Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அல்லாஹ் அனைத்து வஸ்த்துக்களையும் அறிந்தவனும், அவை கொண்டு அறியப்பட்டவனுமாவான்!

அல்லாஹ் அனைத்து வஸ்த்துக்களையும் அறிந்தவனும், அவை கொண்டு அறியப்பட்டவனுமாவான்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
அல்லாஹ் அனைத்து வஸ்த்துக்களையும் அறிந்தவனாயும், அதே போல் அனைத்து வஸ்த்துக்கள் கொண்டு – அவை மூலம் அறியப்பட்டவனாயும் உள்ளான். இதுவே இறை மறை தரும் தத்துவமாகும்.
 
இத் தத்துவம் எவராலும் மறுக்க முடியாத தத்துவம் என்பதற்கு திருக்குர்ஆன் வசனங்களும், நபீ மொழிகளும், இறைஞான மகான்களின் பேச்சுக்களும் ஆதாரங்களாக உள்ளன. அவற்றை இங்கு எழுதி விளக்கம் சொல்வதாயின் இக்கட்டுரை நீண்டு விடும். மிகவும் சுருக்கிச் சொன்னாற் கூட அது வாசகர்களுக்கு முழுமையான, திருப்தியான ஒரு விளக்கத்தை தரவும் மாட்டாது.

ஆகையால் அல்லாஹ் யாவும் அறிந்தவன் என்பதற்கான சுருதிப் பிரமாணங்களைக் கூறாமல் யுக்திப் பிரமாணங்களை மட்டும் எழுதுகிறேன்.
 
யுக்திப் பிரமாணங்கள்:
அனைத்தையும் படைத்தவன் அல்லாஹ் என்ற இறை நம்பிக்கையுள்ள அனைவருக்கும் அவன் யாவும் அறிந்தவன் என்ற நம்பிக்கை நிச்சயமாக இருக்கும்.
ஏனெனில் கடவுள் நம்பிக்கையில் இது ஒரு முக்கிய அம்சம் என்பது யாவரும் அறிந்ததே. அனைத்தையும் படைத்த இறைவனுக்கு அவை பற்றிய அறிவு நிச்சயமாகவே இருக்கும்.
 
எனவே, அனைத்தையும் அறிந்தவனா என்பதற்கான ஆதாரங்கள் தேடி நேரத்தை வீணாக்காமல் அல்லாஹ் சகல வஸ்த்துக்கள் கொண்டும் அறியப்பட்டவனாக உள்ளான் என்ற தத்துவத்தை மட்டும் சில ஆதாரங்கள் மூலம் விளக்கி வைக்கிறேன்.
وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
இத்திரு வசனத்திற்கு இரண்டு விதமாகப் பொருள் கூறலாம். ஒன்று அல்லாஹ் சகல வஸ்த்துக்களையும் அறிந்தவன் என்பது. மற்றது அவன் அனைத்து வஸ்த்துக்கள் கொண்டும் – அவை மூலம் அறியப்பட்டவன் என்பது. இவ்விரு பொருளும் சரியானவைதான்.
 
எனினும் அவன் அனைத்து வஸ்த்துக்களையும்அறிந்தவன் என்பதற்கு ஆதாரம் தேவையில்லை. ஏனெனில் இறைவனுக்கு எதுவும் தெரியாமலிருக்க முடியாது. அனைத்தையும் படைத்தவன் இறைவன் என்று நம்பின ஒருவன் அனைத்தையும் அவன் அறிந்தவனாக இருப்பான் என்று நம்பினவனாகவே இருப்பான்.
இறைவன் “அனைத்தைக் கொண்டும் அறியப்பட்டவன்” என்ற தத்துவத்தை விளக்கி வைப்பதாயின் மேற்கண்ட திரு வசனத்தில் வந்துள்ள عَلِيْمٌ – அலீம் என்ற சொல் பற்றி மொழியிலக்கணத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு விளக்கத்தை முதலில் கூற வேண்டும். இவ்விளக்கம் அறபு மொழியிலக்கணமும், சொல்லிலக்கணமும் தெரியாதவர்களுக்கு எளிதில் விளங்காதென்று நான் நினைக்கிறேன். ஆகையால் இவ்விளக்கத்தை மட்டும் குறித்த இலக்கணங்கள் தெரியாதவர்கள் தெரிந்தவர்களின் உதவியுடன் வாசித்தறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 
وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
என்ற திரு வசனத்தில் வந்துள்ள عَلِيْمٌ – அலீம் என்ற சொல்லுக்கு عَالِمٌ – ஆலிம் அறிந்தவன் என்றும் பொருள் கூறலாம். அச் சொல்லுக்கு مَعْلُوْمٌ – “மஃலூம்” அறியப்பட்டவன் என்றும் பொருள் சொல்லலாம்.
இவ்வாறு “நஹ்வு” கிதாபுகளில் – இலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல. அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் “அல்புதூஹாதுல் மக்கிய்யா” எனும் தங்க நூல் 361ம் பாடத்திலும் கூறியுள்ளார்கள். அவர்களின் வசனத்தை இறுதியில் எழுதுகிறேன். وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ என்ற திரு வசனத்தில் வந்துள்ள عَلِيْمْ – அலீம் என்ற அறபுச் சொல் فَعِيْلْ “பஈல்” எனும் “பின்யத்” அமைப்பில் வந்துள்ளது.
 
இதை இன்னும் சற்று விளக்கமாகச் சொல்கிறேன். நன்றாகக் கவனித்தால் புரியும்.
عليم
– “அலீம்” என்ற சொல் நான்கு எழுத்துக்கள் கொண்ட ஒரு சொல்லாகும். முதலாம் எழுத்தான “ஐன்” என்ற எழுத்துக்கு “பத்ஹ்” என்ற குறியீடும், இரண்டாம் எழுத்தான “லாம்” என்ற எழுத்துக்கு “கஸ்ர்” என்ற குறியீடும், மூன்றாம் எழுத்தான “யே” என்ற எழுத்துக்கு “சுகூன்” என்ற குறியீடும், நாலாம் எழுத்தான “மீம்” என்ற எழுத்துக்கு “சுகூன்” என்ற குறியீடும் உள்ளன.
 
இதே அமைப்பிலேயே فَعِيْلْ என்ற சொல்லும் உள்ளது. (அலீம் – பயீல்) عَلِيْمْ – فَعِيْلْ நான்கு எழுத்துக்கள் என்ற வகையிலும், குறியீடுகள் என்ற வகையிலும் இரு சொற்களும் ஒரே அமைப்பில் வந்துள்ளன.
“நஹ்வு” எனும் அறபு மொழியிலக்கணப்படி இவ்வாறு ஒன்றுபோல் வந்தால் அதற்கு – அச் சொல்லுக்கு مَفْعُوْلْ அமைப்பில் பொருள் சொல்ல முடியும் என்ற மொழி இலக்கண விதிப்படி “அலீம்” என்ற சொல்லுக்கு مَعْلُوْمْ அறியப்பட்டது அல்லது அறியப்பட்டவன் என்று பொருள் கொள்ளலாம்.
 
எனவே, மேற்கண்ட திரு வசனத்திற்கு மேற்கண்ட விளக்கத்தின்படி “அல்லாஹ் சகல வஸ்த்துக்களையும் அறிந்தவன்” என்றும், “அவன் சகல வஸ்த்துக்கள் கொண்டும் அறியப்பட்டவன்” என்றும் பொருள் சொல்லலாம். தப்புமில்லை, தவறுமில்லை.
எந்த ஓர் அறபுச் சொல்லாவது நான் மேலே எழுதிய முறைப்படி فَعِيْلْ – “பயீல்” என்ற அமைப்பில் வருமாயின் அதற்கு பின்வருமாறு இரண்டு விதமாக பொருள் கூறலாம். எவ்வாறு கூறினாலும் இரு வகைப் பொருளும் சரியானதேயாகும்.
 
நான் கூறும் இவ் விளக்கம் சரியானதா? பிழையானதா? என்பதை அறிய விரும்பும் ஆலிம்கள் புகாரீ, முஸ்லிம் போன்ற நூல்களைப் புரட்டியோ, அல்லது “தப்ஸீர்” திருக்குர்ஆன் விரிவுரை நூல்களைப் புரட்டியோ விடை கண்டு பிடிக்க முடியாது. அவர்கள் அறபுக் கல்லூரிகளில் தாம் கற்ற “நஹ்வு” மொழியிலக்கண நூல்களை புரட்டினால் மட்டுமே கண்டு பிடிக்க முடியும். ஆயினும் நான் கூறும் இவ்விளக்கம் பெரிய தலைப்பாகைகளுக்கும், பெரிய தாடிகளுக்கும் தெரியாமற் போனாலும் கூட 15, 16 வயதுள்ள அறபுக் கல்லூரி மாணவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
 
فَعِيْلْ
என்ற அமைப்பில் வருகின்ற சொல்லுக்கு مَفْعُوْلْ எனும் அமைப்பிலுள்ள பொருள் கொடுக்கலாம் என்பதற்கு உதாரணம் ஒன்று தருகிறேன்.
உதாரணமாக قَتِيْلْ என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். இச் சொல் فَعِيْلْ என்ற அமைப்பில் வந்துள்ளது. மேற்கண்ட குறியீடுகள் சரியாக உள்ளன. ஆகையால் இச் சொல்லுக்கு مفعول உடைய பொருள் கூற முடியும். அதாவது قَتِيْلْ என்ற இச் சொல்லுக்கு مَقْتُوْلْ உடைய பொருளான கொலை செய்யப்பட்டவர் என்று பொருள் கூற முடியும்.
இவ் அடிப்படையில் மேற்கண்ட திரு வசனமான وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيْمْ என்ற வசனத்தில் வந்துள்ள “அலீம்” என்ற சொல்லுக்கு مَعْلُوْمْ அறியப்பட்டவன் என்று பொருள் கொண்டு “அல்லாஹ் அனைத்து வஸ்த்துக்கள் கொண்டும் அறியப்பட்டவனாவான்” என்று தாராளமாகப் பொருள் கூற முடியும்.
 
இவ்வாறு பொருள் சொல்லுதல் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை தொட்டுக் காட்டுகிறதென்று விளங்க வேண்டும்.
ஒவ்வொரு வஸ்த்து கொண்டும், ஒவ்வொரு படைப்பு கொண்டும் அல்லாஹ் அறியப்பட்டவன் என்றால் அவ் வஸ்த்து அல்லது அப்படைப்பு அவன் என்றே கொள்ள வேண்டும்.
 
இது எது போன்றதென்றால் اَلْقُطْنُ مَعْلُوْمٌ بِالثَّوْبِ பஞ்சு என்பது துணி கொண்டு அறியப்பட்டதாகும், اَلذَّهَبُ مَعْلُوْمٌ بِالسِّوَارِ தங்கம் என்பது வளையல் கொண்டு அறியப்பட்டதாகும் என்று சொல்வது போன்றாகும்.
அதாவது துணியானது தான் பஞ்சு என்றும், வளையலானது தான் தங்கம் என்றும் சொல்வது போன்றாகும். இதை இன்னும் சற்று விளக்கமாகச் சொல்வதாயின் துணி பஞ்சுதான், வளையல் தங்கம்தான், இரண்டும் எதார்த்தத்தில் ஒன்றுதான். துணி பஞ்சுக்கு வேறானதுமல்ல, வளையல் தங்கத்திற்கு வேறானதுமல்ல என்றே சொல்ல வேண்டும்.
 
துணி தன்னை பஞ்சின் வெளிப்பாடு என்றும், வளையல் தன்னை தங்கத்தின் வெளிப்பாடு என்றும் சொல்வது போல் எந்த ஒரு படைப்பாயினும் அது தன்னை அல்லாஹ் என்றே சொல்கிறது. ஒரு கோலத்திற்கு எது மூலமோ அக்கோலம் அதன் மூலம் தானானது என்று சொல்கிறது.
 
كُنْتُ كَنْزًا مَخْفِيًّا، فَأَحْبَبْتُ أَنْ أُعْرَفَ، فَخَلَقْتُ الْخَلْقَ، فَبِيْ عَرَفُوْنِيْ
“நான் மறை பொருளாகயிருந்தேன். (அறியப்படாதவனாயிருந்தேன்) நான் அறியப்பட வேண்டும் என்று விரும்பினேன். உடனே படைப்பை படைத்தேன். எனவே, என்னைக் கொண்டே அவர்கள் என்னை அறிந்தனர்” எனும் மேற்கண்ட “ஹதீதுக் குத்ஸீ” நான் கூறி வருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தையே உணர்த்துகிறது.
சுருக்கம் என்னவெனில் துணியாய் வந்தது பஞ்சேதான், அதேபோல் வளையலாய் வந்தது தங்கமேதான். துணி பஞ்சுக்கு வேறானதுமல்ல, வளையல் தங்கத்திற்கு வேறானதுமல்ல.
 
இவ்வாறுதான் ஹக்கும், கல்குமாகும். படைத்தவனும், படைப்புமாகும்.
(ما معنى قوله تعالى وهو بكلّ شيء عليم) سُئل الشّيخ الأكبر محي الدين ابن عربي قدّس سرّه ما معنى قوله تعالى ‘وهو بكلّ شيء عليم ‘ هل عليمٌ بمعنى عالمٍ أو بمعنى معلومٍ؟
أجاب الشّيخ بجواب صريح وافر كما فى كتابه ‘ الفتوحات المكيّة ‘ فى الباب الحادي والسّتِّين وثلاثمأة (361 ) ‘ إنّ بِنْيةَ فعيل ترِدُ بمعنى الفاعل وبمعنى المفعول، كقَتِيلٍ وجَرِيْحٍ، وأمّا قوله تعالى هنا ‘ عَلِيْمٌ ‘ فهو بمعنى عالمٍ، وبمعنى مَعلُوم معًا، فإنّ الباء فى قوله ‘ بكلّ شيء ‘ بمعنى ‘ فى ‘، فهو تعالى فى كلّ شيء معلومٌ، وبكلّ شيءٍ مُحِيْطٌ، إلى آخر ما قال،
மனிதா!
 
لَوْ زَالَ عَنْكَ أَنَا – لَلَاحَ لَكَ مَنْ أَنَا
நான் எனும் உணர்வு உன்னைவிட்டும் நீங்கினால் “நான்” யாரென்று உனக்குப் புரியும்.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments