Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்உதவி செய்தவனுக்கு உபத்திரவம் செய்வது துரோகம்!

உதவி செய்தவனுக்கு உபத்திரவம் செய்வது துரோகம்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
“முனாஸ்” என்பவன் “முசம்மில்” என்பவனுக்கு ஓர் உதவி செய்தால் முசம்மில் அவனுக்கு நன்றியுள்ளவனாக இருப்பதே நியாயமும், பெருந் தன்மையும், மனிதாபிமானமுமாகும். இதுவே இஸ்லாமிய ஸூபிஸம் கூறும் தத்துவம். இதற்கு மாறு செய்பவன் துரோகியாவான். இஸ்லாம் கூறும் பண்பாடற்றவனுமாவான்.
இத்தகைய துரோகிகள் இக்காலத்தில் எல்லா மதத்தவர்களிலும் உள்ளனர். இவர்களுக்கு தாம் செய்வது பிழையென்று தெரியும். அறிந்திருந்தும் செய்கிறார்கள். இவர்களின் இப் பண்பை புறப்புவாசிப் பண்பென்றே கூற வேண்டும்.

இது தொடர்பாக எனக்கு நடந்த ஒரு நிகழ்வை எழுதிக் காட்டவா?
ஒரு நாள் “மக்ரிப்” நேரம் – மாலை 06.30 மணியளவில் வறுமையால் வாடியவர் போன்ற தோற்றமுள்ள, கிழிந்த அழுக்கான உடை அணிந்த, அடர்ந்த தாடி உள்ள, அவரின் மூக்கை விடப் பல் நீண்ட ஒருவர் பள்ளிவாயலுக்கு வந்து என்னைச் சந்தித்தார். தனது வறுமையையும், கஷ்ட நஷ்டங்களையும் எடுத்தோதினார். என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். தங்குவதற்கு இடமும், மூன்று நேர சாப்பாடும், மற்றும் தேனீரும் ஒரு வருடத்திற்கு தர வேண்டும் என்றார்.
 
என் தந்தை எனக்குச் சூட்டிய “அப்துர் றஊப்” இரக்கமுள்ளவனின் அடிமை என்ற பெயர் பிழையாகிவிட, என் தந்தையின் குறி தவறி விடக் கூடாதென்பதற்காக அவரின் வேண்டுகோளுக்கு உடன்பட்டு அவர் கேட்டது போல் இல்லை ஒரு படி மேலாக ஏற்பாடு செய்து கொடுத்தேன். ஒரு வருடம் உருண்டோடியது.
ஒரு நாள் அதிகாலை நான் ஒருவருக்கு அனுப்ப வேண்டிய பணம் இரண்டு இலட்சம் (200,000) ரூபாயை இவரிடம் கொடுத்து கல்முனைக்கு அனுப்பி வைத்தேன். போக்குவரத்துச் செலவும் கொடுத்தேன்.
போனவர் போனவர்தான். பணம் கொடுக்கவுமில்லை, வேறு எந்த ஒரு தகவலும் தரவுமில்லை. பல வருடங்கள் கடந்து விட்டன.
 
ஒரு நாள் கொழும்பில் ஒரு ஹோட்டலில் இவர் தேனீர் குடித்துக் கொண்டிருந்ததைக் கண்ட நான் காணாதவர் போல் நானும் தேனீர் குடித்துக் கொண்டிருந்தேன். நான் குடித்து முடிவதற்குள் அவர் குடித்துவிட்டு வெளியேறிவிட்டார். ஆயினும் அவர் என்னைக் கண்டுவிட்டார்.
சில நமிடங்களின் பின் இருவர் வந்தார்கள். என்னைப் பார்த்து நீதான் றஊப் மௌலவீயா என்று கேட்டார்கள். ஆம், என்றேன். “எல்லாம் அல்லாஹ்” என்று சொன்னவன் நீதானா என்று கேட்டார்கள். ஆம், என்றேன். என்னை அடிக்கும் நோக்கத்தோடு கதையைத் தொடர்ந்தார்கள். நான் பயந்த நிலையில் பல பக்கமும் திரும்பித் திரும்பி பார்த்தேன். ஒரு கதிரையில் பொலீஸ் ஒருவர் இன்னொருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அவர் என்னைக் கண்டதும் “ஸலாம்” சொல்லும் பாணியில் கையை அசைத்தவராக என்னை நோக்கி வந்து என்னைக் கட்டியணைத்து “முஆனகா” செய்தார். நான் யார் தெரியுமா? என்று கேட்டார். இல்லை என்றேன். நான் உங்களின் நண்பன் இன்னாரின் மகன் என்றார். புரிந்து கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்! என்று சொன்ன நான் என்னை அடிக்க திட்டமிட்டு வந்த இருவரையும் தேடினேன் காணவில்லை. இருவரும் மாறிவிட்டார்கள்.
 
அங்கு எதிர்பாராமல் கண்ட பொலீஸ் காரரிடம் விடயத்தைக் கூறினேன். அவர் அக்கடை முதலாளியுடன் தொடர்பு கொண்டு பேசிவிட்டு இந்த நாடகத்தின் சூத்திரதாரி யார் என்பதை அறிந்து கொண்டார்.
அவர் வேறு யாருமல்ல. எவருக்கு மனமிரங்கி ஒரு வருட காலம் தங்கியிருப்பதற்கு இடமும், மூன்று வேளை தேனீரும், உணவும் கொடுத்து உதவி செய்தேனோ அவர்தான் என்பது தெரிய வந்தது. கடைக்கார முதலாளியும், பொலீஸ்காரரும் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றார்கள். சாட்சி சொல்வதாகவும் வாக்களித்தார்கள். எனினும் அதை விரும்பாமல் அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு வந்துவிட்டேன்.
 
உதவி செய்தவனுக்கு உபத்திரம் செய்த துரோகிக்கு இது ஓர் உதாரணமாகும். உங்களில் பலருக்கு இதேபோன்று நிகழ்வுகள் நடந்திருக்கலாம்.
அறபு மொழியில் இவ்வாறு ஒரு பழமொழி உண்டு. جَزَاهُ جَزَاءَ سِنِمَّارْ இதை எதற்குப் பயன்படுத்த வேண்டுமென்றால் உதவி செய்தவனுக்கு எதிராக உபத்திரவம் செய்தவனுக்கு பயன்படுத்த வேண்டியதாகும். இது ஒரு வரலாறோடு தொடர்புள்ள பழ மொழியாகும். அதை இங்கு எழுதுகிறேன்.
سِنِمَّارْ رَجُلٌ من الرُّوم، بَنَى للملك النعمان بن إمرأ القيس قصرَه المعروفَ بالْخَوَرْنَقْ فى ظاهر الكوفة، فلما فرغ منه ألقاه مِن أَعْلَاهُ لِئَلَّا يَبْنِيَ مِثَله لغيره، فسقط ميِّتًا، يُضرَب لِلْمُحْسِنِ يُكَافَئُ بِالإساءةِ،
சினிம்மார் என்ற பெயருடைய உலகப் பிரசித்தி பெற்ற கட்டிடக் கலை நிபுணர் ஒருவர் ரோமாபுரியில் இருந்துள்ளார். ரோமாபுரியின் அக்கால மன்னன் “நுஃமான் பின் இம்றஉல் கைஸ்” என்பவரின் வேண்டுகோளுக்கிணங்கி அவருக்காக எங்குமில்லாத அழகில் ஒரு மாளிகை கட்டிக் கொடுத்தார். அதன் பெயர் “கவர்நக்”. இது கூபாவில் நடந்தது. சினிம்மார், மாளிகையை கட்டி முடித்த பின் அவர் எவருக்கும் அது போன்று ஒரு மாளிகை கட்டிக் கொடுக்கக் கூடாதென்பதற்காக அவரை அந்த மாளிகையின் உச்சிக்கு அழைத்துச் சென்று அவரைக் கீழே தள்ளிக் கொலை செய்தார் மன்னர்.
 
அன்று முதல் جَزَاهُ جَزَاءَ سِنِمَّارْ என்ற பழ மொழி அமுலுக்கு வந்தது.
யாராவதொருவன் உதவி செய்த ஒருவனுக்கு உபத்திரம் செய்தானாயின் இப் பழமொழி அவனுக்குப் பயன்படுத்தப்படுவது பொருத்தமானது.
உதவி செய்தவன் எவனாயினும் உதவி செய்யப்பட்டவன் அவனுக்கு தனது மரணம் வரை நன்றியுள்ளவனாக இருக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய ஸூபிஸம் கூறும் தத்துவமாகும்.
இன்று உதவி செய்தவனுக்கு உபத்திரவம் செய்வது உலகெல்லாம் பரந்து விரிந்துள்ளது. முஸ்லிம்கள், முஸ்லிம்கள் அல்லாதவர்கள் அனைவரிடமும் இப் பண்பு காணப்படுகிறது. இத்தகைய கீழ்த்தரமான பண்பினால் சமூக ஒற்றுமையும், இன ஒற்றுமையும் சீரழிகிறது.
 
உதவி செய்தவனுக்கு உபத்திரவம் செய்யும் வழக்கம் அரசியல்வாதிகளிடம் அதிகம் இருப்பதையும் நாம் காண்கிறோம். அரசியல்வாதிகளில் தமக்கு தேர்தலில் உதவி செய்தவர்களை கவனித்து அவர்களுக்கு உதவி செய்யும் நல்லவர்களும் உள்ளனர். அவர்களைக் கறிவேப்பிலை போல் பயன்படுத்திக் கொண்டு கண்டும் காணதவர்கள் போல் நடப்பவர்களும் உள்ளனர். தேர்தலில் தமக்காக இராப்பகலாய் கண் விழித்தும், வியர்வை சிந்தியும், தொழிலை விட்டும் உதவிய ஆயிரம் தரம் தன் வாயால் “சேர் சேர்” என்று சொன்ன ஓர் ஏழை தனது சேரைச் சந்திப்பதற்காக கொழும்பு சென்று அவரின் மாளிகைக் கதவைத் தட்டினால் உள்ளேயிருந்து CCTV மூலமாக யாரென்று அவர் அறிந்து ஆளுக்கேற்ற பதில் சொல்லும் அரசியல் வாதிகளும் உள்ளனர். சிலர் உள்ளே வரவேற்று உபசரிக்கப்படுவர். இன்னும் சிலர் கண்ணீர் வடித்து கவலையுடன் திரும்பி வருவர். வெல்லும் வரை ஒரு குணமும், வென்ற பின் இன்னொரு குணமும் உள்ள அரசியல்வாதிகளைத் தெரிவு செய்யாமலிருப்பதே பொது மக்களுக்கு உகந்ததாகும். எத் தேர்தலாயினும் நாம் தெரிவு செய்ய வேண்டியவர் அரசியல் ஞானமுள்ளவராயிருத்தல் அவசியம். நல்ல அனுபவமுள்ளவராயிருத்தலும் வேண்டும். அரசியல் நியமனம் பெற்றுக் கொடுப்பதற்காக கல்வி அமைச்சுக்குப் போபவராக இருக்க வேண்டுமே தவிர பாதுகாப்பு அமைச்சுக்கு போபவராக இருக்கக் கூடாது. ஒருவருக்கு “டெலிகொம்”மில் வேலை பெற்றுக் கொடுப்பதற்காக சுகாதார அமைச்சுக்கு போபவராயிருக்க கூடாது. அரசியல் ஞானமும், அனுபவமும் இல்லாத ஒருவரைத் தேர்தலின் போது நாம் தெரிவு செய்தால் நஷ்டமும், கஷ்டமும் நமக்கும், நமதூருக்குமே என்பதை தூர நோக்குடன் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.
இவற்றை விட முக்கியமாக ஊர் முன்னேற்றத்திற்காகவும், ஊர் மக்களின் நல் வாழ்வுக்காகவும் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற நிதியை தாமும், தமது பிரதான ஆதரவாளர்களும் பங்கு வைத்துக் கொள்ளக் கூடியவராகவும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இருத்தலாகாது. இவரை மக்கள் தெரிவு செய்வதும் கூடாது.
 
இவ்வாறெல்லாம் நான் எழுதியது நமது நாட்டினதும், நாட்டு மக்களினதும் நன்மை கருதியேயன்றி வேறெந்த நோக்கத்திற்காகவுமல்ல. யாரையும் பழி வாங்குவதற்காகவுமல்ல. இதுவே உண்மையும், சத்தியமுமாகும்.
அன்பிற்குரிய சகோதரர்களே! குறிப்பாக ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளே! உங்களால் முடிந்த அளவு நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் உதவி செய்பவர்களாக நீங்கள் இருக்க வேண்டும் என்றும், உபத்திரவம் செய்பவர்களாக இருக்கக் கூடாதென்றும் உங்கள் அனைவரையும் அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
 
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல்லுயரக் குடி உயரும்
குடி உயரக் கோன் உயர்வான்.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments