Monday, October 14, 2024
Homeஎழுத்தாக்கங்கள்மனிதர்களுக்கு நன்றி செய்யாதவன் அல்லாஹ்வுக்கு நன்றி செய்யாதவனாவான்!

மனிதர்களுக்கு நன்றி செய்யாதவன் அல்லாஹ்வுக்கு நன்றி செய்யாதவனாவான்!

தொடர் 02

அண்மையில் நான் ஏர்வாடி நகரில் சமாதி கொண்டுள்ள அரசர் அஷ்ஷஹீத் இப்றாஹீம் யர்பாதீ அவர்களைத் தரிசிப்பதற்காக கீழக்கரைக்கு அண்மையிலுள்ள ஏர்வாடி நகருக்கு எனது “முரீத்” சிஷ்யர்களுடன் சென்றேன்.
 
இந்நகர் இஸ்லாமியப் போர் நடந்த, தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஒரு நகர். “யர்பாத்” எனும் அறபு நாட்டிலிருந்து எம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் கட்டளைக்கு அமைவாக தமிழகம் வந்த பலம் வாய்ந்த ஒரு படை அணி.
தளபதியாக அஷ்ஷெய்கு இப்றாஹீம் ஷஹீத் அவர்களும், அவர்களின் பாதுகாப்பு மந்திரியாக அப்பாஸ் அவர்களும், டொக்டராக அப்துல் ஹகீம் அவர்களும், போர் வீரர்களாகப் பலரும் அறபு நாட்டிலிருந்து வந்தனர். இவர்களோடு பெண்கள் பலரும் வந்திருந்தார்கள்.
 
இப்போது இப்றாஹீம் ஷஹீத் அவர்களின் “தர்ஹா” உள்ள ஏர்வாடி நிலப்பரப்பை தமிழ் மன்னன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். அவனுடன் போர் தொடுத்தார்கள் தளபதி இப்றாஹீம் ஷஹீத் அவர்கள். பல கட்டங்களாகப் போர் நடந்தது. காபிர்களிற் பலரும், முஸ்லிம்களிற் பலரும் கொல்லப்பட்டனர்.
இதன் முழு விபரங்களையும் அறிய விரும்புவோர் “தென்பாண்டிச் சீமையிலே” என்ற தமிழ் நூலை வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 
அறபு நாட்டிலிருந்து தளபதி இப்றாஹீம் ஷஹீத் அவர்களுடன் வந்த பல போர் வீரர்கள் “ஷஹீத்”களாகி ஏர்வாடியிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
தளபதி இப்றாஹீம் ஷஹீத் அவர்களுக்கு கவர்ச்சியான தனி “தர்ஹா” உண்டு. அதேபோல் கடற்கரைக்குச் செல்லும் வழியில் மந்திரி அப்பாஸ் அவர்களுக்கும் தனி தர்ஹா உண்டு. அதேபோல் டொக்டர் அப்துல் ஹகீம் அவர்களுக்கும் தனி தர்ஹா உண்டு.
 
ஏர்வாடி “தர்ஹா” பைத்தியம், பேய், சூனியம் போன்றவற்றுக்கு மிக விஷேடமான மருத்துவ மனையாகும். இங்கு எல்லாக் காலங்களிலும் 500க்கும் அதிகமான நோயாளர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு மருந்து, மாத்திரை ஒன்றும் கொடுப்பதில்லை. இப்றாஹீம் ஷஹீத் அவர்களின் பார்வை ஒன்றே மருந்தாகிவிடும். கால் பைத்தியம், அரைப் பைத்தியம், முக்கால் பைத்தியம், முழுப் பைத்தியம் என்று பல ரகங்களில் பைத்தியக் காரர்கள் இருப்பார்கள்.
 
நோயாளர்கள் அனைவரும் கை, கால்களில் சங்கிலி கோர்த்து பூட்டுப் போடப்பட்ட நிலையிலேயே இருப்பார்கள். காலையும், மாலையும் தளபதியின் “தர்ஹா”வுக்கு அழைத்து வரப்பட்டு பாதுகாவலர்களால் ஸலாம் சொல்லிக் கொடுக்கப்படுவார்கள்.
சில வருடங்களுக்கு முன் நான் எனது நண்பர்களுடன் தளபதியின் தர்ஹாவை நோக்கிச் செல்கையில் காலில் சங்கிலியிடப்பட்ட ஒரு பைத்தியக் காரன் எங்களை நோக்கி “எங்கடா போறிய? குல் ஹுவல்லாஹ்வுக்கு விளக்கம் தெரியாது, சியாறத்தா உங்களுக்கு” என்று கேட்டான். அது இன்னமும் என் காதில் ஒலிக்கிறது.
 
அண்மையில் என்னுடன் பயணித்தவர்களுடன் நான் அங்கு சென்றேன். நான் அங்கு செல்லு முன்னேயே ஏர்வாடி தர்ஹா நிர்வாகிகள் எனது வருகை பற்றி ஏதோ ஒரு வகையில் தெரிந்து கொண்டார்கள் போலும். அவர்கள் ஏர்வாடி நகர் நுழைவாயலில் பொன்னாடையோடு காத்து நின்றார்கள். அவர்களில் என்னுடன் தொடர்புள்ள மூன்று சகோதரர்களும் நின்றார்கள். இவர்கள் ஏற்கனவே எனது பேச்சுக்களைக் கேட்டவர்களும், எனது நூற்களிற் சிலதை வாசித்தவர்களுமாவர்.
 
வாகனத்திலிருந்து நான் இறங்கியதும் தக்பீர் முழக்கத்துடன் பொன்னாடை போர்த்தி வரவேற்று “தர்ஹா”வுக்கு அழைத்துச் சென்றனர். தளபதி இப்றாஹீம் ஷஹீத் அவர்களும், அவர்களின் பேரரும் துயிலும் அறைக்கு அழைத்துச் சென்று இரு கப்றுகளுக்கும் போர்வை போர்த்தி “பாதிஹா” ஓதி துஆ ஓதப்பட்டது. அவ்விரு போர்வைகளும் எனக்குப் பொன்னாடைகளாக போர்த்தப்பட்டன.
 
ஏர்வாடிக்கு அண்மையிலுள்ள “வாலி நோக்கம்” வாழும் சகோதரி ஐனுல் ஆரிபா அவர்களும், அவரின் பிள்ளைகளும் என்னைக் காண்பதற்காக ஏர்வாடி தர்ஹாவுக்கு வந்தார்கள். அந்நேரம் நான் வாகனத்தில் இருந்தேன். காய்ச்சலும் கடுமையாக இருந்தது. உள்ளே இருந்தவாறே சுமார் அரை மணி நேரம் மட்டும் பேசக் கிடைத்தது. அவர் ஸாலிஹ் ஆன, இறைஞானமுள்ள பெண்ணாயிருந்தது கண்டு என் மனம் குளிர்ந்தது. அல்ஹம்து லில்லாஹ்! அல்லாஹ் அவருக்கும் அவரின் கணவன், மக்களுக்கும் நல்வாழ்வை வழங்குவானாக!
 
ஏர்வாடி தாபித், அவரின் சகோதரர் மற்றும், அவரின் உறவினர்களும், ஏனைய சகோதரர்களும் அங்கு சென்ற எங்கள் அனைவரையும் மன நிறைவோடு உபசரித்தார்கள். அல்ஹம்து லில்லாஹ்! அல்லாஹ் அவர்களனைவருக்கும் ஈருலக நற்பாக்கியங்களையும் நல்குவானாக!
 
மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
 
11.01.2023
 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments