Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்سؤال ألطاف أحمد والجواب له அல்தாப் அஹ்மத் அவர்களின் கேள்வியும், அவர்களுக்கான பதிலும்!

سؤال ألطاف أحمد والجواب له அல்தாப் அஹ்மத் அவர்களின் கேள்வியும், அவர்களுக்கான பதிலும்!

தொடர் – 1
 
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
கேள்வி: அல்லாஹ் திருக்குர்ஆனில் فَأَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ وَجْهُ اللهِ “நீங்கள் எங்கு நோக்கினாலும் – எங்கு பார்த்தாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் உண்டு” என்று சொன்னதினால்தான் அல்லாஹ்வுக்கு முகம் உண்டா? இல்லையா? அவ்வாறாயின் அது எது போன்ற முகம்? என்பன போன்ற கேள்விகளும், அதற்குப் பல்வேறு வலிந்துரைகளும் செய்ய வேண்டிய தேவைகளும் ஏற்பட்டன.

அல்லாஹ் அவ்வாறு சொல்லாமல் فَأَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ اللهُ “நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்தான் உள்ளான்” என்று சொல்லியிருந்தால் மேற்கண்ட கேள்விகளும், வலிந்துரைகளும் தேவையில்லாமற் போயிருக்குமல்லவா?
 
பதில்: அல்தாப் அவர்கள் சொல்வது போல் “வஜ்ஹ்” முகம் என்ற சொல் மேற்கண்ட வசனத்தில் வராமல் فَأَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ اللهُ “நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ் உள்ளான்” என்று வசனம் வந்திருந்தால் அல்லாஹ்வுக்கு முகம் உண்டா? இல்லையா? என்ற கேள்விக்கும், வலிந்துரை செய்வதற்குமிடமில்லாமற் போய்விடும் என்பது உண்மைதான்.
 
அல்தாப் அவர்கள் கூறும் விளக்கம் அல்லாஹ்வுக்கும் நன்றாகத் தெரிந்த விடயம்தான். அவன் அறிந்திருந்தும் அவ்வாறு சொன்னான் என்றால் அது ஆராய வேண்டிய விடயமேயாகும்.
 
திருக்குர்ஆன் என்பது அறபு மொழியின் உச்சக்கட்ட நாகரிக நடையில் அருளப்பட்டதாகும். அதன் வசன கர்த்தா அல்லாஹ்தான். அறபு மொழியிலக்கணம், இலக்கியம், மற்றும் அறபு மொழி சார்ந்த நாகரிக நடை திறன்படக் கற்றவர்களுக்கு மட்டுமே இவ் உண்மை தெளிவாகத் தெரியும்.
 
அறபு மொழியிலக்கணம், இலக்கியம், நாகரிகம் என்பவற்றை கருத்திற் கொண்டு ஒரு வசனம் சொல்லப்பட்டால் அவ்வசனத்தை தவறாகப் புரிந்து கொள்வது அறியாமையாகும். அவ்வசனத்தில் ஒருவருக்கு சந்தேகமிருந்தால் அவர் தானாகவே பிழையென்று முடிவு செய்துவிடாமல் அல்தாப் அவர்கள் போல் தன்னைவிட அறிவுள்ளவர்களை அணுகி அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக அல்லாஹ்வின் பேச்சுக்கு இவ்விடயத்தில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
 
ஓர் ஊரிலுள்ள ஒருவன் குற்றம் செய்து மாட்டிக் கொண்டான் என்றும், அவன் அவமானம் தாங்க முடியாத நிலையில் எவருக்கும் தெரியாமல் நள்ளிரவிலேயே ஊரை விட்டும் வெளியேறிவிட்டான் என்றும், அவன் பெயர் முஜாஹித் என்றும் வைத்துக் கொள்வோம்.
 
காலையானதும் ஊர் மக்கள் எவ்வாறு பேசுவர்கள் தெரியுமா? முஜாஹித் தலைமறைவு என்று சொல்வார்களா? முஜாஹித் ஊரை விட்டும் போய்விட்டான் என்று சொல்வார்களா? எவ்வாறு பேசிக் கொள்வார்கள்? எவ்வாறு சொல்வது நாகரிகமும், நிலைமைக்குப் பொருத்தமானதும் என்பதை நாம் அறிந்து கொண்டால், “நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கு அல்லாஹ்தான் உள்ளான்” என்று அவன் சொல்லாமல் அல்லாஹ்வின் முகம் உண்டு என்று ஏன் சொன்னான் என்பதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
 
நான் அறிந்த வகையில் “முஜாஹித்” ஊரை விட்டும் போய் விட்டான் என்று சொல்வதை விட “அவன் தலைமறைவு” என்று சொல்வதே இடத்துக்கும், நிலைமைக்கும் பொருத்தமானதும், சொல்வதற்கு ருசியானதுமாகும்.
முஜாஹித் தலைமறைவு என்ற வசனமும், அவன் ஊரை விட்டும் போய் விட்டான் என்ற வசனமும் அவன் ஆள் இல்லை என்ற ஒரே கருத்தையே தரும்.
ஆயினும் சிந்தனையை தூண்டுகின்ற, ஆய்வுக்கு வழிகாட்டுகின்ற ஓர் அம்சம் “முஜாஹித் தலைமறைவு” என்ற வசனத்தில் மட்டும்தான் உள்ளதேயன்றி ஏனைய வசனங்களில் இல்லை.
 
அறபு மொழியில் عِلْمُ الْمَعَانِيْ، عِلْمُ الْبَلَاغَةْ என்ற பெயர்களில் சில கலைகள் உள்ளன. இவை கட்டாயமாக சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் அறபுக் கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் இருந்தன. பின்னர் படிப்படியாகக் குறைந்து தற்போது மிக அரிதாகிவிட்டது. மேற் சொன்ன இக்கலைகள் கற்றவர்களுக்கு மட்டும்தான் திருக்குர்ஆனிலுள்ள நாகரிக நடையும், சிலேடைகளும் தெரியும்.
 
மேற்கண்ட கலைகளில் இரண்டு அம்சங்கள் கூறப்படும். إِطْلَاقُ الْكُلِّ وَإِرَادَةُ الْجُزْءِ என்றும், மற்றது إِطْلَاقُ الْجُزْءِ وَإِرَادَةُ الْكُلِّ என்றும் சொல்லப்படும்.
இவ்விரண்டில் முந்தினது தொகுதியைக் கூறி பகுதியைக் கருத்தில் கொள்வதாகும்.
உதாரணமாக, வகுப்பறைக்கு வந்த ஆசிரியர் மாணவர்களிற் சிலர் சில கதிரைகளை உடைத்து வைத்திருந்தது கண்டு ஆத்திரமடைந்து அதிபரிடம் முறையிட்ட போது (எல்லாக் கதிரைகளையும் நாசமாக்கி விட்டார்கள்) என்று சொல்வது போன்று.
 
ஆசிரியர் தனது பேச்சில் எல்லாக் கதிரைகளும் என்று சொன்னாலும் கூட அவரின் கருத்து ஒரு சில கதிரைகள் என்பதேயாகும். மிகைப்படுத்திச் சொல்வதற்காக அவ்வாறு சொல்வது வழக்கத்தில் உள்ளதே. இந்த ஆசிரியர் தொகுதியைச் சொல்லி பகுதியை நாடியுள்ளார் என்று நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இது முந்தின அம்சத்திற்கு உதாரணம். இவ் உதாரணத்தில் ஆசிரியர் எல்லாக் கதிரைகளும் என்று சொன்னது தொகுதி என்றும், சில கதிரைகள் என்பன பகுதி என்றும் விளங்க வேண்டும்.
 
மற்ற அம்சம் إِطْلَاقُ الْحُزْءِ وَإِرَادَةُ الْكُلِّ . இது முந்தின அம்சத்திற்கு எதிரானதாகும். அதாவது பகுதியைச் சொல்லி தொகுதியை நாடுதல் – கருத்திற் கொள்ளலாகும். உதாரணமாக நான் மேலே சொன்னது போல் “முஜாஹித் தலை மறைவு” என்பது போன்று. இவ் உதாரணத்தில் முஜாஹித் என்பவனின் “தலை” என்ற பகுதியைச் சொல்லி அவன் என்ற தொகுதி கருத்திற் கொள்ளப்பட்டுள்ளதென்று நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
 
சகோதரர் அல்தாப் ஆட்சேபனை கூறி விளக்கம் கேட்ட فَأَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ وَجْهُ اللهِ நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் உண்டு என்ற திரு வசனம் இரண்டாவது அம்சமான பகுதியைக் கூறி தொகுதியைக் கருத்திற் கொள்தல் வகையைச் சேர்ந்ததாகும் என்று விளங்கிக் கொள்தல் வேண்டும். இவ்வசனத்தில் திருக்குர்ஆனின் நாகரிக நடை பேணப்பட்டுள்ளதென்றும் அறிந்து கொள்ள வேண்டும்.
 
இங்கு அல்லாஹ்வின் முகம் என்பதைப் பகுதியாகவும், அவனின் “தாத்” உள்ளமையை தொகுதியாகவும் விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது அல்லாஹ் பகுதியைக் கூறி தொகுதியை நாடியுள்ளான்.
 
சகோதரர் அல்தாப் அவர்கள், “வஜ்ஹ்” முகம் என்ற சொல் இல்லாமல் فَأَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ اللهُ நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ்தான் உள்ளான் என்று அல்லாஹ் சொல்லியிருந்தால் அல்லாஹ்வுக்கு முகம் உண்டா? இல்லையா? என்ற கேள்வியோ, தொகுதி, பகுதி என்ற விளக்கமோ தேவையில்லாமற் போயிருக்கும் என்று கூறும் கருத்தை நான் மறுக்கவில்லை. அதை வரவேற்கிறேன்.
 
ஆயினும் அல்தாப் சொல்வது போல் வசனம் வந்திருந்தாற் கூட ஒன்றுக்கும் அடங்காத ஒரு கூட்டம் இதையும் மறுத்து “பித்னா” குழப்பத்தை ஏற்படுத்தியே இருப்பார்கள். இப்போதே ஏற்படுத்திவிட்டார்கள். “பத்வா” வழங்கி முஸ்லிம்களை இரு கூறுகளாக்கிய மகான்கள் யார்? உலமாஉகள்தானே! ஆகையால் அல்தாப் சொல்வது போல் அல்லாஹ் சொல்லியிருந்தாலும் கூட “பித்னா” “பித்னா”தான். நாய் குரைத்தே தீரும். கழுதை கத்தவே செய்யும்.
 
எனவே, அவ்வாறு சொன்னாலும் பிழை, இவ்வாறு சொன்னாலும் பிழை என்றால் எவ்வாறு சொல்ல வேண்டும் என்று அவர்களாவது சொல்லித் தர வேண்டாமா? ஓஹோ! அவர்கள் இப்படி யோசிப்பார்களோ!? فَأَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ غَيْرُ اللهِ நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கு அல்லாஹ் அல்லாததுதான் – படைப்புகள்தான் உள்ளன என்று சொல்ல யோசிக்கிறார்களோ? யோசிக்கட்டும். சொல்லட்டும். சொல்லிக் கொண்டு வேறென்ற சேற்றிலும், சகதியிலும் புரண்டு கொண்டுதானே உள்ளார்கள். இதன் பிறகுதானா சொல்ல வேண்டும். மறுமையில் அருணாசலத்தோடும், அப்புஹாமியோடும், அப்துல்லாஹ்வும் தலையில் கை வைத்து وَا حَسْرَتَا عَلَى مَا فَرَّطْتُ فِى جَنْبِ اللهِ “கை சேதமே! அல்லாஹ்வின் விடயத்தில் நான் மோஷம் பண்ணிவிட்டேனே” என்று அழும் வேளையில்தான் அப்துல் ஜப்பார் ஸூபீயும், அப்துர் றஹ்மான் ஸூபீயும் அவர்களிடம் சென்று ஏவம் கேட்பார்கள். மறுமையில் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்!
 
நீங்கள் எங்கு பார்த்தாலும் அங்கு அல்லாஹ்தான் உள்ளான் என்று அவனே திருக்குர்ஆனில் மிகத் தெளிவாக கூறியிருக்கும் நிலையில் இத் தத்துவத்தை மறுக்கும் உலமாஉகளும், பொது மக்களும் அல்லாஹ் என்பவன் யாரென்று அறியாமல் அவனை வேறொரு வகையில் கற்பனை செய்து வைத்திருக்கிறார்கள் போலும். இவர்களின் இந்த மயக்கம் தெளிவது எப்போது? இவர்களைச் சூழ்ந்துள்ள அறியாமைத் திரை அகல்வது எப்போது? இவர்களின் பகுத்தறிவு – ஆறாம் அறிவு இயங்குவது எப்போது?
இறைஞானி ஒருவர் சொல்கிறார். அவர் மூலம் அல்லாஹ் சொல்கிறான்.
لَوْ زَالَ عَنْكَ أَنَا لَلَاحَ لَكَ مَنْ اَنَا
உன்னை விட்டும் “நான்” நீங்கின் நான் யாரென்று உனக்குத் தெரியும்.
எந்த ஒரு மனிதனாயினும் அவனிடம் இரண்டு அம்சங்கள் இருக்கும். ஒன்று أَنِّيَّةْ – “அன்னிய்யத்” எனப்படும். மற்றது أَنَانِيَّةْ “அனானிய்யத்” எனப்படும்.
 
أَنِّيَّةْ
“அன்னிய்யத்” என்றால் “நான்” என்ற உணர்வைக் குறிக்கும். இவ் உணர்வு மனிதர்கள் அனைவரிடமும் நிச்சயமாக இருக்கும். இதை இன்னும் விபரமாகச் சொல்வதாயின் அப்துல்லாஹ் என்பவனிடம் நான் ஒரு மனிதன், எனது பெயர் அப்துல்லாஹ் என்ற உணர்வு நிச்சயமாக இருக்கும்.
 
أَنَانِيَّةْ
“அனானிய்யத்” என்றால் “நான்” என்ற மமதை- அகங்காரம். இதுவும் ஒருவரிடம் இருக்கும். சிலரிடம் இல்லாமலும் போகும். அதற்கு “அனானிய்யத்” என்று சொல்லப்படும். இதுவும் ஒரு வகை உணர்வுதான். இவ்விரண்டும் மனிதனிடம் இருக்கும் வரை அவன் அல்லாஹ்வை அறியவும் முடியாது, அவனை அடையவும் முடியாது. இது பரீட்சிக்கப்பட்ட உண்மை. இவ்விரண்டும் ஆன்மிகத்தைப் பாதிக்கும் இரு பெரும் நஞ்சுகளாகும். இவ்விரு உணர்வுகளையும் ஒருவன் தன்னிலிருந்து வெளியேற்றி தனதுள்ளத்தைச் சுத்தம் செய்தால் மட்டுமே இறைஞானமும் ஊற்றெடுக்கும். இறைவனில் “பனா” ஆகும் வாய்ப்பும் கிட்டும்.
 
இவ்விரண்டையும் உள்ளத்திலிருந்து வெளியேற்றுவது மிகவும் கடினம். பயிற்சி மூலமே இவற்றை வெளியேற்றலாம். இதற்கான பயிற்சி தர வேண்டியவர் ஞான குரு. அவரின் வழிகாட்டல் அவசியம். அவரின் சிஷ்யராகி ஏழு “நப்ஸ்”களையும் கொன்றொழித்து “றூஹ்” உடைய இடத்திற்குச் செல்ல வேண்டும்.
 
தொடரும்… (2ம் பக்கம் பார்க்க)
RELATED ARTICLES

Most Popular

Recent Comments