Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“சகாத்” நிதி வழங்கவுள்ள செல்வந்தர்களின் கவனத்திற்கு,

“சகாத்” நிதி வழங்கவுள்ள செல்வந்தர்களின் கவனத்திற்கு,

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
“சகாத்” என்ற சொல்லுக்கு “ஏழைவரி” என்று மார்க்கம் கற்ற உலமாஉகள் உள்ளிட்ட அனைவரும் பொருள் கூறிக் கொண்டாலும் அது ஏழை வரி மட்டுமல்ல. திருக்குர்ஆனில் கூறப்பட்ட எட்டுக் கூட்டத்தவர்களுக்குமுரிய வரியாகும்.
 
ஓர் ஊரில் எட்டுக் கூட்டத்தவர்களும் இருந்தால் அவர்களுக்கே ஒரு செல்வந்தனின் “சகாத்” நிதி பங்கிட்டுக் கொடுக்கப்பட வேண்டும். ஓர் ஊரில் எட்டுக் கூட்டத்தவர்களும் இல்லையானால் இருக்கின்ற கூட்டத்தவர்களுக்கு கொடுக்க வேண்டும். தனதூரில் இல்லாத கூட்டத்தவர்கள் பிற ஊரில் இருந்தால் அங்கு சென்று அவர்களுக்கு கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
 
ஒரு செல்வந்தன் தனது பொருளாதாரத்தை முறைப்படி கணக்கிட்டு வரும் சகாத் நிதித் தொகையை அவனே எட்டுக் கூட்டத்தாரையும் தேடிக் கொடுக்க வேண்டும். அவர்கள் தன்னிடம் வர வேண்டுமென்று எதிர்பார்ப்பது மார்க்கமல்ல. இதுவே சரியான நடைமுறை.

“சகாத்” நிதி என்பது கழிவுப் பணமாகும். ஒருவனிடம் “சகாத்” கடமையாகக் கூடிய “நிஸாப்” அளவு பணம் ஒரு வருடம் இருந்தால் அதில் கழிவுப் பணமாக – அழுக்குப் பணமாக 1000 ஆயிரம் ரூபாவுக்கு ரூபாய் 25 ஆகிவிடுகிறது. அக்கழிவுப் பணத்தை அவன் கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுக்கவில்லையானால் அக்கழிவுப் பணம் அவனுடைய பணத்தோடு சேர்ந்து எல்லாமே அசுத்தமான பணமாக மாறிவிடுகிறது. அதாவது இறையருள் குறைந்த பணமாக ஆகிவிடுகிறது.
 
அவன் இவ்வாறு சேமித்து வருகின்ற பணம் அவனிடம் தங்காது. ஏதோ ஒரு வகையில் அழிந்து போகும். ஒன்றோ தீ விபத்தில் எரிந்து சாம்பலாகிவிடும். அல்லது திருடப்பட்டு விடும். அல்லது அவனுக்கோ, அவனின் மனைவி மக்களுக்கோ தீராத நோய் ஏற்பட்டு மருந்து மாத்திரை வாங்குவதிலேயே கரைந்துவிடும்.
 
ஆகையால் செல்வந்தன் ஒவ்வோர் வருடமும் தனது சகாத் நிதியை உரியவர்களுக்கு கொடுத்து முடித்து விட வேண்டும். செல்வந்தனின் அழுக்கான, அசுத்தமான பணத்தை அவனிடமிருந்து பெற்று அவனை சுத்தப்படுத்த உதவி செய்யும் ஏழைக்கு அவன்தான் நன்றி சொல்ல வேண்டுமேயன்றி அவனிடமிருந்து பெற்றவன் அவனுக்கு நன்றி சொல்வது பொருத்தமானதல்ல. இக்காலத்து செல்வந்தர்கள் இவ்வாறு செய்வார்களா? செய்யமாட்டார்கள். பணம் கொடுப்பது போதாதென்று அவனுக்கு நன்றியும் சொல்ல வேண்டுமா? என்று இவ்வாறு எழுதுகின்ற என்னையே சாடுவார்கள்.
 
“சகாத்” கொடுப்பது கடமையான ஒரு செல்வந்தன் தனது சகாத் நிதியை எடுத்துக் கொண்டு சகாத் நிதி பெறுவதற்குத் தகுதியானவர்களைத் தேடியலைந்து கொடுக்க வேண்டுமேயன்றி அவர்கள் தனது காலடியில் வந்து தனது கடைப் படியில் காத்து நிற்க வேண்டுமென்று எதிர்பார்க்கவும் கூடாது. விரும்பவும் கூடாது. அவர்கள் தனது அழுக்கை நீக்க உதவி செய்பவர்கள் என்ற அறிவோடு அவர்களுடன் நடந்து கொள்ள வேண்டும். வாடா, போடா என்று மரியாதைக் குறைவாகவும் நடந்து கொள்ளக் கூடாது.
 
“சகாத்” கொடுப்பதற்குத் தகுதி பெற்ற ஒரு செல்வந்தன் முதலில் தனது இரத்த உறவினர்களில் “சகாத்” பெறுவதற்கு தகுதியானவர்கள் யாரென்று இனங்கண்டு முதலில் அவர்களுக்கு மற்றவர்களுக்கு கொடுக்கும் தொகையை விட சற்று அதிகம் கொடுக்க வேண்டும். இரண்டாவதாக தனது மனைவியின் இரத்த பாச உறவினர்களில் தகுதியானவர்களை இனங்கண்டு அவர்களுக்கும் கொடுக்க வேண்டும். மூன்றாவதாக தனது அயலவர்களில் சகாத் நிதி பெறத் தகுதியானவர்கள் இருந்தால் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். இதையடுத்து தான் வாழும் பிரதேசத்திலுள்ள மார்க்க அறிஞர்களான உலமலாஉகளுக்கு கொடுக்க வேண்டும். மற்றும் கல்வித் தாபனங்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும். “சகாத்” நிதி கொடுக்கத் தகுதியானவன் தனது “மஹல்லா”விலுள்ள பள்ளிவாயல் இமாம், மற்றும் முஅத்தின் ஆகியோரையும் கவனித்துக் கொள்ள வேண்டும். சகாத் நிதி வழங்கும் விடயத்தில் ஸுன்னீ, வஹ்ஹாபீ என்ற பாகுபாடு காட்டமலிருப்பது சிறந்தது.
 
“சகாத்” நிதி வழங்கும் போது பிறர் அறிய கொடுப்பதும், “ஹத்யா” வழங்கும் போது பிறர் அறியாமல் கொடுப்பதும் சிறந்ததாகும். இதற்கான காரணம் செல்வந்தன் மீது பிறர் தப்பான எண்ணம் கொள்ளாமல் இருப்பதற்கேயாகும்.
 
வலதால் கொடுப்பதை இடது அறியாமல் கொடுக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆயினும் இது “ஹத்யா” விடயத்திலாகும். சகாத் விடயத்தில் அல்ல.
زَكَاةْ
– “சகாத்” என்ற சொல் زّكَّى என்ற சொல்லடியில் உள்ளதாகும். இதற்குப் பரிசுத்தமாக்கினான் என்று பொருள். அதாவது ஒரு செல்வந்தன் “சகாத்” நிதி வழங்குவதன் மூலம் தனது ஏனைய பணத்தை பரிசுத்தமாக்கினான் என்று பொருள் வரும். “சகாத்” நிதியிலிருந்து எவருக்கும் கடன் கொடுப்பது கூடாது. “சகாத்” நிதியை பெருநாளுக்கு முன்னும் கொடுக்கலாம், பெருநாளுக்குப் பின்னும் கொடுக்கலாம். பெருநாளுக்கு முன்னே கொடுத்து முடிக்க வேண்டும் என்பது விதியல்ல. ஆனால் மக்களின் தேவை கருதி பெருநாளுக்கு முன் கொடுப்பது சிறந்ததே. மிஞ்சினால் பெருநாள் கழித்த பின் கொடுக்க முடியும்.
 
ஒரு செல்வந்தன் தனது “மஹல்லா” பள்ளிவாயலுக்குத் தொழ வருபவர்களில் பகீர், மிஸ்கீன்களை இனங்கண்டு அவர்களுக்கு கொடுப்பது சிறந்தது.
 
இலஞ்சம் கொடுப்பதற்கு “சகாத்” நிதியைப் பயன்படுத்துவதும், போதைப் பொருள் பாவனைக்குப் பயன்படுத்துவதும், மற்றும் மது அருந்துதல், விபச்சாரம் போன்றவற்றுக்கு பயன்படுத்துவதும் “ஹறாம்” விலக்கப்பட்டதாகும்.
 
“சகாத்” நிதியிலிருந்து நபீ குல வழி வந்த “ஸெய்யித்” – மௌலானாமாருக்கு கொடுப்பது கூடாது. “சகாத்” வழங்கும் காலத்தில் அவர்களுக்கு கொடுக்க ஒருவன் விரும்பினால் தனது சொந்த நிதியிலிருந்து கொடுக்கலாம். நபீ குல வழி வந்தவர்கள் ஏழையாக, அல்லது மிஸ்கீனாக இருந்தாலும் கூட அவர்களுக்கு சகாத் நிதி வழங்கக் கூடாது. ஆயினும் “ஸெய்யித்”மார் வேஷத்தில் நடமாடும் போலி ஸெய்யித்மாருக்கு வழங்குவதால் குற்றமில்லை.
“பகீர், மிஸ்கீன், ஙனீ”
فَقِيْرْ
– “பகீர்” என்ற சொல்லுக்கும், مِسْكِيْنْ “மிஸ்கீன்” என்ற சொல்லுக்கும், பொதுவாக தமிழில் ஏழை என்று பொருள் சொல்லப்பட்டாலும் “ஷரீஆ” அடிப்படையில் இருவருக்கும் வித்தியாசமுண்டு.
 
“பகீர்” என்பவன் தனது அன்றாட, அவசிய மொத்த செலவிற்குத் தேவையான பண வசதியில்லாதவன். உதாரணமாக ஒருவனுக்கு தனது மனைவி, மக்கள் உள்ளிட்ட அனைவருக்குமான அன்றாட, அவசிய மொத்தச் செலவு 1000 ரூபாய் தேவையாயின் 500 ரூபாய் மட்டும் கிடைக்கின்ற ஒருவனாவான். இவனும் தமிழில் ஏழை என்றே சொல்லப்படுகிறான். இவன் “சகாத்” நிதி பெறுவதற்குப் பொருத்தமானவன்தான்.
“மிஸ்கீன்” என்பவன் அன்றாட, அவசிய மொத்தச் செலவிற்குத் தேவையான பண வசதியுள்ளவனாவான். உதாரணமாக ஒருவனுக்கு தனது மனைவி, மக்கள் உள்ளிட்ட அனைவருக்குமான அன்றாட, அவசிய மொத்தச் செலவு 1000 ரூபாய் தேவையாயின் அதே தொகை கிடைப்பவனாவான். இவன் “பகீர்” என்பவனை விட சற்றுத் தரத்தில் உயர்ந்தவனாவான். இவ்விருவரும் “ஷரீஆ” சட்டப்படி “சகாத்” நிதி பெறுவதற்குத் தகுதியானவர்களேதான்.
 
அரசாங்க உத்தியோகம் செய்கின்ற, அரசாங்கப் பணம் பெறுகின்ற ஆசிரியர்கள், அலுவலர்கள், மற்றும் பணியாட்களில் சிலர் அதிக சம்பளம் பெறுபவர்களாயிருப்பர். இன்னும் சிலர் குறைந்த சம்பளம் பெறுபவர்களாயிருப்பர். இவர்களில் குறைந்த சம்பளம் பெறுகின்ற, தமது அவசியத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு வழியில்லாதவர்களும், தாம் பெறுகின்ற சம்பளம் தமது அவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மட்டும் போதுமான சம்பளம் எடுப்பவர்களும், சம்பளம் இல்லாது போனாலும் இந்த அளவு வருமானம் உள்ளவர்களும் “மிஸ்கீன்”களாகவே கணிக்கப்படுவார்கள். இவர்களும் “சகாத்” நிதி பெறத் தகுதியானவர்களேயாவர்.
 
அரசாங்க அல்லது தனியார் சம்பளம் பெறுகின்றவர்களின் சம்பளத் தொகையையும், அவர்களின் அன்றாடத் தேவைகளுக்கான மொத்தச் செலவினங்களையும் ஒரு செல்வந்தன் கேட்டறிந்து செயல்படலாம். எனது பார்வையில் இக்கால செலவினங்களைப் பொறுத்த மட்டில் அரசாங்கம் மூலம் சிறிய சம்பளம் பெறுபவர்கள் அனைவரும் “பகீர்” அல்லது “மிஸ்கீன்” கூட்டத்தில் சேர்க்கப்பட வேண்டியவர்களேயாவர். சகாத் நிதி வழங்கும் செல்வந்தன் தனது சகாத் நிதியை அதிகம் தேவையுள்ளவர்களுக்கு கொடுப்பது சிறந்ததாகும்.
 
ஒரு கோடீஸ்வரன் – இலட்சக் கணக்கில் “சகாத்” கொடுக்கின்ற ஒருவன் பாடசாலை அல்லது கல்லூரி அதிபரின் மூலம் ஆசிரியர்களின் பொருளாதார நிலைமைகளைக் கேட்டறிந்து அவர்களையும் கவனத்திற் கொள்வது சிறந்ததே.
 
இதேபோல் இலட்சக் கணக்கில் “சகாத்” வழங்கும் ஒரு கோடீஸ்வரன் தனது ஊரிலுள்ள உலமாஉகளினதும், அவர்களின் மாதாந்த வருமானங்களின் விபரங்களினதும் சரியான தகவல்களை உலமா சபைத் தலைவர் மூலம் கேட்டறிந்து அவர்களையும் கவனத்திற் கொள்வது சிறந்ததே!
 
“சகாத்” நிதி வழங்கும் செல்வந்தர்கள் உலமாஉகளை தமது இல்லங்களுக்கு வரவழைத்து சகாத் நிதி வழங்காமல் தமக்கு நம்பிக்கையானவர்கள் மூலம் அவர்களுக்கு அனுப்பி வைத்தல் அவர்களின் “இல்ம்” ஐ கௌரவித்ததாகும் என்பது எனது கருத்து. செல்வந்தர்கள் “சகாத்” வழங்கும் “சீசன்” கால கட்டத்தில் உலமாஉகள் தமது வேறு தேவைகளுக்காகவேனும் அவர்களின் வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டு நீண்ட நேரம் நிற்பதையும், திரும்பத் திரும்பச் சென்று தட்டிக் கொண்டு நிற்பதையும் கட்டாயம் தவிர்ந்து கொள்வது “இல்ம்” அறிவுக்கு கொடுக்கும் கௌரவம் என்பது எனது கருத்தாகும்.
 
ஒரு செல்வந்தன் தான் விரும்பியவர்களுக்கு “சகாத்” நிதி வழங்கிவிட்டு அதை மற்றவர்களிடம் பெருமையடிப்படையில் சொல்லிக் காட்டுவது குற்றமாகும்.
غَنِيٌّ
– “ஙனீ” என்றால் செல்வந்தன் என்பது பொருள். இவர்களில் பல படித்தரம் உள்ளவர்கள் உள்ளனர். எந்தப் படித்தரத்தில் எவர் இருந்தாலும் அவர் “ஙனீ” செல்வந்தனாக இருந்தால் அவர் “சகாத்” நிதி எடுப்பது சட்ட விரோதமாகும்.
இன்னும் சில மனிதர்கள் உள்ளனர். அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. பிறர் அவர்களின் “ஸிர்ரு” இரகசியத்தை அறியமாட்டார்கள். அவர்கள் வறுமையின் உச்சியில் வாழ்வார்கள். பட்டினி, பசியோடு வாழ்வார்கள். ஆயினும் வெளியுலகுக்கு தாம் வறுமையில் வாழ்பவர்கள் என்பதை மண்ணளவும் காட்டமாட்டார்கள். வயிறு பசியால் பற்றி எரியும். ஆயினும் பிறருக்கு வயிறு நிரம்ப சாப்பிட்டவர்கள் போல் பாவனை செய்வார்கள். இத்தகையோர் நபீ தோழர்களிற் கூட இருந்துள்ளார்கள். இவர்கள் பற்றிக் கூறிய அல்லாஹ்
يَحْسَبُهُمُ الْجَاهِلُ أَغْنِيَاءَ مِنَ التَّعَفُّفِ
(அவர்களின் இரகசியங்கள் தெரியாதவர்கள் அவர்களின் கௌரவ நகர்வுகள் மூலம் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார்கள்) (02-273) என்று கூறியுள்ளான்.
 
முற்றும்.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments