தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
நான் இத்தலைப்பில் எழுதுகின்ற விளக்கம் உலமாஉகள் – மார்க்க அறிஞர்களுக்கும், அறபுக் கல்லூரிகளில் அறபு மொழியுடன் தொடர்புள்ள மாணவர்களுக்கும் பயனளிக்கும் என்றும், ஏனையோருக்கு விளங்காதென்றும் நினைக்கிறேன். எனினும் பொதுவாக படிக்கின்ற திறமையுள்ள மாணவர்கள் சிந்தனையோடு படித்தார்களாயின் பயன் பெறுவார்கள் என்றும் நம்புகிறேன்.
இச் சொல் رَزَقَ يَرْزُقُ رَزْقًا என்ற சொல்லடியில் உள்ளதாகும். رَزَقَ என்றால் أَوْصَلَ إِلَيْهِ الرِّزْقَ ஒருவனுக்கு “ரிஸ்க்”கை சேர்த்து வைத்தான் என்று பொருள்.
اَلرِّزْقُ
என்றால் كُلُّ مَا تُنْتَفَعُ بِهِ எவற்றைக் கொண்டு பயன் பெறப்படுமோ அவை யாவும் “ரிஸ்க்” எனப்படும். உதாரணமாக رَزَقَهُ اللهُ الْغِنَى அல்லாஹ் அவனுக்கு செல்வத்தைக் கொடுத்தான், رَزَقَهُ اللهُ الْعِلْمَ அல்லாஹ் அவனுக்கு அறிவைக் கொடுத்தான், رَزَقَهُ اللهُ الْعَافِيَةَ அல்லாஹ் அவனுக்கு ஆரோக்கியத்தை கொடுத்தான் என்பன போன்று.
மேலே நான் கூறிய உதாரணங்களில் اَلْغِنَى பணச் செல்வம், اَلْعِلْمُ அறிவு, اَلْعَافِيَةُ ஆரோக்கியம் என்ற சொற்கள் முன்னால் வந்துள்ள رَزَقَ என்ற சொல்லுக்கு مَفْعُوْلْ செயப்படு பொருளாக வந்துள்ளன.
رَزَقَ
என்ற சொல்லுக்கு உணவளித்தான் என்பதே பொருள் என்று வைத்துக் கொண்டால் அதற்கு مفعول செயப்படு பொருளாக வந்துள்ள மூன்று சொற்களும் வந்திருக்கத் தேவையில்லை.
எனவே, மேற்கண்ட இவ் விபரங்கள் மூலம் رَزَقَ என்ற சொல்லுக்கு வழங்கினான், கொடுத்தான் என்று மட்டும் தான் பொருள் கொள்ளலாமேயன்றி உணவு வழங்கினான் என்று பொருள் கொள்ள முடியாது.
رِزْقْ
என்ற சொல் மனிதன் உட் கொள்ளும் உணவுக்கு மட்டுமன்றி அவன் எவற்றைக் கொண்டெல்லாம் பயன் பெறுகிறானோ அவற்றுக்கெல்லாம் “ரிஸ்க்” என்ற சொல்லைப் பயன்படுத்த முடியும். ஐஸ்கிரீம், சர்பத், பலூதா, கஞ்சி, தண்ணீர், சோடா, றெட்புல் போன்றவையும் “ரிஸ்க்” என்ற சொல்லில் அடங்கிவிடும்.
இதன்படி مَاءٌ தண்ணீர் குடித்து நோன்பு திறந்தவனும், سَوِيْقْ கஞ்சி குடித்து நோன்பு திறந்தவனும், سَمْبُوْسَةْ “சமுசா” சாப்பிட்டு நோன்பு திறந்தவனும், لَفَّافْ “றோல்” சாப்பிட்டு நோன்பு திறந்தவனும், شَرْحَاتْ “கட்லட்” சாப்பிட்டு நோன்பு திறந்தவனும், فَطِيْرَةْ பெட்டிஸ் சாப்பிட்டு நோன்பு திறந்தவனும், மற்றும் எதைச் சாப்பிட்டும், எதைக் குடித்தும் நோன்பு திறந்தவனும் அதன்பின் “துஆ” ஓதும் போது இவை யாவையும் رِزْقْ என்ற சொல்லில் உள் வாங்கியவனாக وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ என்று “துஆ” ஓத முடியும்.
மேற்கண்ட விபரங்களை நான் எழுதியதற்கான காரணம் என்னவெனில் முஸ்லிம்களில் அநேகர் “ரிஸ்க்” என்றால் உணவு மட்டும்தான் என்று விளங்கி வைத்திருப்பதாகும்.
ஒருவன் மரணித்தால் மரணச் செய்தி கேட்டவர்கள் அவரின் “ரிஸ்க்” முடிந்து விட்டதென்று பேசிக் கொள்வார்கள். இவ்வாறு சொல்வோர் உணவை மட்டும் கருதியே சொல்கிறார்கள். இது தவறு. இவரின் எல்லாத் தேவைகளும் முடிந்து விட்டன என்றே சொல்ல வேண்டும். இவ்வாறு சொல்வதே சரியானதாகும். “ரிஸ்க்” மட்டும் முடிந்து விட்டதென்றால் அவனின் வேறு தேவைகள் உண்டு என்று பொருள் வரும். இது தவறு.
ஒருவன் நம்ப முடியாத நோயிலிருந்து சுகம் பெற்றால் அவனின் “ரிஸ்க்” கிடக்கிறதென்று மக்கள் சொல்வார்கள். இவர்களும் உணவை மட்டும் கருத்திற் கொண்டுதான் இவ்வாறு சொல்கிறார்கள். இதுவும் தவறுதான். அவரின் எல்லாத் தேவைகளும் இருந்தது போலவே இருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். “ரிஸ்க்” மட்டும் கிடக்கிறதென்று சொல்ல முடியாது.
ஒருவன் ஒரு மௌலவீயிடம் “துஆ” செய்யுங்கள் என்று சொன்னால் بَارَكَ اللهُ لَكَ، وَرَزَقَكَ صِحَّةً كَامِلَةً “அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக! மேலும் உனக்கு பூரண ஆரோக்கியத்தையும் தருவானாக!” என்று “துஆ” செய்தாராயின் அவர் رَزَقَ என்ற சொல்லைப் பயன்படுத்தியதால் உனக்கு “ரிஸ்க்” உணவு தருவானாக என்ற கருத்தில் கேட்கவில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும். அவர் صِحَّةْ ஆரோக்கியத்தை தருவாயாக என்றே “துஆ” செய்துள்ளார். رَزَقَكَ என்ற சொல்லுக்கு வழங்கினான் என்ற பொருள் கொண்டே அவ்வாறு சொல்லியுள்ளார் என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பேரீத்தம் பழம் சாப்பிட்டு நோன்பு திறப்பதே வழக்கம். அதன் பின் வழமையாக “துஆ” ஓதுவது போன்றே “துஆ” ஓதுவார்கள். وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ உனது “ரிஸ்க்”கைச் சாப்பிட்டே நோன்பு திறந்தேன் என்றும் சொல்வார்கள்.
சில சமயம் ஈத்தம் பழம் கிடைக்காத விடத்தில் தண்ணீரை அருந்துவார்கள். அதன் பின் வழமையாக “துஆ” ஓதியது போன்றே ஓதுவார்கள். அதாவது وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ உனது “ரிஸ்க்”கை உட் கொண்டு நோன்பு திறந்தேன் என்று ஓதுவார்கள். وَعَلَى الْمَاءِ أَفْطَرْتُ தண்ணீர் குடித்து நோன்பு திறந்தேன் என்று ஓதமாட்டார்கள். இதன் மூலம் “ரிஸ்க்” என்ற சொல்லை தண்ணீருக்கும் பயன்படுத்தலாம் என்பது தெளிவாகிறது.
இது தொடர்பான விபரம் தெரியாதவர்கள் “ரிஸ்க்” என்றால் உணவு என்று மட்டும் விளங்கி வைத்துள்ளார்கள். இது தவறு. பொதுவாக “ரிஸ்க்” என்ற சொல் உணவு உள்ளிட்ட மனிதன் பயன் பெறக் கூடிய அனைத்திற்கும் பொருத்தமான சொல் என்று விளங்கிக் கொள்ள வேண்டும். இதேபோல் رَزَقَ என்ற சொல்லுக்கு வழங்கினான் – கொடுத்தான் என்றுதான் பொருள் கொள்ள வேண்டுமேயன்றி “ரிஸ்க்” வழங்கினான் என்று பொருள் கொள்வது கூடாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இதோடு தொடர்புள்ள இன்னுமொரு விடயத்தையும் இங்கு குறிப்பிடுகிறேன்.
ஒருவர் எங்கு, எப்போது, எதைச் சாப்பிட்டாலும் اَلْحَمْدُ للهِ الَّذِيْ أَطْعَمَنِيْ وَسَقَانِيْ وَجَعَلَنِيْ مِنَ الْمُسْلِمِيْنْ என்று சொல்ல வேண்டும். இதன் பொருள் “எனக்கு உணவளித்து, குடிக்கத் தந்து, என்னை முஸ்லிம்களில் ஒருவனாக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்பதாகும். இது சாப்பிட்ட பின் ஓதும் “துஆ” என்று சொல்லப்படும். இவ்வழக்கம் முஸ்லிம்களிடம் மட்டும் இருப்பதாக நான் அறிகிறேன். ஏனைய மதத்தவர்கள் இவ்வாறு செய்வதாக நான் அறியவில்லை. இஸ்லாம் மார்க்கத்தில் மட்டும் இப்படியொரு பண்பாடு உண்டு என்று நினைக்கிறேன்.
ஒருவன் இன்னொருவனுக்கு சாப்பாடு வழங்கினால் வழங்கப்பட்டவன் மேற்கண்டவாறு சொல்வதோடு சாப்பாடு வழங்கியவனுக்கும் பிரார்த்தனை செய்து கொள்வது சிறந்ததாகும். இதுவும் இஸ்லாம் காட்டிய நல்வழியேயாகும். இவ்வாறான கட்டத்தில் மட்டும் மேற்கண்டவாறு பிரார்த்தனை செய்வதுடன் பின்வரும் வசனங்களையும் சேர்த்துக் கொள்ளவும் வேண்டும்.
اَللهم أَطْعِمْ مَنْ أَطْعَمَنِيْ، وَاسْقِ مَنْ سَقَانِيْ،
யா அல்லாஹ்! எனக்கு உணவளித்து குடிக்கத் தந்தவனுக்கும் நீ உணவளிப்பாயாக! குடிக்கவும் கொடுப்பாயாக! இந்த வசனங்களை மட்டும் சேர்த்தால் போதும். மேலதிகமாக வசனங்களைச் சேர்க்க விரும்பினால் சேர்த்துக் கொள்ளலாம்.
சாப்பாடு வழங்கியவனுக்கு இந்த அமைப்பில் பிரார்த்திக்க வேண்டுமென்று எமக்கு வழிகாட்டியவர்கள் எம் பெருமான் அவர்களேயாவர்.
உலமாஉகளிற் சிலர் – எல்லோருமல்ல – செல்வந்தர்களின் வீட்டில் சாப்பிட்டால் “துஆ” ஓதும் போது வீட்டுக் காரனின் பெயரையும் “துஆ”வில் சேர்த்துக் கொள்வார்கள். ஏழைகளின் வீட்டில் சாப்பிட்டால் அவர்களின் பெயரை “துஆ”வில் சேர்க்கமாட்டார்கள். இவர்களின் நோக்கம் என்னவாக இருக்குமோ? புத்தியுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்.
சாப்பிட்ட பின் “துஆ” ஓதும் விடயத்தில் உலமாஉகளில் பலவிதமாக ஓதுபவர்கள் உள்ளார்கள். அதில் யாரும் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. எனினும் பணக் காரனுக்கு ஒரு “துஆ”வும், ஏழைக்கு இன்னொரு “துஆ”வும் ஓதுவது பிழையாகும்.
உலமாஉகளிற் சிலர் “துஆ” ஓதும் போது
اَللهم زِدْنَا مِنْهُ وَلَا تَنْقُصْنَا
“யா அல்லாஹ்! இந்த உணவை எங்களுக்கு அதிகமாக்கி வைப்பாயாக! அதில் குறைத்து விடாதே” என்று ஓதுகிறார்கள். இந்த வசனத்தைப் பயன்படுத்தி சாப்பிட்ட பின் “துஆ” ஓதுவது பிழை என்று இமாம் இப்னு ஹஜர் ஹைதமீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் الفتاوى الحديثيّة எனும் நூலில் கூறியிருப்பதை உலமாஉகள் கவனத்திற் கொள்ள வேண்டும்.
وَسُئِلَ نفع الله بِهِ: أَيّمَا أفضل اللَّبن أَو الْعَسَل؟ فَأجَاب بقوله: قَالَ الْجلَال السُّيُوطِيّ: مُقْتَضى الْأَدِلَّة أنَّ اللَّبن أفضل، لِأَن الله تَعَالَى جعله غذَاء للطفل دون غَيره وَأَنه يجزىء عَن الطَّعَام وَالشرَاب وَلَا كَذَلِك الْعَسَل. وَفِي الحَدِيث بِسَنَد حسن (من سقَاهُ الله لَبَنًا فَلْيقل اللَّهُمَّ بَارك لنا فِيهِ وزدنا مِنْهُ) وَأَنه لَيْسَ يجْزِي عَن الطَّعَام وَالشرَاب غير اللَّبن، وَأَنه لَا يَغُصُّ بِهِ أحد كَمَا فِي الحَدِيث قَالَ تَعَالَى: {سَآئِغًا لِلشَّارِبِينَ} ஜالنَّحْل: 66ஸ وَأَنه اخْتَارَهُ لَيْلَة الْإِسْرَاء على الْعَسَل وَالْخمر فَقيل لَهُ (هَذِه الْفطْرَة فَأَنت عَلَيْهَا وَأمتك) رَوَاهُ الشَّيْخَانِ. وَفِي الحَدِيث: (أَمَرَ مَنْ أكل غير اللَّبن أَن يَقُول اللَّهُمَّ بَارك لنا فِيهِ وأطعمنا خيرا مِنْهُ. وَأمر من أكل اللَّبن أَن يَقُول اللَّهُمَّ بَارك لنا فِيهِ وزدنا مِنْهُ)
சுருக்கம்: இமாம் இப்னு ஹஜர் பின்வருமாறு விளக்கம் கூறியுள்ளார்கள்.
தேன் சிறந்ததா? பால் சிறந்ததா? என்ற கேள்விக்கு இமாம் ஜலாலுத்தீள் ஸுயூதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கொடுத்த விளக்கத்தையே இவர்கள் விடையாகக் கூறியுள்ளார்கள்.
தேனைவிடப் பால் சிறந்ததென்பதற்கு அதிக ஆதாரங்கள் உள்ளன. அல்லாஹ் சிறு குழந்தைகளுக்கு பாலையே உணவாக்கினான். தேனையோ, வேறொன்றையோ அல்ல. ஏனெனில் பால் பசியை தீர்க்கும் தன்மையுள்ளது. தேன் அவ்வாறில்லை.
அல்லாஹ் ஒருவனுக்கு பாலைப் பானமாகக் கொடுத்தால்
اَللهم بَارِكْ لَنَا فِيْهِ وَزِدْنَا مِنْهُ
என்று சொல்ல வேண்டுமென்று பலமான நபீ மொழி வந்துள்ளது. பால் போன்று பசியை அணைப்பதற்கு வேறொன்றுமில்லை. இதில் இன்னுமொரு விஷேடம் என்னவெனில் பால் குடிக்கும் போது “விக்கல்” ஏற்படமாட்டாது. இது பாலுக்குள்ள ஒரு விஷேடமாகும். இது பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் “குடிப்பவர்களுக்கு மிருதுவானது” என்று கூறியுள்ளான்.
நபீ பெருமான் விண்ணுலகப் பயணம் சென்ற போது பால், தேன், மது மூன்றும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அவர்கள் பாலை மட்டுமே தெரிவு செய்தார்கள். அப்போது அவர்களுக்கு நீங்கள் மார்க்கத்தை தெரிவு செய்து விட்டீர்கள் என்று சொல்லப்பட்டது. நீங்களும், உங்களின் சமூகத்தவர்களும் நல்வழியிலேயே இருப்பீர்கள். (புகாரீ, முஸ்லிம்)
பால் தவிர வேறொன்றை சாப்பிட்டவர்கள்
اَللهم بَارِكْ لَنَا فِيْهِ وَأَطْعِمْنَا خَيْرًا مِنْهُ
என்றும், பால் சாப்பிட்டவர்கள்
اَللهم بَارِكْ لَنَا فِيْهِ وَزِدْنَا مِنْهُ
என்றும் சொல்ல வேண்டுமென்று நபீ மொழி கூறுகிறது.
(الفتاوى الحديثية، ص 187 )
ஆசிரியர்: இப்னு ஹஜர்