Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்உலமாஉகளின் தலைவர் ரிஸ்வீ முப்தீ அவர்கள் தனது எண்ணத்தில் அல்லாஹ்வை விடப் பெரியவரும், அறிஞருமாவார்.

உலமாஉகளின் தலைவர் ரிஸ்வீ முப்தீ அவர்கள் தனது எண்ணத்தில் அல்லாஹ்வை விடப் பெரியவரும், அறிஞருமாவார்.

رئيس العلماء رزوي مفتي أكبر من الله وأعلم منه فى ظنّه،
உலமாஉகளின் தலைவர் ரிஸ்வீ முப்தீ அவர்கள் தனது எண்ணத்தில் அல்லாஹ்வை விடப் பெரியவரும், அறிஞருமாவார்.
 
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
இவர் காத்தான்குடிக்கு இடையிடையே வருவார். போவார். இறுதியாக காத்தான்குடி விஜயத்தை மேற் கொண்ட இவர் நடுத் தெருவில் நின்று நெஞ்சில் அடித்து “உலமா சபையின் வரலாற்றில் அது வழங்கிய “பத்வா”வை வாபஸ் பெற்றதே கிடையாது” என்று முழங்கிச் சென்றார். இவருக்கு வால் பிடிக்கும், கூஜா தூக்கும் ஒரு கூட்டம் கைதட்டி மகிழ்ந்தார்கள். இந்த விஷ வார்த்தையின் மூலம் இவர் “தான் அல்லாஹ்வை விடப் பெரியவன்” என்று கூறி “ஈழத்து பிர்அவ்ன்” ஆக மாறி விட்டார் என்று எனக்கு எண்ணத் தோனுகிறது.

இவர் தனது இவ் விஷ வார்த்தையையும், ஸூபிஸ முஸ்லிம்களுக்கு வழங்கிய “முர்தத்” பத்வாவையும், ஸூபிஸ முஸ்லிம்களை கொலை செய்ய வேண்டுமென்று வழங்கிய தீர்ப்பையும் உடனடியாக பகிரங்கமாக வாபஸ் பெற வேண்டும். இன்றேல் இவர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக இருப்பதற்கோ, அதன் அங்கத்தவராக இருப்தற்கோ தகுதியற்றவர் என்பதை முஸ்லிம்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இவர் புரிந்து செயல்பட வேண்டும். இந்த நாட்டில் வாழும் மனச் சாட்சியுள்ள ஜீவன்களும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
“ஜம்இய்யதுல் உலமா வழங்கிய “பத்வா”வை அது வாபஸ் பெற்றதற்கு வரலாறே கிடையாது” என்று இவர் முழங்கியதால் இவர் தனது எண்ணத்தில் அல்லாஹ்வை விடப் பெரியவராகி விட்டார் என்பதற்கான ஆதாரங்களை இங்கு எழுதுகிறேன்.
அல்லாஹ் ஒரு சமயம் ஒரு வசனத்தை பெருமானார் அவர்களுக்கு அருள்வான். அதாவது பெருமானார் அவர்களுக்கு “வஹீ” மூலம் அறிவிப்பான். பின்னர் சில மாதங்களின் பின் அல்லது சில நாட்களின் பின் அவன் ஏற்கனவே அருளிய வசனத்திற்கு மாறான இன்னொரு வசனத்தை அருளி அதன்படி செயல்படுமாறு மக்களுக்கு கட்டளையிடுவான்.
 
உதாரணமாக முதலில் اِتَّقٌوا اللهَ حَقَّ تُقَاتِهِ “அல்லாஹ்வை அவனின் தரத்திற்கேற்றவாறு அஞ்சிக் கொள்ளுங்கள்” என்ற வசனத்தை இறக்கினான். அருளினான்.
அல்லாஹ்வை மனிதன் அஞ்சுவதாயின் – பயப்படுவதாயின் அல்லது வழிப்படுவதாயின் அவன் தனது சக்திக்கும், தனது தரத்திற்கும் ஏற்றவாறுதான் அஞ்சவும் முடியும், வழிப்படவும் முடியுமே தவிர அல்லாஹ்வின் தரத்திற்கும், அவனின் அந்தஸ்த்திற்கும் ஏற்றவாறு அவனை அஞ்சவும் முடியாது, வழிப்படவும் முடியாது. அவன் எல்லையில்லாப் பெருங்கடல். எம் பெருமானார் அவர்களே وَمَا عَرَفْنَاكَ حَقَّ مَعْرِفَتِكَ , وَمَا قَدَرْنَاكَ حَقَّ قَدْرِكَ உன்னை எவ்வாறு அறிய வேண்டுமோ அவ்வாறு நாங்கள் அறியவுமில்லை, உன்னை எவ்வாறு அஞ்ச வேண்டுமோ அவ்வாறு நாங்கள் அஞ்சவுமில்லை என்று கூறியுள்ளார்கள் என்றால் அதற்கப்பால் யாரால் என்ன சொல்ல முடியும்?
 
மேற்கண்ட முதலில் அருளப்பட்ட வசனமான اِتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ “அவனின் தரத்திற்கும், அந்தஸ்த்திற்கும் ஏற்றவாறு அவனை அஞ்சுங்கள்” என்ற திரு வசனம் அருளப்பட்ட பின் அவ்வாறு செயல்படுவது மனிதர்களுக்கு கஷ்டமாகி – சிரமமாகிவிட்டது என்பதை அறிந்த அல்லாஹ் அவனை அவர்கள் கஷ்டமின்றி வணங்க வேண்டுமென்பதற்காக முதலில் அருளிய வசனத்தை மாற்றி இலகுவாக அவர்கள் அஞ்சும் வகையில் இன்னொரு வசனத்தை அருளினான்.
 
இது தொடர்பாக திருமறையில் கூறிய அல்லாஹ்,
مَا نَنْسَخْ مِنْ آيَةٍ أَوْ نُنْسِهَا نَأْتِ بِخَيْرٍ مِنْهَا أَوْ مِثْلِهَا أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
“ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதை மறக்கச் செய்தால் அதை விடச் சிறந்ததை அல்லது அது போன்ற வசனத்தை நாம் கொண்டு வருவோம். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையோன் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று கூறியுள்ளான். (02-106)
 
திரு வசனத்தின் சுருக்கம்:
திருக்குர்ஆனில் نَاسِخْ ، مَنْسُوْخْ என்று இரு வகையான வசனங்கள் உள்ளன. “நாஸிக்” என்றால் மாற்றிய வசனம். “மன்ஸூக்” என்றால் மாற்றப்பட்ட வசனம்.
நான் மேலே எழுதிக்காட்டிய اتقوا الله حق تقاته அல்லாஹ்வை அவனின் தரத்திற்கேற்றவாறு அஞ்சி வழிப்பட வேண்டும் என்ற திரு வசனம் முதலில் இறங்கிய வசனமாகும்.
 
மனிதர்கள் எனது தரத்திற்கேற்றவாறு என்னை அஞ்சுவதற்கும், வழிப்படுவதற்கும் சக்தியில்லாதவர்கள் என்பதை அறிந்த அல்லாஹ் اِتَّقُوا اللهَ مَا اسْتَطَعْتُمْ நீங்கள் அல்லாஹ்வை உங்களால் முடிந்தவரை அஞ்சி வழிப்பட்டுக் கொள்ளுங்கள் (64-16) என்ற வசனத்தை அருளினான்.
இதன் மூலம் அல்லாஹ் திருக்குர்ஆனில் முதலில் ஒன்றைச் சொல்வான் என்பதும், பிறகு அது பொருத்தமற்றது என்று அறிந்தானாயின் அதை மாற்றி அதை விட அடியார்களுக்கு இலகுவான ஒன்றைச் சொல்வான் என்பதும், சொல்லியுமுள்ளான் என்பதும் தெளிவாகிறது.
 
இவ்வாறுதான் “புகஹாஉ” எனும் சட்ட மேதைகளுமாவர். உதாரணமாக சட்ட மேதைகளில் மிகச் சிறந்தவரான இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களுக்கு கிடைத்த தகவல்கள், ஆதாரங்கைளக் கொண்டு ஒரு சட்டம் சொல்வார்கள். பின்னர் தங்களுக்கு ஏற்கனவே கிடைத்த தகவலுக்கு மாறான ஆதாரம் கிடைத்து அது சரியென அவர்கள் கண்டார்களாயின் ஏற்கனவே சொன்ன சட்டத்துக்கு மாறாகச் சொல்வார்கள்.
 
இவ்வாறு சொன்னார்களாயின் அவர்கள் முதலில் சொன்ன சொல் قول قديم பழைய சொல் என்றும், பிறகு சொன்ன சொல் قول جديد புதிய சொல் என்றும் சொல்லப்படும். இவ்வாறு அவர்களே சொல்லியுமுள்ளார்கள்.
இவ்வாறு முதலில் ஒன்றைச் சொல்லிவிட்டு பிறகு அதை மாற்றிச் சொல்வது அல்லாஹ் செய்ததும், இமாம்கள் செய்ததுமேயாகும். இதேபோல் அரசாங்கங்களும் செய்கின்றன. பொது மக்களும் செய்கின்றனர். இவ்வாறு செய்தல் மனிதர்களின் நன்மையை கருத்திற் கொண்டேயாகும்.
 
ஆனால் ரிஸ்வி அவர்களோ “உலமா சபை கொடுத்த “பத்வா”வை வாபஸ் வாங்கியதற்கு வரலாறே கிடையாது” என்று நெஞ்சில் அடித்துக் கூறினார். இதன் மூலம் இவரின் கர்வமும், மமதையும் வெள்ளிடை மலை போல் வெளிச்சமாகிறதல்லவா? இதனால்தான் இவர் தனது எண்ணத்தில் தன்னை அல்லாஹ்வை விடப் பெரியவர் என்றும், அவனை விட அறிஞர் என்றும் தலைப்பில் எழுதினேன்.
 
இவர் ஒரு சமயம் “நாங்கள் றஊப் மௌலவீக்குப் “பத்வா” கொடுக்க வில்லை. எங்களுக்கு முன் இருந்தவர்கள்தான் கொடுத்தார்கள்” என்று சொல்லியுள்ளார். இவ்வாறு சொன்ன இவர் தன்னையும் உள்வாங்கி “உலமா சபை கொடுத்த பத்வா” என்று குறிப்பிட்டுள்ளார். இவர் நேரத்திற்கு ஒரு கதை சொல்வதால் இவர் மூளையோடு தொடர்புள்ள ஒரு வைத்தியரைச் சந்திப்பது நல்லதென்று நான் கருதுகிறேன்.
 
முப்தீ ஸாஹிபுவே! நீங்கள் “பிக்ஹ்” சட்டக்கலை கற்கவில்லையா? சட்டம் என்ன சொல்கிறதென்று உங்களுக்குத் தெரியாதா? சட்ட மேதைகள் என்ன சொல்லியுள்ளார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? தெரயாதென்றால் பதவியைத் துறந்துவிட்டு முதலில் சட்டம் கற்றுக் கொள்ளுங்கள்.
 
சட்ட மேதை இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும், இமாம் அப்துல் வஹ்ஹாப் ஷஃறானீ அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இமாம் ஷஃறானீ அவர்களின் “அல் யவாகீத்” நூலையும், இமாம் நவவீ அவர்களின் “றவ்ழா”, “மஜ்மூஉ” எனும் நூல்களையும் வாசித்துப் பாருங்கள். உங்களுக்கு விளங்காமற் போனால் குறித்த நூல்களுடன் என்னிடம் வாருங்கள்.
 
முதலில் அந்த நூல்களில் இடம் பெற்ற வசனங்களை எழுதிக் காட்டுகிறேன்.
سُئل الإمام محي الدين النّووي عن الشّيخ محي الدين ابن عربي، قال: تلك أمّة قد خلت، ولكنّ الّذي عندنا أنّه يحرم على كلّ عاقل أن يسيئَ الظّنّ بأحدٍ من أولياء الله تعالى عزّ وجلّ، ويجب عليه أن يؤوِّلَ أقوالهم ما دام لمْ يَلْحَقْ بدرجتهم، ولا يعجز عن ذلك إلّا قليلُ التوفيق، قال فى شرح المُهذّب، ثمّ إذا أوّل فليُؤوّلْ كلامَهم إلى سبعين وجها، ولا نقبلُ عنه تأويلا واحدا، ما ذاك إلّا تَعَنُّتٌ اهـ،
இமாம் சட்ட மேதை முஹ்யித்தீன் நவவீ அவர்களிடம் முஹ்யித்தீன் இப்னு அறபீ அவர்கள் பற்றிக் கேட்கப்பட்ட போது அவர்கள் பின்வருமாறு சொன்னார்கள்.
“அவர்கள் வாழ்ந்து மரணித்த ஒரு சமூகம், எனினும் நாங்கள் அவர்கள் விடயத்தில் சொல்வது என்னவெனில், நாம் செய்ய வேண்டிதும் என்னவெனில் அல்லாஹ்வின் வலீமார்களில் எவர் மீதும் கெட்ட எண்ணம் கொள்வது “ஹறாம்” ஆகும். தண்டனைக்குரிய குற்றமாகும். வலீமாரின் பேச்சுக்களில் எமது பார்வையில் பிழையிருப்பதாக எமக்குத் தெரிந்தால் பிழை என்று முடிவு செய்து விடாமல் அவர்களின் பேச்சுக்கு வலிந்துரை வைத்து நோக்க வேண்டும். அவர்கள் தவறு செய்துவிட்டார்கள் என்று முடிவு செய்தல் கூடாது. அவர்கள் அடைந்த தராதரத்தை நாமும் அடைந்து கொள்ளும் வரை இவ்வாறுதான் செய்ய வேண்டும். நற்பாக்கியம் பெற்றவர்கள் தவிர மற்றவர்கள் இவ்வாறு செய்யமாட்டார்கள். அவர்களின் பேச்சுக்கு வலிந்துரை கொடுப்பதாயினும் எழுபது வகையிலேனும் வலிந்துரை கொடுக்க வேண்டும். ஒரேயொரு வலிந்துரையோடு மட்டும் நின்று விடக் கூடாது. இவ்வாறு செய்தல் மன முரண்டாகும்” என்று கூறியுள்ளார்கள்.
 
وَمِنْهَا: مَا صرح بِهِ أَئِمَّتُنَا كالرافعي فِي الْعَزِيز وَالنَّوَوِيّ فِي (الرَّوْضَة) و (الْمَجْمُوع) وَغَيرهمَا من أَن الْمُفْتِي إِذا سُئِلَ عَن لفظ يحْتَمل الْكفْر وَغَيره لَا يَقُول هُوَ مهدر الدَّم أَو مباحه أَو يقتل أَو نَحْو ذَلِك، بل يَقُول يسئل عَن مُرَاده فَإِن فسره بِشَيْء عمل بِهِ،
எங்களின் ஷாபிஈ மத்ஹப் உடைய இமாம்களான இமாம் றாபிஈ அவர்கள் “அஸீஸ்” எனும் நூலிலும், இமாம் நவவீ அவர்கள் “றவ்ழா”, “மஜ்மூஉ” எனும் நூல்களிலும், இன்னும் இவையல்லாத ஏனைய நூல்களிலும் பின்வருமாறு தெளிவாகச் சொல்லியுள்ளார்கள்.
 
(ஒருவன் ஒரு சொல்லைச் சொல்கிறான். அது “குப்ர்” எனும் நிராகரிப்பு என்று சொல்வதற்கும், அவ்வாறில்லை என்று சொல்வதற்கும் சாத்தியமானதாய் இருக்குமாயின் ஒரு “முப்தீ” பத்வா வழங்குபவரிடம் ஒருவன் அதற்கு என்ன சட்டம் என்று கேட்டானாயின் அதற்கு அந்த “முப்தீ” அவனைக் கொலை செய்ய வேண்டும் என்றோ, அவனைக் கொலை செய்வது ஆகும் என்றோ சொல்லக் கூடாது. எனினும் அவ்வாறு சொன்னவனிடம் விளக்கம் கேட்க வேண்டும். அவன் எவ்வாறு விளக்கம் சொல்கிறானோ அதற்கேற்றவாறு அந்த “முப்தீ” சட்டம் சொல்ல வேண்டும்) என்று கூறியுள்ளார்கள்.
 
விளக்கம்:
யாரோ ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுக்குத் தலையுண்டு, அவனுக்கு கால் உண்டு, அல்லாஹ் உறங்கினான், அல்லாஹ் சாப்பிட்டான் என்று சொல்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் இவ்வாறு சொல்வதைச் செவியேற்ற ஒருவன் “பத்வா” வழங்கும் ஒரு “முப்தீ”யிடம் வந்து ஒருவன் இவ்வாறெல்லாம் சொல்கிறான் என்று கூறி இவனுக்கு என்ன “பத்வா” என்ன சட்டம் என்று கேட்டால் அவன் முர்தத், காபிர் என்று கூறுவதோ, அவனைக் கொலை செய்ய வேண்டும் என்று கூறுவதோ கூடாது. இதற்கு மாறாக அவ்வாறு சொன்னவனிடம் விளக்கம் கேட்க வேண்டும். அவன் கூறும் விளக்கத்திற்கேற்றவாறு சட்டம் சொல்ல வேண்டும். இதுவே மார்க்கமும், “ஷரீஆ” சட்டமுமாகும்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எனக்கும், எனது கருத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் “முர்தத்” என்று வழங்கிய “பத்வா” என்னிடம் விளக்கம் கேட்காமல் வழங்கிய “பத்வா” தீர்ப்பாகும். இத்தீர்ப்பு “ஷரீஆ” அடிப்படையில் சட்ட விரோதமானதென்பதில் சந்தேகமே இல்லை.
 
எனவே, சட்ட விரோதமாக எனக்கு மட்டுமன்றி எனது கருத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் “முர்தத்” என்று “பத்வா” வழங்கிய முழு மூடர்களான முல்லாக்களின் “பத்வா” சட்ட விரோதமானது மட்டுமன்றி கொலைக்கு மக்களைத் தூண்டிய குற்றமுமாகும். ஏனெனில் உலமா சபை மூடர்கள் “முர்தத்” என்று “பத்வா” வழங்கியது மட்டுமன்றி எங்கள் அனைவரையும் கொலை செய்ய வேண்டுமென்றும் தமது “பத்வா” புத்தகத்தில் தெளிவாக எழுதியுள்ளார்கள்.
 
மௌலவீ பாறூக் காதிரீ, பலாஹீ ஏன் கொலை செய்யப்பட்டார்?
காத்தான்குடியைச் சேர்ந்த மௌலவீ பாறூக் பலாஹீ அவர்கள் கொலை செய்யப்பட்டதற்குப் பிரதான காரணம் உலமா சபை வழங்கிய “பத்வா”வேயாகும்.
இது தொடர்பாக அரசாங்கப் புலனாய்வுத் துறை ஆய்வு செய்யுமாயின் இக் கொலையின் பின்னணியில் உள்ளவர்கள் வெளிச்சத்திற்கு வருவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
 
சுருக்கம்:
ரிஸ்வீ முப்தீ அவர்கள் “பத்வா”வை வாபஸ் பெற்று, தனது தீக்குணங்களை விட்டொழித்து, உண்மை, நேர்மை, நீதி, நியாயம், தூய்மை என்பவற்றைப் பேணினாராயின் அவர் உலமா சபையின் தலைவராயிருப்பதற்குத் தகுதியானவரே!
நான் ரிஸ்வீ அவர்களையும், “பத்வா” குழுவினரையும் சாடிப் பேசுவதால் நான் உலமா சபையில் ஓர் இடத்தைப் பிடிக்க நினைக்கிறேன் என்று சிலர் கருத இடமுண்டு. உண்மையில் அந்த நோக்கம் என் உள்ளத்தில் அணுவளவேனும் இல்லை என்று இறைவன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். எனக்கு நியாயம் வேண்டும். இது ஒன்று மட்டுமே எனது இலட்சியம். யார் தலைவராயிருந்தாலும் அதற்கு நான் ஆதரவானவன்தான். மூன்று மொழிகளும், ஆளுமையும் உள்ள ரிஸ்வீ அவர்கள் நீதி, நியாயம் பேணியும், பாரபட்சம் காட்டாமலும், வஹ்ஹாபிஸத்திற்கு ஆதரவின்றியும் செயல்படுவாராயின் அவர் ஆயுட்காலத் தலைவராயிருப்பதிலோ, அல்லது மரணித்த பின் அவரின் ஆன்மிக பலம் கொண்டு மீண்டும் உயிர் பெற்று வந்து தலைவராயிருப்பதிலோ எனக்கு ஆட்சேபனை கிடையாது. அல்ஹம்து லில்லாஹ்!
RELATED ARTICLES

Most Popular

Recent Comments