தொடர் 01
“ஷரீஆ” அறிவின்றியும், இறைஞானமின்றியும் “இபாதத்” வணக்கம் நிறைவேறவுமாட்டாது, பூரணமாகவுமாட்டாது.
முஸ்லிம்கள் செய்கின்ற எந்த ஒரு வணக்கமாயினும் அது “ஷரீஆ”வின் அறிவின்றியும், “மஃரிபா” அல்லது “தஸவ்வுப்” இறைஞானமின்றியும் நிறைவேறாது.
لا تصحّ الصّلاة وغيرُها من العِبَادَاتِ المَشْرُوعَةِ إلّا بمُراعاةِ الأحكام الشرعيّة،
தொழுகையும், “ஷரீஆ”வில் மார்க்கமாக்கப்பட்ட மற்ற வணக்கங்களும் “ஷரீஆ”வின் சட்டங்களைப் பேணாமல் நிறைவேறாது.
وكذلك لا تكْمُلُ الصلاةُ وغيرُها من العِبادات المشرُوعة إلّا بمُراعاةِ آدابِ الطّريقة والمعرفة،
தொழுகையும், “ஷரீஆ”வில் மார்க்கமாக்கப்பட்ட ஏனைய வணக்கங்களும் “தரீகா”வினதும், “மஃரிபா” இறைஞானத்தினதும் ஒழுக்கங்களைப் பேணாமல் பூரணத்துவம் பெறவும் மாட்டாது.
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
மேற்கண்ட இரண்டு அம்சங்களும் வணக்கம் செய்பவர்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டிய அம்சங்களாகும். வணக்கம் நிறைவேறுவதாயின் அவ் வணக்கம் “ஷரீஆ”வின் சட்டங்களைப் பேணிச் செய்யப்பட்டிருக்க வேண்டும். அது பூரணத்துவம் பெறுவதாயின் “தரீகா”வினதும், “மஃரிபா” இறைஞானத்தினதும் ஒழுக்கங்களைப் பேணிச் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
“ஷரீஆ”வின் சட்டங்களை علماءُ الظّاهر “உலமாஉள்ளாஹிர்” என்று அழைக்கப்படுகின்ற, “ஷரீஆ”வின் சட்டங்கள் கற்ற மார்க்க அறிஞர்கள் மூலமும், “தரீகா”, “மஃரிபா”வின் ஒழுக்கங்களை عُلَمَاءُ الْبَاطِنْ – “உலமாஉல் பாதின்” என்று அழைக்கப்படுகின்ற அவ்விரண்டும் கற்ற அறிஞர்கள் மூலம் கற்றுக் கொள்ள வேண்டும்.
இன்று முஸ்லிம் நாடுகளிலும், ஊர்களிலும் எந்த நாட்டை அல்லது எந்த ஊரை எடுத்துக் கொண்டாலும் அங்கெல்லாம் “ஷரீஆ”வின் சட்டங்கள் கற்ற மார்க்க அறிஞர்கள் நிச்சயமாக இருப்பார்கள். சில குக்கிராமங்கள் தவிர.
மார்க்க அறிஞர்கள் என்று இங்கு நான் குறிப்பிடுவது “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கைவாதிகளை மட்டுமே குறிக்கும். வழிகெட்ட கொள்கையுள்ளவர்களைக் குறிக்காது. ஏனெனில் வழி கெட்ட கொள்கையுள்ளவர்கள் தமது கொள்கைக்கு ஏற்றவாறு சட்டங்கள் கூறுவார்கள். வஹ்ஹாபீகள் போன்று.
நான்கு மத்ஹப்களில் ஏதாவது ஒரு மத்ஹபைப் பின்பற்றி வணக்கம் செய்பவன், தான் பின்பற்றிய மத்ஹபின் சட்டங்களை அறிந்தவரிடமே அவற்றைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். வேறு மத்ஹப்களுடையவர்களிடம் கேட்பதை தவிர்க்க வேண்டும்.
தொழுகையில் சொல்லில் கடமையானவை எவை என்றும், செயலில் கடமையானவை எவையென்றும் அவசியம் அறிந்திருக்க வேண்டும். இதேபோல் செயல்களில் எதைச் செய்தால் தொழுகை வீணாகிவிடும் என்றும், சொற்களில் எதைச் சொன்னால் அது வீணாகி விடுமென்றும் அறிந்திருக்க வேண்டும். “ஸுன்னத்”தான, “மக்றூஹ்” ஆனவற்றை அறிந்து வைத்திருக்காது போனாலும் மேற்கண்டவற்றை அவசியம் அறிந்திருக்க வேண்டும். தொழுகையில் “ஸுன்னத் – மக்றூஹ்” என்பவற்றில் எதைச் செய்தாலும், எதை விட்டாலும் தொழுகை வீணாகிவிடாது. ஆயினும் தொழுகையில் கடமையானவற்றை விட்டாலும், செய்யக் கூடாதவற்றைச் செய்தாலும் தொழுகை வீணாகிவிடும்.
இன்று தொழுபவர்களில் வயது வந்தவர்கள் உள்ளிட்ட பலர் பக்தியுடனும், பேணுதலுடனும் தொழுவதை நாம் காண்கிறோம். ஆனால் அவர்களின் தொழுகை சட்டப்படி வீணானதேயாகும். சுமார் 50, 60 வயதைக் கடந்தவர்களின் தொழுகைகள் கூட இவ்வாறு வீணாவதைக் காணும் போது இத்தகையோரில் தமது சிறு வயதிலிருந்து தொழுபவர்களை எண்ணி உள்ளம் அழுகிறது. அவர்களின் கடந்த காலத் தொழுகைகள் என்னாகுமோ?!
وَكُلُّ مَنْ بِغَيْرِ عِلْمٍ يَعْمَلُ – أَعْمَالُهُ مَرْدُوْدَةٌ لَا تُقْبَلُ
ஒரு வணக்கத்தை அது தொடர்பான அறிவின்றிச் செய்பவர்களின் அவ் வணக்கம் எல்லாமே ரத்துச் செய்யப்பட்டதாகும். ஏற்றுக் கொள்ளப் படாதவையாகும்.
இது பொது விதி. ஓர் “ஆலிம்” – மௌலவீ – மார்க்க அறிஞன் மட்டும்தான் “ஷரீஆ”வோடு தொடர்புள்ள எல்லாச் சட்டங்களையும் அறிந்திருப்பது கடமை. ஏனெனில் பொது மக்கள் மார்க்க சட்டங்களை அவரிடமே கேட்டறிந்து கொள்ள வேண்டும். பொது மகனோ “ஷரீஆ”வின் சட்டங்கள் யாவையும் அறிந்திருக்க வேண்டியது கடமை இல்லை. ஏனெனில் பொது மக்களில் எவரும் அவரிடம் மார்க்க விளக்கம் கேட்கமாட்டார்கள்.
அவன் தனக்குத் தேவையான சட்டத்தை மட்டும் தேவையான நேரத்தில் அறிந்து செய்தால் போதும்.
உதாரணமாக ஹஜ் செய்பவன் அவ்வணக்கத்தை செய்யும் வேளை மட்டும், நோன்பு நோற்பவன் அதைச் செய்யும் வேளை மட்டும், சகாத் கொடுப்பவன் அதைச் செய்யும் வேளை மட்டும் அவற்றுக்கான சட்டங்களை அறிந்து கொண்டு செய்தால் போதும். ஏனெனில் இவை தொழுகை போல் தினமும் செய்கின்ற வணக்கங்கள் அல்ல. தொழுகின்றவன் எந் நேரமும் தொழுகை பற்றிய சட்டங்களை அறிந்திருப்பது அவசியமாகும்.
தொழுபவர்களில் அதிகமானோர் “றுகூஉ” நிலையிலிருந்து سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهْ என்று சொன்னவர்களாக நிலைக்கு வந்தவுடன் தமது கையை பயிற்சி எடுப்பவர்கள் போல் ஆட்டுகிறார்கள். அசைக்கிறார்கள். இவ்வாறு மூன்று முறைக்கு மேல் ஆட்டினால் – அசைத்தால் தொழுகை “பாதில்” வீணாகிவிடும். ஆகையால் கையை ஆட்டாமலும், அசைக்காமலும் தொங்க விட வேண்டும்.
இவ்விபரம் தெரியாதவர்கள் கைகளை ஆட்டி அசைத்து தொழுத தொழுகைகள் எல்லாமே வீணாகியே இருக்கும். இவ்விடயத்தில் தொழுபவர்கள் மிகவும் கவனமாக இருந்து கொள்ள வேண்டும்.
“ஸுஜூத்” – தொழுகையின் “ஸுஜூத்” செய்யும் போது ஏழு உறுப்புகள் தரையில் பட வேண்டும்.
தொழுபவன் “ஸுஜூத்” செய்யும் போது தனது நெற்றியை தரையில் வைப்பது பிரதான நிபந்தனையாகும். நெற்றி தரையில் படவில்லையானால் அந்த “ஸுஜூத்” நிறைவேறாது. தொழுகை வீணாகி விடும். நெற்றி முழுவதையும் வைக்கவும் முடியும். அதில் ஒரு பகுதியை மட்டும் வைக்கவும் முடியும். நெற்றி தரையில் பட வேண்டுமென்றால் தொழுபவன் எந்த இடத்தில் நெற்றியை வைக்கின்றானோ அவ்விடத்தில் பட வேண்டும். அவ்விடம் மண்ணாகவும், சீமெந்துத் தரையாகவும், மார்பிளாகவும், மரமாகவும் – பலகையாகவும், “முஸல்லா”வாகவும், துணியாகவும் இருக்கலாம். எவ்விடத்தில் நெற்றி வைக்கப்படுகிறதோ அவ்விடத்தில் நெற்றி பட வேண்டும் என்பதே நிபந்தனை. வைக்கப்படும் இடம் எதுவாகவும் இருக்கலாம். ஆனால் அவ்விடம் சுத்தமானதாக இருப்பது அவசியம். அசுத்தமான இடத்தில் “ஸுஜூத்” செய்தால் தொழுகை நிறைவேறாது.
“ஸுஜூத்” செய்யும் போது நெற்றிக்கும், “ஸுஜூத்” செய்யும் இடத்திற்கும் இடையில் தொழுது கொண்டிருப்பவன் சுமந்துள்ள ஏதாவதொன்று திரையாக இருக்கக் கூடாது.
உதாரணமாக தொழுபவன் நெற்றியில் கைலேஞ்சைக் கட்டிக் கொண்டும், அல்லது நெற்றியில் தொப்பி அணிந்து கொண்டும் “ஸுஜூத்” செய்வது போன்று.
இந்த விளக்கம் பின்வருமாறு அறபு மொழியில் சொல்லப்படும்.
ِشُروطُ إجزاءِ السُّجود أن يُباشرَ مُصلّاه بجبهتِه أو بعضها مكشوفا، ويَطْمَئِنَّ،
“ஸுஜூத்” செய்யும் போது நெற்றியை தரையில் வைத்து சுமார் குறைந்தது மூன்று நொடி அளவு நேரம் தரிபட வேண்டும். தாமதிக்க வேண்டும். இது ஷாபிஈ மத்ஹப் சட்டமாகும். ஹனபீ மத்ஹபில் நெற்றியை தரையில் வைத்தால் போதும். தரிபடத் தேவையில்லை. பாய்மார் தொழுவதைப் பார்த்தால் புரியும்.
وَأَنْ يَنَالَ مُصَلَّاهُ ثِقَلَ رَأْسِهِ
தொழுகையில் “ஸுஜூத்” செய்பவன் தனது தலையின் முழுப் பாரத்தையும் நெற்றியை வைக்கும் இடத்திற்குக் கொடுக்க வேண்டும். “ஸுஜூத்” நிலையில்
سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى وَبِحَمْدِهِ،
“ஸுப்ஹான றப்பியல் அஃலா வபிஹம்திஹி” என்று ஒரு தரமாவது ஓத வேண்டும். மூன்று தரம் ஓதுவது விரும்பத்தக்கது. ஒரு தரம் கூட ஓதாமல் விட்டாலும் தொழுகை நிறைவேறும். ஏனெனில் “ஸுன்னத்” ஆன ஒரு ஓதலை விடுவதினாலோ அல்லது அத்தகைய ஒரு செயலை விடுவதினாலோ தொழுகை வீணாகாது.
ஸுஜூதின் போது தரையில் பட வேண்டிய ஏழு உறுப்புக்களில் நெற்றி ஒன்று.
ஏழு உறுப்புக்களில் இரண்டாவது இரு கைகளினதும் உட் பகுதி. விரல்களின் உட் பகுதிகள் அடங்கலாக உள்ளங்கைகள் இரண்டையும் விரித்து வைத்தல். கைக்கு உறை போட்டிருந்தாலும் பிழையில்லை. ஆயினும் இரு உள்ளங்கைகளினதும் மணிக்கட்டுகளிலிருந்து முழங்கை வரை இரு கைகளையும் தரையில் படாமல் ஓரளவு உயர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். பக்கத்தில் தொழுபவனுக்கு இடைஞ்சல் ஏற்படாமலிருப்பதற்காக தொழுபவன் தனது இரு கைகளையும் அகட்டி வைத்துக் கொள்ளாமல் சற்று உடலோடு நெருக்கி வைத்துக் கொள்தல் வேண்டும்.
மூக்கு தரையில் பட்டாலும், படாவிட்டாலும் தொழுக நிறைவேறும். எனினும் படுவது சிறந்ததாகும். அது “ஸுன்னத்” என்று சொல்லப்பட்டுள்ளது.
ஏழு உறுப்புக்களில் நான்காவதும், ஐந்தாவதும் இரு முழங்கால்களாகும். திரையுடன் தரையில் பட வேண்டும். திரையின்றி முழங்கால் தெரியுமளவு “ஸுஜூத்” செய்தால் அது நிறைவேறாது.
ஏழு உறுப்புக்களில் ஆறாம் உறுப்பு, ஏழாம் உறுப்பு இரு கால்களின் விரல்களாகும். இரு கால்களில் பத்து விரல்களினுடைய உட்பகுதிகள் தரையில் படும் வகையில் வைத்தல் மிகச் சிறந்த முறையாகும். அவ்வாறு வைப்பதற்கு இயலாதவர்கள் தம்மால் முடிந்த விரல்களை முடிந்த அளவு அவ்வாறு வைத்துக் கொள்தல் சிறப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளதாகும். இவ்வாறு வைத்துக் கொண்டாலும் போதும். “ஸுஜூத்” நிறைவேறும். ஆயினும் ஒரு விரலின் உட்புறமாவது தரையில் படாமலும், பத்து விரல்களில் ஒன்று தரையில் படாமலும் இருக்குமானால் அந்த “ஸுஜூத்” நிறைவேறாது.
தொழுகின்றவன் “ஸுஜூத்” செய்யும் போது 07 உறுப்புக்கள் தரையில் பட வேண்டுமென்ற சட்டம் பெருமானாரின் “ஹதீது” நபீ மொழியிலிருந்து பெறப்பட்ட சட்டமாகும்.
قال النبيّ صلّى الله عليه وسلّم، اُمرتُ أن أسْجُدَ على سَبْعَةِ أعضاء،
“ஏழு உறுப்புக்கள் மீது “ஸுஜூத்” செய்யுமாறு நான் பணிக்கப்பட்டுள்ளேன்” என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அருளினார்கள்.
ஏழு உறுப்புக்கள் பற்றிய விபரம் நான் மேலே எழுதியுள்ளேன். அவற்றில் இரு கால்களின் பத்து விரல்களினதும் உட்பகுதியை بُطُوْنُ الْأَصَابِعِ தரையில் வைப்பது தொடர்பாக அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் இருப்பதால் தொழுகின்ற நல்லடியார்கள் உலமாஉகளை அணுகி மேலதிக விபரங்களை கேட்டறிந்து செயல்படுதல் சிறந்ததாகும். இவ்விடயத்தில் அதிகமானோர் தவறு செய்வதை நான் காண்கிறேன்.
لا تصحّ الصلاةُ وغيرُها مِن العبادات المشروعة إلّا بمُراعاة الأحكام الشرعيّة،
“தொழுகையும், “ஷரீஆ”வில் மார்க்கமாக்கப்பட்ட ஏனைய வணக்கங்களும் “ஷரீஆ”வின் சட்டங்களைப் பேணாமல் நிறைவேறாது” என்பதற்கான விபரத்தைச் சுருக்கமாக எழுதியுள்ளேன். இது முதலாவது தலைப்பிற்கான விளக்கமாகும். இரண்டாவது தலைப்பிற்கான விளக்கம் தொடரும்.
தொடரும்…. (2ம் பக்கம் பார்க்க)