Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களின் அடையாளச் சின்னமாக விளங்கும் அறிஞர் சித்தி லெப்பை அவர்களும், இறையியலும்.

இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களின் அடையாளச் சின்னமாக விளங்கும் அறிஞர் சித்தி லெப்பை அவர்களும், இறையியலும்.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
அறிஞர் சித்தி லெப்பை என்று அனைவராலும் போற்றப்படும் இவர் ஜூன் மாதம் 11ம் திகதி 1838ல் இலங்கையில் கண்டி நகரில் பிறந்தார். இவரது இயற் பெயர் முஹம்மத் காஸிம் என்பதாகும். இவர் பிரபலமிக்க அரேபிய வணிக சமூகமொன்றின் வழி வந்தவர். இவரது தந்தை முஹம்மத் லெப்பை சித்தி லெப்பை என்பவரே இலங்கையின் முதல் முஸ்லிம் வழக்கறிஞராக 1833ம் ஆண்டு நியமனம் பெற்றார்.
 
இவர் வணிக சமூகத்தின் வழி வந்தவராக இருந்தாலும் இவரும், இவரது பெற்றோரும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவே இருந்தனர். தனது இளமைக் காலத்தில் குர்ஆன் ஓதுதல், மார்க்க சட்ட திட்டங்களை அறிதல் முதலானவற்றுடன் தமிழ் மொழியிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தார். அதுமாத்திரமின்றி ஆங்கில மொழியையும் கற்றுத் தேறினார். அறபு, தமிழ், ஆங்கிலம் எனும் மும்மொழிகளிலும் அதி திறமையாக விளங்கிய இவர் தந்தையைப் போன்று சட்டக் கல்வியிலும் சிறந்து விளங்கினார்.

தனது 24வது வயதில் (1862) கண்டி மாவட்ட நீதிமன்றில் வழக்கறிஞராக நியமனம் பெற்ற இவர் 1864ல் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உயர் நியமனம் பெற்றார். பின்னர் நீதிபதியாகவும் கடமையாற்றியுள்ளார். சிறிது காலம் கண்டி மா நகர சபை உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார்.
சமூகப் பற்றுள்ள இவர் தான் சார்ந்த சமூகத்தை கல்வித்துறையில் முன்னேற்ற அரும்பாடு பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்கள் கல்வியில் முன்னேற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி 1882ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதி “முஸ்லிம் நேசன்” என்ற பெயரில் அறபு தமிழ் வார இதழ் ஒன்றினை ஆரம்பித்தார். தமது பிற்கால வாழ்க்கை முழுவதையும் தமது சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும் செலவிட்டார். இம்முயற்சியில் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தாம் ஆசிரியராக இருந்து வெளியிட்ட வாரப் பத்திரிகை மூலமாக இஸ்லாம் பற்றியும், கல்வி பற்றியும் கட்டுரைகள் எழுதினார்.
 
1884ம் ஆண்டு கொழும்பு புதிய சோனகத் தெருவிலே முதலாவது ஆங்கில முகமதிய பாடசாலையை அவர் தோற்றுவித்தார். இதற்கு முதன் முதலாக அவரது சமகால சகாவான எகிப்து நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு கண்டியில் வாழ்ந்த ஒறாபி பாஷா அவர்கள் நூறு ரூபாயை நன்கொடையாக வழங்கி இதன் வளர்ச்சிக்கு வித்திட்டார். இப்பாடசாலை நெடுங்காலம் நிலைக்காவிட்டாலும் ஏழு வருடங்களுக்குப் பின் அவருடைய அயரா உழைப்பின் பலனாக “அல்மத்றஸதுல் கைரிய்யா” எனும் பெயரில் புத்துயிர் பெற்றது. இதுவே பிற்பாடு கொழும்பு ஸாஹிறா கல்லூரியாக மலர்ந்தது.
 
இவ்வாறு ஒரு கல்லூரி உருவாவதற்கு காரண கர்த்தாவாக இருந்தவர் மார்க்கத்தில் என்ன கொள்கையில் வாழ்ந்தாரோ அக் கொள்கையை குழி தோண்டிப் புதைக்க, அதற்கெதிராக “பத்வா” மார்க்கத் தீர்ப்பு வழங்க மார்க்க அறிஞர்கள் என்ற பெயரில் வாழ்ந்த முல்லாக்கள் ஒன்று கூடி முடிவெடுக்க இதனையே (ஸாஹிறா கல்லூரி) பிற்காலத்தில் தளமாகப் பயன்படுத்தினார்கள். அறிஞர் சித்தி லெப்பை போன்று உண்மையான மார்க்கப் பற்றும், சமூக அக்கறையும் இல்லாத, தங்களை உலமாஉகள் என்று காட்டிக் கொள்ளும் வேஷதாரிகள் காலாதிகாலமாக இவருக்கு – இவரது சிந்தனைக்கு எதிராகவே செயல்பட்டு வந்துள்ளனர்.
 
இவர் உயிர் வாழ்ந்த காலத்திலும் தனது சமூகம் கல்வியில் முன்னேற வேண்டும் என்பதற்காக முஸ்லிம்களுக்கு ஆங்கில கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அன்று வாழ்ந்த முல்லாக்களோ ஆங்கிலம் கற்பது “ஹறாம்” கூடாது என்று போர்க் கொடி தூக்கினர். ஆனால் இன்று ஆங்கிலத்தில் “ஜும்ஆ”ப் பிரசங்கம் நிகழ்த்துகிறார்கள்.
 
இதுபோலவே அறிஞர் சித்தி லெப்பை “அஸ்றாருல் ஆலம்” என்ற பெயரில் இறையியல் தொடர்பாக “பிரபஞ்சத்தின் இரகசியங்கள்” பற்றி ஒரு நூல் எழுதினார். அந்நூலில் கூறப்பட்டுள்ள இறையியல் கோட்பாட்டுக்கு எதிரானவர்களே இன்று தமது சுயநலத்திற்காக “அறிஞர் சித்திலெப்பை” என்று புகழ் பாடுகிறார்கள். அவரது நாமம் கூறி தமது இருப்பைத் தக்க வைக்க முயல்கிறார்கள். இதுவே முஸ்லிம் சமூகத்தின் உலமாஉகள் – முல்லாக்களின் நிலை. தங்களுக்கு வாசியிருந்தால் எதையும் செய்பவர்களே முல்லாக்கள் என்பதை நிறுவிக் கொண்டிருக்கிறார்கள்.
 
“வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற தத்துவம் “குப்ர்” நிராகரிப்பு, வழிகேடு என்று “பத்வா” மார்க்கத் தீர்ப்பு வழங்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மேற்குறித்த அறிஞர் சித்தி லெப்பை தனது “அஸ்றாருல் ஆலம்” எனும் நூலில் குறிப்பிட்டிருக்கும் “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பான கருத்துக்களுக்கு என்ன பதில் கூறப் போகிறார்கள்? வழமை போன்று ஊமை ஷெய்தான்களாகத்தான் இருப்பார்களா? அல்லது மௌனம் கலைத்து சத்தியத்தை வெளிப்படுத்துவார்களா?
இதோ அறிஞர் சித்தி லெப்பை அவர்கள் தனது நூலில் குறிப்பிட்டுள்ள சில கருத்துக்களை தருகிறேன். இது தொடர்பில் இதை வாசிக்கும் நேயர்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவை தொடர்பு கொண்டு இக்கருத்துக்கள் தொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்ன? என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டுங்கள். பலமுறை நாம் கேட்டும் “ஷெய்தான் அக்றஸ்” ஊமை ஷெய்தான்களாகவே உள்ளனர். செவிடன் காதில் சங்கூதினாற்போலாகிவிட்டது எம் கதை.
 
தக்வாவும், அமலும், சுலூக்கும் நமது நபுசைத் துப்பரவாக்கி வரும் வேளையில், நமது பார்வை ஹக்குடைய பார்வையாகவும், நமது கேள்வி ஹக்குடைய கேள்வியாகவும், அவனுடைய அறிவு நமதறிவாகவுமாகிவிடும். வஸ்துக்களினுள்ளமையை அல்லாஹ்வைக் கொண்டு அறியும் அறிவாகவும், அல்லாஹ்வைக் கொண்டுண்டாகிற அறிவுகள் சக்குப் பிழை தவறுதல் சகலதையும் விட்டு மொழிந்ததாகவுமிருக்கும். (அஸ்றாறுல் ஆலம், பக்கம் 72, தலைப்பு: மஃரிபா)
 
நானுனக்கு ஏழு மறுத்தபாக்களாய்ப் பிரித்திருக்கிற பிரிவைச் சொல்லுகிறேன். இந்த மறுத்தபாக்களை அறிவது கொண்டு ஹக்கென்றும், கல்கென்றும் பிரிவாய்ப் பேசினாலும் உள்ளமையிலொன்றென்பது திட்டப்படும். ஒரு மனிதனென்கிற சொல்லில் சரீரமும், றூஹுமடங்கிவிட்டன. பிரித்துச் சரீரமென்றும், றூஹென்றும் இரண்டாகப் பேசினால் இரண்டு மறுத்தபாக்களென்று சொல்லலாம். வேண்டுமானால் ஏழாகவும் பிரித்துப் பேசலாம். சரீரம், சூக்ஷுமம், பிராணம், காமம், மனம், புத்தி, ஆன்மா ஆகியவைகளே. இன்னும் தேவையானால் எழுபதாய்ப் பிரித்தும் பேசலாம். பிரித்துப் பேசுவதெல்லாம் அக்கிலைக் கொண்டு விளங்குதற்கே. உள்ளமைப்படிக்கு யாவும் ஒன்றுதான். இதை விளங்காது சிலர் மறுத்தபாக்களுடைய பெயர்களையும், ஒன்றுக்கொன்றிருக்கிற வித்தியாசங்களையும் விளங்கிக் கொண்டு இதுதான் மஃறிபாவுடைய இல்மென்று நினைத்துக் கொள்கிறார்கள். இது தவறு. இந்தப் பிரிவுகளைக் கொண்டு விளங்கி பிரிவற்றதா யொன்றாக்கிறதுதான் தவ்ஹீது. பிரிவற்றதாயொன்று படுத்துவதற்கு அக்கிலைக் கொண்டு கூடாது. ஹக்குக்கும், நமக்குமிருக்கின்ற திரைகள் நீங்கப்பட வேண்டும். இதற்காக இல்முடனே பெரியோர்கள் காட்டியிருக்கிற அமல்களையும் சேர்த்து செய்து வர வேண்டும். இன்சான் காமிலில் அவனுக்கிரண்டு வர்ணிப்புகளுண்டு. ஒன்று ஹக்கு, மற்றது கல்கு. இரண்டு பெயர்களுமுண்டு. ஒன்று றப்பு, மற்றது அப்து. இரண்டு முகங்களுண்டு. ஒன்று ளாஹிர், மற்றது பாதின். இவ்விதம் கல்கென்பதும், ஹக்கென்பதும் ஒன்றுதானென்று அறியும் இல்முக்கும், ஆலங்கள் வெளியான இல்முக்கும் மறுத்தபாக்களுடைய இல்மென்று சொல்லப்படும். இந்த இல்மைத் தொடங்குமுன் முலாவது சில தவறான இஃதிகாதுகளையறிந்து அவைகள் வந்து நுழையாது பேணிக் கொள்ள வேண்டும்.
 
முதலாவது அல்லாஹுத்தஆலாவை கல்கை விட்டும் வேறாக்கி விசுவாசங் கொள்ளுகிறது. இரண்டாவது கல்கும், ஹக்கும் ஒன்றென்பதால் நானும் ஹக்குத்தான், நானும் கதீம்தான், ஆலமும் கதீம்தானென்று விசுவாசம் கொள்ளுகிறது. மூன்றாவது ஆலம் வேறு, அவன் வேறு, ஆகிலும் அவன் ஆலத்திற்குள் ளிருக்கிறானென்று விசுவாசங் கொள்ளுகிறது. இதற்கு ஹுலூல் என்று சொல்லப்படும். நாலாவது ஆலம் வேறு, நான் வேறு. ஆகிலும் அல்லாஹுத்தஆலா இந்த ஆலத்தோடு சேர்ந்திருக்கிறானென்று விசுவாசம் கொள்ளுகிறது. இதற்கு இத்திஹாதென்று சொல்லுகிறது. (அஸ்றாறுல் ஆலம், பக்கம் 72, 73, தலைப்பு: வுஜூதுடைய மறுத்தபாக்கள்)
நாலாவது மறுத்தபாவைச் சேர்ந்தவர்கள் அல்லாஹ் அல்லாமல் வேறொன்றுங் காணார்கள். பலதாயிருப்பவைகளெல்லா வற்றையும் ஒன்றாய்க் காண்பார்கள். நிரப்பமான தௌஹீதையுடையவர்கள்., பனாவுடைய மகாமைச் சேர்ந்தவர்கள், இவர்களுக்கு முஹக்கிகீன்களென்று சொல்லப்படும். (அஸ்றாறுல் ஆலம், பக்கம் 120, 121, தலைப்பு: தவ்ஹீது)
நீ வேறு, அவன் வேறு என்பதில் தவ்ஹீதில்லை. இதை நீ எவ்வேளையும் சிந்திக்க வேண்டும். (அன ஹு) நானவன் என்கிற திக்றுதான் சரியான தவ்ஹீதுடை திக்று. (அஸ்றாறுல் ஆலம், பக்கம் 151, 152, தலைப்பு: ஆபிதுடைய சரித்திரம்)
 
அன்பின் வாசக நோயர்களே!
 
அறிஞர் சித்திலெப்பை அவர்களின் “அஸ்றாறுல் ஆலம்” நூலிலிருந்து வடித்தெடுத்த சில சாறுகளை மட்டும் இங்கு உங்களின் கவனத்திற்கு தந்துள்ளேன். காரணம் இலங்கை முஸ்லிம்களின் அடையாளச் சின்னமாக விளங்கும் அறிஞர் சித்தி லெப்பை அவர்கள் கொண்ட கொள்கையை “குப்ர்”, “ழலாலத்” என்று கூறும் அகில இலங்கை ஜம்இய்யதல் உலமா சபையினர் அவர்கள் தொடர்பில் என்ன கூறப் போகிறார்கள் என்பதை பொது மக்களும், நாட்டிலுள்ள சமூக ஆர்வலர்களும் அறிவதற்கேயாகும். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவைச் சேர்ந்த முல்லாக்கள் எங்களுக்கும் “ஷரீஆ, தரீகா, ஹகீகா, மஃரிபா” தெரியும் என்று பீற்றினால் மட்டும் போதாது. அதை எழுத்துருவிலும், பேச்சுருவிலும் மக்களுக்குப் போதிக்கவும் வேண்டும்.
 
மாறாக இவர்களால் முடியாததை இல்லை இவர்கள் அறியாததை அறிந்தவர்கள் சொன்னால் அவர்களை “முர்தத்” என்றும், “காபிர்” என்றும் “பத்வா” மட்டும் வழங்கிவிட்டு, மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு பஞ்சணையில் உறங்குவதில் என்ன நியாயம்? இவர்களும், இவர்களின் முன்னோர்களான மூடர்களும் இறையியல் பேசிய எனக்கும், எனது கருத்துக்களைச் சரி கண்ட பல்லாயிரம் ஸூபீ முஸ்லிம்களுக்கும் அநியாயமாக வழங்கிய மார்க்கத் தீர்ப்பு தொடர்பில் மீளாய்வு செய்து அல்லாஹ், றசூலுக்குப் பொருத்தமான முறையில் சரியான முடிவு எடுக்காவிட்டால் இறைசாபம் இவர்கள் மீது மட்டுமல்ல, இவர்களின் முன்னோர்கள், இவர்களின் சந்ததியினர் மீதும் இறங்கும் என்பதில் ஐயமில்லை.
 
أَلَا لَعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ
 
May be an image of text
RELATED ARTICLES

Most Popular

Recent Comments