Thursday, October 10, 2024
Homeஎழுத்தாக்கங்கள்إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ நான் உங்கள் போன்ற மனிதனே!

إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ நான் உங்கள் போன்ற மனிதனே!

நான் 1960ம் ஆண்டு காலி “பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா” அறபுக் கல்லூரியில் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் திரு மக்கா நகரிலிருந்து மர்ஹூம் கலாநிதி டொக்டர் பாஸீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் இலங்கைத் திரு நாட்டிற்கு விஜயம் செய்த போது அவர்கள் காலி நகருக்கும் அழைத்து வரப்பட்டு எங்களின் அறபுக் கல்லூரியிலேயே தங்கியிருந்தார்கள். அவ்வேளை சுமார் 60 மாணவர்கள் இருந்தார்கள். அவர்களில் நானும் ஒருவன். நாங்கள் அனைவரும் அவர்களிடம் “பைஅத்” செய்தோம். இவர்கள்தான் எனது முதலாவது ஷெய்கு ஆவார்கள்.

இதன் பின் காயல் பட்டினம் அஷ்ஷெய்குல் காமில், அல் ஆரிபுல் வாஸில் அப்துல் காதிர் ஸூபீ ஸித்தீகீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்கி காத்தான்குடியை அடுத்துள்ள பாலமுனை எனும் ஊரில் நடந்த ஒரு “றாதிப் மஜ்லிஸ்” ஒன்றில் நானும், மர்சூக் ஆசிரியரின் தந்தை மர்ஹூம் மீரா சாஹிபு – ஓய்வு பெற்ற அதிபர் அவர்களும், பாலமுனை மர்ஹூம் முஸ்தபா ஆசிரியர் அவர்களும் “பைஅத்” செய்தோம்.
 
இதன் பிறகு ஷெய்குனா ஸூபீ நாயகம் அவர்கள் காத்தான்குடி “ஹபீபா” புடவைக்கடை உரிமையாளர் செய்னுல் ஆப்தீன் ஹாஜியார் அவர்களின் வீட்டில் தங்கியிருந்த கால கட்டத்தில் அவ்வீட்டுக்கு என்னை அழைத்து “இஜாசா” – “பைஅத்” கொடுப்பதற்கான அனுமதி முறைப்படி எழுதிக் கையெழுத்தும் வைத்து தந்தார்கள். அதன் மூலப் பிரதி இப்போதும் என்னிடம் உள்ளது. விரும்புவோர் வருகை தந்து பார்த்துக் கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ்!
ஷெய்குனா அவர்கள் எனக்கு “இஜாசா” அனுமதி வழங்கிய வரலாறு மிக நீண்டது. விபரமாக எழுதுவதாயின் பல பக்கங்கள் எழுத வேண்டும் என்பதால் சுருக்கிக் கொண்டேன்.
 
இதன் பிறகு அஷ்ஷெய்குல் காமில், “கறாமத்” – அற்புதக் கடல் அஷ்ஷெய்கு, அஸ்ஸெய்யித் அப்துர் றஷீத் கோயா தங்கள் மௌலானா வாப்பா அவர்களிடம் “பைஅத்” செய்தேன். இதன் வரலாறும் மிக நீண்டது. சுருக்கிக் கொண்டேன்.
மேலே நான் குறிப்பிட்ட மூன்று மகான்களிடம் நான் “பைஅத்” செய்து கொண்டாலும் “பைஅத்” வழங்குவதற்கு எனக்கு “இஜாசா” அனுமதி வழங்கியவர்கள் காயல் பட்டினம் ஷெய்குனா அப்துல் காதிர் ஸூபீ ஹழ்றத் அவர்கள் மட்டுமே. இவர்களின் “தரீகா” விதி அடிப்படையிலேயே நான் இன்று “பைஅத்” வழங்கி வருகிறேன்.
 
இலங்கையில் என்னிடம் “பைஅத்” செய்து கொண்டவர்களில் அதிகமானவர்கள் காத்தான்குடி, கல்முனை, கண்டி, காலி கொழும்பு, புல்மோட்டை முதலான ஊரவரேயாவர். இவர்களிற் பலர் லண்டன், மலேசியா, சிங்கப்பூர், இந்தொனேஷியா, சஊதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், கத்தார், குவைத் முதலான நாடுகளில் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் என்னுடன் கைபேசியில் தொடர்புள்ளவர்களாகவே உள்ளனர். பள்ளிவாயலுக்கும் உதவி செய்து கொண்டே உள்ளார்கள்.
 
அன்பிற்குரிய முரீதீன்களே! முரீதாக்களே!
 
நீங்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஷரீஆ, தரீகா, ஹகீகா, மஃரிபா ஆகிய நான்கு வழிகளோடும் தொடர்புள்ளவர்களாக இருந்து கொள்ள வேண்டுமென்று உங்களுக்கு “வஸிய்யத்” செய்து கொள்கிறேன். இதேபோல் உள் நாட்டிலுள்ள முரீதுகள் வருடத்திற்கு ஒரு முறையாவது என்னை நேரில் சந்திக்க வேண்டுமென்றும், வெளிநாடுகளில் உள்ளவர்கள் தமது வசதிக்கேற்ப சந்திக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.
 
வசதி வாய்ப்புள்ளவர்கள் தினமும் “ஸில்ஸிலா” ஓத வேண்டுமமென்றும், தினமும் ஓத முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் ஓத வேண்டுமென்றும், தினமும் இஷா தொழுகையின் பின் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று 100 தரமும், “இல்லல்லாஹ்” என்று 100 தரமும், “அல்லாஹ்” என்று 100 தரமும் “திக்ர்” செய்ய வேண்டுமென்றும், தினமும் எம் பெருமானார் அவர்கள் மீது குறைந்தபட்சம் 10 தரமாவது “ஸலவாத்” சொல்ல வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன். தினமும் ஐந்து நேரமும் கட்டாயம் தொழுது வரவேண்டுமென்றும், ஒவ்வொரு தொழுகையின் பின்னும் எனக்காக ஒரு நிமிடம் ஒதுக்கி “துஆ” செய்து கொள்ள வேண்டுமென்றும் அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
 
நமது ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்த அதி திறமையுள்ள ஏழை மாணவர்கள் க.பொ.த சாதாரண தரம் முடித்துவிட்டு வறுமை காரணமாக உயர் தரம் கற்காமல், அல்லது உயர் தரம் முடித்துவிட்டு மேற்படிப்பு படிக்காமல் கல்வி நடவடிக்கையை நிறுத்திக் கொண்டு வியாபார நிலையங்களுக்கு வேலைக்காகச் செல்கிறார்கள். இன்னும் சிலர் வெளிநாடுகளுக்கும் செல்கிறார்கள். இதனால் நமது ஸூபிஸ சமூகத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை நாளடைவில் குறைந்து கொண்டே போகிறது. இதனால் கல்வித்துறையில் நமது ஸூபிஸ சமூகம் பின்னடைவைச் சந்திக்க நேரிடுகிறது. சில மாணவர்களுக்கு எனது சொந்தப் பணத்தைக் கொடுத்து உதவி செய்து கொண்டிருக்கிறேன். உங்களால் முடியுமான பண உதவி செய்தால் அவர்கள் உயர் கல்வி கற்பதற்கு உதவலாம் என்பதை உங்களின் கவனத்திற்கு தருகிறேன். நமது ஸூபிஸ சமூகம் எதிர்காலத்தில் உலகக் கல்வியில் முன்னேற வேண்டுமென்பது எனது அவா.
 
அன்பிற்குரியவர்களே!
 
உங்களிற் பலர் எனது பெயருடன் “சித்தீகீ” என்ற சொல்லையும் சேர்த்து எழுதுகிறீர்கள். பேசுகிறீர்கள். நான் உண்மையில் “சித்தீக்” என்ற பட்டத்துக்கு உரியவனல்ல. ஆகையால் இதன் பிறகு அவ்வாறு எழுதுவதையும், பேசுவதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு அன்பாய் கேட்டுக் கொள்கிறேன்.
நமது ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்த உலமாஉகளிற் பலர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வருகிறார்கள். நமது “அல் ஜாமிஅதுர் றப்பானிய்யா”வில் கல்வி கற்று மௌலவீகளாக வெளியானவர்கள் 78 பேர்கள் உள்ளனர். அவர்களிற் சிலர் வெளிநாடுகளில் உள்ளார்கள். ஏனையோர் நமது நாட்டிலேயே உள்ளார்கள். இவர்கள் விடயத்திலும் நீங்கள் கவனம் எடுக்க வேண்டுமென்றும் உங்களை அன்பாய் வேண்டுகிறேன்.
 
அன்பிற்குரிய முரீதீன்களே!
 
“முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் மனிதர்களே” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எனது கட்டுரையை வாசித்த நமது ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்தவர்களிற் சிலர் என்னை இகழ்வார்கள் என்றும், இன்னும் சிலர் புகழ்வார்கள் என்றும் நினைக்கிறேன். ஏனையவர்களில் அதிகமானவர்கள் புகழ்வார்கள் என்றும் நம்புகிறேன். என்னை இகழ்பவர்களுக்கு நான் எந்த அறிவுரையும் கூற விரும்பவில்லை. ஆயினும் ஒன்றை மட்டும் அவர்களுக்குச் சொல்லி வைக்க விரும்புகிறேன். அதாவது إِنِّيْ أَعْلَمُ مَا لَا تَعْلَمُوْنَ “நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்” என்ற திரு வசனமாகும்!! ஒரு சமயம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தமது தோழர்கள் மத்தியில் لَوْ تَعْلَمُوْنَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيْلًا وَبَكَيْتُمْ كَثِيْرًا “நான் அறிவதை நீங்கள் அறிந்தால் சொற்பமாகச் சிரிப்பீர்கள். அதிகமாக அழுவீர்கள்” என்று கூறினார்கள். நான் “றஸூல்” ஆகவோ, “நபீ”யாகவோ, “வலீ”யாகவோ இல்லாது போனாலும் இருளில் கிடந்த பலரை ஒளியின் பால் அழைத்தவன் என்பதையும், என்னைக் கொண்டே சத்தியக் கொள்கையை அவர்கள் அறிந்து கொண்டவர்கள் என்பதையும் அவர்கள் உணர வேண்டுமென்பது எனது தாகமாகும்.
 
اللهم أَرِهِمِ الْحَقَّ حَقًّا وَارْزُقْهُمُ اتِّبَاعَهْ، وَأَرِهِمِ الْبَاطِلَ بَاطِلًا وَارْزُقْهُمُ اجْتِنَابَهْ،
எவர்களிடம் தீக்குணங்கள் இருக்கக் கூடாதோ அவர்களிடம் அது இருப்பது கவலைக்குரியதாகும். “ஸூபீ” என்ற சொல்லை சரியாகப் புரிந்தவனிடம் اَلْأَخْلَاقُ الْمَحْمُوْدَةُ நற்குணங்கள் இருக்குமேயன்றி اَلْأَخْلَاقُ الْمَذْمُوْمَةُ தீக்குணங்கள் இருக்க முடியாது. அது அசாத்தியம். ஒளியிருக்கும் வரை இருள் வராது.
 
لا إله إلا الله
அல்லாஹ்வைத் தவிர ஒன்றுமே இல்லை, அல்லது அல்லாஹ்வுக்கு வேறான ஒன்றுமில்லை என்ற நம்பிக்கை – அதாவது எல்லாமவனே, அல்லது அவன் மட்டுமே உள்ளான் என்ற சூரியப் பிரகாசம் இருக்கும் வரை அவன் வேறு, அவை வேறு என்ற இருள் எங்கனம் வர முடியும்?
“ஸூபீ” என்பவர் யார்? “தஸவ்வுப்” ஸூபித்துவம் என்றால் என்ன? என்பதைத் தெளிவாக அறிந்தவன்தான் ஸூபீயேயன்றி கிழிந்த, அழுக்கான உடைகளை அணிந்து தலைவிரிக் கோலத்தில் சாலைகளைச் சுற்றுபவனும், மூலைகளில் படுத்துறங்குபவனும்தான் ஸூபீ என்பதல்ல.
ஒரு கவிஞர் பின்வருமாறு சொல்கிறார்.
 
لَيْسَ التَّصَوُّفُ لُبْسَ الصُّوْفِ وَالْخَلِقِ – بَلِ التَّصَوُّف حُسْنُ الصَّمْتِ وَالْخُلُقِ
ஸூபிஸம் என்பது கம்பளியை உடுப்பதும், கிழிந்த துணியை உடுப்பதுமல்ல. ஸூபிஸம் என்றால் அழகிய மௌனமும், அழகிய குணமுமாகும்.
சிலர் நினைக்கிறார்கள் ஸூபிஸம் என்றால் அழுக்கான, கிழிந்த ஆடைகள் உடுத்து, எவருடனும் பேசாமல், தலை விரிக் கோலமாக ஒரு மூலையில் சுருண்டு கிடப்பதென்று. இது அறியாமை அல்லது நடிப்பு.
இமாம் ஜுனைத் அல் பக்தாதீ றஹிமஹுல்லாஹ் “ஸூபிஸம்” என்பதற்கு வரைவிலக்கணம் சொல்கையில்,
اَلتَّصَوُّفُ أَنْ يُمِيْتَكَ الْحَقُّ عَنْكَ وَيُحْيِيَكَ بِهِ،
“ஸூபிஸம்” என்பது அல்லாஹ் உன்னை விட்டும் உன்னை “மவ்த்”தாக்கி – மரணிக்கச் செய்து அவனைக் கொண்டு உன்னை உயிர்ப்பிப்பதாகும் – தரிபடுத்துவதாகும்” என்று கூறியுள்ளார்கள்.
இமாம் ஜுனைத் அவர்கள் ஸூபீகளின் தலைவர் سَيِّدُ الطَّائِفَةِ الصُّوْفِيَّةْ என்று எல்லா ஸூபீகளாலும் அழைக்கப்பட்டு வந்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று சற்று கதவைத் திறந்து பார்ப்போம். உன்னை விட்டும் அல்லாஹ் மரணிக்கச் செய்வதென்றால் உன்னிடமுள்ள “நான்” என்ற உணர்வை, நான் ஒருவன் இருக்கிறேன் என்ற உணர்வை உன்னை விட்டும் நீக்கிவிடுவதாகும். அதாவது உன்னிடமுள்ள أَنِّيَّةْ “அன்னிய்யத்” நான் எனும் உணர்வு இல்லாமற் போவதாகும். இன்னும் விளக்கமாகச் சொல்வதாயின், உன் பெயர் முசம்மில் என்றிருந்தால் முசம்மில் என்று ஒருவன் இல்லை. முசம்மிலாக இருப்பவன் இறைவன்தான் என்று நீ உணர்வதாகும். நீ அல்லாஹ்வின் வெளிப்பாடு என்று நீ புரிவதாகும். இதை இனியில்லை என்ற அளவு சுருக்கிச் சொல்வதாயின் “நீ அல்லாஹ்” என்று விளங்கிக் கொள்வதாகும்.
 
ஸூபிஸம் தொடர்பான முன்னறிவு உனக்கு இல்லையாயின் நான் சொல்வது என்னவென்று கூட உனக்கு விளங்காது. இது தலையில்லாதவன் பேச்சோ என்று கூட நீ நினைக்கலாம். அவ்வாறில்லை. என் தலை நன்றாகவே உள்ளது. உன் தலைவிதி நல்லதாயின் உனக்கு இப்போது புரியாது போனாலும் நாட் செல்லச் செல்ல உனக்குப் புரிந்து விடும். அப்போது என் காலத்தை வீணாக்கி விட்டேனே என்று கண்ணீர் வடிப்பாய். கவலைப்படுவாய்.
 
இதே கருத்தை ஓர் ஆன்மஞானி பின்வருமாறு கூறுகிறார்.
நான் என்றிருந்தேனே
நாளும் கழிந்தேனே
தானாயிருந்த
தன்மையறியேனே!
அவர் ஒருவர் இருப்பதாக நினைத்திருந்தாராம். அந்த அறியாமை நினைப்பிலேயே அவரின் காலம் கழிந்து விட்டதாம். இறைவா! நீதான் என்னாயிருந்தாய் என்ற இரகசியம் எனக்குப் புரியாமற் போய் விட்டதே என்று வேதனைப்படுகிறார்.
எனதன்பின் முரீதே! நீயும் இவர் போன்றவர்தான். என்னாக அல்லாஹ் இருந்தானா? இது என்ன அதிசயமான கருத்து என்று சொல்வாய். இவ்வாறு சொல்லும் என்னை ஏசவும் செய்வாய். தீண்டவும் செய்வாய். اَلنَّاسُ أَعْدَاءُ مَا جَهِلُوْا மனிதர்கள் தமக்குத் தெரியாதவற்றின் எதிரிகள் என்று ஒரு பழமொழி உண்டு. பழ மொழி பொய்யல்ல. பழ மொழி பொய்யானால் பழஞ் சோறு சுடுமாம். இதுவும் ஒரு பழ மொழிதான். தொடர்ந்து எழுத முடியும். ஆனால் நீ வாசிக்க சடைந்துவிடுவாய். இதோடு நிறுத்திப் பின்னர் தொடர்கிறேன்.
 
அன்பின் முரீதீன்களே!
 
நீங்கள் என்னைக் கொளரவிப்பதற்காக சில வேலைகள் செய்கிறீர்கள். அவை எனக்கு உண்மையில் விருப்பமானவையல்ல. இதை நீங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். திருமண நிகழ்வுகளின் போது மணமகன், மணமகளுடன் நானும் சேர்ந்து “போட்டோ” படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள். இதையும் நீங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
 
நான் உங்கள் இல்லங்களுக்கு வரும் போது வெள்ளை விரித்து என்னை வரவேற்கிறீர்கள். இதையும் நீங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனால் இவை பிழை “பித்அத்” என்று நான் சொல்லவில்லை. எனினும் எனக்கு இவற்றில் விருப்பமில்லை என்பதினால்தான்.
 
நான் நபீயுமல்ல, றசூலுமல்ல, ஒரு வலீயும் அல்ல. எனினும் நான் மனிதன் என்ற வகையில் என்னிடம் மனித சுவாபம் நிச்சயமாக இருக்கும். ஒருவர் ஒரு நிகழ்வில் வரவேற்கப்படும் வேளை அவர் தனக்கு கிடைக்கின்ற புகழால் பெருமைக்கும், புகழுக்கும் அடிமையாக நேரிடலாம். அதற்குச் சாத்தியமுண்டு. இதை தடுப்பதாயின் அதற்கு காரணமானவற்றை முதலில் தடுக்க வேண்டும். إِذَا فَاتَ السَّبَبُ فَاتَ الْمُسَبَّبُ காரணம் இல்லையெனில் காரியமுமில்லை என்பது பொது விதி. இதனால்தான் மேற்கண்டவாறு சொன்னேன்.
 
தொடரும்… (2ம் பக்கம் பார்க்க…)

RELATED ARTICLES

Most Popular

Recent Comments