தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
எம் பெருமானார் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ் பற்றிப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த கால கட்டத்தில் திரு மக்கா நகரிலுள்ள “கஃபா”வினுள் 300க்கும் மேற்பட்ட விக்கிரகங்கள் – சிலைகள் இருந்தன. அவற்றில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பெயர்களும் இருந்தன. தனித்தனி உருவ அமைப்புக்களும் இருந்தன. அவற்றிற் சில தங்கத்தாலும், இன்னும் சில வெள்ளியாலும், வேறு சில செம்பாலும், இன்னும் சில இரும்பாலும், மண்ணாலும் செய்யப்பட்டவையாகவும் இருந்தன.
ஒரு நாள் திரு மக்கா நகரின் ஓர் இல்லத்தில் தன்னிகரில்லாத் தலைவன் மடமையின் தந்தை அபூ ஜஹ்ல் தலைமையில் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பெருமானாரின் எதிரிகளில் பலர் கலந்து கொண்டார்கள். அங்கு உரையாற்றிய மடமையின் தந்தை அபூ ஜஹ்ல், கஃபாவினுள் நாம் வைத்துள்ள எமது “ஆலிஹத்” தெய்வங்களிற் சில தங்கத்தினாலானவையாகும், இன்னும் சில வெள்ளியினாலானவையாகும், இன்னும் சில செம்பினாலானவையாகும், இன்னும் சில மரத்தினாலானவையாகும், இன்னும் சில மண்ணாலானவையாகும்.
ஆனால் முஹம்மத் சொல்கின்ற “றப்பு” எதனாலானவன் என்று எமக்குத் தெரியவில்லை. அவரிடமே அதைக் கேட்டறிவோம் என்று கூறி அங்கிருந்த அனைவரையும் அழைத்துக் கொண்டு பெருமானார் அவர்களிடம் வந்தான் அபூ ஜஹ்ல்.
அவன் பெருமானார் அவர்களிடம்,
صِفْ لَنَا رَبَّكَ يَا مُحَمَّدْ، مِنْ أَيِّ شَيْئٍ هُوَ؟ أَمِنَ الذَّهَبِ أَوِ الْفِضَّةِ أَوِ الْحَدِيْدِ أَوِ الْخَشَبِ؟
முஹம்மதே! நீங்கள் சொல்லி வருகின்ற “றப்” இரட்சகன் எதனாலானவன்? தங்கத்தினாலா? அல்லது வெள்ளியினாலா? இரும்பினாலா? மரத்தினாலா? எதனாலானவன்? என்று கேட்டான்.
அப்போது பெருமானார் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இறைவனிடமிருந்து “வஹீ” மூலம் “சூறதுல் இக்லாஸ்” என்ற “குல் ஹுவல்லாஹ்” அத்தியாயம் இறங்கியது. அதை எம் பெருமானார் அவர்கள் வந்தவர்களுக்கு ஓதிக் காட்டினார்கள்.
இதுவரை நான் எழுதியுள்ள விடயங்களில் மிக ஆழமாக ஆய்வு செய்யக் கூடிய விடயம் ஒன்றுமில்லை. இதன் பிறகு நான் எழுதவுள்ள விடயங்கள்தான் மிக ஆழமாக ஆய்வு செய்ய வேண்டியவையாகும்.
முதலில் பெருமானார் அவர்களிடம் வந்த கூட்டத்தினர் அவர்களிடம் கேட்ட கேள்விக்கு நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கொடுத்த பதில் பற்றி நாம் ஆய்வு செய்ய வேண்டும்.
பெருமானாரிடம் வந்த காபிர்கள் அவர்களிடம், நீங்கள் சொல்கின்ற “இலாஹ்” தெய்வம் – கடவுள் எதனாலானவன், தங்கத்தினாலா? வெள்ளியினாலா? அல்லது வேறு எதனால் ஆனவன்? என்று கேட்டார்கள்.
அவர்களின் இக் கேள்விக்கு பொருத்தமான பதில் சொல்வதாயின் அவன் எதனாலும் ஆனவன் அல்ல என்று சொல்லியிருக்க வேண்டும். இதுவே அவர்களின் கேள்விக்குரிய பொருத்தமானதும், அர்த்தம் உள்ளதுமான பதிலாகும். ஆயினும் அவர்கள் சொன்ன பதில் “அல்லாஹு அஹத்” என்பதாகும்.
“அல்லாஹு அஹத்” அல்லாஹ் ஒருவன் என்று இவ்வசனத்திற்குப் பொருள் கூறினால் இது அவர்களின் கேள்விக்கு பதிலாகுமா? என்று நாம் ஆய்வு செய்தால் இது பதிலாகாதென்றே முடிவு செய்ய வேண்டும்.
ஏனெனில் அவர்களின் கேள்வி அல்லாஹ் என்பவன் எதனாலானவன் என்பதேயன்றி அவன் ஒருவனா? பலரா? என்பதல்ல. இவ்வாறு அவர்கள் கேட்டிருந்தால் அவன் ஒருவன் என்ற பதில் சரியானதேயாகும். ஆனால் அவர்களோ அவ்வாறு கேட்கவில்லை.
இந்நிலையில் முஹம்மத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வஹ்ஹாபீகள் சொல்வது போல் நம் போன்ற சாதாரண மனிதனாயிருந்தால் அவர்கள் பொருத்தமின்றி பதில் சொல்லியிருப்பார்கள் என்று சிந்திப்பதற்கு இடமுண்டு. ஆனால் அவர்களோ أَعْلَمُ الْعَالَمِيْنْ உலக மக்களில் முதன்மையான அறிஞர் என்று முஸ்லிம் அல்லாதவர்களால் கூட வாழ்த்தப்பட்டவர்கள். புத்தி ஜீவிகளிலும் முதன்மையானவர்கள் என்று போற்றப்பட்டவர்கள். ஒரு சமயம் அல்லாஹ் எனது இரு தோள் புயங்களுக்கிடையில் கையை வைத்த போது عَلِمْتُ عِلْمَ الْأَوَّلِيْنَ وَالْآخِرِيْنْ நான் முன்னோர், பின்னோர் அனைவரின் அறிவுகளையும் அறிந்து கொண்டேன் என்று தங்களின் ஆதார பூர்வமான அருள் மொழி மூலம் அறிவித்தவர்கள். இன்னும் பல பொன் மொழிகள் மூலம் لَسْتُ مِثْلَكُمْ، لَسْتُ كَهَيْئَتِكُمْ، لَسْتُ كَأَحَدٍ مِنْكُمْ நான் உங்கள் போன்றவன் அல்ல, நான் உங்களின் அமைப்பு போன்றவனல்ல, நான் உங்களில் எவர் போன்றவனுமல்ல என்று தங்களைப் புகழ்ந்து கூறியவர்கள். பின்னால் – பிற்காலத்தில் நடைபெறவுள்ள மறைவான செய்திகளை முன்கூட்டியே அறிவித்த அண்ணல் அவர்கள், أُوْتِيْتُ جَوَامِعَ الْكَلِمِ நான் ஒரே சொல்லில் பல தத்துவங்களை உள்ளடக்கிப் பேசும் வல்லமை வழங்கப்பட்டவன் என்று சொன்ன ஏந்தல் பிரான். பீரான பீரான் ஆவார்கள்.
இத்தகைய சிறப்புக்களுக்குரிய அறிவுலக மேதை, ஆசான்களின் ஆசான் காபிர்கள் கேட்ட கேள்விக்கு பொருத்தமற்ற, அர்த்தமற்ற பதில் சொல்லியிருப்பார்களா? இல்லை. இல்லவே இல்லை.
அவர்கள் சொன்ன பதில் நூறு வீதமும் சரியானதென்று நான் ஆயிரம் முறை சொல்வேன்.
“அஹத்” தொடர்பான சுருக்கமான விளக்கம்:
“அஹத்” என்ற சொல்லுக்கு ஒன்று என்று பொருள் கொள்வது இவ்விடத்தைப் பொறுத்துப் பிழையாகும். இச் சொல்லுக்கு இவ்விடத்தில் ஏகன் – ஏகமுமானவன் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு பொருள் கொண்டால் கேள்விக்குப் பொருத்தமான பதிலாக அந்தப் பதில் அமைந்திருக்கும். இவ்வாறு பொருள் கொள்வது “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்திற்கு பொருத்தமானதாகவும் ஆகியிருக்கும்.
காபிர்கள் கேட்ட கேள்விக்கு ஒன்று என்று விடை சொல்வதுதான் பிழையேயன்றி “ஏகன்” என்று விடை சொல்வது பிழையாகமாட்டாது. அத்துடன் அந்த விடை பொருத்தமானதாயும் இருக்கும்.
காபிர்கள் உங்களின் இறைவன் எதனாலானவன்? என்று கேட்ட அந்தக் கேள்விக்கு “அஹத்” என்று விடை சொல்வது அவன் ஏகமுமானவன், எல்லாமுமானவன் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. அவன் இரும்பாயுமிருப்பான், துரும்பாயுமிருப்பான், தங்கமாயுமிருப்பான், வெள்ளியாகவும் இருப்பான், எல்லாமாயுமிருப்பான். காணும் பொருட்களாகவெல்லாம் அவனே இருப்பான்.
இத்திரு வசனத்தில் வந்துள்ள “அஹத்” என்ற சொல்லுக்கு ஒருவன் என்று பொருள் கொள்வது கேள்விக்குப் பொருத்தமற்ற விடையாகிவிடும்.
قُلْ هُوَ اللهُ أَحَدٌ
என்ற இவ்வசனத்திற்கு விளக்கம் எழுதியுள்ள ஷெய்குனா அல் ஆரிப் பில்லாஹ், இறைஞானக் கவிஞர் அப்துல் கரீம் அல் ஜீலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அல் இன்ஸானுல் காமில்” எனும் நூலில் இது தொடர்பாக அறபு மொழி இலக்கணத்தை ஆதாரமாகக் கொண்டு ஓர் அற்புதமான விளக்கம் எழுதியுள்ளார்கள். அவர்களின் இவ்விளக்கமும் மிக நுட்பமாக ஆய்வு செய்யப்பட வேண்டியதாகும்.
அவர்கள் கூறியுள்ள இவ்விளக்கம் அறபு மொழியிலக்கணம் கற்றவர்களுக்கு தேனுடன் பால் கலந்து கொடுத்தாற் போலிருக்குமென்று நான் நினைக்கிறேன். மற்றவர்களுக்குப் புரியாமலும், ருசிக்காமலும் இருக்கலாம். மற்றவர்கள் அவர்களின் விளக்கத்தை வாசிக்காமல் இருப்பது நல்லது. வாசிப்பதாயினும் அறபு மொழியிலக்கணம் கற்ற ஒருவரின் உதவியுடன் வாசித்தல் நல்லது.
வெளி நீச்சல் காரர்களின் விளக்கம்:
قُلْ هُوَ اللهُ أَحَدٌ
இத்திரு வசனத்திற்கு இறைஞானிகள் தவிர்ந்த “ளாஹிர்” வெளி நீச்சலடிக்கின்ற, “ஷரீஆ” எனும் வரம்புக்குள் மட்டும் நின்று கொண்டு தாம் கண்டது மட்டுமே அறிவுலகம் என்று நினைக்கின்ற சிலர் இதற்குப் பின்வருமாறு விளக்கம் சொல்வார்கள்)
( قُلْ முஹம்மதே நீங்கள் சொல்லுங்கள். هُوَ அதாவது اَللهُ أَحَدٌ அல்லாஹ் ஒருவன் என்று சொல்லுங்கள்.
قُلْ
என்ற சொல்லில் பிரதிப் பெயர் ஒன்று மறைந்துள்ளது. அது أَنْتَ என்றிருக்கும். அது எம் பெருமானார் அவர்களைக் குறிக்கும்.
هُوَ
என்பது ضمير الشأن இதற்குப் பொருளில்லை. இதற்கு “மஆத்” இது குறிக்கும் இடமுமில்லை, இதற்கு ஒன்றுமே இல்லை என்று சொல்வார்கள். இதற்கு “அதாவது” என்று பொருள் கூறலாம் என்றும் சொல்கிறார்கள்.
اَللهُ أَحَدٌ
அல்லாஹ் என்ற சொல் مُبْتَدَاٌ எழுவாய் என்றும், أَحَدٌ என்ற சொல் خَبَرٌ பயனிலை என்றும் சொல்கிறார்கள்)
மேற்கண்ட விளக்கமும், “தர்கீப் – இஃறாப்” உம் சொல்கிறார்கள்.
வெளி நீச்சலடிக்கின்ற இவர்களின் கூற்றின் படி هُوَ என்ற சொல் அர்த்தமில்லாத, “மஆத்” இல்லாத வீணான சொல்லாகிவிடும். “மஆத்” என்றால் பிரதிப் பெயர் கொண்டு சுட்டப்பட்டதாகும்.
(வெளி நீச்சல் காரர்களின் கூற்று அர்த்தமற்றது)
திருக்குர்ஆனில் அர்த்தமில்லாத, “மஆத்” இல்லாத, வீணான ஒரு சொல் இருப்பது அசாத்தியம். இத்தகைய ஒரு சொல் திருக்குர்ஆனில் இடம் பெறுவதற்கு அது என்னுடைய பேச்சுமல்ல. வேறெவரின் பேச்சுமல்ல. அல்லாஹ்வின் பேச்சாகும். அவனின் வசனங்களாகும். அவ்வசனங்கள் பரிசுத்தமானவையும், தத்துவம் நிறைந்தவையுமாகும். அவற்றிலிருந்து ஓர் எழுத்தையோ, ஒரு புள்ளியையோ எவராலும் கூட்டவும், குறைக்கவும் முடியாது. இவ் அடிப்படையில் வெளி நீச்சல் காரர்களின் விளக்கம் எடுபடமாட்டாது. உள் நீச்சல் காரர்கள் இவர்களின் கூற்றை ஒரு சத வீதமும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இவர்களின் கூற்று ஒரு வகை சமாளிப்பும், தாளிப்புமேயாகும்.
இறைஞானியின் விளக்கம்:
இதற்கு இறைஞானி அப்துல் கரீம் அல் ஜீலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும் விளக்கத்தின்படி قُلْ என்ற சொல்லில் மறைந்து நிற்கின்ற أَنْتَ “நீ” என்ற பிரதிப் பெயர் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களைக் குறிக்கிறது. அதன் பின்னால் வந்துள்ள هُوَ என்ற பிரதிப் பெயர் “அன்த” என்ற சொல் கொண்டு கருதப்பட்ட பெருமானார் அவர்களையே குறிக்கிறது. அதன் பின்னால் வந்துள்ள اللهُ என்ற சொல் هُوَ என்ற “முப்ததா” எழுவாய்க்கு முதலாவது خَبَرْ பயனிலையாகும். “அஹத்” என்பது அதற்கு இரண்டாவது خبر ஆகும்.
இவ்வாறு விளக்கம் சொன்னவர்கள் இறைஞானி அப்துல் கரீம் அல்ஜீலீ றஹிமஹுல்லாஹ் அவர்களாவர். இவர்களின் இக் கூற்றிலிருந்து கிணற்றுத்தவளைகளுக்கும், குளத்து தேரைகட்கும் ஒன்றும் புரியாது என்பதும், அந்தப் பாக்கியம் அவர்களுக்கு இல்லை என்பதும் தெளிவாகின்றன.
இறைஞானி அப்துல் கரீம் அல் ஜீலீ அவர்களின் இக் கூற்றின் படி هُوَ என்ற சொல் قُلْ என்ற சொல்லில் மறைந்துள்ள أَنْتَ என்ற பிரதிப் பெயர் மூலம் கருதப்பட்ட பெருமானார் அவர்களையே குறிக்கிறது.
قُلْ هُوَ اللهُ أَحَدٌ
என்ற திரு வசனத்தின் சுருக்கமான கருத்து “அல்லாஹ் முஹம்மத் – முஹம்மத் அல்லாஹ்” என்பதேயாகும்.
முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களை அல்லாஹ் என்று பல இடங்களில் சொல்லியுள்ளார்கள் என்பதற்கு பலம் வாய்ந்த நபீ மொழிகள் ஆதாரங்களாக உள்ளன. அவற்றைத் தொகுத்து தெளிவான ஆதாரங்களுடன் لَقَدْ جَاءَ مَوْلَانَا بِصُوْرَةِ أَحْمَدِ – وَإِلَّا فَكَيْفَ الرَّبُّ يُعْرَفُ وَيُقْصَدُ என்ற பெயரில் ஒரு சிறிய நூல் எழுதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, இலங்கையிலுள்ள அறபுக் கல்லூரிகள், மற்றும் அறிஞர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைத்தேன். காத்தான்குடியிலுள்ள பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலிலும், கைறாத் ஜும்ஆப் பள்ளிவாயலிலும், கல்முனையிலும் பகிரங்கமாகக் கொடுத்தேன். இதுவரை இது தொடர்பாக எனது தொகுப்பு சரியானதென்றோ, பிழையானதென்றோ எவரிடமிருந்தும் எந்தப் பதிலும் எமக்கு வரவில்லை. மீண்டும் அத் தொகுப்பை எனது முக நூலில் இன்று பதிவு செய்துள்ளேன். தேவையானோர் நுகர்வார்களாக!
தொடரும்…