தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
பூமியை விட 109 மடங்கு பெரிதான, 1.39 மில்லியன் கிலோ மீற்றர்கள் விட்டத்தைக் கொண்ட, பூமியை விட 330,000 மடங்கு அதிக எடையுள்ள சூரியனை உள்ளங்கையால் மறைக்க நினைக்கும் ஒருவன் கடும் மடையனாக, வடிகட்டிய முட்டாளாகவே இருப்பான். ஆயினும் இத்தனை பெரிய சூரியனை விடப் பெரும் சூரியனான அல்லாஹ்வின் அதியுயர் ஞானமான “வஹ்ததுல் வுஜூத்” எனும் ஞான சூரியனை தமது உள்ளங்கையால் மறைக்க நினைக்கும் ஒருவன் முழுப் பைத்தியக் காரனாகவே இருப்பான் என்பதில் எவருக்கும் சந்தேகமிருக்காது.
இவ்வாறான எண்ணம் ஒருவனுக்கு இருக்குமாயின் அவன் மூளை தொடர்பான ஒரு டொக்டர் மூலம் அதை “ஸ்கேன்” பண்ணிப் பார்த்து உடனடியாக சிகிச்சை செய்ய வேண்டும்.
இன்னோர் பற்றி திருக்குர்ஆனில் கூறிய அல்லாஹ்,
يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ
அல்லாஹ்வின் ஒளியை வாயால் ஊதி அணைப்பதற்கு சிலர் நினைக்கிறார்கள். அல்லாஹ் தனது ஞான ஒளியை சம்பூரணப்படுத்திக் கொண்டே இருப்பான். மறுப்பவர்கள் – நிராகரிப்போர் வெறுத்தாலும் சரியே! (61-08)
அல்லாஹ்வின் ஒளியை வாயால் ஊதி அணைக்க முடியாதென்பது உண்மை. ஆயினும் அதை அணைக்க முயற்சிப்பவன் முழு மூடன் என்று அல்லாஹ் அவனை ஹிண்டிக்கிறான். ஏனெனில் தீயைத்தான் வாயால் ஊதியணைக்கலாமேயன்றி அல்லாஹ்வின் ஒளியை வாயால் ஊதி அணைக்க முடியாதென்பது எவரும் அறிந்ததே.
முடி சூடா மன்னர்களான முல்லாக்களே! அறிவில்லா முண்டங்களே!
ஸூபிஸத்தின் வாடையைக் கூட நுகராத அறியாமை எனும் தடிமல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்களே!
என்னையும், நான் கூறிய ஸூபிஸ தத்துவத்தையும் சுயமாக ஏற்றுக் கொண்ட பல்லாயிரம் மக்களையும் மதம் மாற்றி “முர்தத்” என்று தீர்ப்பு வழங்க நீங்கள் யார்? என்று கேட்கிறேன். ஜனநாயக நாடான இலங்கைத் திரு நாட்டில் நீங்கள் நினைத்தவர்களையெல்லாம் “முர்தத்” என்று மதம் மாற்றி “பத்வா” வழங்குவதற்கு உங்களுக்கு அதிகாரம் தந்தது யார்? இதேபோல் நீங்கள் நினைத்தவர்களையெல்லாம் கொலை செய்ய வேண்டுமென்று தீர்ப்புக் கூறுவதற்கு நீங்கள் யார்? என்று கேட்கிறேன். இரத்த வெறி பிடித்த பேய், பிசாசுகளா நீங்கள்? அவ்வாறாயின் உங்களிடமுள்ள “அனானிய்யத்” நான் என்ற கர்வத்தையும், “அன்னிய்யத்” என்ற நானெனும் உணர்வுப் பன்றியையும் அறுத்து கொல்லுங்கள். இதன் மூலம் உங்களில் குடி கொண்டுள்ள ஷெய்தானிய்யத்தை அடக்குங்கள். உங்களின் அட்டூழியத்திற்குப் பயந்து நாங்கள் பதுங்கு குழிகளில் வாழ்வதற்கு நாங்கள் எங்கோ இருந்து இங்கு வந்த வந்தான் வரத்தான்கள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
“பத்வா” வியாபாரிகளே! உங்களின் மகா தலைவன் தம்பி ரிஸ்வி பௌத மக்களின் வெசக் காலத்தில் விகாரை சென்று கையில் வெசக் விளக்கேந்தி நின்றாரே! உலக முஸ்லிம்கள் இவரின் இவ் இழிச் செயலைப் பார்த்து தலையில் கை வைத்து வியந்தார்களே! இவர் செய்தது என்ன? குப்றா? இல்லையா? இவருக்கு நீங்கள் இதுவரை “முர்தத்” பத்வா வழங்காமல் இருக்கிறீர்களே காரணம் என்ன? நியாயம் என்ன? இவர் செய்தது “குப்ர்” மதம் மாற்றும் செயலா? இல்லையா? இவருக்கான மார்க்கச் சட்டம்தான் என்ன? பகிரங்கமாகக் கூறுங்கள். உண்மையைக் கூறுங்கள். அவர் செய்தது “ரித்தத்” மதம் மாற்றும் செயல்தான் என்றால் அவரை உலமாஉகளின் தலைவராக வைத்திருப்பது நியாயமா? இது ஆகுமா? செவிடர்கள் போல் நடிக்காமல் சட்டத்தைச் சொல்லுங்கள். அவருடன் இன்னுமொரு நானா விளக்கேந்தி நின்றாரே அவர் யார்? அவருக்கான சட்டத்தையும் கூறுங்கள்.
கிழக்கு மாகாணத்திலுள்ள ஒருவனின் செயலுக்கு விடயம் தெரியாமல் முண்டியடித்துக் கொண்டு “பத்வா” வழங்கிய நீங்கள் இன்னொரு மாகாணத்தில் உள்ள ஒருவன் உண்மையிலேயே தவறு செய்திருக்கும் நிலையில் அவனுக்கு “பத்வா” வழங்காமல் அவனின் தவறை மூடி மறைப்பதேன்? அல்லது அவனுக்கு பத்வா வழங்காமல் ஒன்றுமே தெரியாதவர்கள் போல் நீங்கள் மௌனிகளாயிருப்பதேன்? காரணம் என்ன? பயமா? பணமா?
நாங்கள் “அகீதா” கொள்கையில் “அஷ்அரிய்யா”க்கள் என்று எழுத்து மூலமும், பேச்சு மூலமும் சொல்கிறீர்கள். ஆயினும் நீங்கள் சொல்வது போலும், எழுதுவது போலும் செயல்படாதிருப்பது ஏன்?
கொள்கையுடைய இமாம் என்று நீங்களே ஏற்றுக் கொண்ட இமாம் அபுல் ஹஸன் அஷ்அரீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் வாழ்வில் ஒரு நபருக்காவது “முர்தத்” என்று “பத்வா” வழங்கியதற்கு ஓர் ஆதாரமாவது உண்டா? துணிவிருந்தால் சொல்லுங்கள். அவர்கள் கொள்கையின் “இமாம்” ஆக இருந்தும் கூட தங்களின் வாழ்க்கையில் ஒருவரைக் கூட “முர்தத்” என்று சொல்லவே இல்லை என்பதற்கு எத்தனை ஆதாரங்கள் உங்களுக்கு வேண்டும்? இதோ ஒன்றை மட்டும் சொல்கிறேன்.
نقل الشّيخ أبو طاهر القزويني رحمه الله فى كتابه سراج العقول عن أحمد بن زاهر السَّرخسـي اَجَلِّ أصحابِ الشّيخ أبى الحسن الأشعريّ رحمه الله قال (لمّا حضـرتِ الشّيخَ أبا الحسن الوفاةُ فى داري بِبَغْدَادَ، قال لي اِجمعْ أصحابي، فجمعتُهم، فقال لنا ، اِشْهدُوا أنِّيْ لا أقولُ بِتَكْفِيْرِ أحدٍ من أهلِ القِبلة، لِأَنِّيْ رأيتُهم كلَّهم يشيرون إلى معبودٍ واحد، والإسلام يشملُهم ويعمُّهم، (اليواقيت، ج أوّل، ص 21 )
தமிழாக்கம்:
அஷ்ஷெய்கு அபூ தாஹிர் அல் கஸ்வீனீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “ஸிறாஜுல் உகூல்” எனும் நூலில், “அகீதா” கொள்கையில் இமாம் என்று அறியப்பட்ட அஷ்ஷெய்கு அபுல் ஹஸன் அஷ்அரீ அவர்களின் பிரசித்தி பெற்ற தோழர் இமாம் அஹ்மத் இப்னு சாஹிர் அஸ்ஸர்கஸீ அவர்கள் சொன்னதாக அறிவிக்கின்றார்கள்.
கொள்கையின் இமாம் என்று உலகின் “ஸுன்னத் வல் ஜமாஅத்” மக்களிடம் பிரசித்தி பெற்ற இமாம் அபுல் ஹஸன் அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “பக்தாத்” நகரிலுள்ள எனது வீட்டுக்கு வந்த போது அவர்களுக்கு மரண வருத்தம் ஏற்பட்டது.
அவர்கள் என்னிடம், இங்குள்ள எனது கொள்கை வழித் தோழர்களை இங்கு வருமாறு அழையுங்கள் என்று கூறினார்கள். நான் அனைவரையும் அழைத்தேன். அனைவரும் வந்தனர்.
அவர்களிடம் இமாம் அஷ்அரீ அவர்கள், இங்கு கூடியிருக்கின்ற தோழர்களே! நீங்கள் அனைவரும் நான் இப்போது சொல்லப் போகின்ற விடயத்திற்கு சாட்சிகளாக இருந்து கொள்ளுங்கள்.
“நான் முஸ்லிம்களில் எவரையும் “காபிர்” என்று சொல்லமாட்டேன், ஏனெனில் முஸ்லிம்கள் அனைவரும் வணங்கப்படுகிறவன் ஒருவன் என்று நம்பியுள்ளார்கள். இவர்கள் அனைவரையும் “இஸ்லாம்” என்ற சொல் உள் வாங்கிக் கொள்ளும்” என்று கூறினார்கள்.
ஆதாரம்: அல்யவாகீத் வல் ஜவாஹிர், பாகம் 01, பக்கம் 21,
ஆசிரியர்: இமாம் அப்துல் வஹ்ஹாப் ஷஃறானீ
இந்நூலாசிரியர் பற்றிய சிறு குறிப்பு:
இவர்கள் இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ. இவர்கள் ஹிஜ்ரீ 897 றமழான் மாதம் பிறை 27ம் நாள் மிஸ்ர் நாட்டின் “கல்கஷந்தா” என்ற ஊரில் பிறந்தார்கள். ஹிஜ்ரீ 973 ஜுமாதல் ஊலா மாதம் கெய்ரோவில் “வபாத்” மறைந்தார்கள். வயது 76 ஆகும். சுமார் 50 ஆசிரியர்களிடம் கல்வி கற்றுள்ளார்கள். சுமார் 76 வருடங்கள் வாழ்ந்துள்ளார்கள். 26 நூல்கள் எழுதியுள்ளார்கள். மேலதிக விபரங்கள் தேவையானோர் எம்மோடு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
“அகீதா”வின் இமாம் அபுல் ஹஸன் அஷ்அரீ அவர்கள் ஹிஜ்ரீ 260ல் பிறந்து ஹிஜ்ரீ 324ல் “வபாத்” மரணித்துள்ளார்கள். (874-936)
நாங்கள் இமாம் அபுல் ஹஸன் அஷ்அரீ அவர்களின் “அஷ்அரிய்யா” கொள்கையிலேயே உள்ளோம் என்று வாயால் மட்டுமே தம்பி ரிஸ்வி அவர்களும், முப்தீகளும் சொல்கிறார்கள். இவர்கள் சொல்வது உண்மையாயின் மரண வருத்தத்தின் போது கூட இமாம் அஷ்அரீ அவர்கள் சொல்ல வேண்டிய விடயங்கள் எத்தனையோ இருக்கும் நிலையில் தங்களின் தோழர்களை அழைத்து முஸ்லிம்களில் எவரையும் நான் “காபிர்” என்று சொல்லவில்லை என்பதற்கு நீங்கள் அனைவரும் சாட்சிகளாக இருந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள். இது எழுத்தில் – கிதாபில் பதிவான செய்தியாகும். இதுவே இந்த முல்லாக்களுக்கு தெரியாமலிருக்கும் நிலையில் இவர்களை “அஷ்அரிய்யா” கொள்கையுள்ளோர் என்று எவ்வாறு ஏற்றுக் கொள்வது?
உண்மையிலேயே இவர்கள் அஷ்அரிய்யா கொள்கையுள்ளவர்களாயிருந்தால் ஸூபிஸம் பேசிய என்னையும், அதை ஏற்றுக் கொண்டவர்களையும் மதம் மாறியவர்கள் என்று சொல்வதற்கு இவர்களின் நாவு இயங்கியிருக்குமா? “அஷ்அரிய்யா” கொள்கையிலிருக்கும் இவர்களுக்கு அஷ்அரீ இமாம் சொன்ன மேலே நான் எழுதிக் காட்டிய விடயம் தெரியாமலிருக்குமா? நான் அறிந்தவரை இவர்கள் “அஷ்அரிய்யா” கொள்கையுள்ளவர்களுமல்ல, “மாதுரீதிய்யா” கொள்கையுள்ளவர்களுமல்ல. இவர்கள் مَا أَدْرِيَّةْ – “மா அத்ரிய்யா” கொள்கையுள்ளவர்கள் என்றே நான் சொல்வேன். இவர்கள் ஒரு கொள்கையும் தெரியாத, சந்தர்ப்ப சூழ் நிலைக்கேற்றவாறும், இடத்திற்கேற்றவாறும், ஆளுக்கேற்றவாறும் கொள்கை மாற்றும் பச்சோந்திகளேயாவர்.
தமது கொள்கையின் தலைவர் அபுல் ஹஸன் அல் அஷ்அரீ அவர்கள் தங்களின் வாழ்நாளில் ஒரு முஸ்லிமைக் கூட “காபிர்”, “முர்தத்” என்று சொல்லவில்லை என்று சாட்சிகள் வைத்துக் கூறியிருக்கும் நிலையில் நம் நாட்டு உலமா சபை முப்தீகள் ஒரோயொரு “பத்வா”வின் மூலம் ஒருவர் இருவரையல்ல பல இலட்சம் முஸ்லிம்களை “முர்தத்” மதம் மாற்றி “பத்வா” வழங்கியிருப்பது உலக வரலாற்றில் எவரும் சாதிக்காத முதற் சாதனையாகும்.
أَنَا الْحَقُّ
– “நானே மெய்ப் பொருள்” என்று கூறிய இமாம் மன்சூர் ஹல்லாஜ் றஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு எதிராக அவர்களைக் கொலை செய்ய வேண்டுமென்று “பத்வா” எழுதிய அன்று வாழ்ந்த பொறாமை கொண்ட போலி உலமாஉகள் – வேஷதாரிகள் கூட அவர்களுக்கு மட்டும்தான் “பத்வா” வழங்கினார்களேயன்றி அவர்களின் கொள்கையைச் சரி கண்டு அவர்களின் “முரீத்” சிஷ்யர்களாக இருந்தவர்களுக்கு “பத்வா” வழங்கவில்லை. ஆனால் நமது நாட்டு எல்லாமறிந்த முப்தீகள் ஸூபிஸத்தை ஏற்றுக் கொண்ட அனைவரையும் “முர்தத்” மதம் மாற்றி “பத்வா” வழங்கியிருப்பது பொறாமையும், அறியாமையுமேயன்றி வேறொன்றுமில்லை.
பாம்புக்கு வாலையும், மீனுக்கு தலையையும் காட்டி இரட்டை வேடத்தில் நடிக்கும் உலமா சபை நயவஞ்சகர்களேயாவர். “உலமா சபை” என்ற அமைப்பு தொடர்ந்து செயல்படுமாயின் வஹ்ஹாபிஸம் வேரூன்றி இந் நாட்டிலுள்ள தரீகாக்களையும், சியாறங்களையும் அழித் தொழித்து வஹ்ஹாபிஸ வழிகேட்டை வேரூன்றச் செய்து முஸ்லிம்களை இரு கூறுகளாகப் பிரித்து நாட்டில் முஸ்லிம்களிடையே மனக் கசப்பையும், கலகத்தையும் தோற்றுவித்துவிடுவார்கள். இதை இலங்கை அரசு கவனத்திற் கொண்டு இன்று நடைமுறையிலுள்ள உலமா சபையின் குடும்பாட்சியையும், வஹ்ஹாபிஸ ஆட்சியையும் நிறுத்தி அரசாங்கமே உலமா சபையை தரமான நீதிபதிகளின் மூலம் தெரிவு செய்ய வேண்டும்.
உலமா சபை ஒரு சமயம் இலங்கையிலுள்ள முஸ்லிம் அமைப்புக்களில் – தஃவா அமைப்புக்களில் வஹ்ஹாபிஸ அமைப்புக்களையும், தப்லீக் அமைப்பையும், ஜமாஅதே இஸ்லாமீ அமைப்பையும் மட்டும் சரி கண்டு அறிக்கை விட்டார்களே தவிர “ஸுன்னத் வல் ஜமாஅத்” பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவுமில்லை. எழுதவுமில்லை.
பொது மக்களே! நீங்கள் வலீமாரின் சியாறம் சென்று அவர்களைத் தரிசிக்கின்றீர்கள், அவர்களின் கப்றுகளுக்கு போர்வை போர்த்துகிறீர்கள், மலர் தூவுகிறீர்கள். பல சியாறங்களில் உங்களை நான் சந்திக்கிறேன். ஆனால் “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கை வழியில் இயங்குகின்ற எங்களின் ஜம்இய்யா என்று குரலெழுப்பும் அதன் தலைவர் தம்பி ரிஸ்வியையோ, ஏனைய முப்தீகளையோ எந்த சியாறத்திலாவது நீங்கள் கண்டுள்ளீர்களா? அவர்கள் சியாறத்தை முத்தமிட்டதை கண்டுள்ளீர்களா? கப்றுக்கு மேல் மலர் தூவியதைக் கண்டுள்ளீர்களா? கப்றுக்குப் போர்வை போர்த்தியதைக் கண்டுள்ளீர்களா? எங்காவது ஒரு சியாறத்தில் பொது மக்களுக்கு அன்னதானம் “கந்தூரி” வழங்கியதைக் கண்டுள்ளீர்களா? சியாறங்களில் வைக்கப்பட்டுள்ள விளக்குகளில் உள்ள எண்ணையை விரலால் தொட்டு தலையில் தடவியதைக் கண்டுள்ளீர்களா? வலீமார் பேரில் நேர்ச்சை செய்து ஆடு, மாடு, கோழி போன்றவற்றை சியாறங்களுக்கு வழங்கியதை கண்டிருக்கிறீர்களா? இல்லை, கண்டிருக்கவேமாட்டீர்கள். இவ்வாறுதான் “தப்லீக் ஜமாஅத்” அமைப்பைச் சேர்ந்தவர்களுமாவர்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவோ, தப்லீக் அமைப்பைச் சேர்ந்தவர்களோ வலீமார் பேரில் கந்தூரி நிகழ்வுகள் நடத்தியதை கண்டிருக்கின்றீர்களா? அல்லது இவையெல்லாம் மார்க்கம் அனுமதித்த நற் செயல்கள் என்று ஒரு தரமாவது அறிக்கை விட்டதை அறிந்துள்ளீர்களா? இவர்களை யாரென்று இப்போது விளங்குகிறதா? தொடர்ந்து எழுதுவேன். இன்னும் விளங்கும்.
தொடரும்….