தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
அஸ்ஸலாமு அலைக்கும்.
23.02.2023 அன்று எனக்கு அறிமுகமான ஒருவர் என்னிடம் வந்து, தான் ஒரு புடவை வியாபாரி என்றும், தனக்குப் பல ஊர்களில் புடவைக் கடை இருப்பதாகவும், அவற்றைத் தன்னால் நிர்வகிக்க வசதியில்லாமற் போனதால் தனது குடும்பத்திலுள்ள சிலரை நம்பி அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு தான் ஒதுங்கியிருந்து ஆன்மிக வணக்க வழிபாடுகளில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தாகவும்,
அக்கால கட்டத்தில் கல்வி கற்க வசதியற்ற ஏழைகளுக்கு மாதாந்தம் ஐந்து இலட்சம் உதவி செய்து கொண்டிருந்ததாகவும்,
நான் நம்பியிருந்த எனது குடும்பத்தவர்களோ நம்பிக்கைத் துரோகம் செய்து எனது கடைகளை நஷ்டப்படுத்தி விட்டார்கள். சுமார் 15 கோடி ரூபாய் மண்ணாகிவிட்டது என்றும்,
எனவே, எவரையும் நம்ப முடியாத நிலையில் நானே எனது கடைகளை கவனிப்பதென்று முடிவு செய்துள்ளேன் என்றும் கூறினார்.
நான் இந்தியா – சிதம்பரம் அஷ்ஷெய்கு அப்துர் றஷீத் முர்ஷித் அவர்களிடம் “பைஅத்” பெற்று ஆன்மிக வழி நடப்பவன். அவர்களின் “வஸிய்யத்”தின் படி எனது அதிக நேரங்களில் அவர்களால் எனக்கு வழங்கப்பட்ட ஓதல்களை ஓதிக் கொண்டே இருக்கிறேன். நான் எனது வியாபாரத்தைப் பொறுப்பேற்றால் நான் செய்து வந்த அனைத்து வணக்க வழிபாடுகளையும் முற்றாக விட வேண்டியேற்படும். ஐந்து நேரம் தொழுவது கூட முடியாமற் போய்விடலாம்.
என் நெஞ்சு படபடக்கிறது. குரு நாயகம் அவர்களின் சாபத்திற்குள்ளாகிவிடுவேனோ என்ற அச்சம் என்னை ஆட்டுகிறது. என் குரு நாதர் தற்போது இல்லை. றஹிமஹுல்லாஹ்!
நான் செய்யப் போவது சரியா? பிழையா? நீங்கள் ஆன்மிகவாதி என்பதால் உங்களிடம் ஆலோசனை கேட்டு வந்துள்ளேன். எனக்கு ஓர் ஆலோசனை கூறுங்கள் என்றார். கண்ணீர் வடித்து அழுதார்.
நான் அவரிடம் நீங்கள் கூறும் ஞானகுருவை 1966ம் ஆண்டு இந்தியாவில் ஓதிக் கொண்டிருந்த காலத்தில் நான் கண்டிருக்கிறேன். ஆனால் அவர்களுடன் தொடர்பு கொள்ள எனக்கு முடியாமற் போய் விட்டது என்று சொன்னேன்.
நீங்கள் என்னிடம் ஆலோசனை கேட்டு வந்துள்ளீர்கள். நான் அறிந்ததை சொல்கிறேன்.
நீங்கள் உங்களின் வியாபாரத்தை முழுமையாகப் பொறுப்பேற்றால் குருவின் சொற்படி உங்களால் வணக்க வழிபாடு செய்ய முடியாதென்பது உண்மைதான். ஆயினும் நீங்கள் உங்களின் குருவின் அடக்கத்தலம் “தர்ஹா” சென்று மூன்று இரவுகள் மட்டும் தங்கியிருந்து அவர்களின் ஆலோசனையைப் பெற்றுச் செயல்படுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தேன்.
23.03.2023 வியாழக் கிழமை இந்தியாவிலிருந்து போனில் என்னுடன் தொடர்பு கொண்டு நடந்ததை விபரமாகச் சொன்னார். முழு விபரங்களையும் எழுத நான் விரும்ப வில்லை. சுருக்கம் என்னவெனில், குருவின் தர்ஹாவில் தங்கியிருந்த காலை இவரின் கனவில் தோன்றிய குரு மகான், இந்தியாவிலுள்ள இருவரின் முகவரிகளையும், இலங்கையிலுள்ள ஒருவரின் முகவரியையும் எழுதிக் கொடுத்து இவர்களிடம் தொழிலைப் பாரம் கொடுங்கள். இவர்கள் நம்பிக்கையாளர்கள் என்று சொன்னார்களாம் என்று என்னிடம் சொன்னார். தற்போது அவர் மீண்டும் தொழிலை சிறப்பாகச் செய்வதற்கு ஒழுங்கு செய்கிறார்.
என்னிடம் வந்த செல்வந்தரிடம் உங்களின் இந்த வரலாறில் பலருக்குப் பல பாடங்கள் இருப்பதால் இதைப் பகிரங்கமாக எழுதுவதற்கு அனுமதி தருவீர்களா? என்று கேட்டேன். அதற்கவர் ஆம், என்றார். ஆயினும் தான் யார் என்று அடயாளப்படுத்திவிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
ஒரு குருவிடம் “பைஅத்” செய்து கொண்ட ஒருவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? ஒரு குரு மரணித்த பின்னும் அவரால் தனது சிஷ்யனுக்கு வழி காட்ட முடியுமா? என்பன போன்ற கேள்விகளுக்கான விளக்கம் இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்களில் வெளிவரும்.
தொடரும்…
செல்வந்தர்களே! வர்த்தகர்களே! எதிர்பாருங்கள்.