தொடர் – 02
பெரிய “கத்தம்” என்றால் என்ன? என்ற தலைப்பில் அது தொடர்பான விபரங்களையும், திருக்குர்ஆனை ஓதி வைத்தியம் செய்து விட்டு அதற்காக கூலி பெறலாம் என்பதற்கு ஆதாரமாக புகாரீ ஷரீபில் வந்துள்ள ஒரு நபீ மொழியையும் எழுதியிருந்தேன். அதன் இரண்டாம் தொடரில் அது தொடர்பான வேறு சில விபரங்களை எழுதுகிறேன்.
திருக்குர்ஆன் வசனங்களை ஓதி விஷமிறக்க முடியுமென்றால் அதே வசனங்களை ஓதியும், எழுதியும் நோய்களுக்கு மருந்தும் செய்யலாம் என்பது தெளிவாகிறது.
இதேபோல் திருக்குர்ஆன் வசனங்களை ஒரு தாளில் எழுதி, அல்லது ஒரு பீங்கானில் எழுதி அதை நீரால் கரைத்து நோயாளிக்கு குடிக்கக் கொடுப்பதன் மூலமும் வைத்தியம் செய்யலாம் என்பதும் தெளிவாகிறது.
ஆயினும் அர்த்தம் புரியாத மாற்று மத மந்திரங்களை ஜெபித்து வைத்தியம் செய்தல் பிழையாயிருப்பதுடன் அது தண்டனைக்குரிய குற்றமாகவும், சில வேளை “குப்ர்” எனும் இறை நிராகரிப்பையும் ஏற்படுத்தி விடவும் கூடும். ஆகையால் எந்த மந்திரமாயினும் அதை ஓதி வைத்தியம் செய்தல் கட்டாயமாக தடுக்கப்படவும், தவிர்க்கப்படவும் வேண்டும்.
ஆனால் எமக்கு பொருள் புரியாத வசனங்களாயினும் நபீமார், றசூல்மார், அவ்லியாஉகள், மற்றும் அக்தாபுகள், மஷாயிகுமார்களால் கோர்வை செய்யப்பட்ட ஓதல்களை ஓதியும், எழுதியும் வைத்தியம் செய்யலாம்.
உதாரணமாக குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஷெய்தான்கள், எதிரிகள், பேய், ஜின்கள் போன்றவற்றின் தீமை ஏற்படாமல் ஓதி வந்த ஓதல்களின் பொருள் புரியாது போனாலும் அவற்றையும் நாம் ஓதலாம். எழுதி குடித்தும் வரலாம். ஏனெனில் அவற்றில் “ஷரீஆ”வுக்கு முரணான எந்த ஓர் அம்சமும் இருக்காது.
இதோ அவர்கள் எழுதிய மந்திரம் ஒன்று.
كَفَاكَ رَبُّكَ كَمْ يَكْفِيْكَ وَاكِفَةً
كِفْ كَافُهَا كَكَمِيْنٍ كَانَ مُنْ كَلِكَا
تَكُرُّ كَرًّا كَكَرِّ الْكَرِّ فِى كَبَدِ
تَحْكِيْ مُشَكْشَكَةً كَلَّتْ لَكَ الْكَلِكَا
كَفَاكَ مَا بِيْ كَفَاكَ الْكَافُ كُرْبَتُهُ
يَا كَوْكَبًا كَانَ تَحْكِيْ كَوْكَبَ الْفَلَكَا
இதன் பொருள் முழுமையாகத் தெரியாது போனாலும் இது குத்புஸ்ஸமான் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களால் கோர்வை செய்யப்பட்ட மந்திரமாதலால் இதில் “குப்ர்” என்பதோ, “ஷிர்க்” என்பதோ இருப்பதற்குச் சாத்தியமே இல்லை. ஏனெனில் அவர்கள் குத்புஸ்ஸமான் ஆவார்கள்.
இவர்கள் போல் இன்னும் குத்புமார்களிலும், வலீமார்களிலும் பலர் பல மந்திரங்கள் கூறியுள்ளார்கள். அவற்றையும் நாம் எந்தவொரு சந்தேகமுமின்றி ஏற்றுச் செயல்படுவோம்.
உதாரணமாக ஷாதுலிய்யா தரீகாவின் தாபகரான அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அலீ ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கோர்வை செய்த மந்திரம் போன்று.
بِسْمِ اللهِ بَابُنَا، تَبَارَكَ حِيْطَانُنَا، يس سَقْفُنَا، كهيعص كِفَايَتُنَا، حمعسق حِمَايَتُنَا، فَسَيَكْفِيْكَهُمُ اللهُ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمْ، فَاللهُ خَيْرٌ حَافِظًا، وَهُوَ اَرْحَمُ الرَّاحِمِيْنْ،
இதிலும் எந்தவித “குப்ர்” நிராகரிப்பும், “ஷிர்க்” இணை வைத்தலும் கிடையாது. இதை அறபு மொழி வாசிக்கத் தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கொடுத்து தமிழில் எழுதிக் கேட்டு ஓதலாம்.
இதேபோல் பாரசீக மொழியையும், அறபு மொழியையும் கலந்து மந்திரங்கள் கோர்வை செய்த பல மகான்கள் உள்ளனர். அவற்றையும் நாம் ஓதலாம். உதாரணமாக
بِسْمِ الْإِلَهِ الْخَالِقِ الْأَكْبَرِ، وَهُوَ حِرْزٌ مَانِعٌ مِمَّا أَخَافُ مِنْهُ وَأَحْذَرُ، لَا قُدْرَةَ لِمَخْلُوْقٍ مَعَ قُدْرَةِ الْخَالِقِ، يُلْجِمُهُ بِلِجَامِ قُدْرَتِهِ، أَحْمِيْ حَمِيْثًا أَطْمِيْ طَمِيْثًا، وَكَانَ اللهُ قَوِيًّا عَزِيْزًا، حمعسق حِمَايَتُنَا، كهيعص كِفَايَتُنَا، فَسَيَكْفِيْكَهُمُ اللهُ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمْ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ الْعَلِيِّ الْعَظِيْمْ،
என்பது போன்று.
மேற்கண்ட மூன்று ஓதல்களும் முப்பெரும் குத்புமாரால் கோர்வை செய்யப்பட்ட மூன்று வகையான மந்திரங்களாகும். பேய், ஜின், ஷெய்தான், மற்றும் எதிரிகளின் தீமை ஏற்படாமலிருக்க எப்போதும் வீட்டிலிருந்து வெளியே செல்லு முன் ஓதிக் கொள்வது சிறந்ததாகும்.
தொடர் ஒன்றில் நான் எழுதியுள்ள நபீ மொழியில் விஷஜந்தால் தீண்டப்பட்ட காபிர்களின் கூட்டத் தலைவனுக்கு ஏற்பட்ட விஷத்தை இறக்குவதற்காக அவர்கள் எடுத்த முயற்சிகள் பயனளிக்காமற் போனதால் நபீ தோழர்களில் யாருக்காவது ஏதாவது தெரிந்திருக்கலாம் என்று எண்ணி அவர்களிடம் காபிர்கள் வந்து கேட்ட போது நபீ தோழர்களில் ஒருவர் وَاللهِ إِنِّيْ لَأَرْقِيْ அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் மந்திரிப்பேன் என்று கூறினாரேயன்றி إِنِّيْ لَأَقْرَأُ நான் ஓதுவேன் என்ற சொல்லை அவர் பயன்படுத்தவில்லை. நபீ தோழர் பயன்படுத்திய لَأَرْقِيْ நான் மந்திருப்பேன் என்ற இச் சொல் رُقْيَةٌ – “றுக்யதுன்” என்ற சொல்லடியில் உள்ளதாகும்.
“றுக்யத்” என்றால் மந்திரித்தல் என்று பொருள். ஓதுதல் என்ற பொருள் இதற்கில்லை.
اَلرُّقْيَةُ هِيَ أَنْ يُسْتَعَانَ لِلْحُصُوْلِ عَلَى أَمْرٍ بِقُوًى تَفُوْقُ الْقُوَى الطَّبِيْعِيَّةَ فِى زَعْمِهِمْ أَوْ وَهْمِهِمْ،
மந்திரித்தல் என்பது ஒரு காரியத்தை அடைந்து கொள்வதற்கு மனிதனின் இயற்கையான சக்திக்கு அப்பாற் பட்ட ஒரு சக்தி கொண்டு உதவி தேடுதலாகும். இதுவே மந்திரம் எனப்படும். இவ் விபரம் إِنِّيْ لَأَرْقِيْ நான் மந்திரிப்பேன் என்று சொன்ன நபீ தோழருக்கு ஏற்கனவே தெரிந்திருந்த ஒரு விடயம் என்பது அவர் கூறிய இவ்வசனத்தின் மூலம் அறிய முடிகிறது. இதனால்தான் அவர் إِنِّيْ لَأَقْرَأُ நான் ஓதுவேன் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் إِنِّيْ لَأَرْقِيْ மந்திரித்தல் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.
இவ்விபரத்தை சிந்தனைக்கு எடுத்து ஆய்வு செய்தால் கண் திஷ்டி – கண்ணூறு, காய்ச்சல் போன்றவற்றுக்கு ஓதிப் பார்ப்பதற்கு رُقْيَةٌ என்று சொல்ல முடியும் என்பது தெளிவாகிறது.
இந்த விபரம் எம் பெருமானார் அவர்களுக்கு தெரிந்திருந்ததினால்தான் மந்திரித்த தோழரிடம் وَمَا يُدْرِيْكَ أَنَّهَا رُقْيَةٌ அது மந்திரம் என்பது உங்களுக்கு எவ்வாறு தெரியுமென்று வியந்த நிலையில் கேட்டார்கள். رَقَى يَرْقِيْ رَقْيًا என்ற அமைப்பில் வசனம் வந்தால் மந்திரித்தான் என்ற பொருளும், رَقِيَ يَرْقَى رَقْيًا என்ற அமைப்பில் வந்தால் ஏறினான் என்ற பொருளும் வரும். உதாரணமாக رَقِيَ الْجَبَلَ மலையில் ஏறினான் என்பது போன்று. رَقَى الْجَبَلَ என்று சொல்வது பிழை. ஆனால் رَقَى مُزَمِّلًا என்று சொல்ல முடியும். இதன் பொருள் முசம்மிலுக்கு மந்திரித்தான் என்று வரும்.
மேற்கண்ட மந்திரித்தல் தொடர்பான நபீ மொழி மூலம் இன்னும் பல பாடங்கள் கிடைக்கின்றன. அதாவது முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் சமைத்த உணவை, கறியை சாப்பிட முடியும், அது ஆகும் என்பதும் விளங்கப்படுகிறது. فَاسْتَضَافُوْهُمْ நபீ தோழர்கள் அந்தக் காபிர்களிடம் விருந்து தருமாறு கேட்டார்கள் என்ற நபீ மொழியில் வந்துள்ள வசனம் ஆதாரமாக உள்ளது. நபீ தோழர்கள் அவர்களிடம் விருந்து தருமாறு கேட்டார்களேயன்றி சாப்பிட உணவு தாருங்கள் என்று கேட்கவில்லை. اِسْتَضَافُوْهُمْ என்றால் அவர்களிடம் விருந்து தருமாறு கேட்டார்கள் என்று பொருள். اِسْتَطْعَمُوْهُمْ என்றால் அவர்களிடம் உணவு தருமாறு கேட்டார்கள் என்று பொருள். நபீ தோழர்கள் விருந்து தாருங்கள் என்றே கேட்டுள்ளார்கள் விருந்து தாருங்கள் என்று கேட்பதற்கும், உணவு தாருங்கள் என்று கேட்பதற்கும் வித்தியாசமுண்டு. விருந்து தாருங்கள் என்று கேட்பது கண்ணியமாகத் தாருங்கள் என்ற கருத்தையும், சாப்பிடத் தாருங்கள் என்று கேட்பது எப்படியாவது தாருங்கள் என்ற கருத்தையும் உணர்த்தும் சொற்களாகும்.
முஸ்லிம்கள் எங்காவது பயணிக்கும் போது முஸ்லிம் அல்லாதவர்கள் சமைத்த சாப்பாட்டைச் சாப்பிட வேண்டிய தேவை ஏற்படுகிறது. தேனீர் குடிக்க வேண்டிய தேவையும் ஏற்படுகிறது. பாண், பனிஸ், கேக் போன்றவற்றைச் சாப்பிட வேண்டிய தேவையும் ஏற்படுகிறது. பயணிகளிற் சிலர் சாப்பிடுதல், குடித்தலைத் தவிர்த்துக் கொள்கிறார்கள். இது தொடர்பாக யாரும் யோசிக்கத் தேவையில்லை. நம்மை விட பக்தியிலும், பேணுதலிலும் நமக்கு முன்னோடிகளான நபீ தோழர்கள் காபிர்களிடம் விருந்து வழங்குமாறு கேட்டது ஒன்றே காபிர்கள் சமைத்த உணவை உட் கொள்ள முடியும் என்பதற்கான ஆதாரமாகும்.
சைவ ஹோட்டல்களில் எது சமைப்பதாயினும் முதலில் மாட்டின் சலம் கொண்டு பாத்திரங்களைக் கழுவிய பிறகுதான் அவற்றில் சமைப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இது உண்மையா? பொய்யா? என்பது எமக்குத் தெரியாதாகையால் நாம் சைவ ஹோட்டல்களில் சாப்பிடுவது “ஹறாம்” தடுக்கப்பட்டதாகாது. எனினும் இது உண்மைதான் என்று ஆதார பூர்வமாக நிறுவப்பட்டால் மட்டுமே அங்கு சாப்பிடுவது விலக்கப்பட்டதாகும். சைவ ஹோட்டல்களின் உரிமையாளர்கள் இது தொடர்பாக பகிரங்க அறிவித்தல் செய்வது முஸ்லிம், இந்து இன ஒற்றுமைக்கு வழி செய்யும். சைவ ஹோட்டல்களின் உரிமையாளர்கள் பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கும் வழி பிறக்கும். மேற்கண்ட நபீ மொழியை ஆதாரமாகக் கொண்டு முஸ்லிம் அல்லாதவர்களின் வீடுகளில் நடைபெறுகின்ற விஷேட நிகழ்வுகளுக்கு அழைக்கப்படும் முஸ்லிம்கள் இன, மத வேறுபாடுகளை வெளிப்படுத்தாமல் அவர்களின் அழைப்பிற்கு பதில் சொல்வது – அவர்களின் சமய நிகழ்வுகள் அல்லாத வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வது இன, மத ஒற்றுமைக்கு வழி செய்வதுடன் இஸ்லாம் மார்க்கத்தின் உயர் பண்பையும் எடுத்துக் காட்டும் என்பதில் ஐயமில்லை. “காபிர்களின் உறவு கரண்டைக் காலின் கீழ்” என்று சொல்லப்படுகின்ற வசனம் தூர நோக்கற்றவர்களால் சொல்லப்பட்ட வசனம் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
திருக்குர்ஆன் ஓதுவதற்கு கூலி பேசலாமா?
ஆம், பேசலாம். மேற்கண்ட நபீ மொழி இதற்கு மறுக்க முடியாத ஆதாரமாகும். நபீ தோழர் திருக்குர்ஆனை ஓதி விஷமிறக்குவதற்கு கூலி பேசியது இது ஆகும் என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரமாகும். “பாதிஹா” அத்தியாயத்தை ஓதி விஷமிறக்கியதற்கு ஆட்டுப்பட்டி ஒன்றையே கூலியாகத் தருவோம் என்று கூறிய அவர்களின் பெருந்தன்மை பாராட்டுதற்குரியதாகும். காபிர்களின் இப் பெருமை முஸ்லிம்களுக்கு ஒரு படிப்பினையாக அமையுமா? உலமாஉகளைக் கொண்டு வேலை வாங்கிவிட்டு சென்று வாருங்கள் என்று அவர்களை வெறும் கையோடு அனுப்புவதை நிறுத்திக் கொள்வார்களா?
மேற்கண்ட நபீ மொழியில் வந்துள்ள يَتْفُلُ என்ற சொல்லுக்கு உமிழ்ந்தான், துப்பினான் என்றுதான் பொருள் கொள்ள வேண்டுமேயன்றி வாயால் ஊதினான் என்று பொருள் கொள்ளலாகாது. இவ்வாறு பொருள் வருவதாயின் نَفَثَ அல்லது نَفَخَ என்ற சொல் வந்திருக்க வேண்டும். ஆகையால் விஷமிறக்க மந்திரிப்பவராயினும், காய்ச்சல் போன்ற நோய்க்காக மந்திரிப்பவராயினும் தனது உமிழ் நீர் நோயாளியில் படுமளவு ஊத வேண்டும் என்று விளங்கப்படுகிறது. நீரில் ஓதி ஊதுபவரும் இவ்வாறே செய்ய வேண்டும். இது சுகாதாரத்திற்குப் பிழையாகாது. இவ்வாறு செய்பவர் “முஃமின்” விசுவாசியாயிருக்க வேண்டும். ஏனெனில் سُؤْرُ الْمُؤْمِنِ شِفَاءٌ “ஒரு விசுவாசி குடித்து மிஞ்சிய நீர் மருந்து” என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அருளியுள்ளார்கள். ஒருவர் குடித்து மிஞ்சிய நீரை இன்னொருவர் குடிப்பது சுகாதாரத்திற்கு கேடாகும் என்றிருந்தால் வைத்திய மேதைகளின் தந்தை எம் பெருமானார் அவர்கள் அவ்வாறு சொல்லியிருக்கமாட்டார்கள். குறித்த நபீ மொழியில் “முஃமின்” – விசுவாசி குடித்து மிஞ்சிய நீர் மற்றவர்களுக்கு மருந்தென்று பெருமானார் அவர்கள் கூறியிருப்பதால் விசுவாசியல்லாதவர் குடித்து எஞ்சிய நீர் மருந்தாகமாட்டாதென்ற உண்மை தெளிவாகிறது. விசுவாசத்தின் மகத்துவத்தை என்னென்று சொல்வது?!
இறுதியில் நபீ பெருமானார் அவர்கள் அந்த ஆட்டுப் பட்டியிலிருந்து எனக்கும் ஒரு பங்கு தாருங்கள் என்று சிரித்துக் கொண்டு சொன்னார்கள்.
முற்றும்.
இக்கட்டுரையை வாசித்துப் பயன் பெறுவோர் எனக்காக ஒரு சில நொடிகள் “துஆ” செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.