Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் திருக்குர்ஆனின் குறிப்பிட்ட சில “சூறா”க்களை ஓதுவதற்கு ஆதாரம் உண்டா?

குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் திருக்குர்ஆனின் குறிப்பிட்ட சில “சூறா”க்களை ஓதுவதற்கு ஆதாரம் உண்டா?

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
وَسُئِلَ رَضِي الله عَنهُ: عَمَّا فِي أذكار النَّوَوِيّ من أَنه يسن أَن يقْرَأ فِي كل يَوْم يس والواقعة وَالدُّخَان والسجدة وَإِذا زلزلت، فَهَل بَقِي سور وآيات أخر ورد فِيهَا نَظِير ذَلِك؟ فَأجَاب بقوله: نعم (كل يَوْم قِرَاءَة الْإِخْلَاص مِائَتي مرّة) رَوَاهُ التِّرْمِذِيّ. (وَآل عمرَان يَوْم الْجُمُعَة) رَوَاهُ الطَّبَرَانِيّ (والكهف يَوْمهَا) رَوَاهُ الْحَاكِم (وليلتها) رَوَاهُ الدَّارمِيّ. (و {قل إِنَّمَا أَنا بشـر مثلكُمْ يُوحى} إِلَى آخر السُّورَة كل لَيْلَة) رَوَاهُ ابْن رَاهَوَيْه فِي (مُسْنده) . (وَيس عِنْد المحتضر) رَوَاهُ أَبُو دَاوُد وَغَيره. (والرعد أَيْضا) كَمَا فِي (الرَّوْضَة) عَن بعض التَّابِعين، وَصرح بِهِ من أَصْحَابنَا الْبَنْدَنِيجِيّ وَغَيره. (وَالدُّخَان لَيْلَة الْجُمُعَة) رَوَاهُ التِّرْمِذِيّ وَغَيره. (وق فِي الْخطْبَة) رَوَاهُ مُسلم. (وَالْفَجْر فِي عشـر ذِي الْحجَّة) رَوَاهُ الثَّعْلَبِيّ. (وَالْقدر بعد الْوضُوء) كَمَا نَقله ابْن الصّلاح فِي رحلته،
فَيَنْبَغِي ندب هَذِه الَّتِي وَردت بهَا تِلْكَ الْأَحَادِيث على كَيْفيَّة وُرُودهَا وإنْ لم أر من صرح بذلك، وَلَا يضرُّ أَن فِي بعض أحاديثها ضعفا، لِأَن الحَدِيث الضَّعِيف والمرسل والمعضل والمنقطع يعْمل بِهِ فِي فَضَائِل الْأَعْمَال اتِّفَاقًا بل إِجْمَاعًا على مَا فِيهِ.

வார நாட்களிலும், விஷேட நாட்களிலும், ஒவ்வொரு நாளும் மேற்கண்டவற்றை ஓதி வந்தால் அல்லாஹ்வின் அருள் பெருகுமென்றும், ஆரோக்கியம் கிடைக்குமென்றும், மனத் தூய்மை ஏற்படுமென்றும், “ஈமான்” பலமாகுமென்றும் பல “ஹதீது” நபீ மொழிகள் வந்துள்ளன. அவற்றை முறைப்படி பக்தியுடன் ஓதி வந்தால் மேற்கண்ட பயன்கள் கிடைக்கும். இன்ஷா அல்லாஹ்.
 
இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தினமும் ஓதுவது “ஸுன்னத்” என்றும், நல்ல பயன் தரவல்லதென்றும் தங்களின் “அல் அத்கார்” என்ற நூலில் எழுதியுள்ளார்கள். அவை பின்வருமாறு. இவற்றை தினமும் ஓதுவது “ஸுன்னத்” ஆகும்.
 
அவற்றில் “யாஸீன்” சூறா, “வாகிஆ” சூறா, “ஸஜ்தா” சூறா, إذا زلزلت சூறா அடங்கும். அவற்றை ஒவ்வொரு நாளும் ஓதி வருவது அனைத்து விடயங்களுக்கும் சிறந்ததாகும்.
இவற்றைச் சரி கண்ட இமாம் இப்னு ஹஜர் ஹைதமீ அவர்கள் இவற்றுடன் இன்னும் சில விடயங்களையும் சேர்த்துள்ளார்கள்.
 
அவற்றில் ஒவ்வொரு நாளும் “ஸூறதுல் இக்லாஸ்” 200 தரம் ஓத வேண்டும் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள். ஆதாரம் – துர்முதீ
வெள்ளிக்கிழமை “ஆல இம்றான்” ஓதுவது சிறந்தது. ஆதாரம் – தபறானீ. இன்னும் இதே நாள் “கஹ்ப்” அத்தியாயம் ஓதுவது சிறந்தது. ஆதாரம் – ஹாகிம், தாரமீ.
ஒவ்வோர் இரவும் قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوْحَى إِلَيَّ என்ற வசனத்திலிருந்து அத்தியாயம் முடியும் வரை ஓதுவது சிறந்தது. ஆதாரம் – مسند ابن راهويه
“சக்றாத்” மரண வருத்தமுள்ளவனிடம் “யாஸீன்” அத்தியாயம் ஓதுவது சிறந்தது. ஆதாரம் – அபூ தாஊத்.
 
رَعْدْ
– “றஃத்” எனும் அத்தியாயத்தை அவனிடம் ஓதுவது சிறந்தது. ஆதாரம் – றவ்ழா.
வெள்ளிக்கிழமை இரவு دُخَانْ – “துகான்” அத்தியாயம் ஓதுவது சிறந்தது. ஆதாரம் – துர்முதீ.
 
“துல் ஹஜ்” மாதம் தலைப் பிறையிலிருந்து தொடராக பத்து நாட்கள் وَالْفَجْرِ وَلَيَالٍ عَشْرٍ எனும் அத்தியாயம் ஓதுவது சிறந்தது. ஆதாரம் – தஃலபீ.
“வுழூ” செய்தபின் அதற்குரிய “துஆ”வை ஓதுவதுடன் إِنَّا أَنْزَلْنَاهُ فِى لَيْلَةِ الْقَدْرِ என்ற அத்தியாயத்தை ஓதுவதும் சிறந்தது. ஆதாரம் – رحلة ابن الصلاح
மேற்கண்டவற்றை குறித்த நாட்களில் ஓதி வருவது சிறந்தது.
 
இவற்றில் சில நபீ மொழிகள் “ழயீப்” பலம் குறைந்தவையாக இருப்பது பற்றி நாம் யோசிக்கத் தேவையில்லை. ஏனெனில் பலம் குறைந்த நபீ மொழிகளின் படி “அமல்” செய்ய முடியுமென்று “ஸுன்னத் வல் ஜமாஅத்” அறிஞர்கள் ஒரே குரலில் சொல்லியுள்ளார்கள்.
 
மேற்கண்ட விடயங்களுக்கு ஆதாரம் தேவையானோர் பின்வரும் நூலை நுகரவும்.
“அல் பதாவல் ஹதீதிய்யா”, பக்கம் – 132, ஆசிரியர் – இப்னு ஹஜர் ஹைதமீ.
“ழயீப்” பலம் குறைந்த “ஹதீது” நபீ மொழிகளை எடுத்து நடக்கக் கூடாதென்று வஹ்ஹாபீகள் சொல்வார்கள். அவர்களின் உளறல்களை நாம் திரும்பிக் கூடப் பார்க்காமல் நமது முன்னோர்களான இமாம்களும், நமது உலமாஉகளும் சொன்னபடி நாம் பலம் குறைந்த நபீ மொழிகளை எடுத்து நமது வாழ்வில் செயல்படலாம். சந்தேகம் கொள்ளவோ, பயப்படவோ தேவையில்லை. மறுமையில் அல்லாஹ் உங்களிடம் கேட்டால் என்னைக் காட்டிக் கொடுங்கள். அவன் என்னைக் கேட்டால் நான் முன்னோர்களான இமாம்களை காட்டிக் கொடுப்பேன். அல்ஹம்து லில்லாஹ்!
இக்காலத்தைப் பொறுத்த வரை தொழில், வியாபாரம் செய்து கொண்டும், மனைவி மக்கள், மற்றும் குடும்பத்தினரின் வேலைகள் செய்து கொண்டும் இருக்கின்ற ஒரு மனிதனுக்கு மேற்கண்ட ஓதல்களை ஓதுவதற்கு நேரம் இருக்காது. இத்தகையோர் “முத்தலாக்” சொல்வது போல் முழுமையாக விட்டுவிடாமல் தொடர்ந்து செய்ய முடியாது போனாலும் வாரத்தில் ஒரு நாளாவது செய்து கொள்வது சிறப்பானதேயாகும்.
 
இவ்வாறுதான் “தரீகா”வின் தாபகர்களும், ஷெய்குமார்களும், முன் வாழ்ந்த இமாம்களும் கோர்வை செய்த “அவ்றாத்”கள் ஓதுவதுமாகும். இவ்வாறுதான் “தரீகா”வின் தாபகர்களால் உருவாக்கப்பட்ட “றாதிப்”கள் செய்வதுமாகும். இவற்றில் ஒன்றுமே மார்க்கத்திற்கு முரணானதல்ல. “வஹ்ஹாபிஸம்” வந்த பிறகுதான் அது “ஷிர்க்”, இது “குப்ர்”, அது “பித்அத்” என்ற புரளியே ஏற்பட்டது.
வஹ்ஹாபீ தம்பிமார் அல்லது காக்காமார் சொல்வதைக் கேள்விப்படும்போது சிரிப்பதா? அழுவதா? اللهم اهدهم என்று சொல்வதா? اللهم اخذلهم என்று சொல்வதா? ஒன்றுமே புரியல.
இப்போது என்ன நடக்கிறது தெரியுமா? தொப்பி போட்டுத் தொழுவது மார்க்கமா? போடாமல் தொழுவது மார்க்கமா? என்பதல்ல. தொப்பி போடாமல் – தலை மறைக்காமல் தொழுவதும், கத்தம், பாதிஹா, மவ்லித் ஓதாமலிருப்பதும் “பெஷன்” ஆகிவிட்டது. அவ்வளவுதான்.
நமதூரை மட்டும் எடுத்துச் சிந்திப்போம். நமதூரில் வஹ்ஹாபிஸம் வருவதற்கு முன் வாழ்ந்த உலமாஉகளும், பொது மக்களும் வஹ்ஹாபீகள் பிழையென்று இப்போது சொல்லிக் கொண்டிருக்கின்ற அனைத்தையும் செய்து வந்தவர்கள்தான். அவ்வாறாயின் நமது தாய், தந்தையர்கள், அவர்களின் தாய் தந்தையர்கள், நமது பிள்ளைகள், அவர்களின் பிள்ளைகள் எல்லோரும் நரகவாதிகளா? ஆம் அவர்கள் நரகவாதிகள்தான் என்று அவர்கள் சொல்வார்களாயின் குத்பு நாயகம் போகின்ற நரகம், ரிபாயீ நாயகம் போகின்ற நரகம், றஸூலுல்லாஹ் போகின்ற நரகம், நபீ தோழர்கள் போகின்ற நரகம் சுவர்க்கத்தின் பூஞ்சோலைகளாகவே இருக்கும். அங்கு நாங்களும் செல்வோம்.
 
இக்காலத்தைப் பொறுத்த வரையில் மார்க்கத்தில் சொல்லப்பட்ட அனைத்து அமல்களும் செய்வது கடினமாயிருந்தாலும், அல்லது அறவே செய்ய முடியாதிருந்தாலும் ஐந்து நேரத் தொழுகையை மட்டுமாவது தொழுது கொண்டு ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையிலும், ஸூபிஸக் கொள்கையிலும் இருந்தால் போதும்.
كن كيف شئت فإن الله ذو كرم – وما عليك إذا أذنبت من بأس
إلا اثـنـتـيـن فلا تـقـربـهـما أبدا – الشرك بالله والإضـرارُ للناس
முற்றும்.
 
குறிப்பு: சூறா – அத்தியாயங்களின் விபரம் தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
முக்கிய அறிவித்தல்: முதுமையினால் அல்லது நோயினால் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பவர்கள் கைபேசியுடன் முழு நேரத்தையும் கழிக்காமல் அதிகம் “ஸலவாத்” சொல்லிக் கொண்டிருப்பது பயன் தரும்.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments