நோன்பு நோற்பவர் அதற்காக “ஷரீஆ”வில் கூறப்பட்ட முறைப்படி “நிய்யத்” வைத்தல் “பர்ழ்” கடமையாகும்.
தொடர் – 2
கடந்த தொடரில் “நிய்யத்” தொடர்பாக விளக்கம் எழுதியிருந்தேன். வாசித்தவர்கள் சட்டங்களை அறிந்திருப்பார்கள்.
“நிய்யத்” – எந்த ஒரு வணக்கமாயினும் அதற்கு “நிய்யத்” அவசியமே. அதாவது கடமை. “நிய்யத்” இன்றி வணக்கம் நிறைவேறாது. இது இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்களின் சட்டமாகும்.
எந்த வணக்கமாயினும் அதற்கு மனதால் “நிய்யத்” வைத்தால் போதும். வாயால் சொல்ல வேண்டுமென்பது அவசியமில்லை. எனினும் மனதால் நினைப்பதுடன் வாயால் சொல்வது “ஸுன்னத்” நபீ வழியாகும்.
நோன்பின் “நிய்யத்”திற்கான நேரம் “மக்ரிப்” தொழுகைக்கான நேரம் முதல் “ஸுப்ஹ்” தொழுகைக்கான நேரம் வரையாகும். குறித்த இந்நேரம் தவிர வேறெந்த நேரத்தில் “நிய்யத்” வைத்தாலும் நோன்பு நிறைவேறாது. تَبْيِيْتٌ – இரவில் “நிய்யத்” வைத்தல் அவசியம்.
“நிய்யத்” வைத்தல் தொடர்பாக இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
يُستحبُّ أن يجمعَ في نيّة الصوم بين القلب واللسان، كما قلنا في غيره من العبادات، فإن اقتصر على القلب كفاه، وإن اقتصرَ على اللسان لم يجزئه بلا خلاف،
“நிய்யத்” வைக்கும் போது மனதால் நினைப்பதுடன் நாவாலும் சொல்வது “ஸுன்னத்” நபீ வழியாகும். ஆயினும் நாவால் மொழியாமல் மனதால் நினைத்தால் மட்டும் போதும். எனினும் மனதால் நினைக்காமல் நாவால் மட்டும் சொன்னால் “நிய்யத்” நிறைவேறாது. அதாவது நோன்பு நிறைவேறாது. எல்லா வணக்கங்களுக்கும் இதே சட்டம்தான்.
“நிய்யத்” வைக்கும் நேரம் சிலர் TV பார்த்துக் கொண்டு “நிய்யத்” வைக்கிறார்கள். இவர்களின் நாவு மொழிந்தாலும் கூட இவர்களின் உள்ளம் “நிய்யத்” வைக்க வாய்ப்பு இல்லை. ஆகையால் TV பார்த்துக் கொண்டு “நிய்யத்” வைத்தால் அந்த “நிய்யத்” நிறைவேறாது. அவ்வாறு “நிய்யத்” வைத்தவரின் நோன்பு நிறைவேறவுமாட்டாது. அறப்படித்த சிலர் – அதிகம் கற்ற சிலர் எங்களின் கண்கள்தான் TV யைப் பார்க்கின்றதேயன்றி எங்களின் உள்ளம் மீற்றரில் சரியாகத்தான் இருக்கும் என்று சொல்வார்கள். இவர்கள்தான் அறப்படித்தவர்களாவர். இவர்களுடன் விவாதிக்காமலிருப்பது “ஸலாமத்” ஈடேற்றமாகும்.
இவர்கள் எவர்கள் போன்றவர்களென்றால் தமது மனைவியருடன் உடலுறவு கொண்டு “நுத்பா” வெளியாகும் நேரம் திருக்குர்ஆன் ஆராய்ச்சியில் இருந்தோமேயன்றி சிற்றின்பத்தை அனுபவிக்கவில்லை என்று சொல்பவர்கள் போன்றவர்களாவர்.
இப்படியான மகான்களும் உலகில் வாழ்ந்துதான் உள்ளார்கள். இல்லையென்று நான் வாதிடவில்லை. அவர்கள் தம்மை வென்ற நாதாக்களாவர். மகான்களாவர். அவர்கள் போன்றுதான் நாங்களும் என்று யாராவது சொன்னால் அவர்களைப் பரீட்சித்துப் பார்க்க வேண்டும்.
இவ்விடயத்தை எழுதும் போது துறவி குணங்குடி மஸ்தான் அவர்களின் நிகழ்வொன்று என் நினைவுக்கு வருகிறது. அதை எழுதுவதற்கு எனக்கு வெட்கமாக இருந்தாலும் ஒரு தத்துவத்தை நிறுவுவதற்காக எழுத வேண்டும் போல் தோணுகிறது. வாசகர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.
குணங்குடி மஸ்தான் அப்துல் காதிர் புலவர் அவர்கள் “எல்லாம் அல்லாஹ்தான்” என்று சொல்லித் திரிந்ததால் அவர்களை முஸ்லிம்கள் தமது ஊர்களுக்கு அனுமதிப்பதில்லை. இதனால் பாதைகளிலும், சாலைகளிலும், குப்பை மேடுகளிலும் காலம் கழிப்பவர்களாக இருந்தார்கள்.
ஒரு சமயம் தஞ்சாவூர் வந்த மகான் மஸ்தான் அவர்கள் தங்குவதற்கு முஸ்லிம்கள் இடமளிக்காததால் பிரம்மச்சாரிகளான துறவிகள் தங்கியுள்ள இந்துக் கோவில் ஒன்றில் நுழைந்து அங்கு தங்கினார்கள். முஸ்லிம் – துளுக்கன் ஒருவன் கோவிலில் உறங்குகிறான் என்று கோவில் தலைவருக்கு பிரம்மச்சாரிகளான துறவிகள் அறிவித்தார்கள். தலைவன் கோவிலுக்கு வந்து குணங்குடி மஸ்தானிடம் வெளியேற வேண்டினான். குணங்குடியாரோ இங்கிருக்கும் துறவிகள் அனைவரும் போலிகள், வேஷதாரிகள். நான் மட்டுமே உண்மையான துறவி. இவர்களையே வெளியேற்ற வேண்டும் என்று கேட்டார். இதை எவ்வாறு கண்டறிவதென்று கோவில் தலைவன் கேட்டான். குணங்குடியார் பின்வருமாறு கூறினார். என்னையும், இவர்களையும் நிர்வாணிகளாக்கு. இவ் ஊரிலுள்ள பேரழகிகளில் பத்துப் பேரை அழைத்து வந்து அனைவரையும் நிர்வாணிகளாக்கி அவர்களை நடனமாட வை. பிரம்மச்சாரிகள் அனைவரையும் கட்டியணைத்து முத்தமிடச் சொல். பிரம்மச்சாரிகளை வாழை இலைகளில் அமரச் செய். உணர்ச்சி வசப்படும் பிரம்மச்சாரிகளை கோவிலை விட்டும் வெளியேற்று. உணர்ச்சி வசப்படாத பிரம்மச்சாரி எவனோ அவன்தான் உண்மையான பிரம்மச்சாரி. அவனுக்கு மட்டும் இடம் கொடு என்று கர்ஜித்தார் மஸ்தான். கோவில் தலைவன் அவ்வாறே செய்தான். “ஷோ” தொடங்கியது. சல்லாபங்கள் தொடங்கின. பொய் வேஷம் போட்டிருந்த பிரம்மச்சாரிகள் அமர்ந்திருந்த வாழை இலைகள் நனைந்தன. ஒவ்வொருவருக்கும் இரண்டு கால்களுடன் இன்னுமொரு கால் முளைத்தது. குணங்குடியாரோ எவ்வாறு அமர்ந்தாரோ அவ்வாறே அமர்ந்திருந்தார். கோவில் தலைவனும், கூடி நின்ற மக்களும் பொய் வேஷம் போட்டு மக்களை ஏமாற்றிய துறவிகளை துரத்தித் துரத்தி அடித்தனுப்பி விட்டு மஸ்தானுக்கே கோவிலைக் கொடுத்தனர். ஆயினும் மஸ்தான் அங்கு தங்கியிருக்க விரும்பாமல் வெளியேறிவிட்டார்.
மனித சுவாபத்தை வென்ற மஸ்தான் மன்னரானார். உண்மையான ஆன்மிகத்துடன் பொய் வேஷம் நின்றுபிடிக்குமா? நடந்தவற்றையெல்லாம் நேரில் பார்த்துக் கொண்டிருந்த மெய்ஞ்ஞானி மஸ்தான் யார்? இவ்வாறு “நப்ஸ்” எனும் மனவெழுச்சியுடன் போராடி வெல்ல யாரால் முடியும்? மஸ்தானை சிற்றின்பம் மயக்கவில்லை. அவர் அப்பெண்களைப் பெண்களாகப் பார்க்கவில்லை போலும். அவ்வாறாயின் பெண்களில் அவர் யாரைத் தரிசித்திருப்பார்? இறைஞானிகளிடமே கேட்டுப் பார்க்க வேண்டும். சிற்றின்பத்திலே பேரின்பம் கண்ட பெரு மஸ்தானின் பெருமையை என்னென்று வர்ணிப்பது?
குணங்குடியார் பாடுகிறார்?!
பெண் கொண்டபேர் பட்ட பாட்டையும் கேட்டையும்
பேசுவோமே நெஞ்சமே.
சங்கையும் போக்கிச் சதிமானமாகச்
சக சண்டியாக்குவித்திடுவாள் – வெகு
பங்கப்படுத்திவிட்டிடுவாள் – அந்த
மங்கையராசைவைத் தையை யோ வையத்தில்
(பெண் கொண்ட பேர் பட்ட ………..)
தங்க நகையும் முகப்பணிச் சேலையும்
தாவெனவே குரங்காட்டுவாள் – எந்தன்
செங்கைவளையுந் தலைக் கெண்ணெய் சீப்பும்
சிறப் பொடுதாவென மாட்டுவாள் – வன்னக்
கொங்கைக் கிசைந்தரவிக்கையும் கோலப்
பணியும் கொடுவென மூட்டுவாள் – அட
வெங்கப் பயனீயெனாமக்கனோவென்று
வீட்டில் வராதேயென் றோட்டுவாள் – அந்த
மங்கையராசைவைத்தையையோவையத்தில்
(பெண் கொண்ட பேர் பட்ட ………..)
ஆதியைத் தேடியருள் பெற நாடின்
அழுதழுதுமடி பிடிப்பாள் – நீதான்
ஏதென்னை விட்டுப்பிரிவது மென்றவள்
ஏங்கியேங்கித் துடிதுடிப்பாள் – கெட்ட
வாதா நீ செய்யும் தவம் பலியாதென
வாழ்த்தி வசை கொடை கொடுப்பாள் – கெட்ட
மூதேவி புத்தி படைத்தவளாகி
முரணுக்குமாரடி துடிப்பாள் – வெகு
வேதனையாய் மடமடப்பாள் – அந்த
வாதிகளாசை வைத்தையையோ வையத்தில்
(பெண் கொண்ட பேர் பட்ட ………..)
நாடிக்குருவடி தேடி நடக்கின்ற
நற்செயலைக் கசப்பாக்குவாள் – எங்கும்
ஓடித்திரிந்தேயலைந்து பணங்கள்
ஒருக்காலே தேடென்று தாக்குவாள் – அவன்
தேடும் பொருளதை காணினுமக் கெதிர்
தேசத்திலாரென்று தூக்குவாள் – இன்னும்
ஆடென்றும் மாடென்றும் வீடென்றும் தேடென்றும்
ஆண்டவனை மறப்பாக்குவாள் – பின்பு
ஈடொன்றிலா நினைவாக்குவாள் -அந்த
கேடிகளாசைவைத் தையையோ வையத்தில்
(பெண் கொண்ட பேர் பட்ட ………..)
நீராட்டமாடி மையிட்டுப் பொட்டிட்டு
நிரம்பவுடமைகளிடுவாள் – வந்து
போராட்டமாகவே சீராட்டஞ் செய்துந்தன்
புத்தியை போக்கடித்திடுவாள் – பின்பு
பாராட்டம் பண்ணியுந் தன்னையும் விட்டுப்
பலர் முகம் பார்த்தவள் கெடுவாள் – சுத்த
மாராட்டமாகு மனம் தெளியார்க்கு
மருண் மழையே பொழிந்திடுவாள் – கெட்ட
சீராட்டியாய் வந்து முடிவாள் – அந்த
நாரிகளாசை வைத்தையையோ வையத்தில்
(பெண் கொண்ட பேர் பட்ட ………..)
குணங்குடியாரின் குமுறல் இத்துடன் நிறைவு பெற்றது.
திருமணம் செய்யாத பல மகான்கள், அவ்லியாஉகள் உலகில் வாழ்ந்துள்ளார்கள். அவர்களில் மஸ்தான் குணங்குடியார் அவர்களும் ஒருவர்.
பெண்களில் குணங்குடியார் சொல்பவர்கள் போன்ற பெண்களும் உள்ளனர். இவர்களை விடக் கொடியவர்களும் உள்ளனர். இதற்கு நிறைய ஆதாரங்கள் கூற முடியும். ஆயினும் பெண்களில் “ஸஹாபிய்யாத்” நபீ தோழிகள் போன்ற உயர் குணம், பண்பாடுள்ள பெண்களும் உள்ளனர். ஆயினும் இவர்களைக் காண்பதரிது. இவர்கள் வெள்ளைக் காகம் போல் மிக அரிதானவர்களே இருப்பார்கள் என்று எம்பிரான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளியுள்ளார்கள்.
கணவனே கண் கண்ட தெய்வம் என்று கணவனைக் கடவுளாக மதித்து வாழும் பெண்களும் உள்ளனர். இதேபோல் மனைவியே கண் கண்ட தெய்வம் என்று அவளைக் கடவுளாக மதித்து வாழும் ஆண்களும் உள்ளனர்.
TV பார்த்துக் கொண்டு “நிய்யத்” வைத்தால் “நிய்யத்” நிறைவேறாது. இவ்வாறுதான் ஒருவர் பேசுவதைக் காதால் கேட்ட நிலையில் “நிய்யத்” வைப்பதுமாகும். இதுவும் “நிய்யத்” ஆகாது. எனவே, “நிய்யத்” என்பதன் பிரதான இடம் மனமேயன்றி நாவல்ல என்பதைப் புரிந்து நாவால் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் “நிய்யத்” வைக்கும் போது மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சிலர் “ஸஹர்” செய்து விட்டு வெற்றிலை சுவைத்தவர்களாக, இன்னும் சிலர் சிகரட் புகைத்தவர்களாக ஊஞ்சலாடிக் கொண்டு “நிய்யத்” வைத்ததை நான் கண்டிருக்கிறேன். இதுவும் ஒழுக்கமில்லை.
ஸஹர் சாப்பிட்டு முடிந்த பின் வாயை சுத்தமாகக் கழுவிய பின்பு பக்குவமாக இருந்த நிலையிலேயே “நிய்யத்” வைக்க வேண்டும்.
சிலர் “நிய்யத்” வைத்த பின் “ஸுப்ஹ்” தொழாமலேயே உறங்கிவிடுகிறார்கள். இவ் வழக்கம் பெண்களை விட ஆண்களிடமே அதிகம் இருப்பதாக அறிய முடிகிறது. இது ஒரு கடமையைச் செய்து இன்னொரு கடமையை விடுவது போன்றதாகும்.
நான் சிறுவனாயிருந்த காலத்தில் சுமார் 75 வருடங்களுக்கு முன் ஆண்கள் “ஸஹர்” செய்து முடிந்தால் “பாங்கு” சொல்வதற்கு முன் பள்ளிவாயலுக்கு வந்து விடுவார்கள். “தஹஜ்ஜுத்” வணக்கத்தை நிறைவேற்றிவிட்டு “ஸுப்ஹ்” உடைய “அதான்” பாங்கை எதிர்பார்த்து பள்ளிவாயலில் “திக்ர்” செய்தவர்களாக இருப்பார்கள். பெண்கள் “ஸஹர்” செய்து முடிந்த பின் மண் முட்டியொன்றை கையிலெடுத்துக் கொண்டு கிணற்றடி வந்து “வுழூ” செய்து விட்டு “தஹஜ்ஜுத்” வணக்கத்தை முடித்து விட்டு “ஸுப்ஹ்” உடைய பாங்கை எதிர்பார்த்திருந்து அதையும் தொழுதுவிட்டு வாசல் கூட்டும் பயிணிலும், சிறுவர்களுக்கு தேனீர் தயாரிக்கும் பணியிலும் கவனம் செலுத்துவார்கள். கணவன் சற்று நேரம் வரை உறங்கி எழுந்த பின் அவரை தொழிலுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்வார்கள்.
நோன்பு நோற்பவர்களிற் பலர் “ஸஹர்” செய்து விட்டு உறக்கத்திற்குச் சென்றால் மாலை ஐந்து மணியளவில்தான் எழுந்து குளித்துவிட்டு கஞ்சும், பெட்டிஸும் வாங்குவதற்காக ஹோட்டலுக்குச் செல்வார்கள். இவர்கள் ஸுப்ஹ், ளுஹ்ர், அஸ்ர் மூன்று தொழுகைகளும் தொழுவதில்லை. இது பெருங்குற்றமாகும். ஒரு கடமையைச் செய்து மூன்று கடமைகளை விடுகிறார்கள். நோன்பு நோற்பவர் இவ்வழக்கத்தை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
முஸ்லிம்களில் இன்னும் சிலர் உள்ளனர். காலமெல்லாம் தொழமாட்டார்கள். ஆயினும் றமழான் மாதம் வந்தால் தவறாமல் நோன்பு நோற்பார்கள். ஆனால் தொழமாட்டார்கள். இவர்களும் ஒரு கடமையைச் செய்து மறு கடமையை விடுபவர்களாவர். இவர்களும் இவ்வழக்கத்தை கட்டாயம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இன்னும் சிலர் உள்ளனர். இவர்கள் முஸ்லிம்கள்தான். ஆரோக்கியமானவர்களும்தான். நோன்பை விடுவதற்கான மார்க்கத்தில் கூறப்பட்ட எந்த ஒரு காரணமும் அவர்களுக்கு இல்லை. காலை முதல் மாலை வரை நன்றாக உழைப்பார்கள். மூன்று வேளையும் வயிறு நிரம்ப சாப்பிடுவார்கள். றமழான் மாதம் ஒரு நோன்பு கூட நோற்கமாட்டார்கள். ஆயினும் நோன்பாளி போல் வேஷம் போட்டுக் கொள்வார்கள். வாழ் நாளில் தொப்பி போடாதவர்களாயினும் றமழான் வந்தால் மட்டும் தொப்பி போட்டுக் கொள்வார்கள். இவர்கள் கொடிய நரகத்திற்கிரையாவார்கள். இவர்களும் நல்வழி பெற வேண்டும்.
நோன்பை விடுவதற்கான மார்க்கம் – “ஷரீஆ”வில் சொல்லப்பட்ட காரணங்கள் உண்டு. அக்காரணங்கள் உள்ளவர்கள் நோன்னை விடலாம். அவர்கள் குற்றம் செய்தவர்களாகமாட்டார்கள்.
தொடரும்…
Pages: 1 2