தொடர் – 2
கடந்த தொடர் ஒன்றில் ஸூபிஸம் என்பது ஒருமனிதன் அல்லாஹ்வை அறிவதற்கும், அவனை அடைவதற்கும் வழி காட்டுவது போல் அவனின் உள்ளத்தில் ஏற்படுகின்ற பாவக் கறைகளை அகற்றி அதை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க பெரிதும் உதவுகின்றது என்று குறிப்பிட்டிருந்தேன்.
இத்தகு சிறப்புக்குரிய அறிவைத் தேடிக் கற்றுக் கொள்ளாமல் இருப்பது பெரும் பாவத்தில் சேரும் என்று ஸூபீ மகான்களிற் பலர் எச்சரித்துள்ளார்கள்.
قال الإمام قطب الزمان أبو الحسن الشّاذلي رضي الله عنه ‘ مَنْ لَمْ يَتَغَلْغَلْ فِى عِلْمِنَا هَذَا مَاتَ مُصِرًّا عَلَى الْكَبَائِرِ وَهُوَ لَا يَشْعُرُ ‘ (إيقاظ الهمم، ص 7)
“எங்களின் இந்த அறிவில் – ஸூபிஸ ஞானத்தில் எவர் முழுமையான விளக்கம் பெறவில்லையோ அவர் தானறியாமலேயே பெரும் பாவத்தில் நிலைத்திருந்தவராக மரணிப்பார்” என்று எச்சரித்துள்ளார்கள்.
இமாம் ஷாதுலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் மேற்கண்ட பேச்சு கடும் எச்சரிக்கையாகும். அறிவற்ற சிலர் இமாம் அவர்களின் இப்பேச்சு அர்த்தமற்றதென்று சொல்வார்கள். சிலர் சொல்ல நான் செவியேற்றுமுள்ளேன். இவ்வாறு சொல்வோர் “ஷரீஆ” ஞானம் கூடத் தெரியாத அறிவிலிகள் என்றே ஸூபீகள் சொல்வர்.
وَحَيْثُ كَانَ فَرْضَ عَيْنٍ يَجِبُ السَّفَرُ إِلَى مَنْ يَأْخُذُهُ عَنْهُ، إِذَا عُرِفَ بِالتَّرْبِيَةِ وَاشْتَهَرَ الدَّوَاءُ عَلَى يَدِهِ وَإِنْ خَالَفَ وَالِدَيْهِ، حَسْبَمَا نَصَّ عَلَيْهِ غَيْرُ وَاحِدٍ كَالْبَلَالِيْ وَالسَّنُوْسِيْ وَغَيْرِهِمَا، (إيقاظ الهمم، ص 7)
ஸூபிஸ ஞானம் கற்பது ஸூபீ மகான்களின் கருத்துப்படி மட்டுமன்றி இறைஞானிகளின் அதிகமானவர்களின் கருத்துப்படியும் “பர்ழ் ஐன்” கட்டாயக் கடமை என்று கூறியுள்ளார்கள்.
“பர்ழ் ஐன்” கட்டாயக் கடமை என்ற கூற்றின் படி, ஒரு நாட்டில் ஸூபிஸம் கற்றுக் கொடுக்கின்ற ஒரு மகான் இருக்கின்றார் என்றும், அவர் மக்களை நல் வழி காட்டும் சக்தி பெற்றவர் என்றும் அறியப்பட்டால் அவரிடம் சென்று அந்த ஞானத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அவர் இருக்கும் இடத்திற்குப் பயணிப்பதும் கடமையாகிவிடும். இவ்விடயத்தில் பெற்றோர் போக வேண்டாம் என்று தடை பண்ணினாலும் சரியே. இவ்வாறு இமாம்களான ஸனூஸீ, பலாலீ ஆகியோர் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: ஈகாழுல் ஹிமம், 07)
قال الإمام الغزّالي ‘إنّه فرض عين إذ لا يَخْلُو أحدٌ مِن عيب أو مرض إلّا الأنبياء عليهم الصلاة والسلام،
ஸூபிஸம் கற்பது “பர்ழ் ஐன்” கட்டாயக் கடமையாகும் என்று இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள். இதற்கு அவர்கள் கூறும் காரணம் என்னவெனில், நபீமார் தவிர வேறு எந்த மனிதனாயினும் அவன் குறையுள்ளவனாக, அல்லது நோயுள்ளவனாகவே இருப்பான். அதாவது பெருமை, பொறாமை, எரிச்சல், கோபம், வஞ்சகம், அகங்காரம், ஆணவம் போன்ற நோய்களில் ஏதாவதொரு நோயால் பாதிக்கப்பட்டவனாகவே இருப்பான். அவன் அந்த நோய்களிலிருந்து சுகம் பெற வேண்டுமாயின் அந் நோய்களுக்கான மருந்துகளை உட்கொள்ள வேண்டும். அதற்காக அவன் ஓர் ஆன்மிக வைத்தியரிடம் செல்ல வேண்டும். அவரிடம் “சணல்” பண்ணி அவர் கொடுக்கும் மருந்தை தவறாது குடித்து வரவும் வேண்டும். பத்தியம் காத்து வரவும் வேண்டும். ஆன்மிக வைத்தியரிடம் செல்வதும், அவர் கொடுக்கும் மருந்துகைளப் பாவிப்பதும் ஸூபிஸக் கலையோடு சம்பந்தப்பட்டவையாகும் இதனால்தான் இமாம் ஙஸ்ஸாலீ அவர்கள் ஸூபிஸம் கற்பது “பர்ழ் ஐன்” கட்டாயக் கடமை என்று கூறினார்கள்.
قال الإمام السنوسي ‘ النّفسُ إذا غَلَبَتْ كالعَدُوِّ إذا فَجَئَتْ تجب مُجاهدتُها والإستعانةُ عليها وإن خالف الوالدين كما فى العدُوِّ إذا بَرَزَ، قاله شرح الجزيري، (إيقاظ الهمم، ص 7)
இமாம் ஸனூஸீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள்.
(“நப்ஸ்” மனவெழுச்சி என்பது மிகைத்து விட்டால் அது எதிரி போன்றது. எதிரி எதிர்பாராமல் திடீரென்று வந்துவிட்டால் அவனை எதிர்த்து சண்டை செய்து அவனை வெல்ல வேண்டும். இன்றேல் அவன் நம்மை வென்று விடுவான். இதேபோல் “நப்ஸ்” எனும் மனவெழுச்சி எம்மைத் தாக்குமுன் நாம் அதைத் தாக்கிவிட வேண்டும். இன்றேல் அது எம்மைத் தாக்கி விடும். இவ்விடயத்தில் பெற்றோருக்கு மாறு செய்தல் குற்றமாகாது. அதாவது எதிரி எம்மைத் தாக்க வரும் போது பெற்றோர் குறுக்கிட்டு எதிரியைத் தாக்க வேண்டாம் என்று சொன்னார்களாயின் அவர்களுக்கு வழிப்பட்டு நாம் பொறுமை செய்தால் எதிரி எம்மைத் தாக்கிவிடுவானாகையால் இவ்வாறான கட்டத்தில் பெற்றோருக்கு மாறு செய்தல் குற்றமாகாது. பெற்றோரின் சொல் கேட்க வேண்டுமென்று நாம் பொறுமை செய்தால் அவன் நம்மைக் கொலை செய்து விடுவான். ஆகையால் “நப்ஸ்” எனும் எதிரி நம்மைத் தாக்கிவிடாமல் அது எம்மைத் தாக்குமுன் நாம் அதைத் தாக்கிவிட வேண்டும். அதற்காக ஸூபிஸம் கற்ற ஒரு மேதையை – மகானைச் சந்தித்து அவரிடம் – அவர் மூலம் “நப்ஸ்” என்ற எதிரியை எவ்வாறு எதிர் கொள்வதென்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். இதைக் கற்றுக் கொள்வதற்கு பெற்றோர் தடையாக இருந்தால் அவர்களுக்கு இவ்விடயத்தில் மாறு செய்தல் குற்றமாகாது. இவ்வாறுதான் இவ்விடயத்தில் கணவன் மனைவிக்கு மாறு செய்வதும், மனைவி கணவனுக்கு மாறு செய்வதுமாகும்.
உதாரணமாக மனைவி ஸூபிஸம் கற்று அவ்வழியில் நடப்பதற்கு விரும்பி ஸூபிஸம் கற்றுக் கொடுக்கும் ஒருவரிடம் சென்று கற்றுக் கொள்வதற்கு கணவனிடம் அனுமதி கேட்டு அவர் மறுத்தாராயின், தடுத்தாராயின் அவரின் தடையை மீறி மனைவி செயல்படுவது குற்றமாகாது. இவ்வாறுதான் மனைவி கணவனைத் தடுக்கும் போதும் அவன் நடந்து கொள்வதுமாகும்.
لَا طَاعَةَ لِمَخْلُوْقٍ فِى مَعْصِيَةِ الْخَالِقِ
படைத்தவனுக்கு – அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விடயத்தில் எந்த ஒரு படைப்புக்கும் எவரும் வழிப்படுதல் கூடாது என்று பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள்.
உதாரணமாக கணவன் தொழத் தேவையில்லை என்ற கொள்கையுள்ளவன் என்றும், அவனின் மனைவி தொழ வேண்டும் என்ற கொள்கையுள்ளவள் என்றும் வைத்துக் கொள்வோம். கணவன் தனது கொள்கை வழியில் தனது மனைவியும் செல்ல வேண்டும் என்று அவன் தனது மனைவியைத் தொழ வேண்டாமென்று தடுத்தால் இவ்விடயத்தில் மனைவி அவனுக்கு மாறு செய்வது அவனின் கடமையாகிவிடும். இதனால் திருமணம் பிரிய நேரிட்டாலும் கூட மனைவி குற்றவாளியாகமாட்டாள். இவ்விடயத்தில் மனைவி கணவனுக்கு வழிப்படுவது கடமையல்ல. மாறாக அவனுக்கு மாறு செய்வதே அவனின் கடமையாகும். இவ்வாறுதான் மனைவிக்குரிய சட்டமுமாகும்.
சில வருடங்களுக்கு முன் என்னிடம் “பைஅத்” பெற்ற ஒரு பெண் வந்து எனது கணவர் நான் தீட்டோடு இருக்கும் கால கட்டத்திலும் உறவுக்கு அழைக்கிறார். தீட்டுடன் இருக்கும் கால கட்டத்தில் உடலுறவு கொள்வது “ஹறாம்” என்று நான் அறிந்து வைத்துள்ளேன். அவரிடம் நான் அறிந்த சட்டத்தைக் கூறி மறுத்தால் உன்னைத் “தலாக்” செய்வேன் என்று கூறுகிறார். நான் என்ன செய்ய வேண்டுமென்று கேட்டாள். நான் அவளுக்கு மேலே எழுதிக் காட்டிய لَا طَاعَةَ لِمَخْلُوْقٍ فِى مَعْصِيَةِ الْخَالِقِ என்ற நபீ மொழியைச் சொல்லிக் காட்டினேன்.
எனது குடும்பத்தில் ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு அட்டாளைச்சேனையில் வாழ்ந்து கொண்டிருந்த அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிமிடம் “பைஅத்” செய்து ஸூபிஸ வழி வாழ வேண்டுமென்று விருப்பம். தனது கணவனிடம் அனுமதி கேட்டாள். அவன் முடியாது என்று தடை செய்து விட்டான். கவலைக்குள்ளான அப் பெண் எனது தந்தையிடம் வந்து விபரத்தைக் கூறி ஆலோசனை கேட்டாள். என் தந்தை நான் மேலே எழுதிக்காட்டிய لا طاعة لمخلوق فى معصية الخالق என்ற நபீ மொழியை கூறி அனுப்பி வைத்தார்கள். அவள் தந்தையின் கூற்றுப்படி கணவனுக்குத் தெரியாமல் அட்டாளைச்சேனை சென்று அந்த மகானிடம் “பைஅத்” பெற்று இரகசியமாக வாழ்ந்து கொண்டிருந்தாள். அவளுடன் பொறாமை கொண்ட அவளின் பக்கத்து வீட்டுப் பெண் அவளின் கணவனிடம் செய்தியை வெளியாக்கிவிட்டாள்.
இதனால் கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரச்சினை ஏற்பட்டு கணவன் விவாகரத்துக் கோரி காழீ நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணைக்கு வருமுன் அவளின் கணவன் ஒரு நாளிரவு ஒரு கனவு கண்டார். அக்கனவில் அட்டாளைச்சேனை மகான் வெள்ளி ஆலிம் அவர்கள் தோன்றி அவனுக்கு ஒரு பிரம்பினால் உடலெல்லாம் அடித்தார்கள். காலையில் எழுந்து உடலைப் பார்த்தான். உடல் முழுவதும் அடிபட்ட அடையாளங்கள் இருந்தன. இதிலுள்ள உண்மையை உணர்ந்த கணவன் தனது மனைவியிடம் உண்மையை எடுத்துரைத்து எவருக்கும் தெரியாமல் இருவரும் அட்டாளைச்சேனை சென்று மகான் அவர்களிடம் விபரத்தைக் கூறி கணவனும் அவர்களிடம் “பைஅத்” பெற்று சந்தோஷமாக வாழ்ந்து இருவரும் மரணித்து விட்டார்கள்.
இந்த வரலாறை நான் ஏன் எழுதினேன் என்றால் எனது மதிப்புக்குரிய தந்தை அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அவர்கள் “ஷரீஆ”வை பேணுவதில் அவர்களுக்கு நிகர் அவர்கள்தான் என்று சொல்லுமளவு பேணுதலாக வாழ்ந்தவர்களாவர்.
கணவனின் அனுமதியின்றி மனைவி ஒரு மகானிடம் “பைஅத்” எடுக்கலாம் என்பது “ஷரீஆ”விற்கு முரணானதாயிருந்தால் மேலே குறித்த அந்தப் பெண்ணை “பைஅத்” எடுக்காமல் என் தந்தை தடுத்திருப்பார்கள். இதன் மூலமும், இமாம் ஙஸ்ஸாலீ அவர்களின் பேச்சு மூலமும் ஸூபிஸம் கற்பதற்கு மனைவியின் அனுமதி கணவனுக்குத் தேவையுமில்லை, கணவனின் அனுமதி மனைவிக்குத் தேவையுமில்லை என்ற உண்மை தெளிவாகிறது.
இது மட்டுமல்ல. கணவன் மனைவியை விவாகரத்துக் கோரி காழி நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்த பின் அட்டாளைச்சேனை மகான் கனவில் தோன்றி அவனைத் தண்டித்து அவனையும் சத்தியத்தின் பால் திருப்பியதன் மூலம் இச் செயல் சரியானதென்று நிரூபணமாகிறது.
மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலைச் செய்யுமாறு கணவன் மனைவியைத் தூண்டுவதும், அதேபோல் மனைவி கணவனைத் தூண்டுவதும் “ஹறாம்” தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்விடயத்தில் ஒருவர் மற்றவருக்குப் பயப்படத் தேவையில்லை.
“ஷரீஆ” விடயத்திலும், “அகீதா” கொள்கை விடயத்திலும் யாரும் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. யாரும் யாரையும் துன்புறுத்த தேவையுமில்லை. இதேபோல் “தரீகா” விடயத்திலும், “மத்ஹப்” விடயத்திலும் யாரும் யாரையும் வற்புறுத்துவதும், பயங்காட்டுவதும் கூடாது. இது மார்க்க விரோதம் மட்டுமல்ல. சட்ட விரோதமுமாகும்.
இன்னுமொரு சம்பவத்தை இவ்விடயத்தில் நினைவூட்டுதல் பொருத்தமானதாயிருக்குமென்று நினைக்கிறேன்.
ஷெய்குனா, வகுத்வதுனா அப்துல் காதிர் ஆலிம் ஸூபீ சித்தீகீ றஹிமஹுல்லாஹ் அவர்களினதும், அட்டாளைச்சேனை அஷ் ஷெய்கு அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம் றஹிமஹுல்லாஹ் அவர்களினதும் ஆன்மிக குரு நாதர் சுல்தானுல் ஆரிபீன் முஹம்மத் அப்துல் காதிர் ஆலிம் ஸூபீ ஹைதறாபாதீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் காலத்தில் நடந்த சம்பவம் ஒன்றை எழுதுகிறேன்.
மகான் ஹைதறாபாதீ அவர்களிடம் “பைஅத்” பெற்று அவர்களின் “தரீகா” வழி வாழ விரும்பிய ஒரு பெண் தனது கணவனிடம் அனுமதி கேட்டாள். கணவன் மறுத்து விட்டான். அவன் ஒரு வஹ்ஹாபீயோ என்னவோ தெரியவில்லை. அவள் மீது சீறிப் பாய்ந்தான். பல வருடங்கள் கடந்த பின் கணவனுக்குத் தெரியாமல் அவள் மகான் அவர்களிடம் “பைஅத்” செய்து அவர்களின் “முரீதா”வாகிவிட்டாள்.
பல வருடங்களின் பின் கணவனுக்கு இரகசியம் தெரிய வந்ததும் கணவனுக்கும், மனைவிக்குமிடையில் மனக் கசப்பு ஏற்பட்டு திருமணம் “தலாக்” ரத்தாகும் நிலைக்கு வந்து விட்டது. மனைவி இரகசியமாக மகான் அவர்களுக்கு இச் செய்தியை அறிவித்தாள்.
மகான் அவர்கள் ஒரு நாள் எதிர்பாராமல் அவளின் வீட்டிற்கு வந்தார்கள். குரு மகானைக் கண்ட அவள் எழுந்து மரியாதை செய்து உபசரித்தாள். இது கண்ட கணவன் கண்கள் கோபத்தினால் சிவந்து போயின. செய்வதறியாது அங்கும் இங்கும் தடுமாறி நடமாடிக் கொண்டிருந்தான். அவ்வேளை குரு மகான் அவளையும் அழைத்துக் கொண்டு அறையொன்றுக்குள் சென்றார்கள். கணவனால் தாங்க முடியவில்லை. குருவின் மீது தப்பான எண்ணம் கொண்ட அவளின் கணவன் வீட்டின் கூரை மீதேறி அதில் ஓட்டை போட்டு உள்ளே என்ன நடக்கிறதென்று பார்த்தான். மனைவியைக் காணவில்லை. ஆயினும் அன்று பிறந்த பச்சிளங் குழந்தையொன்று கை, காலை அசைத்துக் கொண்டு சிரித்து மகிழ்வதைக் கண்டு வியந்தவனாக தொடர்ந்து அவதானித்துக் கொண்டிருந்தான்.
அப்போது குரு மகான் அக்குழந்தையை தூக்கி தனது மடியில் வைத்துக் கொண்டு முத்தமிட்டு மகிழ்ந்தார். கணவனால் தனது கண்களையே நம்ப முடியாமற் போயிற்று. கதவு திறக்கப்பட்டது. குரு மகானும், மனைவியும் வெளியே வந்தனர். குழந்தையைக் காணவில்லை. கணவன் வியந்து வியர்த்துப் போய் குரு மகானின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு “பைஅத்”தும் பெற்று மனிதனானான்.
குருமார், வலீமார் எவ்வாறு தமது “கறாமத்” எனும் அற்புதம் மூலம் மக்களை நல் வழிப்படுத்துகிறார்கள் என்பதை விளங்க முடிகிறது. (முற்றும்)