Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஸூபிஸ முஸ்லிம்கள் பள்ளிவாயலுக்குள் சென்றதால் அதைக் கழுவ வைத்த முல்லாக்களின் “பத்வா”! முல்லாக்களின் “முர்தத் பத்வா”...

ஸூபிஸ முஸ்லிம்கள் பள்ளிவாயலுக்குள் சென்றதால் அதைக் கழுவ வைத்த முல்லாக்களின் “பத்வா”! முல்லாக்களின் “முர்தத் பத்வா” முஸ்லிம்களைப் பிளவு படுத்துகிறது.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
1979ம் ஆண்டு இஸ்லாமிய ஸூபிஸ தத்துவம் பேசிய எனக்கும், நான் பேசிய கருத்தைச் சரி கண்டவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மதம் மாற்றி “பத்வா” வழங்கிவிட்டு நாங்கள் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்றும், எங்கள் அனைவரையும் கொன்று குவிக்க வேண்டும் என்றும் “பத்வா” வழங்கியது, அதை நூலாக அச்சிட்டு இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் வினியோகித்து ஸூபிஸ சமூகத்தை அவமானப் படுத்தியதோடு எங்களை முஸ்லிம்களுக்கும், இஸ்லாம் மார்க்கத்திற்கும் எதிரானவர்கள் என்றும் பகிரங்கப்படுத்தியது. பொய்ப் பிரச்சாரத்தை செய்தது.

அறிவற்ற இவர்களின் இந் நடவடிக்கையால் ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளிற் பல தீக்கிரையாக்கப்பட்டன. பலர் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர். பலரின் வீடுகள், நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டன. எமது பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலின் முன்னால் ஓலையால் கட்டப்பட்டிருந்த “ஹட்” ஒன்று மூன்று கட்டங்களில் தீக்கிரையாக்கட்டது. ஸூபிஸ சமூகத்தின் சங்கமான இஸ்லாமிய மெய்ஞ்ஞானப் பேரவையும் பல முறை தீக்கிரையாக்கப்பட்டது. இவற்றுக்கு இவ் ஊரும், இவ் ஊர் மக்களுமே சாட்சிகளாவர். இவையாவும் பகிரங்கமாக நடந்தவையேயாகும்.
 
காத்தான்குடியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த நேரம் கூட எதிரிகளிருவர் எமது பள்ளிவாயலுக்கு தீப்பந்தங்களுடன் வந்து தீ வைத்த போது எமது பாதுகாப்பு இளைஞர்களிடம் ஒருவர் வசமாக மாட்டி பள்ளிவாயல் தூணில் இரவு 01.30 மணியிலிருந்து காலையில் பொலீஸ் வரும் வரை கட்டப்பட்டு மட்டக்களப்பு பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு பொலீஸாரின் வேண்டுகோளுக்கிணங்க நான் மன்னித்து அவர் விடுதலை செய்யப்பட்டார். மற்றவர் ஓடி ஒழித்து விட்டார். இன்னும் உயிரோடுதான் உள்ளார். அரசாங்கம் கேட்டால் மட்டும் அவரைக் காட்டுவோம்.
இது நீதியா? அநீதியா? இது மனித உரிமை மீறலா? இல்லையா? நீதியுள்ள உள்ளங்கள் பதில் கூறட்டும்.
 
ஒரு சமயம் எதிரிகளின் அட்டூழியம் எல்லையைக் கடந்ததால் காத்தான்குடி தீன் வீதியில் வசித்து வந்த மக்கள் பக்கத்திலுள்ள தமிழ் சகோதரர்களின் ஊரான ஆரையம்பதிக்குச் சென்று அவர்களிடம் தஞ்சம் கேட்ட போது அவர்கள் பெரு மனதோடு ஆதரித்து பாடசாலை ஒன்றில் சில நாட்கள் தங்க வைத்து உபசரித்தார்கள்.
 
உலமாஉகளின் “பத்வா” தீர்ப்பை அமுல்படுத்தி சுவர்க்கம் சென்று விடலாமென்ற அறியாமையால் பலர் ஸூபிஸ முஸ்லிம்களுக்கு பல்வேறு தொல்லைகள் கொடுத்தனர். இவர்களின் அட்டூழியங்களுக்கு சாட்சிகளாக இவ்வூர் மக்களில் பலர் உள்ளனர். எந்த நீதி மன்றம் சென்றும் சாட்சி சொல்வதற்கு அவர்கள் இன்றுவரை ஆயித்தமாகவே உள்ளனர். அவர்கள் அட்டூழியம் செய்யும் போது எடுக்கப்பட்ட படங்களும் ஆதாரங்களாக உள்ளன. அவற்றில் சில பிரதிகள் புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
 
பள்ளிவாயலைக் கழுவிய மூடர்களும், அவர்களைக் கழுவ வைத்த மூடர்களான முல்லாக்களின் “பத்வா”வும்!
 
“பத்வா” எனும் நூலின் போதை தலைக்கேறிய சிலர் ஸூபிஸ முஸ்லிம்கள் ஒரு பள்ளிவாயலுக்கு ஜனாசா தொழுகைக்காக சென்றதால் அதைக் கழுவினார்கள். “முர்தத்” மதம் மாறியவர்கள் வந்த பள்ளிவாயலைக் கழுவ வேண்டுமென்று தமது அறியாமையால் கழுவி இவ் ஊரில் ஸூபிஸ சமூகத்தை அவமானப்படுத்தினார்கள். இது ஊரறிய, ஊர் மக்களறிய நடுப் பகலில் நடந்த கண் எரியும் காட்சியாகும். இதற்கு சாட்சி இவ் ஊரும், ஊர் மக்களுமேயாவர். அரசாங்கம் சாட்சிகள் கேட்டால் கொடுப்பதற்கு நாம் தயாராக உள்ளோம். பள்ளிவாயலைக் கூலிப் படைகள் கழுவினாலும் அவர்களுக்குப் பணம் கொடுத்து செய்வித்தவர்கள் அப்பள்ளிவாயல் நிர்வாகிகளேயாவர். இது தொடர்பான முழு ஆவணங்களும் கொடுக்க வேண்டிய இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் விசாரிக்குமாயின் ஆவணங்கள் மேசையேறும்.
 
முஸ்லிம் அல்லாதவர்கள் பள்ளிவாயலுள் சென்றால் அதைக் கழுவ வேண்டுமென்று திருக்குர்ஆனும் கூறவில்லை, நபீ மொழிகளும் கூறவில்லை. இஸ்லாமிய “லோ” சட்டமும் கூறவில்லை.
முஸ்லிம்கள் அல்லாதவர்கள் பள்ளிவாயலுள் பிரவேசிப்பது பற்றி தெளிவான கருத்துகள் கூறப்பட்டுள்ளன.
 
திரு மக்கா நகரினுள் “மஸ்ஜிதுல் ஹறாம்” மக்காப் பள்ளிவாயலில் மட்டும் முஸ்லிம் அல்லாதவர்கள் பிரவேசிப்பது சட்டத்தில் தடுக்கப்பட்டதாகும்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْمُشْرِكُونَ نَجَسٌ فَلَا يَقْرَبُوا الْمَسْجِدَ الْحَرَامَ بَعْدَ عَامِهِمْ هَذَا
விசுவாசிகளே! நிச்சயமாக இணை வைத்துக் கொண்டிருப்போர் அனைவரும் அசுத்தமானவர்களே! ஆகவே அவர்கள் இவ் வருடத்திற்குப் பின்னர் சிறப்புற்ற இப்பள்ளிவாயலை நெருங்க வேண்டாம். (09-28)
“முஷ்ரிகூன்” இணை வைத்தவர்கள் என்ற சொல் “காபிர்”களையும் உள்வாங்கிக் கொள்ளும். பொதுவாக முஸ்லிம் அல்லாதவர்கள் திரு மக்காவிலுள்ள பள்ளிவாயலுக்குள் செல்வது தடை. இது தவிர ஏனைய பள்ளிவாயலில் அவர்கள் பிரவேசிப்பதில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பின்னால் நான் எழுதுகின்ற விபரப்படி அது ஆகும்.
 
وأما المشرك لا يجوز له البيتوتة، والمكث، والعبور في المسجد الحرام لظاهر قوله: إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام، وله فيما عدا المسجد الحرام أن يمكث، ويبيت بإذن مسلم، ودون إذن مسلم فيه وجهان. (كتاب التعليقة للقاضي حسين)
திரு மக்காப் பள்ளிவாயல் தவிர வேறு பள்ளிவாயலுள் காபிர்கள் பிரவேசிப்பது ஆகுமென்றிருக்கும் நிலையில் எதிரிகளால் மதம் மாற்றி வைக்கப்பட்ட உண்மை முஸ்லிம்கள் – ஸூபீ முஸ்லிம்கள் எல்லாப் பள்ளிவாயலுக்கும் செல்ல முடியும். அங்கு தங்கவும் முடியும். இதுவே இஸ்லாமிய சட்டம்.
 
ஆயினும் திரு மக்காப் பள்ளிவாயல் உள்ளிட்ட எந்தப் பள்ளிவாயலுக்கு யார் போனாலும் பள்ளிவாயல் கழுவப்பட வேண்டுமென்று ஒரு சட்டம் கிடையாது.
எனவே, உலமா சபையால் மதம் மாற்றப்பட்ட ஸூபீ முஸ்லிம்கள் திரு மக்காப் பள்ளிவாயல் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிவாயலுக்கும் செல்ல முடியும். அவ்வாறு அவர்கள் போனால் பள்ளிவாயலைக் கழுவுதல் அறியாமையும், பொறாமையுமேயாகும். ஆனால் காத்தான்குடி பள்ளிவாயலுள் ஸூபிஸ முஸ்லிம்கள் போனதற்காக பள்ளியைக் கழுவியவர்கள் சலம் கழித்துவிட்டு சட்டப்படி சுத்தம் செய்யத் தெரியாத எரிச்சல், பொறாமை உள்ளவர்களேயாவர். மடையர்கள் இவ்வாறு செய்தாலும் கூட இது முல்லாக்களின் “பத்வா” தீர்ப்பின் தாக்கமேயாகும். இது நீதியா? அநீதியா? மனித உரிமை மீறலா? இல்லையா? மனச் சாட்சியுள்ளவர்கள் பதில் கூறட்டும்.
 
இவ்வாறான அட்டூழியங்கள் காத்தான்குடியில் நடப்பது மதம் மாற்றித் தீர்ப்புக் கூறிவிட்டு பஞ்சணை மேல் படுத்துறங்கும் முப்தீகளுக்குத் தெரியுமா? அல்லது தலைவருக்குத்தான் புரியுமா?

“பத்வா” வழங்கப்படுமுன் நகமும், சதையும் போல் வாழ்ந்த கணவன், மனைவி “பத்வா” வழங்கப்பட்ட பின் பாம்பும், கீரியும் போல் மாறி “காழீ” நீதி மன்றில் காலையும், மாலையும் கால் கடுக்க காத்து நிற்கும் காட்சி ரிஸ்வீ அவர்களுக்கும், “பத்வா” எழுதியவர்களுக்கும் தெரியுமா?
 
பேசப்படும் திரு மணங்களில் எத்தனையோ திருமணப் பேச்சுவார்த்தைகள் “பத்வா” அல்லது ஸூபிஸம் என்பதைக் கருவாகக் கொண்டு குழம்பிவிடுகின்றன.
பெண் தரப்பும், மணமகன் தரப்பும் “பத்வா”வுக்கு ஆதரவானவர்களாக இருந்தார்களாயின், அல்லது ஸூபிஸத்திற்கு ஆதரவானவர்களாக இருந்தார்களாயின் திருமணப் பேச்சு வார்த்தை “ஸலவாத்”துடன் சந்தோஷமாக நிறைவு பெறும்.
கொள்கையில் இரு தரப்பினரும் எதிரும், புதிருமாக இருந்தார்களாயின் அந்தப் பேச்சுவார்த்தை ஸலவாத் இன்றியே கலையும். அத்தோடு அவர்களுக்கிடையே இருந்து வந்த உறவும் கெட்டுப் போய் விடும்.
 
திருமணப் பேச்சுவார்த்தைகள் “பத்வா” வழங்கப்பட்ட காலம் முதல் இற்றைவரை இவ்வாறே நடைபெற்று வருகிறது. இது “பத்வா”வின் தாக்கமேயாகும்.
இதேபோல் ஒரே கொள்கையுள்ள கணவன் மனைவியர்களில் யாரோ ஒருவர் முரண்பட்டு மறு பக்கம் மாறி விடுவார்களாயின் அவர்களின் திருமண விவகாரம் “காழீ” நீதி மன்றமே செல்கிறது. இதோடு அக்குடும்பமே சிதறிவிடுகிறது. ஒற்றுமையும் கெட்டு விடுகிறது.
 
முல்லா மகான்களின் அறிவற்ற, தூர நோக்கற்ற நடவடிக்கை காரணமாக – பத்வா காரணமாக – அவர்களின் தீர்ப்பின் படி ஸூபி முஸ்லிம் ஒருவர் மரணித்தால் அவரின் ஜனாசாவுக்குரிய நான்கு கடமைகளில் ஒன்று கூடச் செய்யக் கூடாதென்று கூறப்பட்டுள்ளது. அதாவது முல்லாக்கள் இவ்வாறு சட்டம் சொல்லியுள்ளார்கள். அவர்கள் சொல்லியுள்ள சட்டம் சரியானதே. ஆயினும் இச்சட்டம் “காபிர்” “முஷ்ரிக்” ஆகியோருக்குள்ள சட்டமேயன்றி ஸூபீ முஸ்லிம்களுக்குரிய சட்டமல்ல. முல்லாக்கள் துறை தெரியாமல் தோணி தொடுத்து விட்டனர்.
 
முல்லாக்களின் இவ் அநீதியான “பத்வா” இன்னும் தொடர்ந்து அமுலில் இருந்தால் முஸ்லிம்களுக்கிடையிலேயே சண்டை, சச்சரவுகளும், அடிதடிகளும், மனக் கசப்புகளும், திருமணப் பிரிவினைகளும், இன்னும் பல விபரீதங்களும் ஏற்படச் சாத்தியமுண்டு. அரசாங்கம் இவ் விவகாரத்தில் கூடிய கவனம் செலுத்தி நீதியை நிலை நாட்ட வேண்டும். மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்துவதற்கும், மீறுவோரைத் தண்டிப்பதற்கும் அரசாங்கம் முன்வர வேண்டும்.
ஸூபிஸ சமூகம் நீதிக்கு எப்போதும் தலை சாய்க்கும். இலங்கை வாழ் முஸ்லிம்களிற் பலர் பல அமைப்புக்களில் உள்ளனர். இலங்கையில் பல இஸ்லாமிய அமைப்புக்கள் உள்ளன. தப்லீக் அமைப்பு, தவ்ஹீத் அமைப்பு, ஜமாஅதே இஸ்லாமீ அமைப்பு, ஸுன்னத் வல் ஜமாஅத் அமைப்புக்கள் போன்று. இவ் அமைப்புக்கள் எல்லாமே ஒரே கொள்கையுள்ள அமைப்புக்கள் அல்ல.
 
இதேபோல் இலங்கையில் பல “மத்ஹப்” அமைப்புக்கள் உள்ளன. ஷாபிஈ மத்ஹப், ஹனபீ மத்ஹப், ஹன்பலீ மத்ஹப், மாலிக் மத்ஹப் போன்று. இவ் அமைப்புக்கள் எல்லாமே ஒரே சட்டத்தைப் பின்பற்றும் அமைப்புக்கள் அல்ல.
இதேபோல் இலங்கையில் பல “தரீகா” அமைப்புக்கள் உள்ளன. காதிரிய்யா, ஷாதுலிய்யா, சிஷ்திய்யா, நக்ஷபந்திய்யா, போன்று. இவ் அமைப்புக்கள் எல்லாமே ஒரே கொள்கையுள்ள அமைப்புக்கள் அல்ல. இவ் அமைப்புக்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் நிறைய உள்ளன. இதேபோல் பிறை காணுமுன் நோன்பு நோற்கும் ஓர் அமைப்பும் உண்டு.
 
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அவர்களின் கண்களுக்கு, “பத்வா” வழங்கிய “முப்தீ” மகான்களின் கண்களுக்கும் இவ் அமைப்புகளின் கொள்கையும், நடவடிக்கைகளும் தெரியாமற் போனதேனோ!
அரசனுக்கும், ஆண்டிக்கும் நீதி ஒன்றே!
 
கிழக்கில் வாழ்பவனுக்கும், மேற்கில் வாழ்பவனுக்கம் சட்டம் ஒன்றே!
RELATED ARTICLES

Most Popular

Recent Comments