தொடர் – 1
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“கத்தம்” என்ற சொல் خَتْمٌ “கத்முன்” என்ற சொல்லடியில் உள்ளதாகும். இதற்கு முடித்தல் என்று பொருள் வரும்.
“கத்முன்” என்ற சொல் எப்போது “கத்தம்” என்றும், “பாதிஹா” என்ற சொல் “பாத்தியா” என்றும் உருமாற்றம் பெற்றதென்று தெரியவில்லை. இவ்வாறுதான் رَضِيَ اللهُ عَنْهُ – றழியல்லாஹு அன்ஹு என்ற சொல்லும் “ரலி” என்று மாற்றம் பெற்றிருப்பதுமாகும். இச் சொல்லை “றழி” என்றுதான் தமிழில் எழுத வேண்டும். “ரலி” என்று எழுதுவது பெரும் பிழையாகும். இவ்வாறு எழுதும் போது ض – “ழாத்” என்ற எழுத்து “லாம்” என்ற எழுத்தாக மாற்றம் பெறுகிறது.
“கத்தம்” ஓதுதல், “பாத்தியா” ஓதுதல் என்று பொது மக்கள் சொல்வார்கள். “ஹா” என்ற எழுத்தை “யா” என்று சொல்கிறார்கள்.
புனித றமழான் மாதம் வருகிறது. இச்சொல் கூட “றம்சான்” என்றும், “றம்ஜான்” என்றும் உரு மாற்றம் பெற்றுள்ளது. சரியாக எழுதுவதாயின் “றமழான்” என்றே எழுத வேண்டும். இவ்வாறுதான் تَرَاوِيْحْ “தறாவீஹ்” என்ற சொல் பொது மக்களின் பேச்சில் “தறாபியா” என்று மாற்றம் பெற்றுள்ளது. சரியாக எழுதுவதாயினும், சொல்வதாயினும் تَرَاوِيْحْ – “தறாவீஹ்” என்றே எழுதவும் வேண்டும், வாசிக்கவும் வேண்டும்.
அறபு மொழி தெரியாதவர்கள் அறபுச் சொற்களைப் பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
“கத்தம்” ஓதுதல், “பாதியா” ஓதுதல் என்று பொது மக்கள் சொல்வார்கள். இவர்கள் சரியாகச் சொல்ல வேண்டும். “யாஸீன் கத்தம்” என்றும் அவர்கள் சொல்வதுண்டு. “கப்றாளிகள்” மரணித்தவர்கள் பெயரில் “கத்தம்” ஓத வேண்டும் என்றும் சொல்வார்கள்.
பெரிய “கத்தம்”
பெரிய “கத்தம்” ஓதுதல் என்று ஒரு நடைமுறை முஸ்லிம்களிடம் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. இப்போதும் பலரிடம் உள்ளது. எனினும் “கர்னீ”களின் தலையீட்டால் இவ்வழக்கம் குறைந்து போயிற்று. அது ஓர் அருள் பொங்கிய காலம். அக்காலம் போன்ற காலம் வருமா என்று பலர் சிந்திக்கலாம். இன்ஷா அல்லாஹ் வரும். ஆயினும் தற்போது வாழும் மக்கள் அக்காலத்தை சந்திக்க மாட்டார்கள் என்பது திண்ணம்.
பெரிய கத்தம் ஓதுவதின் சிறப்பு.
திருக்குர்ஆனின் மொத்த “ஹர்பு”கள் – எழுத்துக்கள் 325,078 (மூன்று இலட்சத்து இருபத்தையாயிரத்து எழுபத்தெட்டு) ஆகும்.
ஒரு ஹர்புக்கு – எழுத்துக்கு 10 நன்மைகள் வீதம் முழுக்குர்ஆனையும் ஓதினால் கிடைக்கும் நன்மைகள் 3, 250, 780 (முப்பத்து இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்து எழுநூற்றி எண்பது) ஆகும்.
பெரிய கத்தம் – திருக்குர்ஆனை 40 தடவைகள் ஓதினால் கிடைக்கும் நன்மைகள் 130, 031, 200 (பதின் மூன்று கோடி முப்பத்தோராயிரத்து இரு நூறு) ஆகும்.
ஒரு ஹர்புக்கு ரூபாய் பத்து வீதம் பெரிய கத்தம் – திருமறையை நாற்பது தடவைகள் ஓத வழங்க வேண்டிய கூலி 130, 031, 200/- (பதின் மூன்று கோடி முப்பத்தோராயிரத்து இரு நூறு ரூபாய் ஆகும்)
அவ்வாறில்லாமல் ஒரு “ஜுஸ்உ”க்கு 350 ரூபாய் வீதம் திருக்குர்ஆனை நாற்பது தடவைகள் ஓதும் போது வருகின்ற 1200 “ஜுஸ்உ”களுக்கும் 420,000/- ஆகும்.
திருக்குர்ஆனை திருத்தமாக ஓதத் தெரிந்த பண வசதியில்லாதவர்கள் ஒவ்வொரு நாளும் தம்மால் முடிந்த அளவு ஓதி வந்தால் 40 குர்ஆனையும் ஓதி முடிக்கலாம். ஓதத் தெரியாத பண வசதியற்றோர் “இக்லாஸ்” அத்தியாயத்தை மட்டும் (குல் ஹுவல்லாஹு அஹத்) திருத்தமாக ஓதக் கற்றுக் கொண்டு ஒரு நாளைக்கு தம்மால் முடிந்த அளவு ஓதி வரலாம். ஓதத் தெரியாத அல்லது நேரமில்லாத பண வசதியுள்ளவர்கள் ஒரு மௌலவீயிடம், அல்லது பல மௌலவீமார்களிடம் பெரிய “கத்தம்” ஓதும் பொறுப்பை ஒப்படைத்தும் ஓதலாம். ஒப்படைக்கு முன் அவர்களுடன் கலந்தாலோசித்து கூலியைத் திட்டபப்படுத்திக் கொள்ள வேண்டும். கூலியைத் திட்டப்படுத்தாமல் ஓதிவிட்டு எல்லாம் முடிந்த பின் என்னமோ இனாமாக அன்பளிப்புச் செய்வது போல் கைக்குள் 500 ரூபாயை நசுக்கி விடுவது பெருங் குற்றமாகும். பெரும் அநீதியுமாகும்.
பெரிய “கத்தம்” ஓதுவதற்கு அதை ஒப்படைக்கும் மௌலவீமார் திருத்தமாக ஓதுபவர்களாயிருத்தல் மிக முக்கிய நிபந்தனையாகும். ஏனெனில் திருத்தமாக குர்ஆன் ஓதத் தெரியாத மௌவீமார்களும் உள்ளனர் என்பதில் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம்.
பெரிய கத்தம் ஓதுவதற்கு அதைப் பொறுப்பேற்கும் மௌலவீமார் தாம் பெறும் கூலி “ஹலால்” ஆக இருக்க வேண்டுமென்பதைக் கவனத்திற் கொண்டு அல்லாஹ்வைப் பயந்தவர்களாக எடுத்த பணியை சரியாகச் செய்ய வேண்டும். அவர்கள் இவ்விடயத்தில் பின்வரும் நபீ மொழியை இரும்புத் துரும்பாக வைத்துக் கொண்டு எவரையும் ஏமாற்றுதல் கூடாது.
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ تَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ»
(“இக்லாஸ்” “குல்ஹுவல்லாஹ்” அத்தியாயம் திருக்குர்ஆனின் மூன்றில் ஒன்றுக்கு சமமாகும்) என்ற இந்த நபீ மொழியை ஆதாரமாக எடுத்துக் கொண்டு குறித்த இவ் அத்தியாயத்தை மூன்று தரம் ஓதிவிட்டு 30 பாகத்தையும் ஒரு தரம் ஓதியதாக கணித்து 120 தரம் ஓதிவிட்டு பெரிய கத்தம் ஓதியதாக முடிவு செய்தல் பிழையாகும். பெருங்குற்றமாகும். கூலி தருபவரை ஏமாற்றும் வேலையுமாகும்.
குர்ஆன் மத்ரசாக்களில் ஓதிக் கொடுக்கும் மௌலவீமார் பெரிய “கத்தம்” ஓதுவதற்கு ஒருவரிடம் பொறுப்பெடுத்துக் கொண்டு தம்மிடம் ஓதிக் கொண்டிருக்கும் மாணவர்களிடம் ஒப்படைத்து ஓதி முடிப்பது கூடாது. இவ்வாறு செய்வதாயினும் திருத்தமாக ஓதுபவர்களிடம் ஒப்படைத்தல் அவசியமாகும். கிடைக்கும் கூலியில் அவர்களுக்கும் நியாயமாக வழங்க வேண்டும்.
பெரிய “கத்தம்” ஓத விரும்பும் ஒருவன் ஆறு மௌலவீமாரை தனது வீட்டுக்கு அழைத்து ஒவ்வொரு நாளும் தனது வீட்டுக்கு வந்து ஒவ்வொருவரும் ஐந்து “ஜுஸ்உ” பாகம் ஓத வேண்டும் என்று ஒப்பந்தம் செய்தால் ஒரு நாளில் ஒரு குர்ஆனை ஓதி முடிக்கலாம். நாற்பது நாட்களில் பெரிய “கத்தம்” ஓன்று ஓதி முடிக்கலாம்.
இவ்வாறு ஓதினால்தான் புரட்டலோ, அறவே ஓதாமலிருக்கவோ வாய்ப்பு இல்லாமற் போய்விடும்.
ஒருவன் பெரிய கத்தம் ஓத விரும்பினால் மௌலவீமார்களை அழைத்து தனது வீட்டில் ஆரம்பிக்க வேண்டும். 40 தடவைகள் ஓதி முடித்த பின் அதேபோல் அவர்களைத் தனது வீடுகளுக்கு அழைத்து அதை முறைப்படி நிறைவு செய்து “துஆ” ஓதும்போது எவருக்காக, அல்லது எவர்களுக்காக அந்த நன்மையை சேர்த்து வைக்க வேண்டுமோ அவரின் அல்லது அவர்களின் பெயர்களையும் குறிப்பிட வேண்டும். அந்த நிகழ்வின் போதே ஓதியவர்களுக்கான கூலியையும் கொடுத்து விட வேண்டும்.
பெரிய கத்தம் ஓதத் தொடங்குமுன் கூலி பேசி திட்டப்படுத்திக் கொள்ள வேண்டும். கூலி பேசி திட்டப்படுத்திக் கொள்ளாமல் ஓதி முடித்த பின் ஓதியவர்களின் கைக்குள் 1000 ரூபாயை மடக்கி வைப்பது பெருந் துரோகமும், ஏமாற்றும் செயலுமாகும்.
குர்ஆன் “தமாம்” நிகழ்வு தினம் 40 அரிசி மா ரொட்டி சுட்டு அவற்றை – ஏழைகளுக்கு அன்பளிப்புச் செய்வது இலங்கை நாட்டில் வழக்கத்தில் உள்ள ஒன்றாகும்.
பெரிய கத்தம் ஓதுவதற்கு திருக்குர்ஆனை மனனம் செய்த “ஹாபிழ்”களான மௌலவீமாருக்கு முன்னுரிமை கொடுப்பது மிகச் சிறந்ததாகும்.
பெரிய கத்தம் ஓதுவதற்கென்று பயிற்றப்பட்ட ஒரு குழு என்னிடம் உள்ளது. விரும்பியவர்கள் என்னுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
கத்தம் ஓதிவிட்டு கூலி பெறலாமா?
عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: انْطَلَقَ نَفَرٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفْرَةٍ سَافَرُوهَا، حَتَّى نَزَلُوا عَلَى حَيٍّ مِنْ أَحْيَاءِ العَرَبِ، فَاسْتَضَافُوهُمْ فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمْ، فَلُدِغَ سَيِّدُ ذَلِكَ الحَيِّ، فَسَعَوْا لَهُ بِكُلِّ شَيْءٍ لاَ يَنْفَعُهُ شَيْءٌ، فَقَالَ بَعْضُهُمْ: لَوْ أَتَيْتُمْ هَؤُلاَءِ الرَّهْطَ الَّذِينَ نَزَلُوا، لَعَلَّهُ أَنْ يَكُونَ عِنْدَ بَعْضِهِمْ شَيْءٌ، فَأَتَوْهُمْ، فَقَالُوا: يَا أَيُّهَا الرَّهْطُ إِنَّ سَيِّدَنَا لُدِغَ، وَسَعَيْنَا لَهُ بِكُلِّ شَيْءٍ لاَ يَنْفَعُهُ، فَهَلْ عِنْدَ أَحَدٍ ஜص:93ஸ مِنْكُمْ مِنْ شَيْءٍ؟ فَقَالَ بَعْضُهُمْ: نَعَمْ، وَاللَّهِ إِنِّي لَأَرْقِي، وَلَكِنْ وَاللَّهِ لَقَدِ اسْتَضَفْنَاكُمْ فَلَمْ تُضَيِّفُونَا، فَمَا أَنَا بِرَاقٍ لَكُمْ حَتَّى تَجْعَلُوا لَنَا جُعْلًا، فَصَالَحُوهُمْ عَلَى قَطِيعٍ مِنَ الغَنَمِ، فَانْطَلَقَ يَتْفِلُ عَلَيْهِ، وَيَقْرَأُ: الحَمْدُ لِلَّهِ رَبِّ العَالَمِينَ فَكَأَنَّمَا نُشِطَ مِنْ عِقَالٍ، فَانْطَلَقَ يَمْشِي وَمَا بِهِ قَلَبَةٌ، قَالَ: فَأَوْفَوْهُمْ جُعْلَهُمُ الَّذِي صَالَحُوهُمْ عَلَيْهِ، فَقَالَ بَعْضُهُمْ: اقْسِمُوا، فَقَالَ الَّذِي رَقَى: لاَ تَفْعَلُوا حَتَّى نَأْتِيَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَذْكُرَ لَهُ الَّذِي كَانَ، فَنَنْظُرَ مَا يَأْمُرُنَا، فَقَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرُوا لَهُ، فَقَالَ: «وَمَا يُدْرِيكَ أَنَّهَا رُقْيَةٌ»، ثُمَّ قَالَ: «قَدْ أَصَبْتُمْ، اقْسِمُوا، وَاضْرِبُوا لِي مَعَكُمْ سَهْمًا» فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، (صحيح البخاري 2276)
பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் தோழர்கள் ஒரு பயணம் மேற்கொண்டு முஸ்லிம்கள் அல்லாதவர்கள் வாழும் இடத்தை அடைந்தனர். அவ்வேளை தோழர்களுக்கு சாப்பிட வசதியின்றி காபிர்களான அக் கூட்டத்திடம் சென்று உணவு வழங்குமாறு கேட்டனர். அதற்கு அவர்கள் செவி சாய்க்காமல் விட்டனர். உணவு வழங்கவில்லை.
அவ்வேளை காபிர்களான அக் கூட்டத்தின் தலைவரை விஷ ஜந்து தீண்டியது. அவர்கள் தமது தலைவரின் விஷமிறக்கி அவர் ஆரோக்கியம் பெறுவதற்காக தம்மாலான முயற்சிகள் செய்தும் பயனளிக்கவில்லை.
அப்போது அவர்களின் ஒருவன், இங்கு வந்துள்ள முஸ்லிம்களின் கூட்டத்தில் யாராவது விஷக்கடிக்கு மருந்து தெரிந்தவர்கள் இருக்கலலாம் என்று கூற அவர்களிற் சிலர் முஸ்லிம்களிடம் வந்து உங்களிடம் ஏதாவது மருந்துண்டா என்று வினவினார்கள். முஸ்லிம்களில் ஒருவர் ஆம், மருந்துண்டு. எனக்கு மந்திரித்து விஷம் இறக்கத் தெரியும் என்றார்.
ஆயினும் நாங்கள் பசியோடு உங்களிடம் வந்து உணவு கேட்டபோது நீங்கள் உணவு தந்து எங்களுக்கு உதவவில்லையாதலால் நீங்கள் ஏதாவது கொடுப்பனவு தந்தால்தான் என்னால் மந்திரித்து விஷமிறக்க முடியும் என்றார். அவர்கள் அதற்கு இணக்கம் தெரிவித்து ஆட்டுப் பட்டியொன்று தருவதாகப் பொருந்தி ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
அப்போது அந்த நபீ தோழர் “பாதிஹா” அத்தியாயத்தை ஓதி அவனில் உமிழ்ந்தார். அல்லது விஷஜந்து தீண்டிய இடத்தில் உமிழ்ந்தார். அவன் அக்கணமே விஷமிறங்கி ஆராக்கியம் பெற்று விட்டான்.
அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஆட்டுப்பட்டியொன்று நபீ தோழருக்கு வழங்கப்பட்டது.
அவர் அதைப் பெற்றுக் கொண்டு ஏனைய தோழர்களிடம் வந்தபோது அவர்களில் ஒருவர் இதை நமக்கிடையில் பங்கு வைத்துக் கொள்வோம் என்று கூறினார். இதுகேட்ட மந்திரித்த நபீ தோழர் இல்லை. நாம் நபீ பெருமானிடம் சென்று அவர்கள் சொல்வது போல் செயல்படுவோம் என்றார். அவரின் சொற்படி அனைவரும் பெருமானாரிடம் வந்து நடந்த விடயத்தை தெளிவாகக் கூற பெருமானார் அவர்கள் மந்திரித்த நபீ தோழரிடம் அது மந்திரமென்று உங்களுக்கு எவ்வாறு தெரியும் என்று கூறி நீங்கள் செய்தது சரிதான் என்று சொல்லிவிட்டு எனக்கும் அதில் ஒரு பங்கு தாருங்கள் என்று சிரித்துக் கொண்டு சொன்னார்கள்.
ஆதாரம்: புகாரீ (2276), அறிவிப்பு: அபூ ஸயீத்,
மேற்கண்ட இந்த நபீ மொழி மூலம் பல பாடங்கள் எமக்குக் கிடைக்கின்றன. அப்பாடங்களை அடுத்த தொடரில் காணலாம்.
புனித றமழான் மாதம் நெருங்கிவிட்ட படியால் முஸ்லிம்கள் திருக்குர்ஆனை அதிகம் ஓத வேண்டும் என்பதற்காக மேற்கண்ட தகவல்களை எழுதினேன்.
தொடரும்.. (2பக்கம் பார்க்க…)