தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
1979ம் ஆண்டுக்கு முன் தனி முஸ்லிம் பட்டினமாயிருந்த காத்தான்குடியை அதன் பின் “முஸ்லிம் – முர்தத்” கலவன் பட்டினமாக ஆக்கிய பெருமை யாரைச் சாரும்?
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிர்வாகிகளையும், அதன் தலைவர் மும் மொழிப் பண்டிதர், “முர்தத்” பத்வாவை அமுல் படுத்திக் கொண்டிருக்கும் ரிஸ்வீ முப்தீ அவர்களையே சாரும்.
أذلّهم الله فى الدّارين، وعاقبهم بعقاب لم يعاقب أحدا من خلقه، وجعل فراقهم من هذه الدنيا نعمة ورحمة وراحة للمتصوّفين الموحّدين، وعبرة ودرسا لمن بعدهم من المعاندين المتمرّدين،
ஒரு காலம் காத்தான்குடி தமிழகத்தின் காயல்பட்டினம் என்று பெருமையாகப் பேசப்பட்டும், புகழப்பட்டும் வந்தது. இந்தியாவிலிருந்து இலங்கை வரும் அறிஞர்களும், பேச்சாளர்களும் “தமிழகத்திற்கு காயல் நகர், இலங்கைக்கு காத்தான்குடி நகர்” என்றே பேசியும் வந்துள்ளார்கள்.
ஆயினும் வஹ்ஹாபிஸ வழிகேடு இப்பட்டினத்துள் நுழைந்த பின்னும், தற்கொலைக் குண்டுதாரியின் அட்டூழியம் வெளியான பின்னும் வெளியூர்வாசிகள் காத்தான்குடியா? ஷாத்தான்குடியா? என்று இழித்துரைக்குமளவு இப்பட்டினம் தள்ளப்பட்டுள்ளது.
அல்லாஹ் இப்பட்டினத்தையும், இங்கு வாழும் நன் மக்களையும் பாதுகாத்து அருள் சொரிவானாக!
கடந்த காலங்களில் காத்தான்குடிப் பட்டினம் பற்றிப் பேசிய மேடைப் பேச்சாளர்கள் கூட இதைப் புகழ்ந்தும், இது போன்ற முஸ்லிம்கள் மட்டும் வாழும் ஊர் இலங்கையில் கிடையாதென்றும் பெருமையாகப் பேசியது இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஆயினும் இதன் பிறகு எவரும் காத்தான்குடி தனி முஸ்லிம் ஊர் என்று பெருமையுடன் பேசுவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலைக்கு இப்பட்டினத்தைத் தள்ளியவர்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா என்றால் அது மிகையாகாது.
இஸ்லாமிய வரலாற்றில் பொறாமைக் காரர்களின் தூண்டுதலால் ஸூபிஸ மகான்களிற் பலர் “காபிர் – முர்தத்” என்று உலமாஉகளால் “பத்வா” வழங்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் மிகப் பிரசித்தி பெற்ற மகான் இறாக் நாட்டைச் சேர்ந்த மன்சூர் ஹல்லாஜ் அவர்களாவர்.
இவர்கள் “அனல் ஹக்” “நான் அல்லாஹ்” என்று சொன்னதற்காக கொல்லப்பட்டதாகவும் வரலாறு உண்டு. அவர்கள் காலத்தில் வாழ்ந்த பொறாமையுள்ள உலமாஉகளின் சதியால் கொல்லப்பட்டார்கள் என்றும் வரலாறு உண்டு.
எவ்வாறு கொல்லபட்டிருந்தாலும் கூட அவ்வாறு சொன்ன அவர்களுக்கு மட்டுமே “காபிர்” என்று “பத்வா” வழங்கப்பட்டதேயன்றி அவரைச் சார்ந்தவர்களில் – அவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டு அவர்களோடு இருந்தவர்களில் எவருக்கும் “பத்வா” வழங்கப்படவில்லை. அவர்கள் கொலை செய்யப்படவுமில்லை.
ஆயினும் நமது இலங்கை நாட்டு உலமா சபை எனக்கு மட்டுமன்றி எனது கருத்தை ஏற்றுக் கொண்டவர்களையும் உள்வாங்கியே “முர்தத்” என்று “பத்வா” வழங்கியுள்ளார்கள்.
அவர்களின் “பத்வா” நூல் தமிழ்ப் பகுதி 23ம் பக்கத்தில் 04ம் பந்தியில் (அப்படியே மேலே சொல்லப்பட்ட கருத்துக்களை எவ்வித வற்புறுத்தலும் இல்லாத நிலையில் சுயமாக நம்புவோரும் “முர்தத்” ஆகிவிடுகிறார்) என்று எழுதியுள்ளார்கள்.
அதாவது என்னையும், எனது கருத்தை ஏற்றுக் கொண்டவர்களையும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று கூறுகிறார்கள்.
இவர்களின் இக்கூற்றின் படி காத்தான்குடியில் மட்டும் பதின் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான ஆண்களும், பெண்களும், இலங்கையில் ஏனைய ஊர்களைச் சேர்ந்த பல்லாயிரம் பேர்களும் உள்ளனர். இவை தவிர இந்தியா, சிங்கப்பூர், கனடா, மலேசியா, லண்டன், ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும் எனது கருத்தைச் சரி கண்ட இலங்கையர்கள், மற்றும் வெளிநாட்டவர்கள் நிறைய உள்ளனர்.
உலமா சபையின் “பத்வா” தீர்ப்பின் படி இவர்கள் அனைவரும் மதம் மாறியவர்களேயாவர். அவர்கள் மதம் மாறியவர்களா? அல்லது உண்மை முஸ்லிம்கள்தானா? என்பதை அல்லாஹ் அறிந்தவன்.
ஆனால் இவ்வாறு “பத்வா” வழங்கியிருப்பது எல்லாக் கண்ணோட்டத்திலும் 100 வீதமும் பிழையேயாகும். நீங்கள் என்னதான் காரணம் சொன்னாலும் அது ஏற்றுக் கொள்ள முடியாததேயாகும்.
தலைவர் அவர்கள் இப்போது சொல்லிக் கொண்டிருப்பது போல் “பத்வா” வழங்கிய நேரம் தான் அறபுக் கல்லூரியில் ஓதிக் கொண்டிருந்ததாகவும், அவ்வேளை தனக்கு 21 வயதென்றும், “பத்வா” தொடர்பாக தனக்கு ஒன்றுமே தெரியாதென்றும் சொல்கிறார். இது உண்மையாக இருக்கலாம். நாம் மறுக்கவில்லை. ஆயினும் இத்தனை வருடங்களாக “பத்வா”வை அமுல்படுத்திக் கொண்டிருப்பவர் யார்? நீங்கள்தான் தற்போது தலைவராயுள்ளீர்கள். உங்களுக்கு முன்னுள்ளவர்கள் கொடுத்த “பத்வா”வை நீங்கள் சரிகாணவில்லை என்றால் அந்த பிழையான “பத்வா”வை அமுல் படுத்துவது எவ்வாறு? இது நீதியா? அநீதியா? இது மனித உரிமை மீறலா? இல்லையா? உங்களின் “பத்வா”வினால் தாக்கப்ட்டவர்கள், மனித உரிமைகள் மீறப்பட்டவர்கள் பல்லாயிரம் பேர் உள்ளார்களே! இவர்களுக்கு நீதி என்ன?
நீங்கள் செய்த தவறுகள் நிறைய இருந்தாலும் அவற்றில் மூன்று தவறுகள் எவரும் சரியென்று சொல்ல முடியாத தவறுகளாகும். அவற்றில் ஒன்று – குற்றவாளி என்று கருதப்பட்ட என்னை ஒரு தரமேனும் விசாரிக்காமல் தீர்ப்பு வழங்கியமை.
விசாரணையின்றித் தீர்ப்புக் கூறுதல் “ஷரீஆ” சட்டப்படியும் பிழைதான். ஆன்மிக அடிப்படையிலும் பிழைதான். அரச, பொது நியதிப்படியும் பிழைதான். நாங்கள் உங்களை அழைத்தும் நீங்கள் வரவில்லையே என்று நீங்கள் சொல்லலாம். ஆம். நான் வரவில்லை. வரமுடியாமற் போன காரணத்தைக் கூறி நான் அனுப்பிய பதிலை நீங்கள் தூக்கியெறிந்து “சுடுகுது மடியைப்பிடி” என்ற பாணியில் நடந்து கொண்டதேன்? இரண்டொரு தவணைகள் தந்தாவது பேச்சு வார்த்தை மூலம் பிரச்சினையை தீர்த்து வைத்திருக்கலாமல்லவா? நீங்கள் எனக்கு ஒரு தவணையாவது தந்து என்னை விசாரித்திருக்கலாம் அல்லவா? ஏன் உங்களுக்கு மனதில் இடமில்லாமற் போனது? இது ஒரு காரணம் மட்டுமே நீங்கள் ஏன் அவ்வாறு செய்தீர்கள் என்பதைப் புத்திசாலிகள் புரிந்து கொள்வதற்குப் போதும்.
சாதாரண காழீ நீதி மன்றில் கூட வழக்காளி, எதிரி இருவரையும் நேரில் விசாரிப்பதற்காக பல தவணைகள் கொடுக்கப்பட்டு விசாரிப்பது நடைமுறையில் இல்லையா? அரச, பொது நீதி மன்றங்களில் கூட ஒரு வழக்கை பல தவணைகள் பிற்போட்டு தீர விசாரித்து தீர்ப்புக் கூறும் வழக்கம் இருக்கும் நிலையில் நீங்கள் அவசரப் பட்டுள்ளீர்கள். உங்களை அவசரப்படுத்தியவர்கள் காத்தான்குடி மௌலவீமார்தான் என்பதை மரணித்த எனது ஆரம்ப கால நண்பன் மௌலவீ ILM முஸ்தபா பஹ்ஜீ அவர்கள் மூலம் நான் அறிந்து கொண்ட விடயமாகும்.
எது சரி? எது பிழை? என்பதை நீங்கள் அறிந்து “பத்வா” வழங்காமல் எப்படியாவது எங்களை மடக்க வேண்டும் என்பதை மனதிற் கொண்டு செயல்பட்டுள்ளீர்கள். நீங்கள் அனைவரும் ஸுன்னீகளுமல்ல, ஸூபீகளுமல்ல. உங்களில் வஹ்ஹாபிகளும் பலர் உள்ளனர். நான் வஹ்ஹாபீகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதைத் தடுப்பதற்காக அவர்களும், நீங்களும் சேர்ந்து போட்ட பூட்டுத்தான் இந்த “பத்வா” ஆகும். இவ்வாறு செய்யாதீர்கள். இது அநீதி. அல்லாஹ் பொருந்தமாட்டான். ஏற்றுக் கொள்ளவும் மாட்டான்.
ரிஸ்வீ ஹழ்றத் அவர்களே!
நீங்கள் பல சந்தர்ப்பங்களில் தவறு செய்துள்ளீர்கள். இன்னும் சில சந்தர்ப்பங்களில் நடைமுறை தெரியாமல் நடந்து அவமானப்பட்டுள்ளீர்கள். இன்னும் சில சமயம் ஆழமான அறிவின்மையால் பொருத்தமில்லாமற் பேசி மாட்டியுள்ளீர்கள். இவற்றை விளக்கமாக எழுத நான் விரும்பவில்லை. விரிவாக எழுத எனக்கு நேரமுமில்லை. சுருக்கமாகச் சொல்கிறேன்.
நீங்கள் “பத்வா” வழங்காது போனாலும் அதை அமுல் செய்து கொண்டிருப்பது நீங்கள்தான். நீங்கள் பொது மக்களுக்குப் பொய் சொல்லவும் தேவையில்லை. எதையும் மறைக்கவும் தேவையில்லை. உண்மை எதுவோ அதை பொது மக்களுக்கு விளக்கமாக அறிவித்துவிட்டு, உங்களுக்கு முன் இருந்த நிர்வாகம் வழங்கிய “பத்வா” அப்துர் றஊப் மௌலவீக்குப் பொருத்தமற்றது என்று பொது மக்களுக்கு விளக்கமாக பொது சனத் தொடர்பு சாதனங்கள் மூலம் அறிவித்து விட்டு “பத்வா”வை எனக்கு எதிராகப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் “பத்வா”வினால் பாதிக்கப்பட்டு 42 வருடங்கள் மனித உரிமைகள் இழந்து அல்லல்படும் மக்கள் நிம்மதியாக வாழ வழி செய்யுங்கள்.
எனக்கு வழங்கப்பட்ட “பத்வா” “ஷரீஆ” சட்டத்திற்கும் முரணானது. “தஸவ்வுப்” ஸூபிஸ சட்டத்திற்கும் முரணானது. நடைமுறையிலுள்ள அரச சட்டத்திற்கும் முரணானது.
ஆகையால் பின்னால் நான் எழுதுகின்ற “ஷரீஆ” சட்டத்தைக் கவனத்திற் கொண்டும், ஸூபீ மகான்கள், மற்றும் வலீமாரும் கூறியுள்ள அறிவுரையைக் கருத்திற் கொண்டும், முஸ்லிம் சமூகத்தின் எதிர் காலத்தின் நிலைகளை கருத்திற் கொண்டும் உடனடியாக “பத்வா”வை வாபஸ் பெற்று அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். “பஸ் போன பின் கை காட்டி வேலையில்லை”
سُئل الإمام محي الدين النّووي عن الشّيخ محي الدين ابن عربي، قال: تلك أمّة قد خلت، ولكنّ الّذي عندنا أنّه يحرم على كلّ عاقل أن يسيئَ الظّنّ بأحدٍ من أولياء الله تعالى عزّ وجلّ، ويجب عليه أن يؤوِّلَ أقوالهم ما دام لمْ يَلْحَقْ بدرجتهم، ولا يعجز عن ذلك إلّا قليلُ التوفيق، قال فى شرح المُهذّب، ثمّ إذا أوّل فليُؤوّلْ كلامَهم إلى سبعين وجها، ولا نقبلُ عنه تأويلا واحدا، ما ذاك إلّا تَعَنُّتٌ اهـ،
وَمِنْهَا: مَا صرح بِهِ أَئِمَّتُنَا كالرافعي فِي الْعَزِيز وَالنَّوَوِيّ فِي (الرَّوْضَة) و (الْمَجْمُوع) وَغَيرهمَا من أَن الْمُفْتِي إِذا سُئِلَ عَن لفظ يحْتَمل الْكفْر وَغَيره لَا يَقُول هُوَ مهدر الدَّم أَو مباحه أَو يقتل أَو نَحْو ذَلِك، بل يَقُول يسئل عَن مُرَاده فَإِن فسره بِشَيْء عمل بِهِ،
மேற்கண்ட இவ்வசனங்கள் இதற்கு முன்னும் உங்களுக்கு எழுதியனுப்பிய வசனங்களேயாகும். மொழியாக்கம் தேவையில்லை. பொது மக்கள் இதற்கான மொழியாக்கம் பற்றி உங்களிடம் கேட்டால் மறைக்காமலும், பொய் சொல்லாமலும் உண்மையைச் சொல்லிவிடுங்கள்.
அன்புள்ள தம்பி ரிஸ்வீ அவர்களே!
நமது இலங்கைத் திரு நாட்டில் பௌதர்களும், பௌத குருமாரும் உள்ளனர். இந்துக்களும், இந்து குருமார்களும் உள்ளனர். கிறித்துவர்களும், அவர்களின் குருமார்களும் உள்ளனர். மேற்கண்ட குருமாரில் யாராவது அவர்களின் மத குரு ஒருவருக்கு மதம் மாற்றித் தீர்ப்பு வழங்கியதற்கு வரலாறுண்டா? அந்த சமூகத்தை தொல்லைப் படுத்தியதற்கு வரலாறு உண்டா? அவர்களின் வீடுகளை எரித்ததற்கு வரலாறு உண்டா? அவர்களே மனிதாபிமானத்தோடு வாழ்ந்து வரும் நிலையில் முஸ்லிம் மத குருக்களான நீங்கள் ஏன் இவ்வாறு அட்டூழியம் செய்கிறீர்கள்? பிறமத வாசிகள் உங்களின் செயல்கள், அநீதிகள் கண்டு வியப்படைகிறார்கள். எங்களிடம் விளக்கம் கேட்கிறார்கள். நாங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளது. நிறுத்துங்கள் உங்கள் போலி நாடகத்தை. அல்லாஹ்வைப் பயந்து நேர்மையாகவும், பரந்த மனதோடும் செயல்படுங்கள். இன்றேல் அல்லாஹ்வின் நியாயம் வெளியாகும். எதிர்பார்த்திருங்கள்.