Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்காத்தான்குடி “ஆலீ அப்பா” தர்ஹாவில் கந்தூரி மிகச் சிறப்பாக நடந்தேறியது!

காத்தான்குடி “ஆலீ அப்பா” தர்ஹாவில் கந்தூரி மிகச் சிறப்பாக நடந்தேறியது!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
காத்தான்குடி 04ம் குறிச்சி பிரதான வீதியிலிருந்து சற்றுத் தூரத்தில் அமைந்துள்ளது “ஆலி அப்பா” றழியல்லாஹு அன்ஹு அவர்களின் புனித தர்ஹா ஷரீப்.
 
இங்கு அடக்கம் பெற்றுள்ள மகான் யார்? அவர்களின் இயற் பெயர் எது? அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்? எப்போது அடக்கம் பெற்றார்கள்? என்ற விபரங்கள் இங்கு தற்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் எவருக்கும் சரியாகத் தெரியாது. எனினும் செவி வழியாக வந்த செய்திகளிற் சிலதை தற்போது 90 வயதைக் கடந்தவர்கள் கூற நான் அறிந்துள்ளேன்.

இந்த மகான் காத்தான்குடியில் வாழ்ந்த அறிவு ஞானமும், பக்தியும் நிறைந்த ஓர் “ஆலிம்” மார்க்க அறிஞர் என்று சொல்லப்படுகிறது.
 
இவர்கள் வெள்ளிக் கிழமைகளில் மட்டும் காத்தான்குடி 05 ஜாமிஉழ்ழாபிரீன் ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு வந்து “ஜும்ஆ” தொழுவார்கள். ஏனைய தொழுகைகளை வீட்டிலேயே தொழுது கொள்வார்கள். சில சமயம் ஜும்ஆத் தொழுகையின் பின் பொது மக்கள் மத்தியில் மார்க்கப் பிரசங்கமும் நிகழ்த்துவார்கள்.
 
ஒரு வெள்ளிக் கிழமை மார்க்கப் பிரசங்கம் நிகழ்த்திய போது நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வைக் கனவில் கண்டதாகவும், அவன் தலையில் தங்கத்தினாலான கிரீடம் அணிந்திருந்ததாகவும், இரு கால்களிலும் தங்கச் செருப்பு அணிந்திருந்ததாகவும் பேசினார்கள்.
 
அன்று அங்கு வந்ந்திருந்த உலமாஉகள் கொதித்தெழுந்து அவர்களைப் பேச விடாமல் தடுத்து அவர்களிடம் ஆதாரங்கள் கேட்டார்கள். ஆலிம் அப்பா அவர்கள் அடுத்த வாரம் வரை தனக்கு கால அவகாசம் தாருங்கள் நான் ஆதாரம் தருகின்றேன் என்று சொன்னார்கள். அதோடு சலசலப்பு நின்று விட்டது.
 
அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை ஆலிம் அப்பா அவர்களும் பள்ளிவாயலுக்கு வந்தார்கள். உலமாஉகளும், பொது மக்களும் வந்தார்கள். தொழுகை முடிந்த பின் பொது மக்கள், மற்றும் உலமாஉகளின் முன்னால் எழுந்து நின்ற “ஆலிம் அப்பா” அவர்கள்,
(நான் பேசிய கருத்துக்கள் சரி என்பதற்கான ஆதாரங்கள் கொண்டு வந்துள்ளேன். இவ் ஆதாரங்களைப் பொது மக்களுக்கு விளக்கி வைக்கும் திறமை என்னிடம் இல்லை. ஆகையால் ஆதாரங்களை சில உலமாஉகளிடம் நான் ஒப்படைக்கிறேன். அவர்கள் அவற்றை ஆய்வு செய்து முடிவு சொல்வார்கள். அவர்கள் கூறும் முடிவை நான் ஏற்றுக் கொள்வேன். எனினும் எனது தோளில் கிடக்கின்ற இந்தச் சால்வையால் எனது இடுப்பில் ஒரு கட்டுக் கட்டுவேன். அதை எனது மரணம் வரை நான் அவிழ்க்கமாட்டேன். நான் மரணித்தால் என்னைக் குளிப்பாட்டுவோர் இக்கட்டை அவிழ்த்து குளிப்பாட்டிய பின் மீண்டும் கட்டிவிட வேண்டும். நான் இக்கட்டை அல்லாஹ்வின் சமூகத்திலேதான் அவிழ்ப்பேன். நான் சொன்னது உண்மையே) என்று கூறிய பின் சொன்னது போல் கட்டி விட்டார்கள்.
 
உலமாஉகளிடம் கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் ஆய்வு செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டது. ஆயினும் அவர்கள் எந்த ஒரு தீர்ப்பும் சொல்லவில்லை.
இந்நிகழ்வு முடிந்து சில வருடங்களின் பின் ஆலிம் அப்பா அவர்கள் “வபாத்” ஆகிவிட்டார்கள். அவர்களின் உறவினர்கள், மற்றும் அவர்களை நேசித்தவர்கள், ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து தற்போது அவர்கள் அடக்கம் பெற்றுள்ள இடத்திலேயே அவர்களை நல்லடக்கம் செய்து ஓலைக் குடிசை ஒன்றும் அமைத்தார்கள். வெள்ளிக் கிழமைகளில் ஆலிம் அப்பா அவர்களின் ஓலைக் குடிசையில் அவர்கள் ஒன்று கூடி “யாஸீன் சூறா” ஓதி, “துஆ”வும் ஓதிக் கலைவார்கள்.
 
சில வருடங்களின் பின் அவர்கள் தங்களின் நேசர்களின் கனவில் தோன்றி ஓலைக் குடிசையை கல்லால் கட்டி மாற்றி அமைக்குமாறும், வருடத்ததில் ஒரு முறை ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குமாறும் கேட்டுக் கொண்டதற்கிணங்க அக்கால சூழலுக்கு ஏற்றவாறு நிகழ்வுகள் நடந்தன.
 
நாளடைவில் ஆலிம் அப்பா அவர்களின் தரிசனத்திற்காக மக்களின் வருகை அதிகமானதால் இன்னும் கட்டிடத்தை விரிவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் பொருளாதார வசதியின்மையால் விரிவாக்கப்படவில்லை.
 
பின்னர் சில காலங்கள் கவனிப்பாரற்ற நிலைக்கு ஆலிம் அப்பா அவர்களின் தர்ஹா தள்ளப்பட்டிருந்தது.
 
மான் குட்டி மஸ்தானின் வருகை:
எவரும் எதிர்பாராத நிலையில் இந்தியா – தமிழ் நாட்டிலிருந்து ஓர் இறைஞானி – மஸ்தான் காத்தான்குடிக்கு வந்தார். அவர் ஒரு மான் குடிட்யுடன் வந்ததால் மக்கள் அவரை “மான்குட்டி மஸ்தான்” என்று அழைக்கலாயினர்.
 
அவர்கள் ஆரையம்பதியில் அரச மருத்துவமனை இருந்த பிரதேசத்தில் கடல் பக்கமாக இருந்த ஓர் வளவில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்தார்கள். தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் அவர்களுக்கு உணவுகள் கொடுத்து உதவினார்கள்.
 
சில நாட்களின் பின்னர் அவர்கள் காத்தான்குடிக்கு வந்து தற்போதுள்ள ஆலிம் அப்பா அவர்களின் அடக்கத்தலத்தை நெருங்கிய போது அவர்களின் “கப்று” அடக்கவிடத்தைச் சுட்டிக் காட்டி (இங்கு ஒரு வலிய்யுல்லாஹ் இடுப்பில் சால்வை கட்டியவர்களாக படுத்துறங்குகிறார்கள்) என்று சொன்னார்கள்.
 
இது கேட்ட அவர்களுடன் சென்ற மக்கள், “ஆலிம் அப்பா” அவர்களுக்கு நடந்த விடயங்கள் ஒன்றும் இந்தியாவிலிருந்து வந்துள்ள மான்குட்டி மஸ்தானுக்கு எவ்வாறு தெரிந்ததென்று வியப்படைந்தவர்களாக அன்று முதல் “ஆலிம் அப்பா” அவர்கள் அவ்லியாஉகளில் ஒருவர்தான் என்று நம்பினவர்களாக “ஆலிம் அப்பா” அவர்களைக் கண்ணியப்படுத்தலானார்கள். அதோடு பொது மக்களும் – ஆண்களும், பெண்களும் ஆலிம் அப்பாவின் “தர்ஹா”வுக்குச் செல்பவர்களானார்கள். இவ்வாறு பல வருடங்கள் உருண்டோடின.
 
பின்னர் ஒரு காலம் வந்தது. அக்காலத்தில் “தப்லீக் ஜமாஅத்” காரர்களின் நடவடிக்கைகள் தலை தூக்கி நின்றன. அவர்கள் தெருத்தெருவாகவும், வீடு வீடாகவும் சென்று மக்களைத் தொழுகைக்கு அழைத்துக் கொண்டும், தர்ஹாக்களுக்கு எதிரான பிரச்சாரம் செய்து கொண்டும் ஊர் மக்களைத் திசை திருப்பிக் கொண்டிருந்தனர். இவர்களின் ஆட்சிக் காலத்தில் “ஆலிம் அப்பா” அவர்களின் தர்ஹா நடவடிக்கைகள் சற்றுக் குறைந்து காணப்பட்டன. இவ்வாறு சில காலம் ஓடியது.
 
இறுதியாக இவ்வூரில் வஹ்ஹாபிஸம் தலை தூக்கியது. அவர்களில் தீவிரவாதிகளாயிருந்த சிலர் மனித உரிமைகளை மீறிச் செயற்படலாயினர். இவர்கள் மௌலித், கத்தம், பாதிஹா, புர்தா, வித்ரிய்யா முதலான நபீ புகழ் கஸீதாக்கள் ஓதுவதை தடை செய்தனர். கந்தூரி நிகழ்வுகளையும், மீலாத் விழா நிகழ்வுகளையும் தடை செய்தனர். “ஸுப்ஹ்” தொழுகையில் “குனூத்” ஓதிய பள்ளிவாயல் இமாம்களிற் சிலர் இவர்களால் துன்புறுத்தப்பட்டனர். இக்கால கட்டத்திலும் “ஆலிம் அப்பா” அவர்களின் “தர்ஹா” மக்கள் போகாமல் விட்டதால் சில வருடங்கள் அணைந்து போயிருந்தது.
 
தற்போது ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களிற் சிலரும், ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை இளைஞர்களிற் சிலரும், ஆலிம் அப்பா அவர்களின் பழைய நிர்வாகத்திலுள்ள சிலரும், இன்னும் ஆலிம் அப்பா தர்ஹா அமைந்துள்ள பகுதியில் வாழும் சிலரும் இணைந்து ஒரு நிர்வாகம் அமைத்து இயங்கி வருகிறார்கள். இவர்களின் நிர்வாகம் சென்ற வருடமும், இந்த வருடமும் அப்பா அவர்களின் வருடாந்த கந்தூரியை எந்த ஒரு பிரச்சினையுமின்றி சிறப்பாகச் செய்து முடித்தனர். ஊர் மக்களும் நிதியுதவியும், உடலுதவியும் செய்து ஒத்துழைப்பு வழங்கினர்.
 
காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலிருந்தும் அன்னதான நிகழ்வின் போது ஒத்துழைப்பு வழங்கினர். அல்ஹம்து லில்லாஹ்!
RELATED ARTICLES

Most Popular

Recent Comments