தொடர் – 2
فَأَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ وَجْهُ اللهِ
நீங்கள் எங்கு நோக்கினாலும் – எங்கு பார்த்தாலும் அங்கு அல்லாஹ்தான் உள்ளான் என்று அவனேதான் தெளிவாகச் சொல்லியிருக்கும் நிலையில் திருக்குர்ஆன் விரிவுரையாளர்களிற் பலர் – அதாவது ஸூபிஸ தத்துவமான “வஹ்ததுல் வுஜூத்” விளக்கம் தெரியாத பலர், அல்லது விளக்கம் தெரிந்திருந்தும் அதை வெளிப்படையாகச் சொல்லத் தயங்கியவர்கள் இவ்வசனத்திற்கு فَثَمَّ وَجْهُ اللهِ என்பதற்கு فَثَمَّ جِهَةُ اللهِ அங்கே அல்லாஹ்வின் திசை உண்டு என்று பொருள் விரிப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.
ஏனெனில் நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கே அல்லாஹ் உள்ளான் என்பதற்கும், அது அவனின் திசை என்பதற்கும் ஏக போக வித்தியாசமுண்டு. இவ்வாறு பொருள் விரிப்பவர்கள் “ஜிஹத்” திசையென்று சொல்வதற்கு எங்கிருந்து ஆதாரம் எடுத்தார்களோ? அதை அவர்கள் கூற வேண்டும். ஆதாரம் கூறாமல் திசையுண்டு என்று சொல்வது அவர்களின் தனிப்பட்ட, சொந்த அபிப்பிராயமாகும். திருக்குர்ஆனுக்குப் பொருள் கூறும் விடயத்தில் எவரின் சொந்த அபிப்பிராயமும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அது மட்டுமல்ல.
مَنْ فَسَّرَ الْقُرْآنَ بِرَأْيِهِ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ
மேற்கண்ட இந்த நபீ மொழியின்படி அவன் நரகவாதியுமாவான். فَثَمَّ وَجْهُ اللهِ என்பதற்கு “அங்கே அவனின் திசை உண்டு” என்று பொருள் விரிக்க எந்த ஆதாரமுமில்லை.
ஆதாரமின்றி ஒருவர் அவ்வாறு சொல்கிறார் என்றும், அதுவே சரியானதென்று நான்கு காலில் நின்று கூச்சலிடுகிறார் என்றும், அவர் பெரும் பெரும் பல்கலைக் கழகங்களைச் சந்தித்தவர் என்றும் வைத்துக் கொள்வோம். அவரைத் திரும்பிக் கூடப் பார்ப்பது கூடாது. அவர் பல்வேறு இடங்களில் கற்றிருக்கலாம், கற்றும் கொடுத்திருக்கலாம், அவருக்கு பல்லாயிரம் முரீதுகள் இருந்து அவரை “குத்புஸ்ஸமான்” என்று சொல்லலாம். ஆயினும் அவர் அல்லாஹ்வின் “ஸிபத்” என்பது அவனைப் பிரிந்து நிற்கும் என்று சொல்லும் வரை அவரைப் பின்பற்றுதல் கூடாது. ஏனெனில் அவர் “ஹக்”கை – அல்லாஹ்வை விட்டும் அவனின் “ஸிபத்” தன்மையை பிரித்தெடுக்க முடியுமென்றும், அது அவனின் “தாத்”தை விட்டும் பிரிந்து தனியே நிற்குமென்றும் சொல்வாராயின் அவர் اَلصِّفَةُ لَا تُفَارِقُ الْمَوْصُوْفَ என்ற ஸூபீகளின் பொது விதியையும், اَلظَّاهِرُ لَا يُفَارِقُ الْمَظْهَرَ என்ற ஸூபீகளின் பொது தத்துவத்தையும் புரியாதவர் என்றே சொல்ல வேண்டும்.
இன்னும் திருக்குர்ஆனுக்கு விரிவுரை கூறும் அல்லது எழுதும் சிலர் فَثَمَّ وَجْهُ اللهِ என்பதற்கு قِبْلَةُ اللهِ அல்லாஹ்வின் “கிப்லா” உண்டு என்று விளக்கம் கூறுகிறார்கள். இவர்களின் இக் கூற்று முந்தினவர்களின் கூற்றை விட மிகப் பயங்கரமானதாகும். இவ்வாறு பொருள் கொள்வது “ஷரீஆ”வுக்கு முற்றிலும் முரணானதாகிவிடும். ஏனெனில் நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கே அல்லாஹ்வின் “கிப்லா” உள்ளதென்று வைத்துக் கொண்டால் திரு மக்காவிலுள்ள திருக் “கஃபா”தான் முஸ்லிம்களின் “கிப்லா” என்ற ஷரீஆவின் சட்டத்திற்கு இக்கருத்து முரணானதாகிவிடும். எவரும் எத்திசையை நோக்கியும் தொழலாம் என்ற நிலையும் உருவாகிவிடும்.
எனவே, فَثَمَّ وَجْهُ اللهِ என்பதற்கு فَثَمَّ ذَاتُ اللهِ அங்கே அல்லாஹ்வின் “தாத்” – அவனின் உள்ளமையே உள்ளது என்று பொருள் கொள்ள வேண்டும். இதுவே சரியான பொருளாகும். இறைஞான மகான்கள் பின்வருமாறு விளக்கம் சொல்கிறார்கள். அதாவது وَجْهُ الشَّيْءِ ذَاتُهُ وَعَيْنُهُ ஒரு வஸ்தின் முகம் என்பது அவ்வஸ்தையே குறிக்கும் என்று கூறுகிறார்கள். அவர்களின் இக் கூற்றின்படி وَجْهُ اللهِ அல்லாஹ்வின் முகம் என்பது அவனையே குறிக்கும். இதன்படி நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கே அல்லாஹ்தான் உள்ளான் என்று பொருள் கொள்வது மட்டுமே சரியானதாகும்.
திருக்குர்ஆன் விரிவுரையாளர்களிற் சிலர் جِهَةْ திசையென்று பொருள் சொல்வது போலும், இன்னும் சிலர் قِبْلَةُ اللهِ அல்லாஹ்வின் “கிப்லா” உண்டு என்றும் பொருள் சொல்வது போலும் இன்னும் சிலர் وَجْهُ اللهِ என்பதற்கு قُدْرَةُ اللهِ அல்லாஹ்வின் சக்தி என்று பொருள் கூறுகிறார்கள். இவர்களின் கூற்றின்படி فَأَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ وَجْهُ اللهِ என்றால் فَثَمَّ قُدْرَةُ اللهِ நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கே அல்லாஹ்வின் சக்தி உண்டு என்று பொருள் விரிக்கின்றார்கள். இவர்களின் இக்கூற்றும் பிழையானதேயாகும்.
ஏனெனில் “குத்றத்” என்றால் சக்தி என்று பொருள். “சக்தி” என்பது அல்லாஹ்விள் சக்தியைக் குறிக்கும். அல்லாஹ்வின் சக்தி, நாட்டம், கேள்வி, பார்வை, அறிவு, பேச்சு, உயிர் என்பன அல்லாஹ்வின் “ஸிபாத்” தன்மைகளாகும். தன்மைகள் – ஸிபாத் என்பன எதை அண்டி நிற்கின்றனவோ அதை விட்டும் ஒருபோதும் பிரிந்து தனியே நிற்காதவையாகும்.
உதாரணமாக அல்லாஹ்வின் சக்தி என்பது அவனின் “தாத்”தில்தான் நிற்குமேயன்றி அதை விட்டும் பிரிந்து தனியே நிற்காது. இவ்வாறுதான் அவனின் ஏனைய “ஸிபாத்” தன்மைகளுமாகும். அவற்றில் எதுவும் அவனின் “தாத்”தை விட்டும் பிரிந்து நிற்காது.
ஏனெனில் اَلصِّفَةُ لَا تُفَارِقُ الْمَوْصُوْفَ தன்மை என்பது அது எதை அண்டி நிற்கிறதோ அதைவிட்டும் பிரிந்து தனியே நிற்காததாகும். இந்த விஷேட அம்சம் அல்லாஹ்வின் தன்மைகளுக்கு மட்டும் உள்ளதல்ல. படைப்புகளின் தன்மைகளும் இவ்வாறுதான். அவற்றில் ஒன்று கூட எக் காரணம் கொண்டும் அதன் “மவ்ஸூப்” ஐ விட்டும் பிரியாது.
உதாரணமாக அப்துல்லாஹ்வின் “அறிவு” என்ற அவனின் “ஸிபத்” தன்மை அவனை விட்டும் பிரிந்து நிற்காமல் அது அவனிலேயேதான் இருக்கும்.
இவ்வாறுதான் சீனியின் “ஸிபத்” தன்மையான இனிப்பும் சீனியில்தான் தங்கியிருக்குமேயன்றி அதை விட்டும் பிரிந்து தனியே நிற்காது. இவ்வாறுதான் மிளகாயின் தன்மையான உறைப்பு அதன் “தாத்” எனும் மிளகாயை விட்டும் எக்காரணம் கொண்டும் பிரிந்து தனியே நிற்காது. மேலே நான் எழுதியுள்ள அல்லாஹ்வின் ஏழு “ஸிபாத்” தன்மைகளும் இவ்வாறுதான்.
எனவே, நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கே அல்லாஹ்வின் தன்மையான “குத்றத்” சக்திதான் உள்ளதேயன்றி அவனில்லை – அவனின் “தாத்” இல்லை என்று சொல்லவே முடியாது. இவ்வாறு சொல்வது முற்றிலும் பிழையாகும்.
அன்பிற்குரிய அல்தாப் அஹ்மத் அவர்களே!
நீங்கள் கேட்ட கேள்விக்கு என்னால் முடிந்த விளக்கம் எழுதியுள்ளேன். நீங்கள் இக்கட்டுரையை ஒரு தரம் மட்டும் வாசித்து விட்டு வைத்து விடாமல் பல முறை வாசியுங்கள். அரைக்க அரைக்க அம்மியும் நகரும் என்று சொல்வார்கள். அதேபோல் ஒரு விடயத்தைப் பலமுறை வாசிக்கும் போது தெளிவு ஏற்படச் சாத்தியம் அதிகம் உண்டு.
இங்கு இன்னுமொரு நுட்பம் உண்டு. அதையும் இதோடு இணைத்து எழுதினால் விளக்கத்திற்கு இன்னும் உதவியாயிருக்கும் என்பதால் அதையும் இங்கு எழுதுகிறேன்.
وَللهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ
ஒளிர்ந்த பிரதேசங்களும், இருண்ட பிரதேசங்களும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை என்ற வசனத்திற்கும், இதற்குப் பின்னால் வந்துள்ள فَأَيْنَمَا تُوَلُّوْا فَثَمَّ وَجْهُ اللهِ நீங்கள் எங்கு நோக்கினாலும் அங்கே அல்லாஹ்தான் உள்ளான் என்ற வசனத்திற்கும் என்ன தொடர்பு உண்டு என்பது மிகவும் குறிப்பாக ஆராயப்பட வேண்டியதாகும்.
நமது வெளிக் கண்ணோட்டத்தில் சொந்தம் இரு வகை. ஒன்று – உரியவனை விட்டும் பிரியாத சொந்தம். இரண்டு – உரியவனை விட்டும் பிரிந்த சொந்தம். இவ்விரு சொந்தங்களிலும் அல்லாஹ்வுக்கு அனைத்துப் படைப்புக்களும் சொந்தம் என்பது உரியவனை விட்டும் பிரியாத சொந்தமேயாகும்.
முசம்மில் என்பவனுக்கு அவனின் கால், கை, தலை, மற்றுமுள்ள ஏனைய உறுப்புகள் யாவும் அவனை விட்டும் பிரியாத தற்கிழமை அடிப்படையிலான சொந்தமானவையாக இருப்பதால் அவற்றில் எதை நாம் பார்த்தாலும் அவனையே பார்க்கிறோம்.
முசம்மிலுக்கு கார், தோட்டம், கடை, வயல், வீடு, மற்றுமுள்ள யாவும் அவனுக்குப் பிறிதின் கிழமை என்ற அடிப்படையில் அவனை விட்டும் பிரிந்ததாயிருப்பதால் அவ்வாறு நோக்காமல் அல்லாஹ்வுக்கு அவன் படைப்புக்கள் யாவும் தற்கிழமை என்ற அடிப்படையில் அவன் அவை தானான சொந்தமுள்ளவனாக உள்ளான் என்றறிந்து நம்ப வேண்டும். இதுவே அசல் நம்பிக்கையாகும்.
இன்று இப்பூமியில் இரு நூறு கோடிக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இவர்களில் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற ஈமானின் அடிப்படைத் தத்துவத்தை உரிய முறையில் விளங்கி நம்பினவர்கள் ஸூபீகளின் கருத்தை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமேயாவர்.
நான் கூறும் இக்கருத்து சரியானதா? பிழையானதா? என்று அறிய யாராவது விரும்பினால் அவர் சர்வதேச மட்டத்தில் ஓர் ஆய்வு நடத்திப் பார்க்கட்டும்.
நான் இவ்வாறு எழுதுவதை நூறு வீதம் வஹ்ஹாபீகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பது எனக்குத் திட்டமாகத் தெரியும். இதேபோல் தப்லீக் ஜமாஅத்தவர்களும், ஜமாஅதே இஸ்லாமீ அமைப்பைச் சேர்ந்தவர்களும், இன்னுமிவர்கள் போன்ற கொள்கையுடைய வேறு அமைப்புக்களும் இதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
நான் பேசி வருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை சரி காண்பதாயின் உலகிலுள்ள தரீகாக்களின் ஷெய்குமார்களில் இவ்விடயம் தெளிவாக விளங்கியவர்களும், தரீகாவாதிகளில் இவ்விடயம் விளங்கியவர்களும், எந்த ஒரு தரீகாவையும் பின்பற்றாதவர்களாயினும் இக்கலை கற்ற உலமாஉகளும், ஓதாவிட்டாலும், படிக்காவிட்டாலும் பரம்பரையாக ஞானம் தெரிந்தவர்களும் தவிர வேறு எவருமே சரி காணமாட்டார்கள். இவர்களுக்கு இந்த ஞானம் சுத்த சூனியமாகும்.
இந்த ஞானம் இந்த அளவு மறைந்து போனதற்கும், மங்கிப் போனதற்கும் காரணம் இதைச் சரியாக அறிந்து கொள்ளாத உலமாஉகள் இதை எதிர்க்கத் தொடங்கியதேயாகும்.
“நக்குண்பதற்கும் நஸீப் – தலைவிதி வேணும்” என்று முன்னோர்கள் சொல்வார்கள். அவர்கள் சொன்னது நூறு வீதம் சரியானதென்பதை இன்று வாழும் உலமாஉகளின் நிலை நிறுவிக் காட்டுகிறது.
எனினும் என்போன்று அல்லது என்னை விட விளக்கமாக இவ் அறிவை – இக் கொள்கையை அறிந்தவர்கள் நமது நாட்டிலும், வெளிநாடுகளிலும் இல்லாமலில்லை. இருக்கின்றார்கள்.
ஹிஜ்ரீ 309ம் ஆண்டில் இமாம் மன்சூர் ஹல்லாஜ் கொல்லப்படுவதற்கு முன் இந்த ஞானம் பரவலாகச் சொல்லப்பட்டே வந்துள்ளது. இமாம் ஹல்லாஜ் கொல்லப்பட்டதோடும், இன்னும் பலர் கொல்லப்பட்டதோடும், நாடு கடத்தப்பட்டதோடும், இன்னும் “சிந்தீக்” என்று உலமாஉகளால் “பத்வா” வழங்கப்பட்டதோடும் பகிரங்கமாகச் சொல்லிக் கொண்டிருந்தவர்களில் அநேகர் அடங்கி மௌனியாகிவிட்டனர். நமது நாட்டு உலமாஉகளிலும் சிலர் வாயை மூடி, பேனாக்களையும் வைத்து விட்டார்கள் போலும்.