாரை அழைத்து அபயம் தேடினாலும் விடாதீர்கள். அடியுங்கள். தள்ளிக் கொண்டே இருங்கள். ஆயினும் அவனுக்கு ஒரு கட்டம் வரும். அவ்வேளை அவன் யா அல்லாஹ்! என்னைக் கார் என்று சொல்வான். அதுவரை அடியுங்கள்.
 
அவன் யா அல்லாஹ் என்று அபயக் குரல் எழுப்பினால் மட்டும் அவனை விட்டு விட்டு நீங்கள் மறைந்து விடுங்கள்) என்று இரகசியமாகக் கூறி வைத்தார்கள்.
 
இமாம் அவர்கள் சொன்னது போல் தோழர்கள் செய்தனர். பலமுறை செய்தனர். அவனும் அவர்களிடம் மன்றாடிப் பல முறை கெஞ்சிக் கேட்டும் கூட அவர்கள் இணங்கவில்லை. கேள்வி கேட்டு வந்தவர் இவர்கள் தன்னைக் கொலை செய்யவே வந்துள்ளனர் என்றெண்ணி மீண்டும் அவர்களிடம் மன்றாடிக் கொண்டானாயினும் அவர்கள் இணங்கவில்லை.
 
அவனுக்கு எந்தவொரு முயற்சியும் கை கொடுக்காமற் போனதால் இறுதியில் தனக்கு அல்லாஹ்தான் கை கொடுப்பான் என்று அவன் உணர்ந்து இறுதி முடிவுக்கு வந்து அல்லாஹ்வின் பக்கம் திரும்பி யா அல்லாஹ்! என்னைக் காப்பாற்றி அருள் புரிவாயாக! என்று அழுது சலித்து கெஞ்சிக் கேட்டான். ஜஃபர் ஸாதிக் நாயகம் அவர்களின் ஆதரவாளர்கள் இப்படியொரு நாடகம் ஆடினார்கள் என்பதை அவர் இறுதிவரை புரிந்து கொள்ளவில்லை.
 
அவன் இறுதியாக அல்லாஹ்வை அழைத்து அவனிடம் உதவி கேட்ட பிறகுதான் இமாம் ஜஃபர் ஸாதிக் அவர்களின் ஆதரவாளர்கள் தமக்கு தமது ஷெய்கு அவர்கள் சொன்னதுபோல் அவனுக்கு உதவி செய்தார்கள். அவனை குளத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றி அவனுக்கு புதிய உடைகள் கொடுத்து அவனை கண்ணியமாக ஷெய்கு அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள்.
 
மகான் அஷ் ஷெய்கு ஜஃபர் ஸாதிக் அவர்களிடம் அவன் வந்து நாயகமே! தாங்கள் சொன்னது போல் குளித்து “வுழூ” செய்து வந்துள்ளேன். இப்போது எனக்கு “இஸ்முல் அஃளம்” எனும் வலுப்பமிகு திரு நாமத்தை கற்றுத் தாருங்கள் என்று கேட்டான்.
 
அதற்கு அவர்கள் நீ கற்றுக் கொண்டாய். நான் கற்றுத் தரத் தேவையில்லை என்று கூறிப் பின்வருமாறு நடந்தவற்றை நேரில் கண்டவர்கள் போல் அவனிடம் சொல்லிக் காட்டி நீ அல்லாஹ் என்று அழைத்த பிறகுதானே நீ காப்பாற்றப்பட்டாய். இதன் மூலம் நீ கற்றுக் கொண்டாய் என்று கூறி பின்வரும் தத்துவத்தையும் அவனுக்கு உணர்த்தினார்கள்.
 
(மனிதா! அல்லாஹ்வின் எத்திருநாமமாயினும் அதற்கு எது செய்வதற்கும் வல்லமை உண்டு. எனினும் நீ முழுமையாக அவனை நம்பிய நிலையில் படைப்புக்களை மறந்து அவனில் நீ “பனா” முழுமையாக லயித்துப் போகும் கட்டத்தில் நீ அவனின் எப் பெயரைக் கொண்டு அழைத்தாலும் அப் பெயர் அக்கட்டத்தில் “இஸ்முல் அஃளம்” தான் என்று விளக்கி வைத்தார்கள்.
 
இவ்வரலாறு “இஸ்முல் அஃளம்” என்பதன் மகிமையை விளக்கி வைக்கும் வரலாறேயன்றி இது படைப்புகளிடம் உதவி கேட்பது கூடாது என்று கூறும் வரலாறல்ல என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். اَلنَّاسُ بِالنَّاسِ مَا دَامَ الْحَيَاةُ بِهِمْ மனிதர்கள் தமது ஆயுள் இருக்கும் வரை மனிதர்களிடம் உதவி பெற்றே வாழ வேண்டும் என்று இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்கள் சொன்ன தத்துவத்தை நினைவூட்டுகிறோம்.
 
தொடரும்… (3ம் பக்கம் பார்க்கவும்)

NO COMMENTS