தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
புனித றமழான் மாதத்தை அடுத்து வருகின்ற மாதம் “ஷவ்வால்” மாதமாகும்.
இம்மாதம் முதல் நாள் – தலைப் பிறை அன்று عِيْدُ الْفِطْرْ – “ஈதுல் பித்ர்” “பித்றா” பெருநாள் என்று அழைக்கப்படும்.
இஸ்லாம் இந்த நாளுக்கு عِيْدُ الْفِطْرْ “ஈதுல் பித்ர்” என்று பெயர் சொல்லியிருந்தாலும் இம்மாதம் “றமழான்” நோன்பு மாதத்தை அடுத்து வருகின்ற மாதமாகையால் பொது மக்கள் இதற்கு நோன்புப் பெருநாள் என்று பெயர் வைத்துக் கொண்டார்கள்.
இந்நாளுக்கு இஸ்லாம் வைத்துள்ள பெயர் عِيْدُ الْفِطْرْ “ஈதுல் பித்ர்” “பித்றா பெருநாள்” என்பதேயாகும். நாமும் இதன் பிறகு “பித்றா பெருநாள்” என்று சொல்லிக் கொள்வோம்.
இவ்வாறு பெயர் வந்ததற்கான காரணம்:
زَكَاةُ الْفِطْرْ
“சகாதுல் பித்ர்”
நோன்புப் பெருநாளன்று – “ஷவ்வால் மாதம்” தலைப்பிறை அன்று நல்கப்படும் தானிய அறத்திற்கு இச் சொல் பயன்படுத்தப்படுகிறது. நோன்பு கடமையாக்கப்பட்ட ஹிஜ்ரீ இரண்டாம் ஆண்டிலேயே இதுவும் கடமையாக்கப்பட்டது.
“ஒருவர் நோன்பு நோற்கும் போது சிறு சிறு தவறுகளால் அந் நோன்புகள் விண்ணை எட்டாமல், மண்ணிற்கும், விண்ணிற்கும் இடையிலேயே தடுத்து நிறுத்தப்படுகின்றன. “பித்றா” கொடுப்பது அத்தடையை அகற்றி அவற்றை விண்ணுகை அடையச் செய்கிறது” என்று நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.
“ஸஜ்தா ஸஹ்வு” செய்வதினால் தொழுகையின் குறைகள் நீக்கப்படுவது போன்று “பித்றா”வினால் நோன்பின் குறைகள் அகற்றப்படுகின்றன என்று இமாம் வகீஉ அவர்கள் கூறினார்கள்.
“பித்றா” விபரம்:
ஒரு முஸ்லிம் தனக்காகவும், அவர் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியவர்களுக்காகவும் பெருநாள் பகல், மற்றும் இரவு உணவுக்கும், குடும்பச் செலவுக்கும், செலுத்த வேண்டிய கடனுக்கும் ஏற்பாடு செய்த பின்பும் அவரிடம் பொருள் வசியிருப்பின் “தனக்காகவும், அவர் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியவர்களுக்காகவும் “சகாதுல் பித்ர்” பித்றா கொடுப்பது அவர் மீது கடமையாகும்.
ஒருவன் நோன்பின் இறுதி வரை வறியவனாயிருந்து பெருநாள் இரவில்தான் அவனுக்கு வசதி வாய்ப்பு ஏற்படுகிறதென்றால் அவன் மீதும் “பித்றா” வழங்குவது கடமையாகும். அன்றிரவு மணமுடித்த மனைவிக்கும் கணவன் தனது செலவில் “பித்றா” கொடுப்பது கடமையாகும். நபர் ஒருவருக்கு 02.25 kg (2250 g) புழக்கத்திலுள்ள பிரதான உணவாகக் கொள்ளும் தானியத்தை “பித்றா”வாக வழங்க வேண்டும்.
ஒருவர் தனக்காக “பித்றா” நல்கும் போது தான் இருக்கும் ஊரிலுள்ள ஏழைகளுக்கும், தன் மனைவி மற்றும் பெற்றோர்களுக்காக “பித்றா” செலுத்தும் போது அவர்கள் இருக்கும் ஊரிலுள்ள ஏழைகளுக்கும் அந்தந்த ஊரில் பிரதான உணவாகக் கொள்ளும் தானியத்திலிருந்து “பித்றா” செலுத்த வேண்டும். தானியங்களின் கிரயத்தையோ, “பித்றா” வழங்கும் ஊரிலுள்ள பிரதானமில்லாத தானியத்தையோ, குறையுடைய – வண்டு மற்றும் செல் அரித்த – தானியங்களையோ “பித்றா”வாக கொடுப்பது கூடாது.
கணவன் ஏழையாகவும், மனைவி மக்கள் செல்வந்தர்களாகவும் இருந்தால் அவரவர் பொருட்களிலிருந்து “பித்றா” செலுத்த வேண்டும். கடைசி நோன்பின் “மக்ரிப்” முதல் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவது வரை “பித்றா” நல்குவதற்குரிய காலமாகும். பெருநாள் தொழுகைக்குப் பின் காலம் தாழ்த்துவது “மக்றூஹ்” ஆகும். றமழான் மாதம் தொடக்கம் முதலே “பித்றா” வழங்குவது கூடும். பெருநாளுக்குப் பின் பிற்படுத்துவது “ஹறாம்” ஆகும். அண்டை வீட்டுக் காரரோ, உறவினரோ “பித்றா” கொடுக்கும் சமயம் அங்கில்லாதிருப்பின் அன்றைய மாலை சூரியன் மறையும் வரை அவருக்காக அதனை ஒதுக்கி வைத்திருப்பது “ஸுன்னத்” ஆகும்.
“சகாதுல் பித்ர்” என்ற தலைப்பிலிருந்த இதுவரை நான் எழுதிய “பித்றா” உடைய சட்டங்கள் யாவும் மர்ஹூம் சங்கைக்குரிய மௌலவீ ஆதம் முஹ்யித்தீன் பாகவீ – முன்னாள் பேராசிரியர் அல்பாகியாதுஸ் ஸாலிஹாத் – வேலூர் அவர்கள் எழுதிய “ஷாபிஈ பிக்ஹின் சட்டக் களஞ்சியம்” எனும் நூல் 279ம் பக்கம் முதல் 281ம் பக்கம் வரையிலான தொகுப்பாகும். சில இடங்களில் எழுத்துக்களில் மட்டும் மாற்றம் செய்துள்ளேனேயன்றி கருத்திலும், சட்டத்திலும் மாற்றம் செய்யவில்லை. ஹஸ்றத் அவர்களுக்காக “துஆ” செய்கிறேன். இவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு பெரு நாட்களான “பித்றா” பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் தினங்களில் புதிய உடைகள் உடுப்பது “ஸுன்னத்” ஆகும். புதிய உடைகள் என்பன ஒரு தரமேனும் கழுவப்படாத உடைகளைக் குறிக்கும். கழுவாமல் பல முறை உடுத்தவைகள் புதிய உடைகளிற் சேரும்.
“ஈதுல் பித்ர்” பித்றா பெருநாளாயின் வெள்ளை நிறமும், ஹஜ்ஜுப் பெருநாளாயின் வேறு நிறங்களும் விரும்பத்தக்கதாகும். ஷேட், சாரம், அல்லது றவ்ஸர், ஷேட் இரண்டும் வெள்ளையாயிருப்பது அதி விஷேடமாகும். இன்றேல் ஒன்றாவது வெள்ளை நிறமாயின் “ஸுன்னத்” உண்டாகிவிடும்.
“ஈதுல் பித்ர்” பெருநாளாயின் காலை உணவை உட் கொண்ட பின் தொழச் செல்வதும், ஹஜ்ஜுப் பெருநாளாயின் காலை உணவு உட்கொள்ளாமல் செல்வதும் “ஸுன்னத்” ஆகும்.
வீட்டிலிருந்து பள்ளிவாயலுக்குச் செல்வது ஒரு வழியாகவும், வீட்டுக்குத் திரும்புவது இன்னொரு வழியாகவும் இருப்பது “ஸுன்னத்” ஆகும்.
பள்ளிவாயலுக்குச் செல்லும் போது வெறும் கையோடு செல்லாமல் பள்ளிவாயல் கடமைக் காரர்களுக்கும், யாசகர்களுக்கும், ஏழைகளுக்கும் ஏதாவது அன்பளிப்புக்கள் எடுத்துச் செல்வதும் விரும்பத்தக்கதாகும்.
தொழுகை முடிந்த பின் சமுகம் தந்தவர்களில் ஒருவர் மற்றவருடன் “முஸாபஹா” கை கொடுத்தலும், “முஆனகா” கட்டித் தழுவுவதும் “ஸுன்னத்” ஆகும். திட்டமாக “முனாபிக்” என்று தெரிந்தவனுடன் இவற்றைத் தவிர்ந்து கொள்வது பாதுகாப்பாகும். ஏனெனில் அவன் உங்களின் விரல்களில் ஒன்றையேனும் தந்திரமாக கடத்துவதற்கும் சாத்தியமுண்டு. யஹூதீயுடன் கை குலுக்கிய பின் விரல்களை எண்ணிப் பார்க்க வேண்டும் என்பது பழ மொழி தரும் அறிவுரை.
பெருநாள் தொழுகை முடிந்த பின் ஒவ்வொருவரும் தனது ஊரிலுள்ள “மக்பறா” மையவாடிக்குச் சென்று அங்கு அடக்கம் பெற்றுள்ளவர்களுக்கு “ஸலாம்” சொல்வதும், அவர்களுக்காக “துஆ” செய்வதும் விரும்பத்தக்கது. ஒருவன் தனது ஊரிலுள்ள வலீமாரின் அடக்கவிடம் சென்று அவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவதும் விரும்பத்தக்கது.
இவையாவும் முடிந்த பின் ஒரு நிமிடம் என்னை நினைத்து எனக்காக “துஆ” செய்வதும் விரும்பத்தக்கது.
முற்றும்.