தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
அல்லாஹ் திருக் குர்ஆனில்
وَلِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ
ஒளிர்ந்த பிரதேசமும், இருண்ட பிரதேசமும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவையாகும். எனவே, நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உண்டு. (02-115)
மேற்கண்ட திரு வசனத்தில் இரண்டு அம்சங்கள் கூறப்பட்டுள்ளன. ஒன்று – “மஷ்ரிக், மக்ரிப்” இரண்டும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை என்பது. இரண்டு – நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உண்டு என்பது.
இவ்விரு விடயங்கள் பற்றியும் இக்கட்டுரையில் ஆய்வு செய்து பார்ப்போம்.
முதலில் “மஷ்ரிக், மக்ரிப்” இரண்டும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை என்பது பற்றி ஆய்வு செய்வோம்.
“மஷ்ரிக், மக்ரிப்” என்ற இச் சொற்களுக்கு கிழக்கும், மேற்கும் என்று பொருள் வைத்து கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை என்று அதிகமான அறிஞர்கள் கருத்துக் கூறுகின்றார்கள். இக்கருத்தின் படி வடக்கும், தெற்கும் யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி பிறக்கின்றது. மேற்கண்டவாறு சொல்பவர்களிடம் இக்கேள்வியை முன்வைத்தால் கிழக்கும், மேற்கும் பிரதான திசைகளாயிருப்பதால் வடக்கும், தெற்கும் இவ்விரு திசைகளுக்குள் அடங்கிவிடும் என்று கூறுகிறார்கள். இவர்களின் இக் கூற்றை வேறு சிலர் மறுக்கின்றார்கள்.
ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் இவ்விரு சொற்களுக்கும் ஒளிர்ந்த பிரதேசங்கள் என்றும். இருண்ட பிரதேசங்கள் என்றும் கருத்து விரித்துள்ளார்கள்.
இவர்களின் இக்கருத்து மிகப் பொருத்தமானதாயிருப்பதால் இதை நான் ஏற்றுக் கொள்கிறேன். இக்கருத்து கேள்விக்கு இடமில்லாத கருத்தாகும். திரு வசனத்தில் வந்துள்ள وَللهِ என்ற சொல்லுக்கு கருத்து வேறுபாடின்றி அல்லாஹ்வுக்குச் சொந்தம் என்பதை அறிஞர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். நானும் இதை ஏற்றுக் கொள்கிறேன். எனினும் இதில் விபரம் உண்டு.
விபரம்: அல்லாஹ் என்ற சொல்லில் முதல் எழுத்தாக வந்துள்ள “லி” என்ற “லாம்” எழுத்துக்கு “சொந்தம்” என்று பொருள் வருகிறது. இதற்கு அறபு மொழியில் مِلْكْ “மில்க்” என்று சொல்லப்படும்.
சொந்தம் என்பதில் இரு வகையுண்டு. ஒன்று உரியவனை விட்டும் பிரியாத சொந்தம். இரண்டு உரியவனை விட்டும் பிரிந்த சொந்தம். உரியவனை விட்டும் பிரியாத சொந்தத்திற்கு உதாரணம் لِمُزَمِّلٍ عَيْنَانِ، لِمُنَاسٍ رِجْلَانِ முசம்மிலுக்கு இரு கண்கள் சொந்தம், முனாசுக்கு இரு கால்கள் சொந்தம் என்பன போன்று. உரியவனை விட்டும் பிரிந்த சொந்தத்திற்கு உதாரணம் لِمُزَمِّلٍ بُسْتَانٌ، لِمُنَاسٍ سَيَّارَةٌ முசம்மிலுக்கு ஒரு தோட்டம் சொந்தம், முனாசுக்கு ஓர் கார் சொந்தம் என்பன போன்று.
இவ்விரு வகைச் சொந்தங்களிலும் அல்லாஹ்வுக்கு ஒளிர்ந்த பிரதேசங்களும், இருண்ட பிரதேசங்களும் சொந்தம் என்பது எந்த வகைச் சொந்தம் என்பதை ஆய்வு செய்தால் உரியவனை விட்டும் பிரியாத சொந்தம் என்று கொள்வதே சரியானதாகும். இதற்கு மாறாக உரியவனை விட்டும் பிரிந்த சொந்தமென்றால் “அகீதா” கொள்கை ரீதியான பல சிக்கலை எதிர் கொள்ள நேரிடும்.
அதாவது முசம்மிலுக்கு தோட்டம் சொந்தம், முனாசுக்கு கார் சொந்தம் என்றால் முசம்மில் வேறு, தோட்டம் வேறு என்ற கருத்தும், முனாஸ் வேறு, கார் வேறு என்ற கருத்தும் வரும்.
இவ்வாறு கருத்து வருவது படைப்புக்களின் விடயத்தில் சிக்கலை ஏற்படுத்தாவிட்டாலும் அல்லாஹ்வின் விடயத்தில் கொள்கை ரீதியான சிக்கலை ஏற்படுத்தும். அதெவ்வாறென்றால் ஒளிர்ந்த பிரதேசங்களும், இருண்ட பிரதேசங்களும் அல்லாஹ்வை விட்டும் பிரிந்த சொந்தம் என்று வைத்துக் கொண்டால் அவ்விரண்டும் எதிலிருந்து வந்தவை? அவ்விரண்டுக்கும் மூலம் எது? என்ற கேள்வி வரும். இக் கேள்விக்கு இரண்டு வகையில் பதில் கூற முடியும். ஒன்று – அவ்விரண்டுக்கும் மூலம் எதுவுமில்லை. அவை சுயமாக – தமக்குத் தாமாக உண்டானவை என்ற பதில். இரண்டு – அவ்விரண்டும் அல்லாஹ்வின் “தாத்” – “வுஜூத்” உள்ளமையை மூலமாக – கருவாகக் கொண்டவை என்ற பதில்.
இவ்விரு பதில்களிலும் முதலில் கூறப்பட்ட பதில் – அவ்விரண்டுக்கும் மூலம் எதுவுமில்லை. அவை சுயமாக உண்டானவை என்ற பதில் “ஷிர்க்” எனும் இணைவைத்தலைச் சேரும்.
ஏனெனில் படைத்தவனான அல்லாஹ்வின் “தாத்” அல்லது “வுஜூத்” உள்ளமை மட்டும்தான் இன்னொன்றிலிருந்து உண்டாகாமல் சுயமாக உண்டானது. இவ்வாறு உண்டானது அல்லாஹ்வின் உள்ளமையை தவிர வேறொன்றுமே கிடையாது. எதார்த்தத்தில் இல்லை. யாராவதொருவன் அவ்வாறு ஏதாவதொன்று இருப்பதாக நம்பினால் அவன் தனது நம்பிக்கையில் “ஷிர்க்” அல்லாஹ்வுக்கு இணை வைத்தவனாகிவிட்டான். அவன் அவ்வாறு நம்புவதால் அவன்தான் அல்லாஹ்வுக்கு நிகர் தரிபடுத்தினவனேயன்றி அதனால் அல்லாஹ்வுக்கு நிகர் உண்டு என்ற கருத்து வரவே வராது. “முஷ்ரிகீன்” இணை வைத்தவர் அனைவரும் தமது எண்ணத்திலும், நம்பிக்கையிலும்தான் இணை வைத்தவர்களேயன்றி அவர்கள் அவ்வாறு நம்புவதால் அல்லாஹ்வுக்கு இணை உண்டு என்ற கருத்துக்கு இடமே இல்லை. இதனால்தான் ஸூபீ மகான்கள் அல்லாஹ்வுக்கு எதார்த்தத்தில் “ஷிர்க்” இணையில்லை என்று சொல்கிறார்கள்.
இதுவரை நான் எழுதிய விபரத்தின் மூலம் ஒளிர்ந்த பிரதேசங்களாயினும், இருண்ட பிரதேசங்களாயினும், அல்லது வேறெந்த ஒரு படைப்பாயினும் அது சுயமாக உண்டாகாமல் அல்லாஹ்வின் “தாத்” என்ற மெய்ப் பொருளைக் கருவாக – மூலமாகக் கொண்டதாகவே இருக்கும் என்பது தெளிவாகிறது.
அல்லாஹ்வின் “தாத்”தை எது மூலமாகவும், கருவாகவும் கொண்டதோ அது அவனுடைய “தாத்” தானானதாயிருக்குமேயன்றி அதற்கு வேறானதாக இருக்க மாட்டாது. அவ்வாறிருப்பது அசாத்தியமே!
நான் மேலே எழுதிய உதாரணங்களில் மாலையின் மூலம் தங்கமாயிருந்தால் அந்த மாலை தங்கம் தானானதென்று சொல்வது எவ்வாறு தவறாகும்? நூலின் மூலம் பஞ்சாயிருந்தால் அந்த நூல் பஞ்சு தானானதென்று சொல்வது எவ்வாறு தவறாகும்? திறப்பின் மூலம் இரும்பாயிருந்தால் அந்தத் திறப்பு இரும்பென்று சொல்வது எவ்வாறு தவறாகும்?
ஒளிர்ந்த பிரதேசங்களும், இருண்ட பிரதேசங்களும் அல்லாஹ்வின் “தாத்” உள்ளமையை விட்டும் பிரியாத சொந்தமானவை என்றால் அவை அவன் தானானதென்றுதான் விளங்க வேண்டுமேயன்றி அவனுக்கு வேறானவை என்று விளங்குதல் பிழையாகும். அது மட்டுமல்ல அதன் பின்னணி “ஷிர்க்” இணைக்கும் வழிகோலும்.
தலைப்பில் எழுதிய வசனத்தில் “மஷ்ரிக், மக்ரிப்” என்ற சொற்கள் வந்துள்ளதால் அவை பற்றியும், وَللهِ என்று ஒரு சொல் வந்துள்ளதால் “சொந்தம்” என்பது தொடர்பான விபரம் பற்றியும் எழுதினேன்.
திருக்குர்ஆனின் பல இடங்களில் “சொந்தம்” தொடர்பான வசனங்கள் வந்துள்ளன. உதாரணமாக وَللهِ مَا فِى السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை என்று. நாம் கூறி வந்த விளக்கத்தின் படி வானத்திலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனின் “தாத்” உள்ளமையை மூலமாகவும், கருவாகவும் கொண்ட, அவனுக்கு வேறாகாத, அவனை விட்டும் பிரயாத சொந்தம் என்றால் “எல்லாம் அவனே” என்றுதான் அறிந்து நம்ப வேண்டும்.
وَللهِ الْمَشْرِقُ والْمَغْرِبُ
என்ற வசனத்தில் மேற்கண்ட தத்துவங்கள் ஒழித்துக் கொண்டு இருப்பதினால்தான் அதன் பின்னால் அதை வெளியாக்கி فَأَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ وَجْهُ اللهِ நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் உண்டு என்று கூறியுள்ளான்.
நீங்கள் எங்கு நோக்கினாலும் என்றால் எங்கு பார்த்தாலும் என்று பொருள். இதை விளக்கி வைக்கத் தேவையில்லை. இதையடுத்து அங்கே அல்லாஹ்வின் முகம் உண்டு என்று கூறியுள்ளான். இத்திரு வசனமும் அல்லாஹ்தான் ஏகமுமாய் உள்ளான் என்ற தத்துவத்தை நாகரிக நடையில் கூறியுள்ளான். அவன் இவ்வாறு கூறாமல் فَأَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ اللهِ நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ் உள்ளான் என்று சொல்லியிருக்கலாம். இவ்வாறு சொல்லாமல் விட்டதற்கு நான் அறிந்தவரை இரண்டு காரணங்கள் கூறலாம். ஒன்று திருக்குர்ஆன் அறபு மொழி நாகரிக நடையில் அருளப்பட்டதாகும். فَأَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ وَجْهُ اللهِ என்ற நடை فَأَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ اللهُ என்ற நடையை விட நாகரிகமானதாகும். சுருங்கச் சொல்லி விட்டேன். விரித்துச் சொன்னால் கட்டுரை நீண்டு விடும். “இல்முல் மஆனீ”, “இல்முல் பலாஙா” கற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இருப்பினும் சிறிய உதாரணம் மூலம் இது நாகரிக நடைதான் என்பதை விளக்கி வைக்கிறேன்.
நெருங்கிய நண்பர்கள் இருவர் எனதூரான காத்தான்குடியில் ஒரே தெருவில் வாழ்ந்து வந்தனர். ஒவ்வோர் நாளும் இருவரும் பல தரம் சந்திப்பார்கள். ஒருவரையொருவர் காணாமல் இருக்கமாட்டார்கள். ஒருவரின் பெயர் பாறூக். மற்றவரின் பெயர் பாஹிம். பாறூக் எனதூரிலிருந்து சுமார் 50 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள ஓர் ஊரில் திருமணம் செய்து கொண்டார். தனது தொழிலையும் அங்கேயே அமைத்துக் கொண்டார். இதனால் தனது பிறந்த ஊருக்கு வருவதையும், இணைபிரியா நண்பன் பாஹிமை சந்திப்பதையும் குறைத்துக் கொண்டார். ஒரு நாள் இருவரும் தாம் பிறந்த ஊரில் பாதையில் சந்தித்த போது பாஹிம் தனது நண்பன் பாறூக்கிடம் ஒரு வருடத்தில் ஒரு தரமாவது ஊருக்கு வந்து தலையை மட்டுமாவது காட்டிவிட்டுச் செல் என்று கூறினான். அதேபோல் ஒரு வருடத்தின் பின் ஊருக்கு வந்த பாறூக் பாஹிமுடைய வீட்டிற்கு வந்து கதவைத் தட்டினான். பாஹிமின் மகள் கதவைத் திறந்தாள். பாறூக் தனது தலையை மட்டும் காட்டிவிட்டுப் போய் விட்டான். பாஹிமை சந்திக்கவில்லை. பாஹிமுக்கு விடயம் புரியவில்லை. இன்னொரு நாள் இருவரும் சந்தித்த போது பாஹிம் பாறூக் இடம் எனது வீட்டிற்கு வந்த நீ தலையை மட்டும் காட்டிவிட்டுச் சென்றுள்ளாயே ஏன் அவ்வாறு செய்தாய்? உள்ளே வந்திருக்கலாமல்லவா? என்று கேட்டான். அதற்கவன் நீ என்னிடம் அவ்வாறுதானே சொன்னாய். அதனால்தான் நான் அவ்வாறு செய்தேன் என்றான்.
அவ்வேளை பாறூக் என்பவனுக்கு மொழி நடை நாகரிகம் பற்றி விளக்கி வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவன் தனது நண்பன் பாறூகை விழித்து பாறூக்! நான் மொழி நாகரிகம் படித்த பண்டிதனல்ல. ஆயினும் நமது ஸூபிஸ உலமாஉகளும், குறிப்பாக நமது ஷெய்குனா மிஸ்பாஹீ அவர்களும் கூறிய தத்துவத்தைச் சொல்கிறேன்.
அறபு மொழியில் إِطْلَاقُ الْجُزْءِ وَإِرَادَةُ الْكُلِّ “ஒன்றின் ஒரு பகுதியைக் கூறி அதன் தொகுதியைக் கருத்திற் கொள்தல்” என்று ஒரு தத்துவம் உண்டு. இதற்கு உதாரணம் சொல்வதாயின் பின்வருமாறு சொல்லலாம்.
ஒருவனுக்கு கடன் தொல்லை தலைக்கேறி ஊரில் இருக்க முடியாத சூழ்நிலையில் எவருக்கும் தெரியாமல் இரவோடிரவாக அவன் ஒழித்து விட்டான். அவனின் பெயர் முசம்மில் என்றால் “முசம்மில் தலை மறைவு” என்று மக்கள் பேசிக் கொள்வார்கள். போனவன் ஆளே முழுமையாக மறைந்திருந்தும் அவனின் உடலில் ஒரு பகுதியைச் சொல்லியே தலைமறைவாகிவிட்டான் என்று சொல்கிறார்கள்.
இவ்வாறு சொல்லுதல் அறபு மொழியின் நாகரிகமான நடையாகும். இது போன்றே அல்லாஹ் திருக்குர்ஆனில் தன்னைப் பற்றிக் கூறுகையில் فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللهِ நீங்கள் எங்கு பார்த்தாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் உண்டு என்று கூறியுள்ளான். இதன் சுருக்கம் فَأَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ اللهُ நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கே அல்லாஹ்தான் உள்ளான் என்பதேயாகும்.
இவ்வசனத்திற்கு விளக்கம் கூறிய “றயீஸுல் முபஸ்ஸிரீன்” திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் தலைவர் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் فثم وجه الله என்றால் فَثَمَّ ذَاتُ اللهِ என்று கூறியிருப்பது இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.
அன்பிற்குரிய முஸ்லிம் சகோதர, சகோதரிகளே! ஸூபிஸ சமூகத்தவர்களே!
அல்லாஹ் திருக்குர்ஆனில் மேற்கண்ட திரு வசனத்தின் மூலமும், இன்னும் பல திரு வசனங்கள் மூலமும் எல்லாமாயும் நானே உள்ளேன் என்று தெளிவினுந் தெளிவாகக் கூறியிருக்கும் நிலையிலும், “லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் இஸ்லாமிய மூல மந்திரமான திருக்கலிமா அல்லாஹ் அல்லாத வேறொன்றுமில்லை என்று பிரகடனம் செய்து கொண்டிருக்கும் நிலையிலும், எம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பல ஹதீதுகள் மூலம் இதே கருத்தை கூறியிருக்கும் நிலையிலும், இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய வலீமார், இறைஞானிகள், தரீகாக்களின் ஷெய்குமார் அனைவரும் இதே கருத்தைக் கூறியிருக்கும் நிலையிலும், மார்க்க அறிஞர்களில் ஸூபிஸ தத்துவமும், இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையும் தெரியாத சிலர் இக் கொள்கை பிழையென்று சொல்வதும், அந்தச் சிலர் சொல்வதைக் கேட்டுக் கொண்டு மார்க்க அறிஞர்களிற் பலர் மௌனிகளாயிருப்பதும், தீவிரப் போக்குடைய சிலர் சூபிச சமூகத்திற்கு எதிராக அட்டூழியம் செய்வதும், அராஜகம் பண்ணுவதும், அரசாங்கத்தின் கவனத்திற்கு இவ் விவகாரத்தை பல முறை தெரிவித்தும், புகார் செய்தும் அரசாங்க அதிகாரிகள், அமைச்சர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் போல் மௌனிகளாயிருப்பதும், இன்னும் அரச பாதுகாப்புத் துறையினர் நாளை நடவடிக்கை எடுப்போம், நாளை மறுநாள் நடவடிக்கை எடுப்போம் என்று எங்களை மடையர்களாக்கிக் கொண்டிருப்பதும் ஏனோ??? இதற்கு அல்லாஹ்வின் தீர்ப்பே சரியான தீர்ப்பாகும். அந்நேரம் அனைவரும் நீதியின் வலையில் சிக்கித் தவிப்பார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.
முற்றும்.