Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்திரை நீக்கம்! சந்தேக நிவர்த்தி தெளிவினுந் தெளிவு!

திரை நீக்கம்! சந்தேக நிவர்த்தி தெளிவினுந் தெளிவு!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

ஸூபீகள் உள் நீச்சல் நிபுணர்கள்! என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.

இதைத் தொடர்ந்து “ஸூபீ மகான்களும் அவ்லியாஉகளே! ஆயினும் இவர்களை விட ஸூபீகள் இறையியலில் சற்று ஆழமாகப் பயணிப்பவர்களாவர். சுருங்கச் சொல்வதாயின் வலீமார் வெளி நீச்சல் நிபுணர்களும், ஸூபீகள் உள் நீச்சல் நிபுணர்களுமாவர்” என்றும் எழுதியிருந்தேன்.

நான் எழுதிய மேற்கண்ட வசனத்தை வாசித்த, ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்த, ஸூபிஸக் கடலில் குழியோடுமளவு திறமையுள்ள ஞான வழித் தோழர்களிற் சிலர் நேற்று 24 வெள்ளிக்கிழமை காலை கைபேசி மூலம் என்னுடன் பேசி அவர்களுக்கேற்பட்ட சந்தேகம் ஒன்றை என்னிடம் சொல்லி அதற்கு விளக்கம் கேட்டார்கள். அவர்களுக்கு கைபேசி மூலம் விளக்கம் சொன்னேன். நான் அவர்களுக்குச் சொன்ன விளக்கத்தை ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்த ஏனைய ஆதரவாளர்களும் தெரிந்து தெளிவு பெற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு கூறிய விளக்கத்தை சற்று இங்கு விரிவாகப் பதிவு செய்கிறேன்.

சந்தேகம் இதுதான். عُلَمَاءُ الرُّسُوْمْ “உலமாஉர்ருஸூம்” எழுத்துடைய – வரிகளுடைய உலமாஉகள் என்பவர்கள்தான் “ளாஹிர்” வெளிரங்க உலமாஉகள் என்றும், வெளி நீச்சல் அடிப்பவர்கள் என்றும் நான் பேசி வந்துள்ளேன்.

எனினும் “ஸூபீகள் உள் நீச்சல் நிபுணர்கள்” என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையில் வலீமார் வெளி நீச்சல் நிபுணர்கள் என்றும், ஸூபீகள் உள் நீச்சல் நிபுணர்கள் என்றும் எழுதியுள்ளேன். இவ்வாறு நான் எழுதியது ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்த இறையியலில் உள் நீச்சலடிக்கின்ற – குழியோடிகள் சிலருக்கு மட்டும் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு இப்படியொரு சந்தேகம் ஏற்பட்டதிலிருந்து அவர்கள் எந்த அளவு ஸூபிஸக் கலையில் ஆய்வுள்ளவர்களாகவும், வேரூன்றியவர்களாகவும் உள்ளார்கள் என்பதை படம் பிடித்து காட்டுகிறது. அல்ஹம்து லில்லாஹ்! இவர்கள் போல் ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்த ஏனையோரும் ஸூபிஸம் தொடர்பான ஆய்வுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்று ஆதரவு வைக்கிறேன். எல்லாமாய் வெளியாகி, எங்குமாய் நிறைந்திருக்கும் ஏகன் அல்லாஹ் நம்மனைவரையும் இறையியல் துறையில் உள் நீச்சலடிப்பவர்களாக ஆக்கியருள் புரிவானாக!

இறையியல் தொடர்பாக பேசியும், எழுதியும் வருகின்றவர்களில் “முதகல்லிமீன்” என்று ஒரு சாரார் உள்ளனர். இவர்கள் “அகீதா” கொள்கை தொடர்பாக எழுதியும், பேசியும் வந்துள்ளார்கள். இவர்கள் இறையியலில் வெளி நீச்சலடிப்பவர்களேயாவர். இவர்களில் வலீமாரும் இருப்பார்கள். வலீமார் அல்லாதவர்களும் இருப்பார்கள்.

இவர்கள் – “முதகல்லிமீன்” என்போர் அல்லாஹ்வுக்கு “வாஜிப்” ஆன “ஸிபாத்” தன்மைகள் இருபது என்று சொல்வார்கள். அவற்றில் “வுஜூத்” உள்ளமை என்பதும் ஒன்று என்றும் சொல்வார்கள். இதற்கு صِفَةٌ نَفْسِيَّةْ என்று பெயரும் சொல்வார்கள். இதோடு நின்று கொள்வார்கள். இதற்கப்பால் ஓர் அங்குலம் கூட நகரமாட்டார்கள். இறையியலில் இவர்களின் வரம்பு இவ்வளவுதான்.

இவர்களிடம் விழாம் பழம் என்றால் என்னவென்று கேட்டால் ஒரு விழாம் பழத்தைக் கையிலெடுத்து கேட்டவர்களிடம் அதைக் காட்டி இதுவே விழாம் பழம் என்று சொல்வார்களேயன்றி அதை உடைத்து அதனுள் இருக்கும் பழத்தை – கனியை எடுத்துக் காட்டமாட்டார்கள்.

இவர்கள் அல்லாஹ்வுக்கு “வாஜிப்” ஆன “ஸிபாத்” தன்மைகளில் ஒன்று “வுஜூத்” உள்ளமை என்று சொல்வார்கள். அவர்களிடம் உள்ளமை என்றால் என்னவென்று கேட்டால் விழாம் பழத்தை அதனுள் இருக்கும் கனியை காட்டாமல் கோதைக் காட்டுவது போல் காட்டுவார்களேயன்றி “வுஜூத்” என்றால் என்னவென்று உடைத்துக் காட்டமாட்டார்கள்.

இன்னுமிவர்கள் قُدْرَةٌ “குத்றத்” சக்தி என்பது அல்லாஹ்வின் தன்மைகளில் ஒன்று என்று சொல்வார்களே தவிர அதை உடைத்துக் காட்டமாட்டார்கள். இதேபோல் அல்லாஹ்வின் “வாஜிப்” ஆன தன்மைகளில் قَائِمٌ بِنَفْسِهِ அவன் தன்னைக் கொண்டு நிற்பவன் என்பதும் ஒன்று என்று சொல்வார்களேயன்றி அதை உடைத்துக் காட்டமாட்டார்கள். “முதகல்லிமீன்” என்போர் இப்பேர் பட்டவர்களேயாவர். இதனால் இவர்கள் உடைத்துக் காட்டத் தெரியாதவர்கள் என்பதும் கருத்தல்ல.

இறையியல் பேசுவோரில் இன்னுமோர் சாரார் உள்ளனர். இவர்கள் “ஆரிபீன்” இறைஞானிகள் என்று சொல்லப்படுவார்கள். இவர்களும் இறையியல் பேசுபவர்கள்தான். ஆயினுமிவர்கள் “முதகல்லிமீன்” போன்றவர்களல்லர். இவர்கள் அவர்களை விடச் சற்று ஆழமாகச் சொல்வார்கள்.

இறையியல் பேசுவோரில் இன்னுமொரு சாரார் உள்ளனர். இவர்கள் مُحَقِّقِيْنْ “முஹக்கிகீன்” என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் இரண்டாம் சாரர்களை விடச் சற்று ஆழமாகச் சொல்பவர்களாவர்.

இறையியல் பேசுவோரில் இன்னும் ஒரு சாரார் உள்ளனர். இவர்கள் மூன்றாம் சாராரை விட சற்று ஆழமாகச் சொல்பவர்களாவர். இவர்கள் مُدَقِّقِيْنْ “முதக்கிகீன்” என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் மூன்றாம் சாராரை விட சற்று ஆழமாகச் சொல்பவர்களாவர்.

இவ்வாறு இறையியல் பேசுபவர்களில் பல சாரார் உள்ளனர். இவர்களில் அதி உச்சியில் நின்று இறையியல் பேசுபவர்களும் உள்ளனர். இவர்கள்தான் “ஸூபீகள்” என்று அழைக்கப்படுவார்கள்.

இவர்கள்தான் இறையியலில் அரசர்கள். இவர்கள்தான் “வஹ்ததுல் வுஜூத்” மேதைகள். இவர்கள்தான் அனைத்தையும் உடைத்துப் பேசுபவர்கள். இவர்கள் அல்லாஹ் படைப்புகளாக வெளியானான் என்று கூடப் பேசமாட்டார்கள். அல்லாஹ் மட்டுமே உள்ளான் என்றுதான் பேசுவார்கள்.

நான் எனது வாழ்வில் ஸூபீகளில் சிலரை மட்டுமே அவர்கள் உயிரோடிருந்த காலத்தில் தலைக் கண்ணால் கண்டுள்ளேன். அவர்களில் கம்பம் அப்துர் றஹ்மான் நாயகம், காயல் பட்டினம் அப்துல் காதிர் ஸூபீ நாயகம், அந்தரத் தீவு அப்துர் றஷீத் கோயாத் தங்கள் நாயகம், என் தந்தை அப்துல் ஜவாத் ஆலிம் ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்களும் ஸூபீகளே!

ஸூபீகள் என்றால் கொள்கையில் ஸூபீகள் என்பதே அதன் பொருளேயன்றி உடையில் ஸூபீகள் என்பது அதன் பொருளல்ல.

ஸூபீகள் என்றால் கிழிந்த, கசங்கிய, அழுக்கான, கம்பளி போல் கனமான உடைகளை உடுத்தவர்களாயும், தலைவிரி கோலமானவர்களாயும், உடல் அழுக்கானவர்களாயும், கருப்பான, மெலிந்த உடலுள்ளவர்களாயும் இருப்பார்கள் என்று பொது மக்களிடம் ஓர் அபிப்பிராயம் உண்டு. இது தவறான அபிப்பிராயமாகும். ஆதி காலத்திலிருந்து பொது மக்களிடையே இப்படியொரு அபிப்பிராயம் வளர்க்கப்பட்டு வந்துவிட்டதேயன்றி ஸூபீகள் அவ்வாறுதான் இருக்க வேண்டுமென்பது விதியல்ல.

ஆயினும் “மஜ்தூப்” என்று ஞான வழி செல்பவர்களில் ஒரு சாரார் உள்ளனர். அவர்களிற் பலர் மேற்கண்டவாறு வாழ்கிறார்கள். அவர்கள் தெளிவு நிலை அடையாதவர்களாவர். இவர்களை நாம் அன்பு வைக்கலாம். ஆயினும் “ஷரீஆ” விடயத்தில் இவர்களைப் பின்பற்றுதல் கூடாது. இதனால் அவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைப்பதும் நல்லதல்ல.

நான் மேலே குறிப்பிட்ட முதகல்லிமீன், ஆரிபீன், முஹக்கிகீன், முதக்கிகீன், ஸூபிய்யீன் அனைவரும் இறையியல் தொடர்பானவர்களேயாவர். பொதுவாக இவர்கள் அனைவருக்கும் “ஆரிபீன்” என்று சொல்லலாம். ஆயினும் நான் அறிந்த வரை, எனது ஆய்வின் படி இவர்களில் “விலாயத்” எனும் ஒலித்தனம் பெற்றவர்கள் யார்? பெறாதவர்கள் யாரென்று குறிப்பிட்டுக் கூற முடியாது. இவர்களுடன் நெருக்கமாய் வாழ்ந்தவர்களுக்கும், இவர்களின் வரலாறுகள் அறிந்தவர்களுக்கும் மட்டுமே இவர்களைப் பற்றித் தெரியும்.

வலீமார் வெளி நீச்சல் நிபுணர்கள் என்றும், ஸூபீகள் உள் நீச்சல் நிபுணர்கள் என்றும் நான் எழுதியதால் வலீமார்கள் ஒன்றும் தெரியாதவர்கள் என்பது எனது மனதிலுள்ள கருத்தல்ல. வலீமாரும், ஸூபீகளும் இறையியல் அறிந்தவர்களேயாவர். எனது கருத்து என்னவெனில் வலீமார் இறைஞானக் கடலின் கரையில் நிற்கிறார்கள் என்பதும், ஸூபீகள் இறைஞானக் கடலின் நடுவில் நிற்கிறார்கள் என்பதுமேயாகும். “விலாயத்” ஒலித் தனம் பெறாத உலமாஉகள்தான் “ஷரீஆ” எனும் கடலோடு மட்டும் நின்று வெளி நீச்சல் அடிப்பவர்களாவர்.

வலீமாரும், ஸூபீகளும் ஞான மகான்கள் தான் என்பதில் என்னிடம் கருத்து வேறுபாடு இல்லை. எனினும் வலீமாரில் ஸூபீ மகான்கள் மிகச் சிறந்தவர்களும், ஆழமான இறைஞானக் கருத்துக்களை சொல்பவர்களுமாவர். இதைக் கருத்திற் கொண்டே நான் அவ்வாறு எழுதினேன் என்பதையும், அறவே இறையியல் தெரியாத உலமாஉகள் உண்மையில் வெளி நீச்சலடிப்பவர்கள்தான் என்பதையும் திட்டமாகக் கூறுகிறேன்.

ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்த எனது முரீதுகளும், முஹிப்பீன்களும் தமக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களை என் மூலமோ, என்னுடனுள்ள இறையியல் அறிந்த உலமாஉகள் மூலமோ தெளிவு கண்டு கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்வதுடன் கை பேசி மூலம் தமது சந்தேகங்களைக் கேட்ட அன்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எச்சரிக்கை: எந்த மொழியில் யார் “வஹ்ததுல் வுஜூத்” பேசினாலும், எழுதினாலும் அவர்களிற் சிலர் தாம் அதைப் பூரணமாக விளங்காமலேயே எழுதவதாகவும், பேசுவதாகவும் அறிய முடிகிறது.

சிலர் “வஹ்ததுல் வுஜூத்” என்று சொல்லிக் கொண்டு “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கை பேசுவதாகவும், எழுதுவதாகவும் அறிய முடிகிறது.

யார் “வஹ்ததுல் வுஜூத்” பேசினாலும், எழுதினாலும் அவரின் பேச்சும், எழுத்தும் திருக்குர்ஆனுக்கும், நபீ மொழிகளுக்கும், “ஷரீஆ”வின் சட்டங்களுக்கும் முரணில்லாமல் இருந்தால் மட்டுமே அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்விடயத்தில் பொது மக்கள் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா செய்த மா பெரும் பிழையினால்தான் இன்று அவர்கள் தொங்கோட்டம் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் உயர் மட்டங்களை அணுகுகிறார்கள். அவர்களுக்கு பொன்னாடை போர்த்துகிறார்கள், நினைவுச் சின்னங்களும் வழங்குகிறார்கள்.

அவர்கள் செய்த மாபெரும் பிழை என்னவெனில் குற்றவாளியென்று கருதப்பட்ட என்னை ஒரு தரமேனும் விசாரிக்காமல் “சுடுகுது மடியைப் பிடி” என்ற பாணியில் “பத்வா” வழங்கியதாகும்.

இதைவிடப் பெரிய பிழை என்னவெனில் நான் ஸூபிஸம் கூறும் “வஹ்ததுல் வுஜூத்” இறையியல் தத்துவம் பேசியிருக்கும் நிலையில் அதை “ஹுலூல் – இத்திஹாத்” என்று தவறாகப் புரிந்து “முர்தத்” என்று பத்வா வழங்கியதாகும்.

எனவே, உலமா சபை முப்தீகளும், தலைவர் அவர்களும் தமது பிழையை உணர்ந்து “வஹ்ததுல் வுஜூத்” பேசிய எனக்கும், நான் கூறிய அதே “வஹ்ததுல் வுஜூத்” ஐ ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களுக்கும் வழங்கிய “முர்தத் பத்வா”வை உடனடியாக வாபஸ் பெற்று நாங்கள் அனைவரும் முஸ்லிம்கள்தான் என்று பிரகடனம் செய்ய வேண்டும். இன்றேல் நானும், எனது ஆதரவாளர்களும் இறுதி மூச்சு வரை இவ் உண்மையை நிலை நாட்டாமல் ஓய மாட்டோம். அல்லாஹு அக்பர்!

الله أكبر، وهو خير الماكرين، وهو أحكم الحاكمين

முற்றும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments